ருத்ரபிரயாக்கின் புரான்ஸ் மலர்கள்

இமயமலைக்குப் பயணம் செல்லும் இந்து பக்தர்கள் அனைவருக்கும் ருத்ரபிரயாக் தெரிந்திருக்கக்கூடும். டெல்லியில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்துக்குச் செல்ல ருத்ரபிரயாக் வழியாகத்தான் போகமுடியும். டெல்லியில் இருந்து ருத்ரபிரயாக் 400 கி.மீ. ருத்ரபிரயாகிலிருந்து பத்ரிநாத் 155 கி.மீ. இந்தியில் பிரயாக் (Prayag) என்றால் சமமான அகலம் கொண்ட இரண்டு நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் இடம் என்று அர்த்தம்.

பத்ரிநாத்தில் இருந்து உருவெடுத்து வரும் அலக்னந்தா நதியும், கேதார்நாத்திலிருந்து உருவெடுத்து வரும் மந்தாகினி நதியும் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடம்தான் இந்த ருத்ரபிரயாக். இரண்டறக் கலந்த நதிகள் ஒரே நதியாக, (கங்கை நதியாக) ஓடத்துவங்கும் ஐந்து இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு சிவன் அவதரித்து ருத்ர தாண்டவம் ஆடியதாக ஒரு புராணக் கதையுண்டு. அதனால் இந்த இடம் ருத்ரபிரயாக் எனப்பெயர் பெற்றது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

சிவனுக்கு ருத்ரபிரயாக் மீது கோவம் இன்னும் தணியவில்லை போலும், 2010 முதல் 2022 வரையிலான காலங்களில் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம், மேக வெடிப்பு, பனிப்பாறை வெடிப்பு, போன்ற தொடர் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ருத்ரபிரயாக் முதன்மையானது.

2010ம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 20ம் தேதி வரை பொழிந்த மிக அதிக மழை, மேக வெடிப்பு, வெள்ளம் ஆகிய மூன்றும் சேர்த்து ருத்ரபிரயாக்கை சீர்குலைத்ததில் 214 பேர் இறந்து போனார்கள்1. 2012ம் ஆண்டு அதே செப்டம்பர் மாதம் ருத்ரபிராயக்கையும், உத்தர்காஷி மாவட்டத்தையும் புரட்டிப்போட்டது. இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 2000 வீடுகள் பாதிப்புக்குள்ளானதோடு 106 பேரின் உயிரையும் பறித்தது1.

2013 ஜூன் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பினால் (Cloud Burst) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் (flash floods) மட்டும் 6000 பேருக்கும்மேல் இறந்து போனார்கள். 19,000 வீடுகள் இடிந்தன 2,3. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மந்தாகினி நதியில்தான் என்பதால் இதில் பெரும்பாலான பாதிப்பு ருத்ரபிரயாக் மாவட்டத்திற்குதான் ஏற்பட்டது.

2021 மற்றும் 2022ல் வெள்ளப்பெருக்கினாலும், தொடர் நிலச்சரிவுகளினாலும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள் 4,5,6.. ருத்ரபிரயாக்கில் வாடிக்கையாக நடக்கும் இப்பேரிடர்கள் குறிப்பாக திடீர் ஆற்று வெள்ளத்தையும், நிலச்சரிவுகளையும் தொடர்ந்து கண்காணித்து முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கையைத் தெரிவிக்கும் Early Warning System உருவாக்கும் நோக்கில் நான் பணியாற்றிய நிறுவனம் சில வேலைகளைச் செய்துவந்தது.  உத்தரகாண்டின் ருத்ரபிரயாக், சமோலி, உத்தர்காஷி, பித்தோராகார்க், ஜோஷிமத் ஆகிய பகுதிகளில் சில வேலைகள் செய்துவந்தது. களத்திலிருந்து தகவல்களைப் பெற்று முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கையினை தெரிவிக்கும் மென்பொருள் செயலி ஒன்றினை எங்கள் நிறுவனம் உருவாக்கியிருந்தது. 2018ம் ஆண்டு அந்த செயலியில் இருந்துதான் அரசு பேரிடர் துறைக்கே தகவல்கள் சென்றுகொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தச் செயலிக்குத் தேவையான நிலச்சரிவு மற்றும் ஆற்றின் நீர்மட்ட அளவு ஆகியவை தினமும் கண்காணிக்கப்பட்டு களத்திலிருக்கும் எங்கள் பணியாளர்கள் (Field Officers) மூலம் செயலியில் பதிவேற்றப்படும். இப்பணியைச் செய்வதற்காக அந்த நான்கு மாவட்டத்திலும் தலா 40 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தொடர் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தன. அந்த களப்பனியாளர்களுக்கு ஆற்றின் நீர்மட்டத்தினை அளப்பதற்கான கருவியினை இயக்குவதற்கானப் பயிற்சிகளை வழங்குவதற்காக தான் முதலில் நான் ருத்ரபிரயாகிற்கு சென்றிருந்தேன்.

 ருத்ரபிரயாக் என்றால் குளிர்ந்த இமயமலைப்பகுதி கடுமையான குளிர் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு ஜெர்கின் ச்வெட்டர் எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். ஆனால், நான் சென்றிருந்தது ஏப்ரல் மாதம் இறுதி என்பதனால். அவ்வளவு ஒன்றும் குளிர் இல்லை. களப்பணியாளர்களுக்கான பயிற்சியினை முடித்துவிட்டு முதல் நாள் இரவு வெளியே சென்று ருத்ரபிரயாக்கை சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். ருத்ரபிரயாகில் நங்கள் தங்கி இருந்த இடம் மந்தாகினி நதிக்கரையோரம் இருந்தது.  அங்கே நிலவின் ஒளியை விட பிரகாசமாக ஒரு வெளிச்சம் தூரத்தில் தெரிந்தது. மலையில் இருக்கும் காடு முழுவதிலும் படர்ந்திருந்தது அந்த வெளிச்சம். அது ஒரு சிவப்பு ஒளி, அங்கு கொழுந்து விட்டு எரிந்தது ‘காட்டுத்தீ’.

ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. நான் உத்தரகாண்ட்டில் இருந்த ஒன்றரை மாதங்களுமே காட்டுத் தீ மலையின் ஏதோ ஒரு இடத்தில் எரிந்துகொண்டேதான் இருந்தது.  2018ம் ஆண்டு மட்டும் உத்தரகாண்டின் 3399  ஹெக்டேர் காடுகள் சுமார் 1451 காட்டுத் தீ சம்பவங்களில் எரிந்து கருகின. அதேபோல் 2016 ம் ஆண்டு 4000 ஹெக்டேர்  காடுகள் காட்டுத்தீயில் முற்றிலும் சேதமடைந்தது7.

1,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 1,142 சதுர கிலோமீட்டர் பகுதி காடுகளாகும். இதில், 252 சதுர கிலோ மீட்டர் பகுதி மிகவும் அடர்த்தியான காடுகள், 580 சதுர கிலோ மீட்டர் ஓரளவிற்கு அடர்த்தியான காடுகள்.  அதில் பெரும்பான்மையானவை பைன் காடுகள்.

காட்டின் உயிர்ப்பன்மையத்தை அளவிடுவதற்கான (Quadrant Survey) ஆய்விற்காக பலமுறை ருத்ரபிரயாகின் பைன் காடுகளுக்குள் குழுவுடன் பயணித்து இருக்கிறேன். மணிக்கணக்கில் மலையேறி பைன் காடுகளுக்குள் செல்லவேண்டும். பைன் காடுகளுக்குள் ஊடுருவிச் சென்று அதன் உயிர்ச்சூழலை ஆராய்வது என்பது அவ்வளவு எளிமையான காரியமில்லை. காலை 7 மணிக்கு காட்டுக்குள் சென்றால் மாலை 4 மணிக்கு மேல்தான் அளவீடு வேலைகளை முடித்துவிட்டு நகரத்திற்குத் திரும்புவோம். சில சமயம் மதிய உணவைக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்வோம். சில சமயம் காட்டுக்குள் வைத்தே சமைத்து உண்ட கதைகளும் உண்டு. ஒரு உற்சாகமான மனநிலை கொண்ட 5-6 நபர்களுடன் குழுவாக பயணித்ததால் என்னவோ எந்த இடத்திலும் சோர்வு தெரியவில்லை. குழுவில் இருந்தவர்கள் அனைவரும் இயற்கைமீது பற்றும் இயற்கை சார்ந்த அறிவும் கொண்டவர்கள். ஆய்வுகளை எப்படிச் செய்வதென்று எங்களுக்கு விளக்குவதற்காக ஒருங்கிணைப்பாளர் சவுகத் ஒரு வாரம் எங்களுடன் பயணித்தார். அவர் உயிரியல் மற்றும் வனவியல் படிப்பு படித்தவர், 10 ஆண்டுகளுக்குமேல் இமயமலைப் பகுதிகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அவருக்கு இமயமலைப் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு தாவரத்தையும் நன்கு தெரியும். ஒரு மரத்தையோ தாவரத்தையோ பார்த்தால் அதன் பெயர், குணாதிசியங்கள், அதன் பயன்கள் என அனைத்தையும் பொறுமையாக நின்று விளக்கும் ஒரு அற்புத ஆசான் அவர். ஒவ்வொரு முறை காட்டுக்குச் செல்லும்போதும் எங்களுடன் ராஜு என்ற அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் உடன்வருவார். அவருக்கும் ருத்ரபிரயாக் காட்டிலுள்ள அத்தனைத் தாவரங்களும் மூலிகைகளும் அத்துப்படி. அப்பூர்வகுடி அறிவை அவரிடமிருந்து பெறுவதற்காகவே ஒவ்வொரு முறையும் அவரை உடன் அழைத்துச் செல்வோம்.

Quadrant Survey என்பது காட்டில் ஒரு பகுதியைத் தேர்வு செய்து அதை 10 x 10 அடி,   2×2 அடி , 1×1 அடி என மூன்று வெவ்வேறு பரப்பளவாக கயிறுகட்டி அளவிட்டு அந்த அந்தப் பகுதியில் எந்தெந்த வகையைச் சேர்ந்த எவ்வளவு தாவரங்கள் ,மரங்கள் இருக்கின்றன என ஆராய்வதாகும்.  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக காட்டின் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பகுதிகளை அளந்து முடித்தோம். பகல் பொழுதுகளில் நங்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை இரவினில் அலுவலகத்திற்குச் சென்று ஆவணப்படுத்துவோம். உயிர்ப்பன்மையத்தை ஆவணப்படுத்துவதுடன் காட்டுத்தீ பாதித்த இடங்களையும் ஆவணப்படுத்துவோம். ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அதன் முக்கியத்துவம் தெரியவில்லை, கிராமம் கிராமமாக பழங்குடி மக்களை சந்தித்து இது குறித்து கேட்டறிந்த போதும் அதை ஆவணப்படுத்தும் போதும் இதற்கு முன் இருந்த தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போதும்தான் எந்த அளவிற்கு அங்கு உயிர்ப்பன்மையம் குறைந்துள்ளது என்பதை உணர முடிந்தது.

ருத்ரபிரயாக் காட்டுப்பகுதியைப் பொறுத்தவரையில் அங்கு வெறும் பைன் காடுகள் மட்டுமில்லை, புகல்ஸ் (Bugyals) என்றழைக்கப்படும் புல்வெளிகளும் (Grasslands) அங்கு அதிகம். இமயமலை முழுவதிலுமே ஆங்காங்கே இந்த புகல்ஸ் இருந்தாலும் ருத்ரபிரயாக்கின் சோப்டா புல்லும், மோத் புல்லும் முக்கியதுவம் வாய்ந்தவை. இவை இப்பகுதிக்கே உரிய பல அழிந்துவரும் தாவரங்களுக்கு, புதர் வகைகளுக்கும்,  (Indian aconite or Atis (Aconitum heterophyllum), spikenard muskroot or Jatamansi (Nardostachys jatamansi), Salampanja or Hathazari (Dactylorhiza hatagirea), Kutki (Picrorhiza kurrooa), smooth angelica or Chippi (Angelica glauca), caterpillar fungus cordyceps or Yartsa Gunbu (Ophiocordyceps sinensis)) அரிய மருத்துவத் தாவரங்களுக்கும் இருப்பிடமாக விளங்குகிறது. மேல் சொன்ன அனைத்தும் IUCN பட்டியலில் மிக வேகமாக அழிந்துவரும் தாவரங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

உள்ளூர் மக்களால் புரான்ஸ் என்று அழைக்கப்படும் ரோடோடென்ட்ரோன் (Rhododendron) மலர்கள் பொதுவாக ஏப்ரல்-மே மாதங்களில் மலரும். ஆனால், புவி வெப்பமடைதலின் காரணமாக உத்தரகாண்டின் பல பகுதிகளில் தற்போது இவை பிப்ரவரி மாதமே பூத்துவிடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். புரான்ஸ் மலர்களில் இருந்து எடுக்கப்படும் ஜூஸ் மிகவும் பிரபலமானது. ஒரு லிட்டர் புரான்ஸ் ஜூஸ் 65 முதல் 70 ருபாய் வரையில் விற்கப்படும். புரான்ஸ் மலரை சேகரித்து ஜூஸ் செய்து விற்பதையே அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் பலரும் தங்களின் தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்படி இருக்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் ருத்ரபிரயாக்கில் கனமழை பொழிந்து வருகிறது என்பதால் அங்கு  பூக்கும் புரான்ஸ் மலர்கள் சேதமடைந்து பாழாகின்றன. இதனால் புரான்ஸ் வியாபாரத்தை நம்பி இருந்த அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புரான்ஸ் மலர்கள் பொதுவாக 12 முதல் 17 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மட்டுமே வளரக் கூடியவை. கடல்மட்டத்தில் இருந்து 1500மீ இருந்து 3300மீ உயரம் வரை வளரக் கூடிய புரான்ஸ் மலர்கள் தற்போது காலநிலை மாற்றத்தின் விளைவாக அதற்கும் உயரம் அதிகாமாக உள்ள பகுதிகளில் இடம்பெயர்கின்றன என்றார் சவுகத். ஐ.ஐ.டி. கான்பூர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 2070ம் ஆண்டிற்குள் புரான்ஸ் மலர்கள் 4500 மீ உயரத்திற்கு இடம்பெயரும் எனச் சொல்லப்படுகிறது8. இந்த இடம்பெயர்வை ஆங்கிலத்தில் ‘Tree Line Shifting’ என்று சொல்கின்றனர். இந்த மரங்கள் இடம் பெயர்வதற்கும் மலையில் கீழ் பகுதிகளில் உள்ள காடுகள் காட்டுத்தீயினால் பற்றி எரிவதற்கும், மரங்களின் இடப்பெயர்வினால் பனிப்பாறைகள் உருகுவதற்கும் , மண்சரிவு ஏற்படுவதற்கும் நெருங்கியத் தொடர்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

உத்தரகாண்டின் காடுகளில் அதிக அளவிற்கு காட்டுத்தீ ஏற்படுவதையும், உத்தரகாண்டின் பனிப்பாறைகள் வெடிப்பதையும் தனித் தனி நிகழ்வாக பார்க்க முடியாது, அதேபோல உத்தரகாண்ட் காடுகளில் ஏற்படும் தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு காரணமாக காலநிலை மாற்றத்தையும் அப்பகுதியில் நடந்தேறிவரும் சூழலைப் பாதிக்கும் வளர்ச்சித் திட்டங்களையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.

2021 பிப்ரவரி மாதம் உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினை எடுத்துக்கொள்வோம். இந்தச் சம்பவம் நடந்த போது 26பேர் உடனே உயிரிழந்ததாகவும் 171பேர் காணாமல் போனதாகவும் அறிவிக்கப்பட்டது,

தபோவன-    விஷ்ணுகாட் நீர் மின்சாரத் திட்டம், ரிஷி கங்கா நீர்மின்சாரத் திட்டதிற்காகச் சுரங்க பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.  இப்பேரிடர் காரணமாக தபோவனில் சுரங்கப்பாதையில் மட்டும் ரூ 1500 கோடிக்கு மேல் மதிப்பிலான கட்டுமானங்கள் சேதமடைந்தன. அப்பேரிடர் ஏற்பட்டதற்கான  காரணங்களை இங்கு ஆராய்வோம்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6150 அடி உயரத்தில் இருக்கும் சமோலி பகுதியில் நிலச்சரிவுகள்(Landslides), பனிச்சரிவுகள்(Avalanches), மேக வெடிப்பு (Cloud Burst), திடீர் வெள்ளம்(Flash Floods) ஆகியவை அடிக்கடி நிகழக் கூடியவைதான். ஆனால் 2021 பிப்ரவரி மாதம் நடந்த பனிப்பாறை வெடிப்பு(Glacier burst) என்பது அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படவேண்டும்.

சம்பவம் நடந்த 2021 பிப்ரவரி மாதம் சமோலியில் குளிர்காலம் நிலவியது. இயல்பாக அக்டோபர் தொடங்கி மார்ச் இறுதிவரை குளிர்காலம் நீடித்து இருக்கும். மார்ச் மாதத்திற்குப் பிறகுதான் அங்கு பனி உருகி ஆங்காங்கே பனிச்சரிவுகள் ஏற்படும். ஆனால், இந்த நிகழ்வின்போது குளிர் காலத்திலேயே பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிகழ்வு இயல்பான பனிச்சரிவுபோல் இல்லாமல், பனிப்பாறையின் ஒரு பெரும் பகுதி உடைந்து (Glacial Burst) அதிலிருந்து வெள்ளம் பெருக்கெடுத்திருக்கலாம் என்று சில வல்லுனர்களும் , உறை நிலைப் பனி ஏரியில் (Glacial Lake Outburst) உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று வேறு சில வல்லுனர்களும் கருதுகிறார்கள், எப்படிப் பார்த்தாலும் இது காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கக் கூடிய பேரிடர் என்பது நமக்கு உறுதியாகிறது.

3,500 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்திருக்கும் இமயமலையின், ஹிந்து குஷ் பகுதிதான் காலநிலை மாற்றத்தின் காரணமாக மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடிய பகுதியாக இருக்கும் என ICIMOD-International Centre for Integrated Mountain Development என்ற அமைப்பு கடந்த 2019ம் ஆண்டு தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது9.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின் வழிகாட்டுதலின்படி பூமி வெப்பமயமாதலைத் தடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டாலும்கூட இமயமலையின் ஹிந்து குஷ் பகுதிகளின் வெப்பம் அதிகரிப்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்பொழுது அதிகரித்து வரும் பூமியின் தட்பவெட்ப நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவிற்குள் ஹிந்து குஷ் பகுதிகளில் 4 டிகிரி முதல் 6 டிகிரி வரை தட்பவெப்பம் அதிகரிக்கும் என இந்த அறிக்கை கூறுகிறது. மேலும் இதனால் இந்த நூற்றாண்டிற்குள் அங்குள்ள மூன்றில் இரண்டு பங்கு உறைபனி உருகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமோலிப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் தட்பவெப்பநிலை (Glacier Thermal Profile) இயல்பாகச் சுமார் -6 டிகிரி முதல் -20 டிகிரி இருந்து வந்துள்ளது. ஆனால், 2021 பிப்ரவரியில் அது -2 டிகிரி ஆக அதிகரித்துள்ளது என பனிப்பாறைகளை ஆய்வு செய்து வரும் ஐ.ஐ.டி. பேராசிரியர் முஹம்மத் பாரூக் ஆசாம் செய்தியாளர்களிடம்  தெரிவித்திருந்தார்.

1975 முதல் 2000ம் ஆண்டு வரை இமயமலைப் பகுதிகளில்  பனிக்கட்டிகள் உருகியதை விட இரண்டு மடங்கு வேகமாகவும் அதிகமாகவும் தற்போது பனிக்கட்டிகள் உருகிவருவதாக, கொலம்பியா கிளைமேட் ஸ்கூல் சார்பில் 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது10. அதாவது இமயமலையில் மட்டும் ஆண்டிற்கு 8 பில்லியன் டன் அளவிலான பனி உருகிக்கொண்டிருக்கிறது. பனிப்பாறைகள் உருகும்போது அவை சுருங்குவதோடு (glacier fragmentation), உறைபனி ஏரிகளாகவும் மாறுகின்றன. 2005ம் ஆண்டு ICIMOD ஆய்வில் ஹிந்து குஷ் பகுதியில்மட்டும் 801.83 சதுர கிமீ பரப்பளவில் சுமார் 8,790 உறைபனி ஏரிகள் (glacial lakes) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 203 பனி ஏரிகள் மட்டுமே பனி ஏரி வெடிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வரும் காலங்களில் புவி வெப்பமயமாவதால் இமயமலையில் உள்ள பனி ஏரிகளின் எண்ணிக்கைகளும் அதன் பரப்பளவும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் தற்பொழுது நிகழ்ந்துள்ள பனி ஏரி வெடிப்புபோல் (GLOF) நிகழ்வுகள்  அடிக்கடி நிகழ வாய்ப்புள்ளதாக காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அறிவியலாளர்கள் அமைப்பான Intergovernmental Panel on Climate Change (IPCC) ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது11.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரகாண்ட் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு மக்கள் விரோத திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதும் இந்தப் பேரிடருக்கு ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக, ஆறுகளை இடைமறித்து , ஆறுகளின் போக்கை மாற்றி அமைத்து உத்தரகாண்ட் மாவட்டத்தில் கட்டப்பட்டும் அணைகள் ஒரு முக்கியப் பிரச்சனையாகும்.

காடழிப்பால் உத்தரகாண்ட் பகுதியில் மழை அளவு பெரிதாகக் குறைந்துள்ளது. அப்பகுதியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் சராசரி மழைப் பொழிவு 60.5மி.மீ. இருக்கும். ஆனால் 2016, 2017, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் 16.2 மி.மீ., 21.3 மி.மீ., 25.5 மி.மீ., 17.8மி.மீ. மட்டுமே மூன்று மாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதேபோல் உத்தரகாண்ட் பகுதியில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை சராசரி 1002.3 மி.மீ. ஆகும், ஆனால் 2020ம் ஆண்டு இது 12% குறைந்து 883.9மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது 13,14.

இப்படிக் காலநிலை மாற்றமும், கண்மூடித்தனமான நகரமயமாக்கல் ஆகிய இரண்டும் கூட்டு சேர்ந்துதான் உத்தரகாண்ட்டில் தொடர் பேரிடர்களை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது (2023 ஜனவரியில்) கூட உத்தரகாண்டின் ஜோஷிமத் பகுதியில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. ‘சார் அணை’ கட்டும் திட்டத்தினால் ஜோஷிமத் பகுதிகளில் வீடுகள் ஆங்காங்கே புதைந்து வருகிறது என  அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். 2007ல் இருந்து சூழலியலாளர்களும், புவியியலாளர்களும் சொல்லிவந்ததை கிஞ்சித்தும் கேட்காததன் விளைவுதான் இப்போது உத்தரகாண்டின் ஜோஷிமத்தில் நடைபெறும் பேரவலத்திற்குக் காரணம்.

இந்நேரம் காலநிலை மாற்ற அபாயத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் சந்தைப் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது இப்பகுதியின் சூழலை மோசமாக்கவே செய்யும். இதைத் தடுக்கக் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

  1. இமயமலையின் மையப்பகுதியில் வரவிருக்கின்ற புதிய அணைகள் மற்றும் நீர் மின் திட்டங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
  2.  ஏற்கெனவே அமைந்துள்ள அணைகள் மற்றும் நீர் மின்திட்டங்களைச் செயலிழக்கச் செய்வதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
  3. பேரிடர் அபாயமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள மக்களை இடம்பெயரச் செய்வதற்கான திட்டங்கள் உருவாக்க வேண்டும்.
  4. இமயமலைப் பகுதிகளில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிககளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் கட்டுமானத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
  5.  நிலச்சரிவு, பனிச்சரிவு, உறைபனி ஏரிகள், வெள்ள அபாயப் பகுதிகளைக் கண்டறிந்து, அவ்விடங்களில் முன்னெச்சரிக்கை அமைப்புகள் (Early Warning System) உருவாக்க வேண்டும்.
  6. மக்களுக்குப் பேரிடரை எதிர்கொள்ள பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
  7. இமயமலை மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்த காலநிலை மாற்ற செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

அரசு முதலில் செய்ய வேண்டியது உத்தரகாண்ட் பகுதிகளில் அணைகட்டும் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும். அதுதான் அப்பகுதி மக்களுக்கும் உத்தரகாண்டின் தனித்துவமான உயிர் சூழலிற்கும் நல்லது.

சரி. நாம மறுபடியும் 2018ம் ஆண்டு சவுகத் சொன்ன புரான்ஸ் பூவின் கதைக்கு வருவோம், சவுகத் இந்த கதைகளெல்லாம் சொல்லி முடிக்கும்போது, நாங்கள் புரான்ஸ் மலர்கள் இருந்த பகுதியைவிட்டு வெகு தொலைவில் வந்து விட்டோம், கதை கேட்டு முடித்த பின்புதான் எனக்கு அந்த மலரை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றே தோன்றியது. ஆனால், ரொம்ப தொலைவில் வந்து விட்டோம், புரான்ஸ் மலரைச் சுவைக்க எனக்கு கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பினை தவறவிட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

காலநிலை மாற்றத்தினால் உந்தப்பட்டு 2050ம் ஆண்டிற்குள் 25,000 வகை உயிரினங்கள் முற்றழிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்15. வேகமாக அழிந்துவரும் உயிர்களின் IUCN பட்டியலில் ஏற்கெனவே 10,967 உயிரினங்கள் சேர்க்கப்பட்டிருகின்றன. இதை எழுதும் போது ருத்ரப்ரயாக்கில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, காட்டுக்குள் மலை ஏறிக்கொண்டிருக்கும் போது சவுகத் திடிரென கத்த ஆரம்பித்துவிட்டார், மகிழ்ச்சியில் திகைத்துக் கொண்டிருந்த அவரிடம் என்ன ஆச்சு என கேட்டேன். அதோ அந்தப் பறவைகளை சீக்கிரம் உன் போனில் போட்டோ எடு என்றார். நானும் உடனே எடுத்தேன். ஒரு 7-8 பறவைகள் இருக்கும், பார்க்க கழுகுகள் மாதிரி இருந்தன.

புகைப்படத்தை என்னிடம் இருந்து வாங்கி டேராடுனில் வனத்துறையில் பணியாற்றி வரும் அவரின் கல்லூரி நண்பர் ஒருவருக்கு அனுப்பி இது அது தானா என்று உறுதிபடுத்துமாறு சொன்னார். சற்று நேரம் கழித்து அந்த நண்பரும் இது அதேதான் என்று உறுதிப்படுத்தினார். ஆம் மிகவும் வேகமாக அழிந்துவரும் உயிரினமாக கருதப்படும் இந்திய கழுகுகளின் ஒரு வகை (Indian Vulture,Gyps indicus) அது. எஞ்சி இருக்கும் சில நூறு இந்தியக் கழுகுகளில்  நாங்கள் ஒரு சிறிய கூட்டத்தினை ருத்ரபிரயாக் அருகில் உள்ள ஆகஸ்டமுனியில் வைத்துப் பார்த்திருக்கிறோம். இது போன்ற அழிந்து வரும் பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக இருக்கும் காடுகளை நாம் பாதுகாப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

காடுகள்தான் நம் எதிர்காலம், காடுகள்தான் காலநிலை மாற்றத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கப் போகும் தடுப்பு அரண்கள்.

ஆனால், கடந்த 2014ம் ஆண்டிலிருந்தே பா.ஜ.க அரசாங்கம் இந்தியாவின் சூழலியல் சட்டங்களை வலுவிழக்கச் செய்தும் சூழலியல் கொள்கைகளை நீர்த்துப்போகவும் செய்து கொண்டிருக்கிறது.

காடுகளை நிர்வாகிப்பதில் இருந்த மக்களை மையப்படுத்திய அணுகுமுறையில் இருந்து (people-centric approach) பெரும் அளவு விலகி தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை சார்ந்த அணுகுமுறையாக (industry-centric and technocratic approach) அதை மாற்றியிருக்கிறார்கள். இந்த நிலை தொடர்வது இன்னும் பல பேரிடர்களுக்கு வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  • பிரபாகரன் வீரஅரசு

References:

  1. https://www.longdom.org/open-access/disaster-in-rudraprayag-district-of-uttarakhand-himalaya-a-special-emphasis-on-geomorphic-changes-and-slope-instability-37135.html
  2. https://www.indexindex.com/journal-of-geography-natural-disasters/recent-and-past-floods-in-alaknanda-valley-causes-and-consequences-10092.html
  3. https://www.researchgate.net/publication/269696415_Kedarnath_disaster_Facts_and_plausible_causes
  4. https://sandrp.in/2021/06/03/uttarakhand-cloud-bursts-in-may-2021/
  5. https://www.downtoearth.org.in/news/natural-disasters/cloudbursts-in-uttarakhand-again-flooding-too-76794
  6. https://sandrp.in/2022/10/27/uttarakhand-cloud-burst-2022-road-debris-drainage-encroachment-magnify-destruction/#:~:text=24%20August%3B%20Rudraprayag%3A%20Around%207,lv%5D%20several%20homes%20and%20cowsheds.
  7. https://timesofindia.indiatimes.com/city/dehradun/ukhand-lost-over-3000-ha-to-forest-fires-in-march-april/articleshow/91298702.cms
  8. https://link.springer.com/article/10.1007/s42965-020-00057-x
  9. https://lib.icimod.org/record/34383
  10. https://news.climate.columbia.edu/2019/06/19/melting-himalayan-glaciers-doubled/
  11. https://www.ipcc.ch/site/assets/uploads/sites/3/2019/11/SROCC_SOD_Ch02_FINAL.pdf
  12. https://www.thetatva.in/india/uttarakhand-under-emergency-due-to-forest-fires-1240-hectares-of-land-already-lost-this-year/4891/
  13. https://india.postsen.com/local/219064.html
  14. https://timesofindia.indiatimes.com/city/dehradun/due-to-unprecedented-48-hours-heavy-rain-spell-uttarakhand-records-over-470-rain-surplus-in-october/articleshow/87472336.cms
  15. https://www.iberdrola.com/sustainability/climate-change-endangered-species
  16. https://sabrangindia.in/article/study-shows-12l-hectares-forest-lost-nda-regime-modi-really-champion-earth

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments