கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

kazhuveli
Image: FERAL

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் மற்றும் மரக்காணம் தாலுகாக்களில் 5,161.60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 18 (1)ன் கீழ் கழுவெளி சதுப்புநில பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் அரசிற்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியிருந்தார். இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அப்பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளார்.

Kazhuveli Birds Sanctuary Notification G.O(Ms).No.123, 06.12.2021

இதனையடுத்து தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயம் என்கிற பெயரை கழுவெளி சதுப்பு நிலம் பெற்றுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் “ சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் கழக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை,பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கழுவெளியானது 196 விவசாய குளங்கள் மற்றும் குட்டைகளின் வடிநிலப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த நீர்நிலைகளில் இருந்து வெகியேறும் நீரானது கழுவெளி சதுப்பு நிலத்திற்கு வந்து அங்கிருந்து இடையந்திட்டு முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. இதன் ஒட்டு மொத்த பரப்பளவு 74 சதுர கிலோ மீட்டராகும். இக்கழுவெளியில் பெரும்பாலான பகுதிகள் வானூர் தாலுகாவிலும் சிறிய அளவிலான பகுதி மரக்காணம் தாலுகாவிலும் அமைந்துள்ளது.

இந்த சதுப்பு நிலமானது பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வலசைப் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகளுக்கு வசிப்பிடமாகவும் உள்ளது. பெலிக்கன், ஃப்ளமிங்கோ உள்ளிட்ட பல வகையான பறவைகள் இங்கு வருகின்றன. ஆண்டிற்கு நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள்  உணவுத் தேடலுக்காவும் இனப்பெருக்கத்திற்காவும் இங்கு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

இக்கழுவெளியைச் சுற்றி 22 கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றில் 16 கிராமங்கள் கழுவெளி பகுதியுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ளன. சுற்றியுள்ள 70,000 மக்களின் வாழ்வாதாரத்திற்கு இக்கழுவெளி உதவியாக அமைந்துள்ளது. இந்த சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் கருதி இதனை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கக்கோரி 20.07.2017ஆம் ஆண்டே அப்போதைய மாவட்ட ஆட்சியரால் அரசிற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.

இக்கழுவெளியைச் சுற்றி அமைந்துள்ள இறால் பண்ணைகள் சதுப்பு நில பகுதியிலிருந்து நீரை உறிஞ்சி இறால் பண்ணைகளில் பயன்படுத்திவிட்டு பின்னர் ரசாயன மருந்துகளால் நச்சான கழிவுநீரை மீண்டும் கழுவெளியில் விட்ட காரணத்தால் உப்புத்தன்மை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அங்குள்ள மாங்குரோவ் உள்ளிட்ட சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் கடுமையாக பாதிப்படைந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு அப்போதைய விழுப்புரம் மாவட்ட வனத்துறை நிர்வாகம் கழுவெளியைச் சுற்றியுள்ள 42 இறால் பண்ணை உரிமையாளர்களின் சட்ட விரோதமாக செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுத்தது. வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக சில இறால் பண்ணை உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். அரசு மீன்வளத்துறையும், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவும் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு ஆதரவாகவே தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இருப்பினும் தகுந்த ஆதாரங்களை முன்வைத்து வாதாடிய வனத்துறைக்கு ஆதரவாகவே இறுதித் தீர்ப்பு அமைந்தது.

Kazhuvelitoposheet

23.11.201ல் வெளியான அத்தீர்ப்பில் “ As Kazhuveli is the second largest wetland in India, the Government should come out with a notification to declare Kazhuveli as a sanctuary as per the proposal forwarded by the District Collector, Villupuram” எனக் கூறப்பட்டிருந்தது. ஆனாலும் கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு இந்தக் கழுவெளியைப் பாதுகாக்கும் நோக்கில் பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது இந்தக் கழுவெளி நீர் கடலைச் சென்றடையும் முகத்துவாரத்தை ஒட்டி மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஒரு திட்டம் ஒன்றை மீன்வளத்துறையும், கடல்நீர் கழுவெளிக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் சுவர் எழுப்பும் திட்டமொன்றை பொதுப்பணித்துறையும் முன்மொழிந்திருந்தன.

இவ்விரு திட்டங்களுமே கழுவெளியின் இயற்கையான சமநிலையை குலைக்கும் தன்மை உடையவை என்பதால் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் கழுவெளியின் எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற்கு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக கருதப்பட வேண்டும். இதன் காரணமாக இப்பகுதியில் புதிய திட்டங்களையோ, இறால் பண்ணைகளையோ அமைப்பது கடினமாகும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதன்மை காட்டுயிர் பாதுகாவலர் கழுவெளி பறவைகள் சரணாலயத்தின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டல எல்லையை இடையந்திட்டு வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.

– சதீஷ் லெட்சுமணன்

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Create Account
1 year ago

The point of view of your article has taught me a lot, and I already know how to improve the paper on gate.oi, thank you. https://www.gate.io/uk/signup/XwNAU