தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு –
கழுகுகளின் கணக்கெடுப்பு முடிவு
தமிழ் நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழ் நாடு அரசு வனத்துறை நடத்திய ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழ் நாட்டில் கடந்த 25.02.2023 மற்றும் 26.02.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பில் மொத்தம் 246 கழுகுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பானது 30.12.2023 மற்றும் 31.12.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது..
இக்கணக்கெடுப்பானது, பில்லிகிரி ரங்கநாத சுவாமி கோவில் புலிகள் காப்பகம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதுமான பகுதிகளில் நட த்தப்பட்டது. வாண்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறையைப் பின்பற்றி நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில் 139 வான்டேஜ் பாயின்ட்களில் நான்கு அமர்வுகளாக இரண்டு நாட்களில் 8 மணிநேரம், அனைத்து 139 வான்டேஜ் புள்ளிகளிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனடிப்படையில் 320 கழுகுகள் கண்டறியப்பட்டதாக தமிழ் நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.
வ.எண். | பாதுகாக்கப்பட்ட பகுதியின் பெயர் | வாய்ப்பு புள்ளிகளின் எண்ணிக்கை | கழுகுகள் எண்ணிக்கை | |||||
வெண்முதுகுப் பாறுக் கழுகு(White-rumped vulture) | கருங்கழுத்துப் பாறுக் கழுகு(Long-billed vulture) | செந்தலைப் பாறுக் கழுகு(Red-headed vulture) | மஞ்சள்முகப் பாறுக் கழுகு(Egyptian vulture) | இமாலயப் பாறுக் கழுகு(Himalayan Griffon vulture) | மொத்தம் | |||
1 | முதுமலை புலிகள் காப்பகம் | 20 | 63 | 9 | 6 | 0 | 0 | 78 |
2 | சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் | 16 | 35 | 25 | 10 | 0 | 0 | 70 |
3 | பந்திபூர் புலிகள் காப்பகம் | 42 | 57 | 3 | 5 | 0 | 0 | 65 |
4 | பில்லிகிரி ரங்கநாத சுவாமி கோவில் புலிகள் காப்பகம் | 18 | 5 | 7 | 2 | 0 | 0 | 14 |
5 | நாகர்ஹோல் புலிகள் காப்பகம் | 15 | 26 | 1 | 11 | 0 | 0 | 38 |
6 | வயநாடு வனஉயிரின சரணாலயம் | 18 | 31 | 2 | 16 | 0 | 2 | 51 |
7 | நெல்லை வனப் பகுதி | 10 | 4 | 4 | ||||
மொத்தம் | 139 | 217 | 47 | 50 | 4 | 2 | 320 |
தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு, தலைமை வனஉயிரினக் காப்பாளர் தலைமையில் மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்புக் குழுவை 2022ஆம் ஆண்டே அமைத்திருந்தது. மேலும், கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கால்நடை சிகிச்சைக்காக விற்கப்படும் டிக்ளோஃபெனாக் மருந்து விற்பனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மூலம் தடை ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலமுறை மருந்து கட்டுப்பாட்டு துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்தை விற்பனை செய்ததற்கு 104 உற்பத்தியாளர்கள், மல்டி டோஸ் டிக்ளோஃபெனாக் விற்பனையாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.
கழுகுகளுக்கான உணவு ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் இதுவரை இருந்து வந்த காட்டுயிர் சடலங்களை புதைக்கும் நடைமுறையை மாற்றி, பிரேத பரிசோதனைக்குப் பின் அந்த சடலங்கள் வெட்ட வெளியில் இடப்படுவதாவும். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து சூழல் சமநிலையை எய்த இயலும் எனவும் வனத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
– செய்திப் பிரிவு