பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுக.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய  பகுதிகளில் அமைக்க திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பணிகளை தமிழ் நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தால் தங்கள் விளைநிலங்களையும், வீடுகளையும், நீர்நிலைகளையும் இழக்கும் அபாயத்தில் உள்ள மக்கள் தொடர்ந்து 433 நாட்களாக தங்களது எதிர்ப்பை அறவழியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய விமான நிலையத்தை நீர் நிலைகளுக்கு பாதிப்பில்லாமல் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் தங்கள் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்களும் அமைதியான வழியில் ஞாயிற்றுக்கிழமை தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்திருந்தது.

உலகத்திற்கே அகிம்சையைக் கற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று அறவழியில் போராடிய பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் 138 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சிக்கு மற்றும் கண்டனத்திற்குரியதாகும்.

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ் நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 2) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ”கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” எனப் பேசியிருந்தார். ஆனால், முதல்வர் இக்கருத்தைப் பேசிய அன்றைய நாளே, குளங்கள், ஏரிகள், கால்வாய்களை அழிக்கக்கூடிய பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகப் போராடிய மக்கள்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இதுவரை 6 முறை கிராமசபைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாடு அரசு தற்போது வரை போராடும் கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை.

தங்கள் வாழ்வாதாரம் அழிக்கப்படுமோ என்கிற அச்சத்தோடு விவசாயத்தை நம்பி மட்டுமே எளிய வாழ்க்கையை நடத்தி வரும் மக்கள் மீது வழக்குகளைப் பதிந்து அவர்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து இத்திட்டத்தை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் உடனடியாக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments