1970லிருந்து கொண்டாடப்படுகிறது பூமி தினம். அதற்கு முந்தைய வருடம்தான் யுனெஸ்கோ மாநாடு ஒன்றில் இப்படி ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. சரியாக 30 வருடங்கள் கழித்து அந்த நாளில்தான் தனது கிராமத்தையும் அதன் நிலத்தடி நீரையும் காப்பாற்றும் போராட்டத்தை தொடங்குகிறார் ஒரு முதிய பெண்மணி. அது 2000மாவது வருடம். கேரளாவின் பிளாச்சி மடாவில் அமைந்த கோகோகோலா நிறுவனத்தின் ஆலையால் கிராமத்தின் நிலத்தடி நீர் நச்சடைந்து பலரும் நோய்வாய்ப்பட அதை எதிர்த்து தனி நபராக போராட தொடங்கியவர் தான் மயிலம்மா. அந்த போராட்டத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து ஆதரவு பெருக, இறுதியில் கோகோ கோலா தனது ஆலையை மூடுகிறது. மயிலம்மா மட்டுமல்ல, இயற்கைக்கு எங்கெல்லாம் அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பெண்கள் களத்தில் இறங்கி போராடியிருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்று உதாரணங்கள் தொடங்கி சமகால உதாரணங்கள் வரை நிறைய சொல்லலாம்.
பெண்கள்தான் சமாதானத்திற்காக அதிகம் உழைக்க வேண்டும். காரணம், போர் நமக்கும் நமது மகள்களுக்கும் எவ்வளவு வலியைத் தரும் என்பதை நாம் மட்டுமே அறிவோம் என்கிறார் நோபல் பரிசு பெற்ற சுற்றுசூழலியலாளர் வாங்காரி மாத்தாய். காலம் காலமாக பெண்கள் வாழ்வின் பக்கம், சமாதானத்தின் பக்கம், வளர்ச்சியின் பக்கம் நின்றிருக்கிறார்கள். இதுவே அவர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பை வலுப்படுத்தி யிருக்கிறது. சமூகத்தில் புரையோடியிருக்கும் தந்தைமையமாக்க கருத்தியல், பெண்ணைப் போலவே இயற்கையையும் சுரண்டுகிறது என்கிற கோட்பாட்டின் அடிப்படையிலேயே சூழலியல் பெண்ணியம் உருவாகிறது. பெண்ணுக்கு எதிரான தந்தைமயமாக்கச் சுரண்டல்களை எதிர்த்து போராடுவது போலவே இயற்கைக்காவும் பெண் போராட வேண்டியிருக்கிறது என்று பெண்ணியலாளர்கள் கருது கிறார்கள்.
சூழலியல் பெண்ணியம் (ecofeminism) என்கிற கோட்பாட்டை முதன் முதலில் பிரெஞ்ச் பெண்ணிய வாதி பிரான்ஸ§வா தபோன் (Françoise d’Eaubonne) 1974ல் வெளியான தனது புத்தகம் ஒன்றில் முன் வைக்கிறார். பெண்ணும் இயற்கையும் எதிர் கொள்ளும் ஆண் மையச் சுரண்டலை தொடர்பு படுத்துவதோடு, அந்த ஆண் மைய அடக்குமுறையிலிருந்துதான் பெண்ணுக்கும் இயற்கைக்குமான பந்தம் உருவாகிறது என்று அந்தப் புத்தகத்தில் வாதிடுகிறார் தபோன். பிற பெண்ணிய தத்துவங்கள் போல அல்லாமல் சூழலியல் பெண்ணியம் ஆணும் பெண்ணும் வெவ்வேறான இயல்புகளை கொண்டவர்கள் என்பதை அங்கீகரிக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த வந்தனா சிவாவும் மரியா மையெஸ் என்கிற பெண்ணியவாதியும் இணைந்து சூழலியல் பெண்ணியம் என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை 1993ல் வெளியிடுகிறார்கள். பெரிய அளவில் அங்கீகரிக்காமல் விடப்பட்ட தினசரி உறவுகளின் வாயிலாக பெண்களுக்கும் இயற்கைக்கும் ஒரு பிரத்யேகமான தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார் வந்தனா சிவா. கென்யாவைப் பொறுத்தவரையில் சூழலியல் சிதைவால் முதலில் பாதிக்கப்படுவது பெண்களே. காரணம், அவர்கள்தான் மணிக்கணக்கில் தண்ணீருக்காக நடக்கிறார்கள், அவர்கள்தான் குடும்பத்தினரின் உணவுக்கு ஆதாரம் என்று வாங்காரி மாத்தாய் சொல்வது கென்யாவுக்கு மட்டுமல்ல பெரும்பாலான நாடு களுக்கு குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பொருந்தும். சூழலியல் பிரச்னைகளால் அதிக மாகவும் உடனடியாகவும் பாதிக் கப்படுவது பெண்கள் என்பதற்கு இந்தியா தொடங்கி உலகெங்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
போபால் விஷவாயு கசிவின்போது சுமார் 3000 பெண்கள் கர்ப்பமாக இருந் தார்கள்.
கசிவில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் தாய்மை அடையும் தன்மையை இழந்தார்கள்.
விபத்திற்கு பிறகு கணவரை இழந்த பெண்களுக்கென்று காலனி ஒன்று உருவாக்கப்பட்டது.
பசுமைப் புரட்சியின் காரணமாக இன்று இந்தியாவின் கான்சர் தலை நகரமாகியிருக்கிறது பஞ்சாப். நாள் ஒன்றுக்கு 19 பேர் கேன்சரில் இறப் பதாக அம்மாநில அரசு எடுத்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. லட்சத்தில் 90க்கும் மேற்பட்டவர்களுக்கு கேன்சர் இருக்கிறது.பிற மாநிலங்களில் லட்சத்தில் 80 பேர் என்கிறது புள்ளிவிவரம். மால்வா பகுதியில்தான் கேன்சரின் பாதிப்பு மிக அதிகம். இந்த பகுதியில் உள்ள தால்வாண்டி என்கிற இடத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் சுமார் 107 பேர் கேன்சரில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆண்களில் சுமார் 27 பேரும் பெண்களில் 80 பேரும் கேன்சரில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சாம்கூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 25 ஆண்களும் 46 பெண்களும் கேன்சரில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களை விட அதிக இணக்கமான உறவின் காரணமாக இயற்கையை காக்கும் போராட்டங்களில் பொதுவாக பெண்கள் முன்னணியில் இருக் கிறார்கள். வழமையான பெண்ணிய போராட்டங்கள் போல அல்லாமல் தாய்மையின் கூறுகளை முன்வைத்து போராடும் தன்மையும் இயற்கையை காக்கும் பெண்ணியப் போராட்டங்களில் வெளிப்படுகிறது.
1980களில் அமெரிக்கா-ரஷ்யா பனிப்போரின் விளைவாக இங்கிலாந்தில் ஒரு அணுஆயுத ஏவுகணை நிறுவப்பட்ட போது அதற்கு எதிராக சுமார் 30 ஆயிரம் பெண்கள் திரண்டு முகாம் அமைத்து எதிர்த்தார்கள். என்ன செய்தாலும் அவர்களை அப்புறப்படுத்த முடியவில்லை. க்ரீன்ஹாம் காமன் பெண்கள் அமைதி முகாம் ஒரு மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. நாங்கள் வாழ்வின் பக்கம் நிற்கிறோம், நீங்கள் மரணத்தின் பக்கம் நிற்கிறீர்கள் என்கிற செய்தியைச் சொல்ல அவர்கள் முகாம்களில் குழந்தைகளின் துணிகளை உலர்த்துவது, சானிடிரி நாப்கின்களை தொங்கவிடுவது என்று பல குறியீடுகளை பயன்படுத்தினார்கள். சுமார் 19 ஆண்டு காலம் இந்த போராட்டம் நீடித்தது. அந்த ஏவுகணை அப்புறப்படுத்தப்பட்ட பிறகும் முகாம் கலைக்கப்படவில்லை. சுதந்திர இந்தியா கண்ட மகத்தான மக்கள் போராட்டங்களில் சிப்கோ இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட் டத்தில் உள்ள ரேனி என்ற கிராமத்தில் உள்ள அரிய மரங்களை, 1974-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி வனத் துறை கான்ட்ராக்டர்கள் வெட்டி விற்க முயன்றனர். இமயமலைச் சரிவில் உள்ள அந்த மரங்களை வெட்ட விடாமல் தடுப்பதற்காக, இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து மரங்களை கட்டிப்பிடித்துக்கொண்டனர்.
தங்களைக் கொன்றுவிட்டு மரங்களை வெட்டிச் செல்லுமாறு போராடியதே சிப்கோ இயக்கத்தின் தொடக்கப்புள்ளி. மரங்களை வெட்ட வந்தவர்கள், எவ்வளவோ முயன்றும் மரத்தை விட்டு அந்தப் பெண்களைப் பிரிக்கவே முடியவில்லை. முடிவில், மரங்களை வெட்ட முடியாமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர். அறப் போராட்டமே வென்றது. மரங்களைக் காப்பதற்காக தொடங்கப்பட்ட அந்தச் சுற்றுச்சூழல் இயக்கம்,மெள்ள வளர்ந்து இமயமலை வட்டாரம் முழுவதும் பரவியது. சிப்கோ என்றால் கட்டிக்கொள்வது என்று பொருள். காடுகள் அழிக்கப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவது மலைவாழ் பெண்களே. ஆகவே, அந்தப் பெண்கள் தாங்களே முன்வந்து போராட வேண்டும் என்றார் சுந்தர்லால் பகுகுணா. அதை உணர்ந்துகொண்ட மலைவாழ் பெண்கள், போராட்டக் களத்தில் குதித்தனர். ஒவ்வொரு மலைக் கிராமத்திலும் மரங்களைப் பாதுகாக்க பெண்கள் படை அமைக்கப்பட்டது. இந்தப் பெண்களை, ‘லேடி டார்ஜான்’ என்று பத்திரிகைகள் வர்ணித்தன. அந்த அளவுக்கு வீரம்கொண்ட இந்தப் பெண்கள் படை, காட்டில் ஒரு மரத்தைக்கூட எவரையும் வெட்ட அனுமதிக்கவில்லை. அத்துடன், காட்டு வளத்தைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை எப்படிச் சுயமாக நடத்த வேண்டும் என்றும் கிராமப்புறப் பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது சிப்கோ இயக்கம். கேரள ஆதிவாசிகளின் நில மீட்பு போராட் டங்களில் தீவிரமாக இயங்கி வரும் சி.கே ஜானு அதிகார வர்க்கங்களை தனது தீவிரத்தால் ஆட்டம் காண வைத்திருப்பவர். நிலமற்ற ஆதி வாசிகளுக்கு எதிராக திருவனந்தபுரம் தலைமை செயலகத்தின் முன்பு சுமார் 48 நாட்கள் போராட்டம், முத்தங்கா நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் என்று தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். கிரீன்ஹாம் போராட்டத்துக்கு சற்றும் குறைந்ததில்லை கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிரான இடிந்தகரை பெண்களின் போராட்டம். வாழ்விற்காகவும் சமாதானத்திற்காகவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும்தான் போராடுவதாக அவர்களும் சொல்கிறார்கள். அகிம்சைதான் நமது வழிமுறை என்றால் எதிர்காலம் பெண்களிடம்தான் இருக்கிறது. ஒரு பெண்ணைத் தவிர் வேறு யாரால் இதயத்தை தொடும் வலுவான கோரிக்கையை முன் வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பு கிறார் மகாத்மா காந்தி. மயிலம்மா முதல் இடிந்த கரை சுந்தரி வரையில் பதில் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள்.
நன்றி : குமுதம் சிநேகிதி
கவிதா முரளிதரன்