காற்றுமாசினால் அதிகரித்துவரும் உயிரிழப்புகளைக் கருத்தில்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) காற்றின் தர நெறிமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இது 16 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நெறிமுறைகளின் மூலம் நுண்துகள் (PM 2.5, PM 10), ஓசோன்(O3), சல்பர் டை ஆக்சைட் (SO2), நைட்ரஜன் டை ஆக்சைட் (NO2) மற்றும் கார்பன் மோனாக்சைட் (CO) ஆகிய ஆறு முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை உலக சுகாதார நிறுவனம் செப்டம்பர் 22 ஆம் நாள் வெளியிட்டிருக்கிறது. புதிய திருத்தப்பட்ட அளவுகளின் அடிப்படையில் ஒப்பிடும்போது சென்னையின் நுண்துகள் அளவுகள் பாதுகாப்பான அளவுகளை விட 5.4 மடங்கு அதிகமாக உள்ளது.
உலகெங்கும் காற்றுமாசு தான் மனித ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. காற்று மாசினால் நிகழும் உயிரிழப்புகளில் 91% உயிரிழப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளிலே நடைபெறுகிறது. 2019-ஆம் ஆண்டு மட்டும் காற்று மாசினால் 16.7 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்ததாக ICMR ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. டெல்லி, கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களில் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் காலம் 5 முதல் 9 ஆண்டுகள் வரை குறைவதாக AQLI ஆய்வறிக்கை கூறுகிறது. காற்றிலிருக்கும் நச்சு வாயுக்களைக் காட்டிலும் நுண் துகள்களை சுவாசிப்பதன் மூலமே மக்களின் ஆயுள் காலம் குறைகிறது என்ற பின்னணியில், உலக சுகாதார அமைப்பினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய காற்று தர நெறிமுறைகள் மிக முக்கியமான முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
சமீபத்திய திருத்தத்தில் குறிப்பாக காற்றின் நுண்துகளின் (Particulate Matter) அனுமதிக்கப்பட்ட அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் 24 மணிநேர அனுமதிக்கப்பட்ட அளவு 25 µg/m3 (மைக்ரோ கிராம்/கன மீட்டர்) ஆக இருந்த நுண்துகள் PM 2.5 இன் அளவு, தற்பொழுது 15 µg/m3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்பு 10 மைக்ரோ கிராம்/கன மீட்டராக இருந்த ஓராண்டு நுண்துகள் (PM 2.5) இன் அனுமதிக்கப்பட்ட அளவு தற்போது 5 µg/m3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிக மக்கட் தொகை கொண்டுள்ள 100 நகரங்களில், 72 நகரங்களில் நுண்துகளின் அளவு உலக சுகாதார அமைப்பு 2005 ஆம் ஆண்டு நிர்ணயித்த அளவுகளை விட அதிகமாக உள்ளது. தற்பொழுது திருத்தப்பட்டுள்ள புதிய பாதுகாப்பான அளவுகளின் அடிப்படையில் பார்த்தால் 90 நகரங்களில் நுண் துகள்களின் அளவுகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக உள்ளன. இவற்றில் சென்னை உட்பட 8 இந்திய நகரங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) புதிய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 24மணிநேர PM2.5 நுண்துகள் அளவு 15µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். ஆனால் இந்திய காற்றுத் தர நிர்ணய அளவீட்டின் படி காற்றில் 24 மணிநேர நுண்துகளின் அளவு 60 µg/m3 வரை இருக்கலாம். இது WHO அளவுகளை விட நான்கு மடங்கும், ஐரோப்பிய யூனியன் தர அளவுகளை விட 2.4 மடங்கு அதிகமாகும். இதன் அடிப்படையில் பார்த்தால் காற்றுமாசு அனுமதிக்கப்பட்ட அளவில் சொல்லப்படுவதை ஒரு ஏமாற்று வேலையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் மேற்கொண்ட ஒரு கள ஆய்வின் முடிவில் திருவொற்றியூர், காசிமேடு, மீஞ்சூர், கொடுங்கையூர், வல்லூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர், தி.நகர், வேளச்சேரி, ஆகியப் பகுதிகளில் நுண்துகள் 60 µg/m3 முதல் 128 µg/m3 வரை இருந்துள்ளன. அதேபோல பாரிமுனை , வியாசர்பாடி போன்ற சென்னையின் பகுதிகளில் PM 2.5 நுண்துகளில் அளவு 176 µg/m3 முதல் 228 µg/m3 வரை பதிவாகியுள்ளது. இவை சமரசம் செய்யப்பட்ட இந்தியக் காற்றுத் தர அளவீடுகளைக் காட்டிலும் மிக அதிகமாகும்.
இந்திய மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய இந்தியக் காற்றுத் தர நிர்ணய அளவுகளையும் குறைத்துத் திருத்தியமைக்க வேண்டும். இந்திய காற்றின் தரத்தில் 60 µg/m3 ஆக உள்ள PM 2.5 அளவுகளை WHO இன் 15 µg/m3 அளவிற்கு குறைத்து நுண் துகள்களை கட்டுப்படுத்தினால் இந்தியப் பெருநகரங்களில் உள்ள மக்களின் ஆயுட்காலம் 5 முதல் 9 ஆண்டுகாலம் அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தேசிய தூய காற்றுத் திட்டத்தில் கூறியவாறு இந்திய நகரங்களின் காற்றின் தரத்தை 20% முதல் 30% உயர்த்த வேண்டும் என்றால் நிச்சியம் இந்திய காற்றுத்தர நிர்ணைய அளவுகளை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்வது அவசியம்.