அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம்; திணறும் வளரும் நாடுகள்

global warming climate change
small girl child is standing in front of her house. watching her tree burning because of heavy sunny.

 

அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம்

தகவமைக்க நிதி இல்லாமல் திணறும் வளரும் நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை

 

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வளரும் நாடுகள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆனால், தகவமைப்பிற்காக தற்போது வளரும் நாடுகளுக்கு கிடைக்கும் நிதியானது 10 முதல் 18 மடங்கு குறைவாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

நவம்பர் 2ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட Adaptation Gap Report 2023:Underfinanced. Underprepared – Inadequate investment and planning on climate adaptation leaves world exposed எனும் அறிக்கை புவி வெப்பமயமாதலின் தாக்கங்களுக்கு நாடுகள் தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்கான திட்டமிடுதல், நிதியளித்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து விரிவாக அலசுகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தகவமைப்புப் பணிகளை மேற்கொண்டு புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் நிலையில் உலக நாடுகள் இருக்கின்றன. ஆனால், தகவமைப்பிற்கான நிதியளிப்புகள் வேகமாக குறைந்து வருவதாக இவ்வறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு நாடுகள் தங்களைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம் புயல், வெள்ளம், வறட்சி, பெருமழை, காட்டுத்தீ உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை உண்டாக்கும் பேரிடர் பாதிப்புகளிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும், வாழிடங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும். முழுமையாக இல்லாவிட்டாலும்கூட பாதிப்புகள் மற்றும் சேதங்களின் அளவையாவது குறைக்க முடியும். இதற்கு வளரும் நாடுகளுக்கு போதுமான நிதி வேண்டியது அவசியம்.

தற்போது தகவமைப்புப் பணிகளுக்காக மட்டும் ஆண்டுதோறும் 194 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 366 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது. இது ஏற்கெனவே கணிக்கப்பட்டதைவிட 50% அதிகமாகும். ஆனால், தகவமைப்புப் பணிகளுக்காக வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியில் 10 முதல் 18 மடங்கு குறைவான நிதியே கிடைக்கிறது என்பதே இவ்வறிக்கையின் முக்கிய அம்சமாகும்.

காலநிலை மாற்றத்தின் தற்போதைய நிலை குறித்து இவ்வறிக்கை கூறும் தகவல்கள் நம்மை அச்சைம் கொள்ள வைக்கிறது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகள் மேற்கொள்ளும் எந்த முயற்சிகளாலும் பாரிஸ் ஒப்பந்தந்தின் இலக்குகளை நம்மால் அடைய முடியாது எனத் தெரிவிக்கிறது இவ்வறிக்கை. தொழிற்புரட்சி காலத்தின் சராசரி வெப்பநிலையைவிட புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்ட நிலையில் உலக நாடுகளின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலையை 2.4°C முதல் 2.6°C வரை உயர்த்தும் என எச்சரிக்கிறது இவ்வறிக்கை.

அறிக்கையின் பிற முக்கிய அம்சங்கள்

 உலகளவில் ஆறு நாடுகளில் ஒரு நாடு தனக்கான தேசிய தகவமைப்புத் திட்டம் இல்லாமல் உள்ளது. காலநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் 29 நாடுகள் தகவமைப்புத் திட்டங்கள் ஏதுமில்லாமல் உள்ளன. இந்த 29 நாடுகளுமே காலநிலை மாற்றத்தின் தீவிரமான தாக்கங்களை எதிர்கொண்டு வரும் நாடுகளாகும்.

தகவமைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் தீவிரமடைந்து வரும் காலநிலை அபாயங்களுக்குமான இடைவெளி விரிவடைந்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் தகவமைப்பு நடவடிக்கைகளுக்கான புதிய திட்டங்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட குறைந்துள்ளது. இதற்கு கோவிட்-19, உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்டவை காரணங்களாக அமைந்துள்ளன.

ஓராண்டிற்கு 215 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தகவமைப்பு நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படுகிறது. இம்மதிப்பு 2050ஆம் ஆண்டில் கணிசமாக உயரக்கூடும். பன்னாட்டு பொது காலநிலை நிதியளிப்பு 2021 ஆம் ஆண்டில் 21.3 பில்லியன் டாலராக(15% ) குறைந்துள்ளது. 2018 மற்றும் 2020 இடையில் இது 25.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

தகவமைப்புத் திட்டங்களில் பாலின சமத்துவம் சமூக உள்ளடக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், உலக நாடுகள் சமர்ப்பித்த தேசிய அளவிலான தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் தேசிய தகவமைப்புத் திட்டங்களை ஆய்வுக்குட்படுத்தியதில் 20% திட்டங்கள் மட்டுமே இந்த நடவடிக்கைகளுக்கென தனியாக நிதி ஒதுக்கியிருக்கின்றன.

பேரிடர் அபாய மேலாண்மை, சேதம் மற்றும் இழப்புகளின் மதிப்பீடு, திறன் மேம்பாடு, வானிலை முன்னறிவிப்பு வசதிகள், சமூக பாதுகாப்பு அளவீடுகள், இழந்த வாழ்வாதாரங்களை மீட்டெடுத்தல், இழப்பீடு, காப்பீடு, பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை நாம் மேம்படுத்த வேண்டியுள்ளது.

தகவமைப்புச் செயல்பாடுகளில் சர்வதேச, உள்நாட்டு மற்றும் தனியார் நிதி, மற்றும் உலகளாவிய நிதி கட்டமைப்பில் சீர்திருத்தம் மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. உலகம் முழுவதும் ஒரு அரசாங்கத்தின் நிதி நிலைமையில் கடும் தாக்கத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப் போகின்றன புவி வெப்பமயமாதலால் உந்தப்படும் பேரிடர்கள். வரலாற்று ரீதியாக பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வுக்கு பெரும் பங்களிக்காத வளரும், ஏழ்மை மற்றும் தீவு நாடுகளே இதில் அதிகம் பாதிப்படையவுள்ளன. இந்த நிலைமைகளை ஓரளவேனும் சமாளிக்க வேண்டுமானால் தீவிரப் பேரிடர்களின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நம் வாழிடங்களை தகவமைப்பது அவசியம். வரலாற்று ரீதியாக அதிக பசுமைக் குடில் வாயுக்களை உமிழும் நாடுகள் வளரும் நாடுகளுக்குத் தொழில் நுட்பங்களையும் நிதியையும் வழங்கினால் மட்டுமே அது சாத்தியம்.

முழு அறிக்கைக்கு:

https://www.unep.org/resources/adaptation-gap-report-2023?gclid=Cj0KCQjwtJKqBhCaARIsAN_yS_nh3I1x6AMbYzAwiEDp7CxN5BFjGAAe_dVljuoijFh4ALL5UDMjav4aAsyfEALw_wcB

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments