மாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா

‘அணு ஆயுதங்களை முதலில் பயன்டுத்தக்கூடாது’ கருத்தரங்கம்

நாள்: ஆகஸ்ட் 30, 2019; நேரம்: மாலை நான்கு மணி;
இடம்: ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், சேப்பாக்கம், சென்னை.

அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை (No First Use -NFU) என்ற இந்தியாவின் கொள்கை கல்லில் எழுதப்பட்டதில்லை; சூழலைப் பொறுத்து இந்தக் கொள்கையின் எதிர்காலம் இருக்கும் என இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கையை மறுபரிசீலனை செய்யப்போவதாகச் சொல்ல ராஜ்நாத் சிங் தேர்வுசெய்த இடம் பொக்ரான். 1998 மே மாதம் அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான பா.ஜ.க. அரசு அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளத் தேர்வுசெய்த அதே இடம்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் பறிக்கப்பட்டு 370வது பிரிவு, 35 ஏ ஆகியவை நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காஷ்மீர் பதற்றமாக இருக்கும் இந்தச் சூழலில், ராஜ்நாத் சிங் முன்யோசனையின்றி, பொறுப்பில்லாமல் இந்த வாக்கியங்களை உதிர்த்திருக்கிறார். இந்திய – பாகிஸ்தான் எல்லை முன்பைவிட சிக்கலானதாக, மோதல் நிறைந்ததாக மாறியிருக்கும் நிலையில் இதைச் சொல்லியிருக்கிறார் அவர்.

பா.ஜ.கவின் அணுஆயுதக் கொள்கை

பொக்ரானில் நடந்த இரண்டாவது அணுஆயுத சோதனைக்குப் பிறகு, பிரதமர் வாஜ்பாயி அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இந்தியா அணுஆயுத சோதனையை நடத்தியதற்கு பாகிஸ்தானைவிட, சீனாவே முக்கியமான காரணம் என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். இரண்டாவது பொக்ரான் சோதனை நடந்து ஓராண்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 1999ல் பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூ அரசு இந்தியாவின் அணுஆயுதக் கொள்கையை முறையாக வரையறுத்தது.  “அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை, அணு ஆயுதங்கள் இல்லாத தேசங்களின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை” என்பது இந்தக் கொள்கையின் அடிப்படை ஆதாரமாக இருந்தது. இனிமேல் அணுஆயுதச் சோதனைகளை நடத்தப் போவதில்லையென தாமாகவே முன்வந்து கூறியது இந்தியா.

இந்த அணுஆயுதக் கொள்கையின்படி, “இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருப்பதன் முக்கியமான நோக்கமே, எந்த ஒரு நாடோ அல்லது அமைப்போ இந்தியாவுக்கோ அதன் படைகளுக்கோ எதிராக அணுஆயுதங்களை பிரயோகிக்காமல் இருக்கச் செய்வதும் அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதும்தான்” என்று கூறியது. மேலும் இந்தியா “தானாக முதலில் அணுஆயுதத் தாக்குதலை நடத்தாது. ஆனால், தாக்கப்பட்டால் மிகப் பெரிய அளவில் அணுஆயுதங்களை வைத்து பதிலடி கொடுக்கும். அணு ஆயுதம் இல்லாத நாடுகள் மீதோ அல்லது அணுஆயுத நாடுகளுடன் சேராத நாடுகள் மீதோ அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம். அணு ஆயுதங்களை வைத்து அச்சுறுத்த மாட்டோம்” என்றும் கூறியது.

மறு பரிசீலனை மற்றும் மாற்றம்

இருந்தபோதும், அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை குறித்து மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்திருக்கிறது இந்தியா.  கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராணுவ வியூக நிபுணர்கள் விவாதித்துவருவதாக வெளியுறவுத் துறையின் முன்னாள் அதிகாரியான அருந்ததி கோஷ் கூறுகிறார். இந்தியாவும் அமெரிக்காவும் அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட பிறகு, அணுசக்தி விவகாரங்கள் குறித்த சித்தாந்தத்தை உருவாக்கிய கே. சுப்பிரமணியன் தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்தவர் இவர்.

அதற்கேற்றபடி, பா.ஜ.கவின் 2014ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், இந்தியாவின் அணுஆயுதக் கொள்கையை மாற்றியமைப்போம் எனத் தெளிவாகவே கூறப்பட்டிருந்தது.  “சுயேச்சையான வியூகரீதியான அணுஆயுதத் திட்டம்” என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையில் இந்த விஷயம் இடம்பெற்றிருந்தது. இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை விரிவாக ஆராயப்பட்டு, தற்போதைய சூழலின் சவால்களைச் சந்திக்க ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், அடல் பிஹாரி வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில் அணுஆயுதத் திட்டங்களில் இந்தியா பெற்றிருந்த வியூகரீதியிலான பலன்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிதறிப்போயின என்றும் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்றும் பா.ஜ.கவின் அந்தத் தேர்தல் அறிக்கை கூறியது.

2014ஆம் ஆண்டில் பா.ஜ.க. வெற்றிபெற்ற பிறகு மனோஹர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். “அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என நாம் ஏன் சொல்ல வேண்டுமெனத் தெரியவில்லை. அதற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமென அர்த்தமில்லை. ஆனால், ஏதற்காக அந்த சாத்தியத்தையே இல்லாமல் செய்ய வேண்டும்?” என்று கேள்வியெழுப்பினார் மனோஹர் பாரிக்கர். “அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை இந்தியாவிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நான் இந்தியா ஒரு பொறுப்பான அணு ஆயுத தேசம் என்று சொல்வேன்.  அதனைப் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்த மாட்டேன்.  ஒரு வியூகத்தை உருவாக்கி, அதை எழுதிவைத்துவிட்டாலோ அல்லது அணு ஆயுதம் தொடர்பாக ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டாலோ அணுசக்தி தொடர்பான உங்கள் பலத்தை நீங்கள் யாருக்கோ கொடுத்துவிடுகிறீர்கள்” என்றார் அவர். ஆனால், அந்தத் தருணத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இது அமைச்சரின் சொந்தக் கருத்து என்று சொல்லிவிட்டது.

இந்தியா தற்போது எதிர்கொள்ளும் பயங்கரவாதம், எல்லை தாண்டிவரும் தாக்குதல்கள் போன்றவற்றை அணு ஆயுதங்களை வைத்து அர்த்தமுள்ள வகையில் எதிர்கொள்ள முடியாது என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை என்பது உடைந்து போய்விடவில்லை. ஆகவே அதைச் சரிசெய்ய முயல வேண்டாம் என்பதே அவர்களது நிலைப்பாடு.

ஆனால், முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் கன்வல் சிபல் போன்ற தீவிர நிலைப்பாடு கொண்டவர்கள் வேறு மாதிரி நினைக்கிறார்கள். அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டை இந்தியா மறு பரிசீலனை செய்தால், “அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலையை எடுக்கும்வகையில் பாகிஸ்தானை தள்ள முடியும்” என்கிறார்கள் அவர்கள். “அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தப் போவதில்லை என பாகிஸ்தான் நிலைப்பாடு எடுத்தால் தெற்காசியாவில் அணுஆயுதம் தொடர்பாக ஸ்திரத்தன்மை நிலவும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தல் இல்லாமல் போய்விடும்” என்கிறார்கள் கன்வலும் அவரது ஆதரவாளர்களும்.

பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் – ஜெனரல் மஹ்மூத் அலி துர்ரானி, இந்தியா தனது அணு ஆயுதக் கொள்கையின் மையமான அம்சத்தை மாற்றினால்கூட தாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை என்கிறார். காரணம், அப்படி இந்தியா மாற்றிக்கொண்டாலும் குறிப்பிடத்தக்கவகையில் எந்த விளைவும் இருக்காது என்கிறார் அவர்.  அவரைப் பொறுத்தவரை “இங்குள்ள அணுஆயுத கொள்கை என்பது இரு தரப்புக்கும் அழிவை ஏற்படுத்தும் ஒன்று.  ஒரு தரப்பு தாக்கினால், மற்றொரு தரப்பு ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்” என்கிறார்.

உறுதியான நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும்

அணுஆயுத நாடுகள், தாங்கள் ஒரு போதும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உச்சி மாநாட்டைக் கூட்டவேண்டுமென முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியபோது, பா.ஜ.க. அதனைக் கடுமையாக விமர்சனம் செய்தது. அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், “பெரிய நாடுகளின் நலனை மனதில் வைத்து முன்செல்வதைவிட, அக்கம்பக்கத்து நாடுகளை மனதில்வைத்து தீவிரமாகச் செயல்பட வேண்டும். பக்கத்து நாடுகளுடன் நட்புணர்வோடு உறவைப் பேணுவோம். தேவைப்படும்போது உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் கடும் நிலைப்பாடு எடுக்கவும் தயங்க மாட்டோம்” என்று கூறியது.

பாரதீய ஜனதாக் கட்சியின் வெளியுறவுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான சேஷாத்ரி சாரி பின்வருமாறு சொன்னார்: “சமீபத்தில் பிரதமர் சொல்லியிருப்பதைப்போல, அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற உலக அளவிலான ஒப்பந்தத்திற்குள் சென்று நம் கையை நாமே ஏன் கட்டிக்கொள்ள வேண்டும்?”.

உலகில் மீண்டும் ஒரு புதிய ஆயுத போட்டி துவங்கும் வாய்ப்பு இருக்கிறது. Intermediate-Range Nuclear Forces Treaty ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட அளவையும் மீறி அமெரிக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பரிசோதித்து வருவதால் உலகம் முழுவதும் ஒரு ஸ்திரமற்ற சூழல் உருவாகியிருக்கிறது. அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை, தவறான முடிவுகள், பைத்தியக்காரத்தனம், கோளாறுகள் ஆகியவற்றால் எது வேண்டுமானாலும் நிகழலாம்.

தாங்கள் அச்சுறுத்தலில் இருப்பதாக ஒரு நாடு நினைத்தால் – அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது தவறான கருத்தாகவும் இருக்கலாம். – உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தி விடக்கூடும். அது மிகப் பெரிய தவறாக முடிந்துவிடும்.

உலக அளவில் எல்லா நாடுகளுமே முதலில் அணுஆயதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என ஒப்புக்கொண்டால்ஒழிய, பயன் ஏதும் இருக்காது. பாரம்பரியமான போர் முறையில் பலவீனமாக இருக்கும் நாடுகள் அல்லது பலவீனமாகத் தங்களை நினைக்கும் நாடுகள் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வாய்ப்பை விட்டுத்தர விரும்பாது.

ஒரு யுத்தம் ஏற்படும்போது ஒரு நாடு எதிராளியின் அணுசக்தி மையங்களையே இயல்பாகக் குறிவைக்கும். அதற்குப் பதிலடியும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவே அமையும்.  மேலும், ஒரு நாடு தான் முதலில் அணு ஆயதத்தால் தாக்கப்பட்டால் பலமாகத் திருப்பி அடிக்கத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்த பிறகே, முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற முடிவை எடுக்கும்.  இவை எல்லாமே, அதிக அளவில் ஆயுதக் குவிப்பு, ராணுவக் குவிப்புக்கே வழிவகுக்கும்.

ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்

மேலே சொன்ன சூழலையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நம்முடைய பாரம்பரியமான வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றபடி நம்முடைய அணு ஆயுதக் கொள்கையை வகுத்து, தார்மீக ரீதியாக உயர்ந்து நிற்பதே இந்தியாவுக்கு உகந்தது. ஆகவே, முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் எந்த மாற்றத்தையும் இப்போது செய்ய வேண்டியதில்லை.

நாம் அணுஆயுதங்களை வைத்திருப்பதன் மூலம், எதிராளி நம்மைத் தாக்க அஞ்சுவான் என்ற கருத்து காலாவதியான ஒன்று என்பது எல்லோருக்குமே தெரியும். 1999ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் யுத்தம் இதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துவிட்டது. உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் நிறைந்துள்ள, எல்லாத் தரப்புமே அழிந்துபோகக்கூடிய வாய்ப்புள்ள இன்றைய உலகில், பூமியிலிருந்தே அணு ஆயுதங்களை இல்லாமல் செய்வதுதான் அறிவுடைய செயலாக இருக்கும்.

அணு ஆயுதங்களே இருக்கக்கூடாது என்று கூறும் நாம், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கைக்குப் பதிலாக, ‘ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வலியுறுத்த வேண்டும்.

2018ஆம் ஆண்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அணுஆயுத ஒழிப்பிற்கான உச்சி மாநாட்டை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையை நாம் வலியுறுத்த வேண்டும். அதன் மூலம், அணு ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான, தடைசெய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான சூழலை நோக்கி நாம் நகர முடியும்.

பூவுலகின் நண்பர்கள், 

அணு ஆயுத ஒழிப்பு மற்றும் அமைதிக்கான கூட்டணி  (CNDP),

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்  (PMANE),

அணுசக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு (NAAM).

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments