சென்னையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும், 16% பகுதிகள் கடலில் மூழ்கும், வெப்பநிலை 2.9°C உயரும்; எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு

2050ஆம் ஆண்டுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி கார்பன் சமநிலையை எட்டும் என சென்னை நகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியானது, C40 Cities மற்றும் நகர்ப்புற மேலாண்மை மையம் ஆகிய  நிறுவனங்களின் உதவியுடன் 426 சதுர கிலோமீட்டர் பரப்புடைய சென்னை மாநகராட்சியை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் அதன் பாதிப்புகளைத் தணிப்பதற்கான – “சென்னைக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட” (Chennai Climate Change Action Plan) அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. இவ்வறிக்கையை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.06.2023 அன்று வெளியிட்டார்.

Final Chennai CAP English Version_compressed

இத்திட்டத்தை சி40 மற்றும் நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பெருநகர சென்னை மாநகராட்சி துவங்கியது. அரசு, பங்குதாரர்கள், செயற்பாட்டாளர்கள், கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களின் வல்லுநர்கள், சமுதாயக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து பங்களிப்பு மற்றும் கலந்தாய்வு முறையை பின்பற்றி சென்னை காலநிலைச் செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கியமான பங்களிப்போராகிய தமிழ்நாடு (மின்) உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA), இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOCL), சென்னை மெட்ரோ இரயில்  நிறுவனம் (CMRL), சென்னை போக்குவரத்துக் கழகம் (MTC), சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (CSCL) சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் (CMWSSB), புறநகர் இரயில்கள், தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் (TNUHDB), கல்வி நிறுவனங்கள் (அண்ணா பல்கலைக்கழகம், IIT சென்னை) குடிமைச் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து கலந்துரையாடி, 200 கூட்டங்கள்  நடத்திய பின்னர் இத்திட்டம் தயாரிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது.

இச்செயல்திட்டமானது மொத்த 7 பிரிவுகளை உள்ளடக்கியது. சென்னை காலநிலை மாற்ற அறிக்கை ஏழு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இயல் 1-ல் சென்னையின் சமூக, பொருளாதார, சூழலியல் எல்லைகள் குறித்து விளக்குகிறது.  இயல் 2-சென்னைக்கு காலநிலை செயற்திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்கிற கேள்விக்கு விடை காண்கிறது. இயல் 3-முழுமையான செயல் திட்டத்தின் தயாரிப்பு முறையை வகுத்தளிக்கிறது. இயல் 4 சென்னையின் காலநிலை மாற்ற இடர்களைப் புரிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப் பெற்ற விரிவான காலநிலை மாற்ற மதிப்பீட்டைச் சுருக்கமாக வரையறுக்கிறது. இது, காலநிலை மாற்றத்துக்கேற்பத் தகவமைதலுக்கும், குடிமக்கள், சொத்துகள், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு நெகிழ் திறனை உருவாக்குதலுக்கும் உரிய வாய்ப்பினை வழங்குகிறது.  இயல் 5, சென்னையின் தற்போதைய மற்றும் வருங்கால (வாயு) உமிழ்வு குறித்தும் இதில் நிலையான எரிசக்தி துறை, போக்குவரத்துறை, கழிவுகள் துறை ஆகியவற்றின் பகுப்பாய்வு குறித்தும் விளக்குகிறது. இயல் 6ல் ஒவ்வொரு முன்னுரிமைத் துறைக்கும் உரிய நோக்கங்கள், செயல்கள், இலக்குகள் ஆகியவற்றைக் கண்டறிந்து விளக்கப்பட்டுள்ளது.  இயல் 7 காலநிலைச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சென்னைக்கு ஒரு கண்காணிப்பு மற்றும் சட்டதிட்ட வரையறையை வகுத்தளிக்கிறது.

காலநிலை மாற்றத்தால் சென்னை நகரத்திற்கு வரும் காலத்தில் ஏற்படப்போகும் அபாயங்கள் குறித்து மிக விரிவான ஒரு மதிப்பீட்டை C40 நகரங்கள் மேற்கொண்டுள்ளது. அவை பின்வருமாறு;

 • 2050ஆம் ஆண்டுக்குள் சராசரி மழைப்பொழிவு 5 விழுக்காடு குறையவும், சராசரி வெப்பநிலை1.9 டிகிரி செல்சியஸ் உயரவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 • இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், சென்னையின் வெப்பநிலையில் அதிகபட்ச, குறைந்தபட்ச சராசரி மாற்றங்கள் முறையே 2.9 டிகிரி செல்சியசாகவும், 3.3 டிகிரி செல்சியசாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
 • சென்னையின் நீர் ஆதாரங்கள் முறையாகப் பேணப்படாவிட்டால் வெப்பநிலை உயர்வு, குடிநீர்த் தேவைப் பெருக்கம் ஆகியவற்றால் வருங்காலத்தில் சென்னையில் நீர்ப்பஞ்சம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறையானது மாநகர் முழுவதும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வினை உண்டாக்கும்.
 • வெள்ள அபாயத்தைப் பொறுத்தவரை, வெள்ளத்தின் கடுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ள நிகழ்வு காரணமாக சென்னைப் பெருநகர மாநகராட்சியின் 32 விழுக்காடு பகுதிகளும், 25  ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ள நிகழ்வு காரணமாக 42 விழுக்காடு பகுதிகளும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 • காலநிலை மாற்றத்திற்காக அமைக்கப்பெற்ற ஐ. நா.வின் பன்னாட்டுக் குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையில் ஆசிய கண்டத்தின் மாநிலங்களுக்கான மண்டல புள்ளி விவரத்தாளில் – இந்தக் கண்டத்தைச் சுற்றி கடல் மட்டமானது, 2100ஆம் ஆண்டிற்குள் 134 செ.மீ. உயருமெனவும், கடற்கரையோரங்கள் விரைந்து அழியுமெனவும், கடற்கரைப் பின்வாங்குமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2100ஆம் ஆண்டிற்குள் 215 குடிசைப் பகுதிகள் கடல்மட்ட உயர்வினால் மூழ்கடிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் முன் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

2050க்குள் பூஜ்ஜிய உமிழ்வு

மின் வழங்கல் கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆற்றல் உற்பத்தி, கழிவு, போக்குவரத்துஆகிய துறைகளில் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வு நில்லையை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் 2018ஆம் ஆண்டு இருந்த உமிழ்விவுடன் ஒப்பிட்டு, 2040 ஆம் ஆண்டிற்குள் 40 விழுக்காடு உமிழ்வையும், 2050ஆம் ஆண்டிற்குள் ‘0’ எனும் அளவுக்கு மாநகர் முழுமையும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறைக்கப்படும் என இச்செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கடல் நீர்மட்ட உயர்வு

பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு உச்சநிலையில்(RCP 8.5 ) தொடர்ந்தால் பெருநகர் சென்னை மாநகராட்சியின் பரப்பில் சுமாராக 2 விழுக்காடு பகுதிகள் நூற்றாண்டின் நடுவிலும் 16 விழுக்காடு பகுதிகள், நூற்றாண்டின் இறுதியிலும் நிரந்தரமாக மூழ்கிவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

உயரும் தட்பவெப்பமும், அனற்காற்றும்

சென்னை நகரில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பு வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 2050ல் 1.90 செல்சியஸ் அளவிற்கும், 2080களில் 2.90 செல்சியஸ் அளவிற்கும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்ப நிலையானது 2050களில் 2.290 செல்சியஸ், 2080களில் 3.30 செல்சியஸ் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப உயர்வால் மனித உழைப்பு நேரங்கள் இழக்கப்படு உற்பத்தித் திறன் குறையும் என இச்செயல்திட்டம் எச்சரிக்கிறது.

தண்ணீர்ப் பஞ்சம்

2021ஆம் ஆண்டு நிலவரப்படி, பெருநகர் சென்னை மாநகராட்சியில் நீர்நிலைகளின் பரப்பளவு 1991ஆம் ஆண்டு இருந்ததைவிட பாதியாக – அதாவது 42 ச.கி.மீட்டரிலிருந்து 18.95 ச.கி.மீட்டராகக் குறைந்துள்ளது. நீர் அதிகமாக ஆவியாதலால் நீர்நிலைகள் வறண்டு நீரின் அளவு குறைகிறது. அதிகரிக்கும் நகர்ப்புற வெப்பத் தீவு (UHI) விளைவு வாழ்விடத்தைக் குளிர்விக்க அதிகமான எரிசக்தியை அவசியமாக்குகிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்கள் நன்றாக மேலாண்மை செய்யப்படாவிட்டால் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நகர் முழுவதும் சமூக பொருளாதார சமநிலையின்மையைத் தோற்றுவிக்கும். தண்ணீர் கிடைப்பது குறைந்தால் அது நலவாழ்வையும், தூய்மை நிலைமைகளையும் மோசமாக பாதிக்கும். நிலத்தடி நீர் மட்டம் குறைவதாலும் திடீர் வெள்ளத்தாலும் சேதமடைந்த மண்வளம் நேரடியாக வேளாண் விளைச்சலைப் பாதிக்கும். வேளாண் இழப்பு பொருளாதாரத்தைத் தாக்கி, நகரில் சமூக ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் என செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அவசர தீயணைப்புப் பணிகள் மீதான தாக்கம்

வெள்ள நிகழ்வுகளின்போது, தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அவசர கால தீயணைப்புப் பணிகள் 57.3 விழுக்காட்டு மக்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய அளவுக்குக் குறைகிறது.  தற்பொழுது சென்னையிலுள்ள 18 விழுக்காடு தீயணைப்பு நிலையங்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும், 4 விழுக்காடும் 56 விழுக்காடும் முறையே 25, 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், வெள்ள இடர் நேரங்களில் நீரால் சூழப்படும் நிலையிலுள்ளன. கிண்டி தீயணைப்பு நிலையமும் தமிழ்நாடு தீ மற்றும் மீட்புப் பணிகள் நிலையமும் கூவம் ஆற்றின் அருகில் இராயபுரம் (மண்டலம் 5) பகுதியில் அமைந்துள்ளன. இவை தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளமையால் ஒவ்வொரு ஐந்தாண்டும் வெள்ளத்தால் சூழப்படும் அபாயத்தில் உள்ளன.

குடிசைப் பகுதிகள் மற்றும் மீனவ மக்கள் மீதான தாக்கம்

சென்னை மாநகரின் நடுவில் அமைந்துள்ள இராயபுரம் (மண்டலம் 5), திரு.வி.க. நகர் (மண்டலம் 6). அண்ணா நகர் (மண்டலம் 8), தண்டையார்பேட்டை (மண்டலம் 4) ஆகியவை திரும்புகைக் காலமான 100 ஆண்டுகளில் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் 6 இலட்சம் மக்கள் குடியிருக்கின்றனர். கூடுதலாக, ஒவ்வொரு 100 ஆண்டிலும் 459 குடிசைப் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயத்தைச் சந்திக்கின்றன. இந்தக் குடிசைப் பகுதிகள் 257இல் 95 குடிசைப் பகுதிகள்  சென்னை மாநகராட்சியின் அனுமதி பெறாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின்மீது உடனடி கவனம் தேவைப்படுகின்றது எனச் செயல்திட்டம் வலியுறுத்துகிறது.

மீனவ மக்கள் – தங்களுடைய குடியிருப்புக்கும், அன்றாடத் தேவைக்கும் கடலோரத்துடன் இணைக்கப் பெற்றுள்ளனர் என்பதை நோக்கும்பொழுது – கடல்மட்ட உயர்வுக்கு மிக மோசமாக பாதிப்புக்குள்ளாவோரில் அவர்கள் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். UHI விளைவின் தாக்கம் நகர்ப்புற ஏழை சமுதாயத்தின்மீது மிக அபாயகரமாகவும் இருக்கிறது. அவர்கள் குளிர் சாதன வசதி செய்துகொள்ளமுடியாது; கடுமையான உடல் உழைப்பைத் தவிர்க்க முடியாது;  வீடுகளுக்கு சரியான, முறையான மேற்கூரை, நிழல் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள முடியாது. வீடுகள் நெருக்கமாகக் கட்டப்படுவதால், பசுமைப்பரப்பும் திறந்த வெளிகளும் குறைவாகவே உள்ளன; வீடுகள் வெப்பத்தாக்கத்திலிருந்து போதிய அளவு பாதுகாப்பு பெறுமளவுக்குக்  கட்டப்பெறவில்லை; இரவு நேரங்களில் கூட மிக அதிக வெப்பநிலையால் குடியிருப்போர் பாதிக்கப்படுகின்றனர்; பல நேரங்களில் இந்த வெப்பத்தாக்கம் பல நாள்களுக்கு நீடிக்கிறது.

 பேரிடர் மீட்பு மையங்களின் மீது தாக்கம்

தற்பொழுது சென்னையிலுள்ள இடர் மீட்பு மையங்கள் ஒவ்வொரு ஐந்தாண்டும் 23 விழுக்காடும், ஒவ்வொரு 25, 100 ஆண்டுகளில் முறையே 35 விழுக்காடும், 50 விழுக்காடும் நீரால் சூழப்படும் அபாயத்தில் உள்ளதாக செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய உமிழ்வு

ஒட்டுமொத்தமாக, 2018-19 ஆண்டில் 14.38 மில்லியன் டன் அளவுக்குக் கரியமில வாயுவை சென்னை மாநகர் உமிழ்ந்துள்ளது.  இதன்படி ஒரு சென்னைவாசி ஆண்டுக்கு 1.9 டன் கரியமில வாயுவை உமிழ்கிறார் என்று தெரிய வருகிறது.  மேலும், இது  நகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 மில்லியன் டாலருக்கு 165 டன் என்ற அளவுக்கு நெருக்கமாக உள்ளது. மாநகரங்களுக்கான உலகளாவிய நெறிமுறையின் அடிப்படைத் தரநிலைகளின் கீழ்,  இந்த உமிழ்வுகள் ஏற்படுவதற்கு மூன்று துறைகள் காரணமாகின்றன.

அவை நிலையான ஆற்றல், போக்குவரத்து, கழிவுகள் ஆகிய துறைகள் ஆகும். 2018-19 ஆண்டில், நிலையான எரிசக்தித் துறை 10.10 மில்லியன் டன் கரியமில வாயுவையும், போக்குவரத்துத் துறை 2.37 மில்லியன் டன் கரியமில வாயுவையும், கழிவுகள் வாயிலாக 1.90 மில்லியன் டன் கரியமில வாயுவும் வெளியேற்றப்பட்டுள்ளது . இது மாநகரின் மொத்த உமிழ்வுகளில் முறையே 71 விழுக்காடு,  16 விழுக்காடு  மற்றும் 13 விழுக்காடு ஆகும்.

எதிர்கால உமிழ்வு

எவ்வித தணிப்பையும் மேற்கொள்ளாவிட்டால் 2018 ஆம் ஆண்டின் அடிப்படை உமிழ்வானது 2050 ஆம் ஆண்டிற்குள்  55.08 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வை ஓராண்டில்  எட்டும். இதற்கு முதன்மையாக மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வருமான அளவு அதிகரிப்பு காரணமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் தணிப்புத் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தினால் கூட, 2018 உடன் ஒப்பிடும்போது, உமிழ்வானது 2030ஆம் ஆண்டில் 44.8 விழுக்காடும், 2040ல் 86.4 விழுக்காடும் அதிகரிக்கும் என – தற்போதுள்ள மற்றும் திட்டமிடப்பட்ட நிலைகள் பற்றிய முன்கணிப்புகள் வாயிலாகத் தெரியவந்துள்ளது. 2050 வாக்கில், உமிழ்வு கிட்டத்தட்ட 2018ஐ விட இருமடங்காக இருக்கும். இதன் பொருள், நகரத்தின் காலநிலை மாற்ற உறுதிமொழிகளை நிறைவேற்ற இன்னும் உயர்நோக்கு நடவடிக்கைகள் தேவை என்பதாகும்.

செயல்திட்டம்

 • மின்சார உற்பத்தியில் கார்பன் பயன்பாட்டை அகற்றி புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்துவது.
 • சென்னனையின் மின் தேவைக்கு 2050 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் இருந்து 93% மின்சாரத்தை பெறுவது.
 • அதிக கார்பன் வழித்தடம் இல்லாத கட்டிடங்களை எழுப்புதல்.
 • குறைவாக மின்சாரம் கொண்டு திறன் மிகு கட்டிடங்களாக அவற்றை மாற்றுவது. 2050 ஆம் ஆண்டுக்குள் சென்னையின் 100% வணிகக் கட்டடங்களில் அதிக திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துவது.
 • போக்குவரத்துத் துறையில் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயங்கும் பொதுப் போக்குவரத்தை உருவாக்குவது.
 • நகரின் பயணங்களில் 80% பயணங்களை பொதுப்போக்குவரத்து, நடந்து மற்றும் மிதிவண்டியில் மேற்கொள்ளும் வகையில் மாற்றுவது
 • கழிவு மேலாண்மையில் 100% கழிவுகளைப் பெறுதல் மற்றும் வகைப் பிரித்தல் மற்றும் 100% பரவலாக்கப்பட்ட/மையப்படுத்தப்படாத கழிவு மேலாண்மை வசதிகளை உருவாக்குதல்.
 • நகர்ப்புற வெள்ளம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை மேலாண்மை.
 •   காலநிலை மாற்றத்தால் பாதிப்படையகூடும்  நிலையில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் செயல்திட்டங்களும் அவற்றிற்கான இலக்குகளையும் இத்திட்டம் நிர்ணயித்துள்ளது.

மேற்கூறிய அனைத்து செயல்திட்டங்களுக்கும் பல்வேறு கால அளவையும், அதைச் செயல்படுத்துவதற்கான இலக்குகளையும் சென்னை காலநிலை மாற்ற செயல்திட்டம் நிர்ணயித்துள்ளது.

– செய்திப் பிரிவு

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments