வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023க்கு எதிரான குடிமக்கள் இயக்கம்

செய்திக் குறிப்பு

இந்தியாவின் காட்டு வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டுவர முயல்கிறது. நாடு தழுவிய அளவில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 குறித்து திங்கள் கிழமையன்று மாலை ட்விட்டர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து 1500 க்கும் மேற்பட்ட குடிமக்கள் மற்றும் Climate Front India, Let India Breathe, Aravalli Bachao citizens movement, Save Mollem, United Conservation movement, FFF India, National alliance of people’s movement, Warrior moms, Yugma network, Save Hasdeo movement, Save Aarey movement, Dibang Resistance Movement  ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பிரச்சாரம் தொடர்பாக 3 மணி நேரத்தில் 11000+ ட்வீட்கள் இடப்பட்டன. மேலும் ஒரு ஹேஷ்டேக் அகில இந்திய ட்ரெண்டிங்கில் 4 வது இடத்தில் டிரெண்ட் ஆனது. வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற செய்தி இந்திய குடிமக்களால் அரசியல் தலைவர்களுக்கு உரக்கவும், வலுவுடனும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து கடந்த சில நாட்களில், இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடிமக்களின் கள ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின. சில மாநிலங்களில் இன்னும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. ஏற்கெனவே இம்மசோதாமீது நாடாளுமன்ற கூட்டுக் குழு கருத்து கோரியபோது மொத்தமாக 1,309 கருத்துகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டன. அதில் மூன்றில் ஒரு பங்கு (445) கருத்துகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களால் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வனப் பாதுகாப்பு மசோதாசை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு Jhatkaa.org மற்றும் பூவுலகின் நன்பர்கள் இணைந்து முன்னெடுத்த மின்னஞ்சல் பிரச்சாரமும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கடந்த 3 நாட்களில் 7000+ பேர் இந்த மனுவில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 ஆபத்தானது ஏன்?

நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்க வேண்டும் என வனக்கொள்கை 1988ல் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 21% நிலப்பரப்பில் மட்டுமே காடுகள் உள்ளன. இந்த நிலையில் காடுகளைப் பாதுகாப்பதற்காக 1980ல் கொண்டு வரப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை முன்வைக்கிறது இந்த வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023. குறிப்பாக காடுகளில் பல்வேறு காடுகள் பாதுகாப்பு சாராத திட்டங்களை உரிய முன் அனுமதி  இல்லாமல் நடைமுறைப்படுத்துவதற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. காடுகளில் கனிம வளங்களை சோதனை செய்தல், சாலைகள், ரயில் பாதைகள், சூழல் உலா, உயிரியல் பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை என இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பழங்குடி மக்கள் மற்றும் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறாமலே காடுகளில் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இச்சட்ட மசோதாவின் சரத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சட்டத்தின் பெயரை சமஸ்கிருத்தத்தில் மாற்றியமைக்கும் திருத்தமும் இடம் பெற்றுள்ளது. இச்சட்ட மசோதா மீது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ஏற்கெனவே நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், ஒரு திருத்தமுமின்றி மீண்டும் நாடாளுமன்றத்துக்கு இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசீலனையின்போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜன் மற்றும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

பிரச்சாரத்தில் இனைய: https://bit.ly/fca2023scrap

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments