வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 மீதான பூவுலகின் நண்பர்கள் கருத்து

காட்டு வளங்களைச் சுரண்டும் நோக்கில் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு. இது தொடர்பான மசோதாமீது வரும் 11ஆம் தேதிக்குள் கருத்துகளை அனுப்புமாறு நாடாளுமன்ற கூட்டுக்குழு கோரியுள்ளது.

இரண்டு நகல்களாக அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி

இணைச் செயலாளர்(ஜே.எம்),

மக்களவை செயலகம்,

எண். 440, நாடாளுமன்ற வளாகம் (கூடுதல் கட்டிடம்),

புது தில்லி -110001

 

மின்னஞ்சல் முகவரி

[email protected].

பின்வரும் கருத்துகளை பூவுலகின் நண்பர்கள் சார்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம்.

  1. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் காட்டிலும் காடுகளை ஒட்டியும் வசிக்கும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் இம்மசோதா தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டிருப்பது பாரபட்சமானது. அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மசோதாவை வெளியிட்டு கருத்துகள் பெற வேண்டும்.
  2. Forest(Conservation)Act 1980 என்று அழைக்கப்பட்டு வந்த இச்சட்டம் இனிமேல் “Van (Sanrakshan Evam Samvardhan) Adhiniyam” என அழைக்கப்படும் என மசோதா கூறுகிறது. அதாவது காடு (பாதுகாப்பு(protection) மற்றும் மேம்பாடு(promotion)) சட்டம் என்று இதற்குப் பொருள். Conservation என்பதைப் பேணுதல் அல்லது ஓம்புதல் எனப் பொருள் கொள்ளலாம். Conservation என்பதை நீக்கிவிட்டு Promotion என்பதை சேர்த்ததே இச்சட்டத்திருத்தம் வணிக நோக்கில் காடுகளைத் துண்டாடுவதற்குத்தான் என்பது தெரிகிறது. ஹிந்தி மொழி பேசாத பல மாநிலங்களை நேரடியாகப் பாதிக்கப்போகும் ஒரு சட்டத்திற்கு ஹிந்தி மொழியில் பெயர் வைப்பது அம்மாநிலங்களையும், மாநிலத்தில் பேசப்படும் மொழிகளையும், அம்மக்களையும் அவமானப்படுத்துவதாகும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானதாகும்.
  3. முகவுரையில் பூஜ்ஜிய உமிழ்வு நிலை மற்றும் கரிம நீக்கத்திற்காக இச்சட்டம் இயற்றப்படுகிறது எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேற்கூறிய இரண்டு காரணங்களுக்காக காடுகளைத் தோட்டங்களாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காடு வளர்ப்புத் திட்டங்கள், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் திட்டங்கள் மூலமே மேற்கூறிய இலக்குகளை அடைய வேண்டும்.
  4. ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில் காடுகளைப் பேணுவதற்கான முக்கியத்துவம் இருந்தது. திருத்த மசோதாவின் முகவுரையானது இச்சட்டத்தை பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கான சட்டமாகச் சுருக்குகிறது.
  5. இந்தியாவின் NDC இலக்கான 2030க்குள் 2.5 முதல் 3.0 பில்லியன் டன் அளவிற்கான கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கும் அளவிற்கு காட்டுப்பகுதியை விரிவுபடுத்துவதற்கு இச்சட்டம் உந்துதல் அளிக்கும் எனக் கூறுவது தவறானது. தோட்டங்கள் அனைத்தும் காடுகள் ஆகாது. தோட்டங்களால் காடுகளைப் போன்று கரிம நீக்கம் செய்ய முடியாது. மேலும் தோட்டங்களால் மண் அரிப்பு ஏற்படும், தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாது, காட்டுயிர்களை பாதுகாக்க முடியாது.
  6. புல்வெளிகள், புதர்க் காடுகளின் சூழல் முக்கியத்துவத்தை உணராமல் அங்கு தோட்டங்களை ஊக்குவிப்பது கானமயில், நரி, ஓநாய் உள்ளிட்ட பல்வேறு உயிர்களின் வாழிடத்தைச் சிதைக்கும்.
  7. இயற்கையாக அமைந்த காடுகளை அழித்து தோட்டங்களாக்குவதால் காடுகளில் ஏற்கெனவே தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடு வெளியேறும் அபாயம் உள்ளது.
  8. காடுகளில் தோட்டங்களை ஊக்குவிப்பது நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் மட்டுமே உதவும்.
  9. ’(b) உட்பிரிவு (a)இல் உள்ளடங்காத ஆனால், 1980 அகோடப்ர் 25 அல்லது அதற்குப் பிறகு அரசு ஆவணங்களில் வனம் என்று பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நிலபகுதியும்’ என்கிற திருத்தத்தைச் சேர்த்திருப்பது 202/1996 கோதவர்மன் வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது. 1980 அக்டோபர் 25 அல்லது அதற்குப் பிறகு காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும் என இத்திருத்தம் கூறுகிறது. இது காடுகளின் தன்மையைக் கொண்ட ஆனால், காடுகளாக அறிவிக்கப்படாத லட்சக் கணக்கான ஹெக்டேர் நிலத்திற்கு வனப் பாதுகாப்புச் சட்டம் பொருந்தாது எனக் கூறுகிறது. இத்திருத்தத்தால் பெருமளவிலான காடுகளில் நிலப்பயன்பாடு மாற்றப்படும். இது மீதமிருக்கின்ற காடுகளையும் அங்கு வசிக்கும் காட்டுயிர்களையும் பாதிக்கும்.
  10. ’ 1996 டிசம்பர் 12ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக ஒரு நிலப்பகுதி தொடர்பாக மாநில அரசால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு அதிகாரி அல்லது மத்திய அரசு ஆட்சிக்குப்பட்ட பகுதியின் நிர்வாகம் ஒரு உத்தரவின் மூலம் வனப்பகுதி பயன்பாட்டைத் தவிர்த்து வேறு வனப்பகுதி அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் அம்மாதிரியான நிலப்பகுதிகளுக்கு இந்த சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளவை பொருந்தாது’ என்கிற திருத்தம் 1980 முதல் 1996 வரையில் தேயிலை, காப்பி, செம்பனை, ஏலக்காய் உள்ளிட்டவற்றிற்காக அழிக்கப்பட்ட காடுகளை சட்டப்பூர்வமாக்குகிறது. இத்திருத்தம் மூலம் தனியாருக்குக் குத்தகை விடப்பட்ட காட்டுப்பகுதிகளில் காடு சாராத எந்த திட்டத்தையும் குத்தகைதாரர் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். எனவே இத்திருத்தம் மிகவும் ஆபத்தானது என்பதால் நீக்க வேண்டும்.
  11. (2)பின்வரும் நிலப்பிரிவு வகைகள் இந்த சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளவைகளின் கீழ் அடங்காது. அவையாவன:

(அ) வாழ்க்கை நடைமுறைகளுக்கு அல்லது ஒரு ரயில் வண்டிக்கு அணுகல் வசதியை வழங்கக்கூடிய மற்றும் சாலையோர வசதிகளை வழங்கக்கூடிய ரயில்வே இருப்புப்பாதை அல்லது அரசால் பராமரிக்கப்பட்டுவரும் பொதுச் சாலைகலை ஒட்டி அமைந்துள்ள ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 0.10 ஹெக்டேர் பரப்பளவுக்கு மிகாத அம்மாதிரியான வன நிலப்பகுதிகள்.

இத்திருத்தத்தின் நோக்கம் என்ன என்பதே தெளிவில்லாமல் உள்ளது. காடுகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பொதுச்சாலைகளும், இருப்புப் பாதைகளும் காட்டுயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மேற்கொண்டு அவற்றை ஒட்டியுள்ள 0.10 ஹெக்டேர் பரப்பளவில் கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவது காட்டுயிர்களின் வாழ்விடத்தைச் சிதைக்கும். மேலும் சட்டத்தில் இருந்து இப்பகுதியை விலக்களிக்கும் அளவுக்கு அவ்விடங்களில் என்ன நடவடிக்கைகளை அரசுமேற்கொள்ளப்போகிறது, என்ன கட்டுமானங்கள் அமைக்கப்படும் என்பது மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்த நிலங்களுக்கு சட்டத்தில் இருந்து விலக்களிக்கக் கூடாது.

  1. (b) துணைவிதிப்பிரிவு (1)இன் விதிப்பிரிவு (a) அல்லது விதிப்பிரிவு (b)இல் குறிப்பிட்டுச் சொல்லாத அம்மாதிரியான மரம், மரத்தோப்புகள் அல்லது மீள்காடு வளர்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட நிலப்பகுதிகள்

இத்திருத்தத்தமானது, 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் உள்ள தோட்டங்கள் மற்றும் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களில் உள்ள தோட்டங்கள் மட்டுமே இச்சட்டத்தின் விதிகளின்படி உள்ளடக்கப்படும் என்றும், மற்ற அனைத்து தோட்டங்களும் இனி காடுகளாக இருக்காது என்றும், அவற்றை வேறு எந்த நோக்கத்திற்காகவும் திருப்பிவிடப்படலாம் என்றும், அவை காடுகள் அல்லாத நடவடிக்கைகளுக்கு திருப்பிவிடப்படலாம் / அல்லது நிலத்தின் மீது உரிமையுள்ள எந்தவொரு நிறுவனத்தாலும் ஈடுசெய்யப்பட்ட காடு வளர்ப்பிற்காக(Compensatory afforestation) வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடுகிறது. இன்னும் காடாக அறிவிக்கை செய்யப்பட வேண்டிய பகுதிகள் ஏராளம் இருக்கின்ற நிலையில் இப்படி ஒரு திருத்தம் மிகத் தவறானது. காடுகளாகக் கருதப்படும் மற்றும்  அறிவிக்கை செய்ய வேண்டிய மிகப்பெரும் அளவிலான நிலப்பகுதியை ஈடுசெய் காடு வளர்ப்பிற்காக வழங்கப்படும் அபாயத்திற்கு இத்திருத்தம் வழிவகுக்கும்.

  1. (c) பின்வரும் அம்மாதியான நிலப்பகுதிகள்
  2. பன்னாட்டு எல்லை அல்லது எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு அல்லது உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு அருகில், அதனையொட்டி 100 கிலோமீட்டர் தூரத்தில் தேச முக்கியத்துவம் கருதி தேசத்தின் பாதுகாப்பின் அடிப்படையில் யுக்திப்பூர்வமாக அமைக்கப்படவேண்டி முன்மொழியப்பட்ட செயல்திட்டத்தின்கீழ் வரும் எந்த ஒரு நிலப்பகுதியும்

இத்திருத்தத்தால் பன்னாட்டு எல்லைகளில் 100கி.மீ தூரம் வரையிலான காடுகளில் எவ்வித சூழல் தாக்க மதிப்பீட்டாய்வுகளும் மேற்கொள்ளாமலும் முன் அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு சார்ந்த கட்டமைப்புகளை அரசு மேற்கொள்ளும். அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில் உள்ள காடுகளை மற்ற காடுகள் போல அணுக முடியாத காரணத்தால் அங்கு காட்டுயிர்கள் உள்ளிட்ட உயிர்ப்பன்மையம் செழிப்பாக உள்ளது. மேலும் இமாலயப் பகுதிகள்தான் இந்தியாவின் கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளின் ஆதாரமாக உள்ளது. இப்படியான இடங்களில் எவ்வித  மதிப்பீட்ட்டாய்வுகளுமின்றி கட்டமைப்புகளை உருவாக்குவது பெரும் ஆபத்துகளை விளைவிக்கும். வழக்கமாகவே இதுபோன்ற திட்டங்களுக்கான அனுமதி எளிதாகக் கிடைத்துவிடும் நிலைதான் உள்ளது. இந்த நிலையில் இத்திட்டங்களை முற்றிலுமாக வனப் பாதுகாப்புச் சட்டத்தில் விலக்களிப்பது வரைமுறையற்ற காடழிப்புக்கு வழிவகுக்கும்.

  1. பாதுகாப்புத் தொடர்பான கட்டுமானப் பணித் திட்டங்களுக்காக அல்லது பயன்படுத்த முன்மொழியப்பட்ட அம்மாதிரியான பத்து ஹெக்டேர் வரையிலான நிலப்பகுதி,

இத்திருத்தம் மூலம் எல்லைகள் மட்டுமின்றி நாட்டின் எந்தப் பகுதியிலிருக்கும் காடுகளையும் சூழல் மதிப்பீட்டாய்வுகளின்றி, முன் அனுமதியின்றி அரசால் அழிக்க முடியும். எவையெல்லாம் பாதுகாப்புத் தொடர்பான திட்டங்கள் என்பது தெளிவாகப் பட்டியலிடப்படவில்லை. சாகர்மாலா திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் துறைமுகங்களையே அரசு Strategic Purpose திட்டங்கள் என அரசு கூறுவதால் அரசு கொண்டு வர நினைக்கும் அனைத்துத் திட்டங்களையும் பாதுகாப்புத் தொடர்பான திட்டங்களாக அறிவிக்கை செய்து அதற்கான காடுகளை அழிக்கும். இதனால் மலைப்பகுதிகள் மட்டுமின்றி, சமவெளிப் பரப்பு, கடலோரம், தீவுகளில் அமைந்துள்ள காடுகளும் பாதிப்பிற்குள்ளாகும்.

  1. இராணுவம் தொடர்பான கட்டுமானத் திட்டங்களுக்கு அல்லது துணை இராணுவப் படையினர் தங்க அல்லது பொதுமக்கள் பயன்பாட்டுக்கான செயல்திட்டங்களுக்காக பயன்படுத்த மத்திய அரசால் முன்மொழியப்பட்ட ஐந்து ஹெக்டேருக்கும் மிகாத இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலப்பகுதி.

இத்திருத்தமும் பாதுகாப்புத் திட்டங்கள் எவை? பொதுமக்கள் பயன்பாட்டுத் திட்டங்கள் எவை? என்பதை வரையறுக்கத் தவறுவதால் கட்டற்ற காடழிப்பிற்கே வழிவகுக்கும். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய மற்றும் மத்திய கிழக்கு இந்தியாவின் காடுகளில் புலிகள், யானைகள் அதிகம் வசிக்கின்றன. இப்பகுதிகளில் முன்  அனுமதியின்றி கொண்டு வரப்படும் திட்டங்களால் புலிகள், யானைகளின் வாழிடங்கள் துண்டாகும், சுருங்கும் அபாயமுள்ளது.

  1. (a) (1) விதிப்பிரிவு (iii)இல் “ அரசின் உரிமை இல்லாத, மேலாண்மை செய்யப்படாத அல்லது கட்டுப்பாட்டில் இல்லாத” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக “மத்திய அரசு ஒரு உத்தரவின்கீழ் குறிப்பிடும் அம்மாதிரியான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு என்ற வார்த்தைகள் சேர்க்கப்படும்”

இத்திருத்தமானது மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். இதன்மூலம் வன உரிமைச் சட்டம்-2006, பஞ்சாயத்து ராஜ் சட்டம், கிராம சபைக்கு வழங்கியுள்ள உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. இனி ஒன்றிய அரசு நினைத்தால் கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலேயே எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியும். வன உரிமைச் சட்டம் 2006ன் படி காடு மக்களுக்குச் சொந்தம். அவர்களின் அனுபவ நிலங்களுக்கும் குடியிருப்புக்கும், சமூகத்தின் பயன்பாட்டில் உள்ள நிலங்களுக்கும் அவர்களுக்கு உரிமை வழங்க வேண்டும். இத்திருத்தங்களின் மூலம் வன உரிமைச் சட்டம் நீர்த்துப்போகும்.

  1. வன உயிர் (பாதுகாப்பு) சட்டம் 1972 இல் வழங்கப்பட்டதற்கிணங்க, பாதுகாக்கப்பட்ட பகுதிகளைத் தவிர வேறு எந்த வனப் பகுதிகளிலும் அரசு அல்லது எந்த ஒரு அதிகார மையத்தால் அமைக்கப்படும் விலங்கியல் பூங்கா அல்லது கான் விலங்குப் பூங்கா.

இத்திருத்தம் மூலம் உயிரியல் பூங்காக்கள், கானுலா நடவடிக்கைகள் போன்றவற்றை காடு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களாகக் கருத ஒன்றிய அரசு முடிவு செய்கிறது. இதுவும் தனியார் நிறுவனங்களின் வணிக வெறிக்காக காடுகளை இரையாக்கும் நடவடிக்கைதான். இந்தியாவின் முதன்மை பணக்காரரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 முதல் சில தனியார் வன உயிரியல் பூங்காக்களை அமைக்கத் தொடங்கியுள்ளதும், 2020ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது நாட்டிலுள்ள 160 வன உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தனியாருடன் சேர்ந்து ஒப்பந்தமிட முடிவு செய்ததையும் நாம் இங்கு தொடர்புபடுத்த வேண்டியுள்ளது. எனவே இச்சட்டத்திருத்தம் மூலம் காடுகளின் இயல்பை பாதிக்கக்கூடிய வன உயிரியல் பூங்காக்கள், வன உலாக்கள் போன்றவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவையிரண்டும் காடுகள் பாதுகாப்பு சாராத திட்டங்களாகவேத் தொடர வேண்டும்.

  1. வன செயல்திட்டம் அல்லது வன உயிர் மேலாண்மைத் திட்டம் அல்லது புலிகள் பாதுகாப்புத் திட்டம் அல்லது அந்தப் பகுதியின் எந்த ஒரு செயல்திட்டங்களிலும் உள்ளடங்கிய சுற்றுச்சூழல் சுற்றுலா வசதிகள் மற்றும்,

viii.  மத்திய அரசால் ஒரு உத்தரவின் பேரில் அறிவிக்கப்படும் அதே போன்ற நோக்கங்களுக்கான எந்த ஒரு திட்டமும்

சூழல் சுற்றுலாக்களால் ஏற்கெனவே நாடு முழுவதும் காடும் காட்டுயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சூழல் சுற்றுலாக்களுக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத ரிசார்ட்டுகளை இன்னமும் தமிழ் நாட்டின் மலைப்பகுதிகளில் இருந்து அகற்ற முடியவில்லை. ஆகவே இத்திருத்தமும் கானுயிர் பாதுகாப்பிற்கு எதிரானது. மேலும் அரசு நினைத்தால் எந்த திட்டத்தையும் இதே நோக்கத்திற்காக கொண்டு வரலாம் என்பதும் ஆபத்தானது.

  1. மத்திய அரசு ஒரு உத்தரவின்கீழ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வரையறுத்துக் குறிப்பிடும், கணக்கெடுப்பு அதனடிப்படையில் ஒப்புகை உளவை, மதிப்பீடு, புலன் ஆய்வு, புவி நடுக்க ஆய்வு உட்பட பிற ஆய்வு அல்லது புத்தாய்வுகள் வனம் தவிர்த்த நோக்கங்கள் எனக் கருதப்படாது.

இது மிகவும் ஆபத்தான திருத்தமாகும். இந்தியாவின் வளமையான காடுகளில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டி எடுப்பதற்காவே இத்தகைய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. Extended Reach Drilling எனும் தொழில்நுட்பத்திற்கான அனுமதி குறித்தே மறைமுகமாக இச்சட்ட மசோதா குறிப்பிடுகிறது.  காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை காடு என்பதற்கான சட்ட வரையறைக்குள் வராத ஒரு இடத்திலிருந்து துளையிட்டுச் சென்று அவ்வளங்களை எடுப்பதுதான் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை. இந்த தொழில்நுட்பத்தால் காட்டின் இயற்கையான இயங்கியல் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்படும். மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டிவிட்டு மேற்பரப்பில் மரங்களை நட்டு வைப்பதை நாம் பார்க்கிறோம். அதை நம்மால் காடு என ஒப்புக்கொள்ள முடியுமா? அதைப்போலத்தான் Extended Reach Drilling என்கிற தொழில்நுட்பத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும். காடு என்பது சில மரங்களும், அது ஊன்றியிருக்கும் மண்பரப்பும், அதற்கடியிலிருக்கும் வேரும் மட்டும் கிடையாது. பல ஆண்டு காலமாக நிலத்திற்கடியில் பல அடி ஆழத்தில் சேர்ந்த வளங்களை வெளியிலிருந்து உறிஞ்சி எடுத்து விட்டால் மேற்பரப்பு காட்டில் எதுவும் மிஞ்சாது. இந்த நடவடிக்கையை அனுமதிப்பதற்காக காட்டில் உள்ள பல்வேறு வகையான கனிமங்கள், வளங்களை ஆய்வு செய்வதற்கும், களமுன் அளக்கை செய்வது, நில அதிர்வுச்சோதனை செய்வது போன்ற செயல்பாடுகளை காடுகள் பாதுகாப்பு சார்ந்த திட்டமாக அரசால் அறிவிக்க முடியும் என இம்மசோதா கூறுகிறது. இது இந்திய அரசே அறிவித்த தேசிய காடுகள் கொள்கை 1988க்கு முற்றிலும் எதிரானதாகும்.

மேற்கூறிய காரணங்களுக்காக இம்மசோதாவை சட்டமாக்கூடாது எனக் கருதுகிறோம். ஆகவே, எங்களது கருத்துகளைப் பரிசீலித்து அரசுக்கு தக்க அறிவுரைகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு வழங்குமாறு கோருகிறோம்.

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 – தமிழ்

FCA BILL TAMIL

 

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 – ஆங்கிலம்

FCA BILL ENGLISH

 

நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிவிப்பு

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments