கூடங்குளத்தில் நடக்கும் கொலைபாதகம்

கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் அந்த உலைகளின் கட்டுமானக் கோளாறுகள், மின்உற்பத்திக் குளறுபடிகள், உலைகளின் இயக்கக் குழப்பங்கள் என அனைத்து விடயங்களிலும் கள்ள மவுனத்தையும், பச்சைப் பொய்களையும், அரை உண்மைகளையும் மட்டுமே சொல்லி வருகிறது. இவற்றைத் தட்டிக்கேட்டு மக்களைக் காக்கவேண்டிய மத்திய அரசோ, தன் செல்லப்பிள்ளையைக் கேள்வி கேட்பவர்களை தேசத்துரோகிகள் என்று நிந்திக்கிறது, துன்புறுத்துகிறது.

“இறந்து பிறந்த குழந்தைள்” போன்ற இரண்டு அணுமின் நிலையங்களையும் பற்றிய ஒரு சார்பற்ற விசாரணை வேண்டும், இவை குறித்த ஒரு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கைவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கூடங்குளம் நிர்வாகமோ, அணுசக்தித் துறையோ, அணுசக்தி அமைச்சரான பிரதமரின் அலுவலகமோ எதையும் கண்டுகொள்வதில்லை.

கூடங்குளம் குளறுபடிகள் வெளியுலக கவனத்துக்கு வரும்போதும், அணுஉலை நிர்வாகம் கள்ள மவுனம் சாதிக்கிறது. ஊடக நண்பர்கள் அழைத்தால்கூட, அவர்களின் அழைப்புக்களை ஏற்பதில்லை; அரசியல் தலைவர்கள் கேள்விகேட்டால் அவர்களைக் கண்டுகொள்வதேயில்லை, மக்களையோ ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. இந்த எதேச்சாதிகாரப் போக்கு இன்றளவும் தொடர்கிறது.

தமது கட்டுப்பாட்டு அமைப்பின் (control system) கணினிகளை யாரும் அத்துமீறித் தாக்கவில்லை, இங்கே எல்லாமே அழகாக, அற்புதமாக இருக்கிறது என்று அக். 29 அன்று ஒரு கடைநிலை ஊழியரை வைத்து அறிக்கை விட்டது கூடங்குளம் அணுஉலை நிர்வாகம். ஆனால் இன்று (அக். 30) மும்பை இடைநிலை அதிகாரி ஒருவர் “ஓர் அணுமின் நிலையத்தில்” கம்ப்யூட்டர் வைரஸ் பரவியிருக்கிறது என்று பொத்தாம்பொதுவாக அறிக்கை வெளியிடுகிறார்கள்.

இந்த அணுசக்தி அதிகாரிகள் நேற்று சொன்னது பொய்யா, அல்லது இன்றைக்குச் சொல்வது பொய்யா என்கிற கேள்வி மக்கள் மனங்களில் எழுகிறது. இவர்கள் பல கோடி மக்கள் உயிர்களுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

செப்டம்பர் 3 அன்று இந்திய அரசுக்காக தொழிற்நுட்பத் தகவல்கள் சேகரிக்கும் ‘தேசிய தொழிற்நுட்ப ஆய்வு நிறுவனம்’ (NTRO) பணியமர்த்திய இணையப் பாதுகாப்பு வல்லுநர் திரு. புக்ராஜ் சிங் என்பவர் ஒரு தகவலை அரசுக்குத் தெரிவித்திருக்கிறார். அரசு வழக்கம்போல இதனைக் கண்டுகொள்ளவில்லை.

கடந்த செப்டம்பர் 23 அன்று ‘காஸ்பெர்ஸ்கி’ (Kaspersky) எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் ‘டிடிராக்’ (DTrack) எனும் இணையக் கிருமியை இந்திய நிதி நிறுவனங்களின் கணினிகளிலும், ஆய்வு மையங்களின் கணினிகளிலும் பரவலாகக் காண்பதாக ஒரு செய்தி வெளியிட்டது.

அக்டோபர் 28 அன்று, உலகம் முழுக்கவுள்ள கணினிகளைத் தாக்கும் பல்வேறு வைரஸ்களைக் கண்காணிக்கும் நிறுவனமான ‘வைரஸ்டோட்டல்’ (VirusTotal.com) வெளியிட்ட அறிக்கை ஒன்று டிவிட்டரில் வெளியாயிற்று. இதனை டிவிட்டரில் பதிவுசெய்தவர்கள் ‘கூடங்குளம் அணுஉலை நிர்வாகம்’ (‘KKNPP\\administrator’) என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது கூடங்குளம் அனுஉலைக் கணினிகளை அத்துமீறிக் கைப்பற்றி, அவற்றினுள்ளே ஊடுருவி, அங்கேயிருந்து அந்தப் பதிவினை இட்டிருந்தார்கள்.

திரு. புக்ராஜ் சிங் மூன்றாம் நபர் ஒருவர் தனக்களித்தத் தகவலை தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) திரு. ராஜேஷ் பந்த் என்பவரிடம் தெரிவித்ததாகவும், இருவரும் மின்னஞ்சல் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்துகொண்டதாகவும் இப்போதுத் தெரிவித்திருக்கிறார். அக். 19 அன்று கூடங்குளம் அணுஉலையின் இரண்டாம் அலகு மூடப்பட்டதுகூட இந்தப் பிரச்சினையால்தான் எனும் தகவல் இப்போது வெளிவருகிறது.

ஒன்று மட்டும் தெளிவாக உறுதியாகத் தெரிகிறது. கூடங்குளம் அணுஉலைகள் பாதுகாப்பாக இல்லை. அதனுடைய கட்டுப்பாட்டு அமைப்பு அத்துமீறப்பட்டிருக்கிறது என்றால், மிக முக்கியமான தகவல்கள் நியர் கைகளுக்குப் போயிருக்கின்றன என்று பொருள். அங்கேயிருக்கும் யுரேனியத்தின் அளவு, எரிக்கப்பட்ட எரிகோல்கள் அளவு, பாதுகாப்பு ரகசியங்கள் அனைத்தும் அம்பலமாயிருக்கின்றன. இந்த உலைகளை உடனடியாக மூடுவது ஒன்றே மக்களுக்குச் செய்யும் கடமையாக இருக்க முடியும்.

கூடங்குளத்தில் கூடுதல் உலைகள் கட்டும் வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அணுசக்தித்துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம் அனைவரும் சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்த முன்வர வேண்டும். ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு மக்களோடு பகிரப்பட வேண்டும்.

ஓர் ஆழ்துளைக் கிணறில் பத்தடி ஆழத்தில் விழுந்த ஒரே ஒரு குழந்தையைக்கூட காப்பாற்ற முடியாத அரசுகளும், பேரிடர் அமைப்புக்களும், தென் தமிழக மக்களைக் காப்பாற்ற மாட்டார்கள். எனவே நமக்கு ஒத்துவராத இந்த ஆபத்தான அணுசக்தியை கைவிட்டுவிட்டு, இயற்கை வழிகளில் மின்சாரம் தயாரிப்போம். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகள் வாழ்வதற்காக, வளர்வதற்காக இந்திய மக்களைக் காவு கொடுக்காதீர்கள்.

சுப.உதயகுமார்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
நாகர்கோவில்,
அக். 30, 2019

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments