#EnnoreGasLeak கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை

அமோனியா

எண்ணூரில் வாயுக்கசிவு பாதிப்பு, கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அவசியம்

 

எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதி தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

 

கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட்  எனும் நிறுவனம் திருவொற்றியூர் தாலுகா எர்ணாவூர் கிராமத்தில் உரத் தொழிற்சாலை ஒன்றையும் கத்திவாக்கம் கிராமத்தில் அம்மோனியா சேமிப்பு கிடங்கு ஒன்றையும் இயக்கி வருகிறது. இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து 2 முதல் 3 கி.மீ. தொலைவில் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கடலுக்கடியில்  பதிக்கப்பட்ட குழாய் மூலமாக வருகிறது. இந்த குழாயில் டிசம்பர் 26ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட கசிவு காற்றில் கலந்து சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய குப்பம் மீனவர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவமக்கள் சுவாசிக்க முடியாமல்,மூச்சுவிட முடியாமல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த மக்களும் பயந்து நள்ளிரவில் ஊரை விட்டு வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர்.  திருவொற்றியூர் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கிராம மக்கள் அனைவரும் தெருக்களில் மாஸ்க் அணிந்தவாறு அச்சத்துடன் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர்.

30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மூலம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி வருத்தமளிக்கிறது. இதுமட்டுமின்றி எண்ணூரில் கடற்கரையோரம் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஏராளம் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.

அதிகாலையிலேயே தொழிற்சாலையை ஆய்வு செய்து கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 இருக்க வேண்டிய அமோனியா 2090 microgram/m3  இருந்தது. கடலில்  5 mg/L இருக்க வேண்டிய அமோனியா 49 mg/L  இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இனி இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

DOC-20231227-WA0019.

கடலில் அனுமதிக்கப்பட்டதைவிட 10 மடங்கு அமோனியாவும், காற்றில் அனுமதிக்கப்பட்தைவிட 5 மடங்கு அமோனியாவும் இருப்பது நிச்சயம் கடும் சுகாதார பாதிப்பையும் சூழலியல் பாதிப்பையும் ஏற்படுத்தவல்லது. ஆனால், மாசு கட்டுப்பாடு வாரியம் இம்மாதிரிகளைச் சேகரித்தது அதிகாலை 3.30 மணிக்குதான். ஆனால்,  அதாவது மக்களால் வாயுக்கசிவு உணரப்பட்டு 3 மணி நேரத்திற்குப் பிறகுதான் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், 26ஆம் தேதி  நள்ளிரவு 11.30  மணிக்கே வாயுக்கசிவால் மக்கள் பாதிப்படையத் தொடங்கினர். இந்த 4 மணி நேரத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் குறிப்பிட்டுள்ள அவைவிட அதிக அமோனியா மக்களை பாதித்திருக்கும்.  அம்மோனியா  மூச்சுத்திணறல் வாசனையுடன், நிரமாற்ற ஒரு மிகவும் எரிச்சலூட்டும் வாயு ஆகும்.

இது தண்ணீரில் எளிதில் கரைந்து அம்மோனியம் ஹைட்ராக்சைடு கரைசலை உருவாக்குகிறது, இது எரிச்சல் மற்றும் தீக்காயங்களை ஏற்படுத்தும்.. கசிந்திருக்கும் அமோனியா வாயுவின் அளவு  மற்றும் வெளிப்பாட்டின் கால அளவைப் பொறுத்து மனித உடலில் அதன் பாதிப்பின் தீவிரத் தன்மை இருக்கும். காற்றில் குறைந்த செறிவில் உள்ள அமோனியா வாயுவை உள்ளிழுப்பது இருமல் மற்றும் மூக்கு மற்றும் தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும். அமோனியாவின் அதிக செறிவுகளை சுவாசிக்கும்போது கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயில் உடனடியாக எரிச்சல் ஏற்படும், சில சமயம் அதிகநேரம் அதிக அளவுகளில் பாதிப்பு இருக்கும் போது குருட்டுத்தன்மை, நுரையீரல் பாதிப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்.

CIL Press Statement Ennore

சி.பி.சி.எல். ஆலை எண்ணூர் கழிமுகம், கொசஸ்தலை ஆறு, கடலில் ஏற்படுத்திய எண்ணெய் கசிவு பேரிடரிலும், மிக்ஜாங் புயலின் பாதிப்பிலும் இருந்தே இன்னும் முழுமையாக மீளாத மக்களை மீண்டும் ஒரு செயற்கைப் பேரிடர் தாக்கியுள்ளது. தொடர்ச்சியாக வடசென்னைப் பகுதிகளில் தொழிற்சாலைகளின் அலட்சியத்தால் இந்த விபத்துகள் ஏற்பட்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாது. வடசென்னை சூழல் அநீதியின் கோரமுகமாக மாறியுள்ளது. அப்பகுதி மக்களின் உயிர்கள் மலிவாகப் பார்க்கப்படுவது இன்னும் எத்தனை நாட்கள்தான் தொடரப்போகிறது?

மிக்ஜாங் புயல் பாதிப்பில் பல தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தின. மீண்டும் தொடங்கும் முன்னர் உரிய பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தமிழ் நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமும், தமிழ் நாடு கொதிகலன்கள் இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியமும் இப்பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டனவா என்கிற சந்தேகம் எழுகிறது. அப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் எப்படி இவ்விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை தொடர்புடைய துறைகள் மக்களுக்கு விளக்க வேண்டும்.

இதுபோன்ற விபத்துகள் தொடராமல் இருக்க கீழ்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சரைக் கோருகிறோம்.

  1. பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சையில் தமிழ் நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்.
  2. கசிவால் பாதிப்படைந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும்.
  3. பொதுமக்களுக்கு ஏற்பட்ட சுகாதார பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரமண்டல் நிறுவனமே Polluters Pay அடிப்படையில் வழங்க வேண்டும்.
  4. மீன்கள், நண்டுகள், இறால்கள் இறந்திருப்பதாக் கடற்பகுதியில் விரிவான உயிர்ப்பன்மைய பாதிப்பு குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
  5. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரமண்டல் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும்.
  6. கோரமண்டல் உள்ளிட்ட சிவப்பு வகை தொழிற்சாலைகளின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டு ஆலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ் நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமும், தமிழ் நாடு கொதிகலன்கள் இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  7. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே ஆலைகள் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
  8. வடசென்னையில் இருக்கும் மணலி தொழிற்பேட்டை 10 ஆண்டுகளுக்கு முன்பே தீவிர மாசடைந்த பகுதியாக(Critically Polluted Area) மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. இப்போது எண்ணூர் பகுதியும் கடுமையாக மாசடைந்ததால் இப்பகுதியில் உள்ள சிவப்பு வகை ஆலைகளின் மாசைக் குறைக்க கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
  9. கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகளில் குற்றவியல் அலட்சியப்போக்கு கண்டறியப்பட்டால் உரிய சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
  10. வடசென்னையில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகாமையில் அதிக மாசு ஏற்படுத்தும் ஆலைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments