பசுமை புரட்சியும் காற்று மாசுபாடும்

வேளாண் சீர்திருத்தம் பயிர் உற்பத்தியை அதிகபடுத்தியிருக்கிறது ஆனால் பயிர்க் கழிவுகளை எரிப்பது, காற்றை மாசுபடுத்துவது என்கிற பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.

கழிவுகளை எரிப்பது என்பது முன்னோர்களின் பழக்கம் என்று  நகர்ப்புறங்களில் நிலவிவரும் பிரபலமான கருத்து உண்மைக்கு நேர் எதிரானது.   பெரிய அளவில் கழிவுகளை எரிப்பது, என்கிருந்து தொடங்கியது என ஆராய்ந்தால்,  ஒரு சில தசாப்தங்களுக்கு முன்புதான் இப்பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.

1960-1970 க்கும் இடைப்பட்ட காலத்தில் பரவலாக்கப்பட்ட‌  பசுமைப்புரட்சி, அதனைத்தொடர்ந்து வந்த விவசாயக்கொள்கைகள், அதனால் தூண்டப்பட்ட‌  வேளாண் செயல்பாடுகளின் மாற்றம், அரசின் கொள்கை, தொழிலாளர் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் போன்றவைகள் விளைவாகவே இவை நிகழ்கின்றன.

பசுமைப்புரட்சிக்கு முன்பாக ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள் அரிசி உற்பத்தியாளர்களாகவோ, உண்பவர்களாகவோ இருந்ததில்லை. பசுமைப்புரட்சிக்கு முன்பதாக  RWCS (Rice-Weat cropping system) அரிசியும்-கோதுமையும் பயிரிடுவது வழக்கத்தில் இல்லாததினால், இது போன்று பெருமளவு பயிர்க்கழிவுகளை எரிக்கும் வழக்கமும் இருந்ததில்லை.  பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் எந்த ஆண்டிலிருந்து புழக்கத்தில் வந்தது என்பதை சரியாக குறிப்பிட்டுச் சொல்லமுடியாவிட்டாலும், இதனால் ஏற்படும் மோசமாக காற்று மாசு ஹரியான, பஞ்சாப் வட்டாரங்களில் நிகழ்வதென்பது 2000 ம் ஆண்டில் ஆரம்பத்திலிருந்தே நிகழ்கிறது.

பசுமைப்புரட்யின் நோக்கம் உயர்வானது, அது இந்த பகுதியின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்காற்றியதோடு, இந்தியாவிற்கு உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்திருக்கிறது. இது போன்ற புரட்சி விவசாயத்தில் தேவைப்பட்டது என்பதாலேயே அது விவாதத்திற்கு உட்படுத்தப்படவில்லை.

இது போன்ற‌ புரட்சியும் அதனால் ஏற்பட்ட கொள்கை மாற்றங்களுமே காற்றுமாசு என்கிற சிக்கலை உருவாக்க பங்களித்திருக்கிறது. அத்தோடு நிலத்தடி நீர் மிக வேகமாக குறைவதற்கும் முக்கிய பங்காற்றுகிறது. இதையே வேளாண்சார்ந்த சூழலியல் சிக்கல் எனப்படுகிறது.

விவசாயச் சீர்திருத்தம் குறித்து இரண்டுவகையான சிந்தனைப் போக்கு உள்ளது.  சிலர் தொழில் நுட்பத்தில் புரட்சி வேண்டும் என்கின்றார்கள், இன்னும் சிலரோ சமூகமாற்றம் ஏற்படவேண்டும் என்று விரும்புகின்றார்கள். தொழில் நுட்பத்தில் புரட்சி நிகழவேண்டும் என்பவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உரம், உயிர்க் கொல்லி, கடன் போன்றவற்றிற்கு சாதகமாகவும் அதே நேரத்தில் வீரிய ரக விதைக்கு ஆதரவாகவும் சிந்திக்கிறார்கள்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய அறிவியலாளர், எம்.எஸ்.சுவாமிநாதன், மற்ற‌ நாடுகளில் சமீபத்தில் ஏற்ப்பட்ட வெற்றியை மேற்கொள்காட்டி ,இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து விலையுயர்ந்த, அதிகவிளைச்சல் தரக்கூடிய விதைகளை இறக்குமதி செய்வதையும்,  விலைக்கான உத்திரவாதமும், அவர்களின் முதலீடுக்கு நியாயமான பலன் கிடைக்கும் என்பதையும் உறுதி செய்யவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

திட்ட ஆணையமே (Planning Commission) இதை எதிர்த்த‌து. விதைகளை இறக்குமதி செய்வதற்கும், விலை உத்திரவாதம் வழங்கவும் 1964 ல் வேளாண் அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியமும், அப்போதைய அரசும் இசைவு தெரிவித்தார்கள். இதனால் பெரும் விவசாயிகளே பயனடைவார்கள் என்றும் நுகர்வோருக்கு தீங்கு விளையும் என்றும் எதிக்கட்சிகளிடமிருந்தும் சமூக மாற்றம் வேண்டும் என்று விருபியவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

1963ல் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸனால் இவ்விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவருக்கு இந்தியாவோடு சுமூக உறவில்லாததால், இந்தியாவிற்கு கொடுத்து வந்த உணவு உதவியை எப்பொதும் வழங்க இயலாது என்றும், இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று காட்டமாகக் கூறினார். 1966 ல் ஒவ்வொரு உணவுப்பொருள் நிறைந்த கப்பல் எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கும் நிலையையும், கிடைத்தவுடன் பயன்படுத்துவதைத்தவிர‌, சேமிக்கமுடியாதப‌டியான‌ திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜான்ஸனால் அவமானப்படுத்தப் படுகிறோம் என்பதை உணர்ந்த இந்தியா, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி எதிர்கட்சிகளின் எதிர்ப்பை புறந்தள்ளி, தொழில்நுட்பத்தில் புரட்சியும்,அதற்கு உதவியாக‌ ஆதார விலை  போன்றவற்றால் தூண்டப்பட்டதே பசுமைப்புரட்சி என்றே நாம் அறிகிறோம். இதனால் கோதுமை உற்பத்தியில் ஓராண்டிலேயே 40 சதவீதவளர்ச்சி கண்டது அதாவது 12 மில்லியன் டண்ணிலிருந்து 17 மில்லியன் டண்ணானது.

பசுமைப் புரட்சியும் அதனைத்தொடர்ந்த‌ கொள்கைகளும் இந்தியாவை, விவசாய உற்பத்தியில் குறிப்பிடத்தக முன்னேற்றத்தற்கு இட்டுச்சென்றது. இறுதியாக  இந்தியா உணவிற்காக வெளிநாட்டு உதவியை நம்பி இருந்த நிலை மாறி தன் மக்களுக்கு தானே உணவளிக்கும் நிலை உருவானது. இக்கொள்கைகள் இந்தியாவில் பயிர்முறைகளில் குறிப்பிடத்தக்க  மாற்றத்தையும் நிகழ்த்தியது.

இறுதியாக பயிர்க் கழிவுகளை எரிக்கும் “விவசாய அதிர்ச்சி (Agricultural Shock)” என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. ஆதாரவிலை, அதிகவிளைச்சல் தரக்கூடிய விதைகளின் அறிமுகம், ஆழ்துழை கிணறுகளின் திடீர் பெருக்கம், அறுவடை இயந்திரங்களின் பெருக்கம், விவாயத்தில் அதிகாரிகளின் தலையீடு போன்றவைகளால் அரிசியும்-கோதுமையும் பயிடும் முறை உருப்பெற்றது,அதனாலேயே இரு பயிர்களுக்குமான‌ கால இடைவெளி குறைந்தது, பயிர்க் கழிவுகளை எரிப்பதே, இம்மண்டலம் முழுமையும் காற்று மாசு என்னும் சிக்கலை சந்தித்துவருகிறது.

பசுமைப் புரட்சியின் போது பிலிப்பைன்ஸிலிருக்கும்  பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI)  கண்டுபிடித்த உயர் விளைச்சல் தரக்கூடிய நெல் அறிமுகப்படுத்தப்பட்டது  இவ்வகை நெல்லானது, முழுவிளைச்சலுக்கு மிகக்குறைந்த காலஅளவை எடுத்துக் கொண்டு, ஒரு ஹெக்டேருக்கு 7 டண் அளவு விளைச்சலை கொடுத்தது,  ஏற்கனவே புழக்கத்திலிருந்த ரகங்கள் யாவும் ஒரு ஹெக்டேருக்கு 2 டன் அளவிலேயே விளைச்சல் தந்தன.

பாரம்பரியமாக நெல் ரகங்களை விளைவித்து  வந்த தென் இந்தியாவில் இந்த உயர்விளைச்சல் ரக நெல்லை பயன்படுத்த இயலவில்லை. இங்கு ஏற்கனவே நடைமுறையிலிருந்த நெல்ரகங்களானது பருவமழை தொடங்கும் ஜூனில் ஆரம்பித்து டிபசம்பரில் அருவடைக்கு வரும் சுழற்சி முறையைக் கொண்டது. ஆனால் உயர் விளைச்சல் ரக நெல்லையும் இதே சுழற்சி முறையில் பயிரிட்டால், ஜூனில் ஆரம்பித்து அக்டோபரில் அறுவடைக்கு வந்துவிடும். அக்டோபர் மாதம் தொடர் மழைக்காலம் ஆகையால் அழியும் நிலை ஏற்படும்.

இறுதியாக இவ்உயர்விளைச்சல் ரக நெல்லானது, ஆழ்துளை கிணறுகள் பெருக்கத்தால் நன்கு பாசனவசதி பெற்ற பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் பகுதியில் வெற்றிகண்டது. கோதுமை பயிரிட்டதால் கிடைத்த வருவாயில் ஆழ்துளை கிணறு அமையப்பெற்றது, பிற்காலத்தில் நெல்பயிரிடலுக்கு வசதியாகிப் போனது. பசுமைப் புரட்சிக்கு முன்னதாக இம்மண்டலத்தில் எங்கும் பாரம்பரியமாக நெல் பயிரிடுதல் நடைபெற்றதில்லை. மேலும் பாரம்பரியமாக அரிசி விளைவித்துவந்த மண்டலங்களில், உயர் விளைச்சல் ரக நெல்லைப் பயிரிடுதலில் ஏற்பட்ட இடர்பாடுகள் ஏதும் இவர்களுக்கு ஏற்படவில்லை.

நெல் பயிரிடுதல் பரவலாக்கப்பட்டு, பஞ்சாபில் அரிசி உற்பத்தி நடைபெற்றதால் தேசிய உற்பத்தியில் பஞ்சாப்பின் பங்கு 1960 ல் 0.7 சதவீதத்திலிருந்து 1979 ல் 7 சதவீதமாக உயர்ந்தது. 1980 களில் பஞ்சாபில் விளைவிக்கப்பட்ட  நெல்லில் 80 சதவீதத்தை மாநில அரசே கொள்முதல் செய்து  ஊக்கப்படுத்தியது.இது போன்ற ஹரியானாவிலும், மேற்கு உத்தரப்பிரதேசத்திலும் இது போன்ற வளர்ச்சி யைக் கண்டது.  குளிர்காலத்தில் கோதுமையை பயிரிட்டு அறுவடை செய்வது, பருவமழைக்காலத்தில் நெல் பயிரிடுதலும் என்கிற இரட்டை பயிர் முறை மிகப் பெரிய அளவில் நடைமுறைக்கு வந்து  அரிசி-கோதுமை என்கிற பயிரிடுதல் முறை நிலை நிறுத்தப்பட்டது.

பருவமழை தீவிரமடையும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் நெல்பயிரிடுதலை  பஞ்சாப், ஹரியான அரசுகள் கட்டாயமாக்கியது.  பஞ்சாப் நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம் பயன்பாட்டுக்கு வந்த 2009 ம் ஆண்டிலிருந்து அரசு நிர்ணயிக்கும் தேதிக்கு முன்னதாக நெல் சாகுபடி செய்வதை தடைசெய்துவிட்டது. இது பொன்ற கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாயத்தால் கரீஃப், ராபி பருவகால பயிர்களான  நெல், கோதுமை ஆகிய‌ இரு பயிர்களும், பயிரிடுவதற்கான சுழற்சி இடைவெளி என்பது  சுருங்கி 15 நாட்களாகக் குறைந்தது. இது போன்ற அழுத்தங்களால், மிகக் குறுகிய காலத்தில், அடுத்த பயிருக்கு விளைநிலங்களை தயார் செய்வதற்கான சூழலே, பயிர்க் கழிவுகளை எரிப்பதே மிக எளிதான, வேகமான நடைமுறையாகிப் போனது

இது போன்ற பயிர்முறை என்பது உலளாவிய நிகழ்வல்ல.  இந்தியாவின் பருவமழை என்பது தனித்துவம் வாய்ந்தது, அதைப் போன்றது தான் .RWCS ம்.  ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் பருவ‌மழையைப் போலல்லாமல்  தொடர்ச்சியற்ற மழைப் பொழிவு ஆண்டுமுழுவதும் நிகழும். பருவழை எப்பொழுது நிகழும் என்பதை வானியல் ஆய்வாளர்கள் கூறுவது போல் போல் கடல் மற்றும் நிலப்பரப்பிற்கிடையே நிகழும் வெப்பச் சலனத்தால் காற்று வீசும் திசையில் மாற்றம் நிகழும் போது, எதிர்பார்த்த, குறிப்பிடத்தக்க அளவிலான‌ பருவகால மழைப் பொழிவு நிகழ்கிறது.

இந்தியாவில் நிகழும் தென்மேற்கு பருவமழையே உலகில் இது போன்ற நிகழ்வுக்கு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.

பயிர்க் கழிவுகளை எரிப்பதென்பது பசுமைப்புரட்சி காலத்தில் தொடங்கி அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் பருவ‌மழையை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் போன்றவற்றால் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் வார்த்தெடுக்கப்பட்ட‌  RWCS முறையால் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வே.

RWCS என்பது இரட்டை பயிர் விளைச்சல்உற்பத்தியை பெருக்கியதோடு, இந்தியாவின் உணவு பாதுக்காப்பை மேம்படுத்தியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனாலும் வெளிப்படையான சில பாதகங்களையும் விளைவித்திருக்கிறது, உதாரணத்திற்கு கழிவுகளை எரிப்பது.  பயிர்க் கழிவுகளை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசால், பயிர் விளைச்சல் குறைவதாகவும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

பயிர்க் கழிவுகளை எரிப்பதென்பது  இப்பகுதிவிவசாயிகளால் பல்வேறு காரணங்களால் தவிர்க்கமுடியாத ஒன்றாகிப் போனது.முதலாவது காரணம், உயர் விளைச்சல் ரக நெல்லின் கழிவானது பாசுமதி நெல்லின் கழிவை விட நீளமானது அத்தோடு அதன் ருசியற்ற தன்மை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுவதில்லை. அதைவிடவும் முக்கியமானது  அறுவடை இயந்திரங்களின் பெருக்கமும், அதனால் உற்பத்தியில் நல்ல பலன் ஏற்படுவதும், வேளாண்கழிவுகளை கையாள்வதை கடினமாக்கியுள்ளது.

அறுவடைக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்பு  தொழிலாளர்களைக் கொண்டு கைகளால் அறுவடைசெய்யட்ட போது, உண்ணக்கூடிய பகுதியையும், சந்தைப்படுத்த வேண்டியவைகளையும்  தனியாக பிரித்தெடுத்துவிட்டு, தேவையற்ற மற்ற‌வைகளை மொத்தமாக பிடுங்கும் நிலை இருந்தது, அது கடுமையான உழைப்பு சார்ந்ததாகவும், அதிக நேரமெடுப்பதாகவும் இருந்தது. அறுவடை இயந்திரம் இவை அனைத்தையும் மாற்றியமைத்தது.

அறுவடை செய்வது, போர் அடிப்பது, தானியங்களைப் பிரிப்பது போன்ற பணிகளையும், அத்தோடு இணைக்கப் பெற்ற கருவியால் எளிதாக செய்யமுடிந்ததால், மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், ஓர் அடி உயர கழிவுகளை விட்டுச் செல்லுதல் என்கிற பயனற்ற நிகழ்வும் நடக்கிறது. இயந்திர அறுவடைக்கு பின்னர் விடப்பட்ட கழிவை அகற்றுவதென்பது இன்னும் கடினமானதாக இருப்பதால், எரிப்பதை தவிர வேறுவழியில்லை என்கிறாரகள் விவசாயிகள். இயந்திர அறுவடைக்கு பின்னான கழிவானது கூர்மையாக இருப்பதால் கால்நடைகள காயப்படுத்திவிடும் என்பதால் மேய்க்கவும் இயலவில்லை.

இக்கழிவுகளை கண்டிப்பாக அகற்றிவிட‌வேண்டும், இல்லையேல் அடுத்த பயிரிடலுக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் போது இவ் வைக்கோல் கழிவில் இயந்திரங்கள் சிக்கிக் கொள்கின்றன. இதிலிருந்து எளிதாக விடுபட மண்ணெண்யையோ அல்லது வேறு எண்ணையையோ நிலத்தில் ஊற்றி கொழுத்திவிடுவதே அவர்களுக்கு எளிய‌ வழிமுறையாக இருக்கிறது.

தற்போது,இந்தியாவில் 26000க்கும் அதிகமான அறுவடை இயந்திரஙகள் பயன்பாட்டிலிருந்தாலும் அவைகளில் பாதி, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் பயன் பாட்டில் உள்ளன. இவைகளின் பயன்பாடே இந்தியாவின் காற்றுமாசுக்கு மிகப் பெரிய காரணியாக அமைந்திருக்கிறது.

அதிகப்படியான இயந்திரப்பயன்பாடு விசாயக்கூலிகளையும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளையும் அப்புறப்படுத்தியிருக்கிறது.  பயிர்க்கழிவானது ஒரு காலத்தில் கால்நடைகளுக்கான  மிக முக்கிய தீவனமாக கருதப்பட்டது,  ஆனால் இயந்திரங்கள் வருகைக்குப் பின் விவசாயத்திற்கு  கால்நடைகளின் தேவையில்லை என்ற நிலை வந்ததால் பயிர்க்கழிவுகளும் தேவையற்றதாக ஆனதே, கழிவுகளை எரிப்பது ஊக்கம் பெற்றது.

குறிப்பாக பஞ்சாப், ஹிரியான மாநிலங்களில் நெல்பயிலிருந்து  கிடைக்கும் வைக்கோல் கழிவுகள் சத்துக்கள் இல்லாததால் பால் உற்பத்தியிலும், தரத்திலும் அதன் தாக்கமிருப்பதால், விவசாயிகள் அதை சேகரிப்பதிலும், விற்பதிலும் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை.

காற்றின் வேகம் குறைந்த காலகட்டத்தில், விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான, பண்ணை உரிமையாளர்கள், ஒட்டுமொத்தமாக பயிர்கழிவுகளை எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகையும், புகை மூட்டதிலும் மூழ்கியிருப்பது  இயல்பான ஒன்றே.

இதுவே ஒவ்வொரு ஆண்டும், டெல்லியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த வடக்கு மண்டல பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருப்பதற்கான உண்மையான காரணமாகும். வருடத்தின் இந்த காலத்தில் வெளியேறும் ,வேறு சில மாசுக்களும் அத்துடன் மிதமான வெப்பமும், காற்றின் வேகம் குறைவதாலும் துகள்மப் பொருள்கள் மிகக் குறைந்த உயரத்தில் நிலைகொண்டுவிடுகின்றன.

பசுமைப் புரட்சியால், தொழில் நுட்பம், தேர்ந்த விதைகள், ஒரு சில பயிர்களுக்கான ஆதார விலை, ஒரு சில விவசாய நடைமுறைகளை இந்நாட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட இது போன்ற நடவடிக்கை களுக்கு பிறகு, விவாயத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது முடங்கிப் போனது. இதனால் மலிந்து போன சமூகப் பிரச்சினைகளாலும்,, கட்டமைப்பு பிரச்சினைகளாலும் இத்துறை தொடர்ந்து நலிவைச் சந்தித்து வருகிறது. இது போன்ற காரணங்களால் விவாயத் சார்ந்த தொழில் சிரமத்திலிருக்கிறது, ஆகையால் பெரிய அளவிலான புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் மந்தநிலை, விவசாயம் சார்ந்த காற்று மாசிலும் பிரதிபலிக்கிறது.

-சித்தார்த் சிங்

https://scroll.in/article/901392/how-the-green-revolution-contributed-to-indias-air-pollution-crisis

தமிழில்: அஹமத் கபீர்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments