காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து; பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை அடுத்து குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம்.

தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர் நிகழ்வாகிவிட்ட நிலையில், சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்திற்கும், தொழிலாளர்களின் உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் பட்டாசுகளை தமிழ்நாட்டில் தடை செய்வதே சரியாக இருக்கும். பழைய தேவையில்லாத மூடப் பழக்கங்களை கைவிட்டு தற்போதைய சூழலுக்கு உகந்த விஷயங்களைப் பின்பற்றும் சமூகமே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். தமிழ் சமூகம் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என விரும்புகிறோம்.

பட்டாசு வெடிக்கும் பொழுது ஆர்சனிக், லித்தியம், காட்மியம், கந்தகம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம்,தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன. இதே நச்சுகள்தான் பட்டாசு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் உடலிலும் கலந்து அவர்களின் ஆயுட்காலத்தை குறைக்கிறது.

பட்டாசு தடை பற்றி பேசும் பொழுதெல்லாம், பட்டாசு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி இங்கு எழுப்பப்படுகிறது,
பட்டாசுகளை வெடித்து சிவகாசி தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்று கூச்சலிடுகிறார்கள் திடீர் மனிதாபிமானிகள். தாம் செய்யும் சூழல் சீர்கேட்டிற்கு தம்மைத்தாமே ஏமாற்றச் சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு இது. உண்மையில் பட்டாசுகளால் உடல்நலம் உருக்குலைந்து அவர்களின் எதிர் காலத்தையும், சில சமயங்களில் உயிரையும் இழந்து நிற்கும் முதல் நபர்கள் பட்டாசுத் தொழிலாளர்கள்தான்.  தொழிலாளர் உரிமை மீறல், அதிகப்படியான உழைப்புச் சுரண்டல், குழந்தைத் தொழிலாளர் முறைய என பல குற்றங்கள் அங்குதான் நடைபெறுகிறது.
பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்றால் உண்மையில் அவர்கள் வேறு தொழிலுக்கு மாற அரசு முயல வேண்டும்.

பட்டாசுத் தொழிலாளர்கள் மொத்தமாக வேறு தொழிலுக்கு மாறுவது சாத்தியமா?
லாட்டரி சீட்டு தொழிலை தமிழ்நாடு அரசு தடை செய்த போது லாட்டரியை நம்பி இருந்த 2.5 லட்சம் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்குத் தங்களை மாற்றி கொண்டனர். சிவகாசி என்பது ஒரு குட்டி ஜப்பான். பல்வேறு வகையான தொழில்கள் அங்கு நடைபெறும். ஜனவரியில் சிவகாசி மக்கள் காலண்டர் அச்சடிப்பதில் மும்முரமாக இயங்குவர், அதுபோல பல தொழில்கள் அங்குள்ளன. அரசு முறையான உதவிகள் செய்தால் சிவகாசி தொழிலாளர்கள் வாழ்வு மேம்படுவதோடு பட்டாசையும் தமிழகத்தில் முழுமையாகத் தடை செய்ய முடியும்.

இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள IPCC ஆறாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றுகாக எரிக்கப்படும் புதைபடிம ஆற்றலை உடனடியாக நாம் நிறுத்தாவிட்டால் 2030க்குள் சரி செய்ய முடியாத பெரிய அளவிலான பாதிப்புகளை அது ஏற்படுத்தும் என்கிறது. காலநிலை மாற்றம் நம் இருப்பையே கேள்வி குறியாக்கியுள்ள இந்த சூழலில் பட்டாசு வெடிப்பதில் இருந்து நாம் வெளியேறுவதுதான் சிறந்த முடிவாகும்.

  • பூவுலகின் நண்பர்கள்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments