பெட்ரொலிய எரிபொருள் விற்பனை நிலையங்கள் செயல்பட மாசு கட்டுப்பாடு வாரிய முன் அனுமதி அவசியம்

fumes1
Image: TERI

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க  மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு நிரப்பும்  நிலையங்களில் இருந்து அவை நிரப்பபடும்போது எரிபொருளானது வாயு வடிவில் வெளியேறுகின்றது. இப்படி வெளியேறும் வாயுவில் பென்சீன் மற்றும் சில Volatile Organic Compounds அதிகமாக இருப்பது அந்த நிலையங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கும் அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு  சுகாதார சிக்கல்களை உருவாக்குகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு 2016ஆம் ஆண்டு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அனைத்து பெட்ரோலிய விற்பனை நிறுவனங்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில் பெட்ரோலிய எரிபொருள் நிரப்பப்படும் போது வெளியேறும் வாயுக்களை கட்டுப்படுத்தும்  Vapour Recovery System எனப்படும் தொழில்நுட்பத்தை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் மாதத்திற்கு 300 கிலோ லிட்டர் வரைக்கும் விற்பனையாகும் எரிவாயு விற்பனை நிலையங்களில் டிசம்பர் 2017க்குள் பொறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவிற்குப் பிறகு, உச்சநீதிமன்ற மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்புகளின் அடிப்படையில் VRS பொறுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் 04.06.2021 அன்று வெளியிட்ட உத்தரவில் இந்த VRS தொழில்நுட்பத்தை ஸ்டேஜ் II வகையில் 100% எரிவாயு விற்பனை நிலையங்களிலும் அக்டோபர் 22க்கு முன்பாகவும், 50% எரிவாயு விற்பனை நிலையங்களில் ஜூன் 2022க்கு முன்பாகவும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஸ்டேஜ் IB வகையில் 100% எரிவாயு விற்பனை நிலையங்களிலும் ஜூன் 22க்கு முன்பாகவும், 50% எரிவாயு விற்பனை நிலையங்களில் டிசம்பர் 2021க்கு முன்பாகவும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஸ்டேஜ் IA வகையில்( பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகள்) மார்ச் 2024க்கு முன்பாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இந்த கால அவகாசத்தின் அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம், ஷெல் இந்தியா நிறுவனம், நயாரா நிறுவனம் ஆகியவை தங்களது எரிபொருள் விற்பனை நிலையங்களில் VRS தொழில்நுட்பத்தை பொறுத்தத் தவறி வருவதால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது கடந்த 23ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் தாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு இறுதித் தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில், Vapour Recovery System எனப்படும் மாசுத் தடுப்பு தொழில்நுட்பத்தை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் மாதத்திற்கு 300 கிலோ லிட்டர் வரைக்கும் விற்பனையாகும் எரிவாயு விற்பனை நிலையங்களிலும் புதிதாக திறக்கப்படும் ஸ்டேஜ் 1 மற்றும் ஸ்டேஜ் 2 வகை (மாதத்திற்கு 100கிலோ லிட்டர் முதல் 300கிலோ லிட்டர் எரிபொருள் விற்பனை செய்யப்படும் நிலையங்கள்) மற்றும் பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளிலும் கண்டிப்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவின் அடிப்படையில் நிறுவ வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்தீர்ப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மற்றும் இனி அமைக்கப்படவுள்ள எல்லா எரிவாயு விற்பனை நிலையங்களும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ’நிலையத்தை அமைப்பதற்கான இசைவாணை’( Consent to Establish) மற்றும் ’நிலையத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை’( Consent to Operate ) பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே செயல்பட்டு வரும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் அனைத்தும் 6 மாதத்திற்குள் தொடர்ந்து செயல்படுவதற்கான இசைவாணையை மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த பெட்ரோலிய விற்பனை நிலையங்கள் மீது தகுந்த நடவடிக்கையை மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாடு வாரிய முன் அனுமதி கட்டாயமாக்கப்படுவதன் மூலம் பெட்ரோலிய எரிபொருள் விற்பனை நிலையங்கள் VRS தொழில்நுட்பத்தை பொறுத்துவதை வாரியங்கள் கண்காணிக்க முடியும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

  • சதீஷ் லெட்சுமணன்

 

VRS
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments