Discovered Small Fields ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளை சேர்த்ததால் அந்த ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இரண்டு நாட்கள் தான் முடிந்துள்ளன. அதற்குள் தமிழ் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ONGC நிறுவனம் 15/06/2021 ஆம் தேதி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது அதிச்சியளிக்கிறது.
L-1 PML எனும் 948.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்காக 2004ஆம் ஆண்டு ONGC நிறுவனம் உரிமம் பெற்றது. இந்த பகுதியில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டாம் எனும் ஊரின் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆய்வுக் கிணறுகளையும் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் 5 ஆய்வுக் கிணறுகளையும் அமைப்பதற்கு ONGC நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ONGC நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் இந்திய பிரமருக்கு எழுதிய கடிதம் மூலம் தமிழ் நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனத் தெரிவித்துள்ள போது அதை கிஞ்சித்தும் மதிக்காமல் இரண்டே நாளில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ONGC நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறையின் கீழ் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ONGC அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரை பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.