சூழல் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் சட்ட மசோதாக்களை கைவிடுக

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 20.07.2023 முதல் 11.08.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 21 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் பாதுகாப்பிற்கு எதிரான சட்ட மசோதாக்களும் இடம்பெற்றுள்ளன.

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023.

நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்க வேண்டும் என வனக்கொள்கை 1988ல் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 21% நிலப்பரப்பில் மட்டுமே காடுகள் உள்ளன. இந்த நிலையில் காடுகளைப் பாதுகாப்பதற்காக 1980ல் கொண்டு வரப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை முன்வைக்கிறது இந்த வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023. குறிப்பாக காடுகளில் பல்வேறு காடுகள் பாதுகாப்பு சாராத திட்டங்களை உரிய முன் அனுமதி  இல்லாமல் நடைமுறைப்படுத்துவதற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. காடுகளில் கனிம வளங்களை சோதனை செய்தல், சாலைகள், ரயில் பாதைகள், சூழல் உலா, உயிரியல் பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை என இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பழங்குடி மக்கள் மற்றும் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறாமலே காடுகளில் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இச்சட்ட மசோதாவின் சரத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சட்டத்தின் பெயரை சமஸ்கிருத்தத்தில் மாற்றியமைக்கும் திருத்தமும் இடம் பெற்றுள்ளது. இச்சட்ட மசோதா மீது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ஏற்கெனவே நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், ஒரு திருத்தமுமின்றி மீண்டும் நாடாளுமன்றத்துக்கு இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசீலனையின்போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கிரிராஜன் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ், தி.மு.க.வைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

உயிரினப் பன்மையச் சட்டத் திருத்த மசோதா 2022

இந்தியாவின் உயிரினப் பன்மயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட Biological Diversity Act,2002ல்  இந்தியாவின் உயிர்ப் பன்மய வளங்களான காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் அவற்றின் மரபணு வளங்கள் மற்றும் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் குறித்த மரபு சார்ந்த அறிவு போன்றவற்றை பாதுகாக்க இயற்றப்பட்டது. உயிரியல் வளங்களைப் பாதுகாத்தல், அவற்றை வளங்குன்றா வகையில் பயன்படுத்துதல், அத்தகைய உயிரியல் வளங்களின் பயன்பாட்டினால் கிடைக்கும் பலன்களை  நியாயமாகவும், சமமாகவும் பகிர்ந்து கொள்வதை உறுதிசெய்தல் என்பதுதான் இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். குறிப்பாக, நமது மரபு அறிவாண்மை(Traditional Knowledge), அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் (Intellectual Property) மூலம் திருடுபோவதைத் தடுக்கவும் இச்சட்டம் உதவிவந்தது.

இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே இந்தியாவின் உயிர்ப்பன்மய வளங்களைப் பாதுகாப்பதுதான். ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தும் இவ்வளங்களை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள்  எளிதாகவும் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சுரண்டுவதற்காக வழி செய்கிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி நெறிமுறைப்படுத்தப்பட்ட மரபார்ந்த அறிவை பயன்படுத்தினால் அதனால் கிடைக்கும் பலனை பங்கிட்டுக் கொள்ள அவசியமில்லை என்கிறது. இது Bio Piracy க்கு வழிவகுக்கும்படியாக உள்ளது. மேலும் ஒரு மரபு சார்ந்த அறிவை நெறிமுறைப்படுத்தியிருந்தாலும் நெறிமுறைப்படுத்தாவிட்டாலும் அதனால் கிடைக்கும் பலனை நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்ளதான் வேண்டும். இந்த திருத்தமானது ஏற்கெனவே மஞ்சள், வேம்பு உள்ளிட்டவற்றின் மீது நம் நாட்டிற்கு உள்ள காப்புரிமையை நிலை நாட்டும் சட்டப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து விடும்.

இச்சட்டத்தின் விதிகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வழங்கும் சரத்துகளில் தற்போது திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. தண்டனை பிரிவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி சிறைத்தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மோசடியாகும். குறிப்பாக ஆயுஷ் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளுடன் வணிகம் நடைபெற்று வருகிறது. அவர்கள் இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை மீறுகிறார்கள். தமிழ்நாட்டு உயிரினப் பன்மய வாரியம் மட்டும் இச்சட்டத்தின் பல்வேறு பங்கீடு விதிகளை மீறிய 677 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கியிருந்தது. இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தாங்கள் செய்யும் தவறுகளுக்கும் விதிமீறல்களுக்கும் இந்த நிறுவனங்கள் அபராதத் தொகை செலுத்தினால் மட்டும் போதுமானது. பெரு நிறுவனங்களுக்கு அபராதத் தொகை செலுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது. சிறைத்தண்டனை மட்டுமே அவர்களை மேற்கொண்டு தவறிழைப்பதில் இருந்து தடுக்கும். அது நீக்கப்பட்டிருப்பது இந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தையே சிதைக்கும் படியாக உள்ளது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த மசோதா 2023

அண்மையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று திரும்பிய பிரதமர் மோடி பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அவற்றுள் Crtical Mineral Investment Partnership ஒப்பந்தமும் ஒன்று. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா லித்தியம், பெரிலியம், டைட்டானியம்,  சிர்கோனியம் உள்ளிட்ட 30 விதமான கனிமங்களை முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களாக (Crtical Minerals) அறிவித்துள்ளது. இந்தக் கனிமங்கள் தகவல், மின்னனு தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களைத் தயாரிக்க உதவுகின்றன. தற்போது கொண்டு வரப்படும்   சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதாவின் மூலம் தனியார் நிறுவனங்களும் மேற்கூறிய கனிமங்களை சுரங்கம் அமைத்து அகழ்ந்தெடுக்க அனுமதி வழங்கப்படும். ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இக்கனிமங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் லித்தியம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடெங்கிலும் சுரங்கங்களை அமைத்து காடுகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.

தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டத் திருத்த மசோதா 2023

இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களையும் தொல்பொருட்களையும் பாதுகாக்கும் நோக்கில் “தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம்” (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958) இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி வரலாற்றுச் சின்னங்களாக ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தாலோ, அல்லது சேதம் விளைவித்தாலோ கடுமையான தண்டனைகள் பிறப்பிக்கப்படும். கூடவே, 100மீட்டர் வரை எந்த கட்டுமானப் பணிகளும் நடக்கக் கூடாது என்று சொல்கிறது இச்சட்டம். இச்சட்ட விதிகளை நீர்த்துப்போகும் வகையில் தற்போது புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. பல நூறாண்டு தொன்மையான நினைவுச்சின்னங்களுக்கு அருகே கட்டுமான வேலைகள் நடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் நினைவுச் சின்னங்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்பதே இதற்கு காரணமாகும். தற்போது கொண்டு வரப்படும் மசோதாவல் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர தேவைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களில் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும். 100மீட்டருக்கு அப்பால்தான் கட்டுமானப் பணிகள் நடக்க வேண்டும் என்ற விதியை அகற்றிவிட்டது. இந்த சட்டத் திருத்தமானது ஆழமான உள்நோக்கங்களைக்.கொண்டதாகவே தெரிகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 413 தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் புதிய அகழாய்வுகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியா முழுவதும் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதிப்படையக்கூடும்.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புவி வெப்பதாதலால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கெனவே இருக்கும் சூழல் பாதுகாப்புச் சட்டங்களைப் நீர்த்துபோகச் செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முயற்சிகள் அனைத்தும் கண்டனத்திற்குரியவை.

இவற்றைத் தவிர இணையதளங்கள் மூலம் பெறப்படும் தனி நபர்களின் தகவல்கள் குறித்தான Digital personal Data Bill, பத்திரிகைகள் மற்றும் இதழ்கள் பதிவு தொடர்பான Press Registration of Perodicals உள்ளிட்ட பிற சட்ட மசோதாக்களும் சமூக, பொருளாதார அடிப்படையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தவல்லவை. இவற்றைக் கருத்தில்கொண்டு இம்மசோதாக்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டியதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

Bills

 

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Yorum Satın Al
1 year ago

Useful article, thank you. Top article, very helpful.