நெகிழியைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருக்கும் போலித்தீர்வுகளை அம்பலப்படுத்தித் தவிர்க்கவும் சரியான தீர்வுகளை நோக்கி நகரவும் கைகோர்க்க குடிமைச் சமூகத்துக்கு அழைப்பு விடுக்கிறோம்!
உலகின் மொத்த நெகிழியையும் ஒரு நாடாக உருவகித்தால், அந்த நாடு உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கார்பன் உமிழும் நாடாக இருக்கும். இது, நெகிழி பயன்பாடானது எந்த அளவுக்குக் காலநிலை மாற்றத்தோடு நெருங்கியத் தொடர்புடையது என்பதை உணர்த்துகிறது. பெரும்பாலும் நெகிழியானது கழிவாக நம் சூழலில் வெளிப்படும்போது மட்டுமே ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தைப் பெறுகிறது. ஆனால், நெகிழியின் மூலப்பொருளான பெட்ரோலிய அகழ்வு, சுத்திகரிப்பு (Refining), உற்பத்தி, விநியோகம், பயன்பாடு போன்றவை, ஏன் மறுசுழற்சியும்கூட கடுமையான சூழல் பாதிப்புகளையும் உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது.
நெகிழியின் உற்பத்தியின்போது அவற்றுக்குக் குறிப்பிட்டப் பண்புகளைக் கொடுப்பதற்காக ஏராளம் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்த வேதிப்பொருட்களில் சில வேதிப்பொருட்கள் மட்டுமே இதுவரையிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருப்பதோடு அவை புற்றுநோய், இனப்பெருக்கக் கோளாறுகள் உட்படக் கடுமையான தீங்குகளை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
எரிக்கப்படுதல், வெயிலிலும் மழையிலும் சிதைதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் உருவாகும் நுண்ணெகிழித் துகள்கள் நம் மூச்சுக்காற்றிலும், கடல் உணவு, உப்பு, நாம் உண்ணும் தாவரங்கள், பால் என எதிலும் கலந்திருக்கின்றன. நெகிழியின் நுண்துகள்கள் மனித இரத்தம், தொப்புள்கொடி, நுரையீரல் திசுக்கள், விந்தணுக்கள் வரையிலும்கூட பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக ‘நெகிழி மட்குவதில்லை’ என்று சொல்லப்படுவது அதன் மிகப்பெரிய பாதிப்புகளின் ஒரு சிறு துளி மட்டுமே. நச்சு வாயுக்களையும் சாம்பலையும் உருவாக்குதல், கார்பன் உமிழ்வு, பொருளாதாரத்தைச் சிதைக்கும்படியாக குப்பை மேலாண்மையின் செலவினங்களை அதிகரித்தல், உயிர்ப்பன்மையத்தையும், மண்வளத்தையும், நீர்நிலைகளையும் அழித்து மாசுபடுத்துதல், விளிம்புநிலை மக்களின் மீதான நேரடி பாதிப்புகள் – சுரண்டல் என நெகிழிப் பிரச்சினையானது பிரம்மாண்டமாக விரிந்துகொண்டே செல்கிறது.
நெகிழியின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது ஒன்றே நெகிழி மாசிலிருந்து நாம் விடுபடத் தீர்வாக இருக்கிறது. ஆனால், பெருநிறுவனங்கள் தங்கள் இலாபத்தைத் தக்கவைப்பதற்காக போலியான தீர்வுகளை நெகிழிப் பிரச்சினைக்கு தீர்வுகளாக முன்வைத்து அரசாங்கங்களையும் குடிமக்களையும் திசைதிருப்புகின்றன. நெகிழிக் கழிவிலிருந்து ஆற்றல் – எண்ணெய் எடுத்தல், மறுசுழற்சி, நெகிழிப் பிரச்சினையைத் தனிநபர் ஒழிக்கமின்மையின் விளைவாக சித்தரித்தல் அல்லது அரசின் இயலாமையாக சித்தரித்தல், மட்கும் நெகிழியை முன்மொழிதல் போன்றவை வழக்கமான போலித் தீர்வுகளாக இருக்கின்றன.
கெடுவாய்ப்பாக இத்தகைய போலித்தீர்வுகளே ஊடகங்கள் மற்றும் வெகுமக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. போலித்தீர்வுகள் பொதுமக்களிடையே மட்டுமின்றி நெகிழியை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஐ.நா.வின் முன்னெடுப்புகளையேத் திசைதிருப்புகின்றன. இவற்றை அம்பலப்படுத்துவதன் முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டதால் ஜூன் மாதத்தில் 15 நாட்கள் உலகம் முழுதும் “அம்பலமாகும் போலித் தீர்வுகள்” (False Solutions Exposed) என்ற பெயரில் நெகிழி மாசுக்கு எதிரான தீவிரப்பிரச்சாரத்தை சூழல் நலனுக்காய் பாடுபடும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் செய்தன.
நெகிழி வெகுமக்களிடையே ஒரு பேசுபொருளாக இருந்தாலும்கூட பெரும்பாலான நேரங்களில் அவர்கள் போலித் தீர்வுகளால் திசைதிருப்பப்படுவதும், இதன் பின்னிருக்கும் அரசியல் வணிக நலன்களை உணராதிருப்பதும் நெகிழிக் கட்டுப்பாட்டில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இந்த அரசியலற்றத் தன்மையே உலக அரங்கில் வலுவான சக்தியான இந்தியா, நெகிழியை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஐ.நா.வின் முன்னெடுப்புகளில் நெகிழி மாசுறுத்திகளுக்கு (Plastic Polluters) சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பாக அமைந்தது.
நெகிழியைக் கட்டுப்படுத்துவதில் உலகளாவிய முன்னெடுப்பு மிகவும் அத்தியாவசியமானது என்ற நிலையில், அண்மையில் பாரீசில் நடைபெற்ற அதற்கான ஐஎன்சி – 2 மாநாட்டில் கலந்துகொண்ட, இந்தியாவின் ‘நழுவும் நிலைப்பாடானது’ இங்கு பேசுபொருளாக மாறாததும், ஊடக வெளிச்சம் பெறாததும், நாம் எந்த அளவிற்கு இவற்றில் கவனமின்றி இருக்கிறோம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
இந்தப் பின்னணியில், ஜூலை 1 முதல் மாத இறுதிவரையில் ‘நெகிழி மாசில்லா ஜூலை’ (Plastic Free July) என்ற முழு மாத நிகழ்வு நெகிழி மாசுக்கு எதிராக உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஜூலை மாதம் முழுவதும் தனிநபர்களாகவும், சமூகங்களாகவும், அமைப்புகளாகவும் நெகிழி மாசுக்கு எதிரான நடவடிக்கைகள், பிரச்சாரங்களில் குடிமைச் சமூக அமைப்புகள் ஈடுபடுவார்கள். இதன் ஒரு பகுதியாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் பல்வேறு நிகழ்வுகளைத் திட்டமிட்டிருக்கிறது.
இன்றைய தவிர்க்கவியலாத சுற்றுச்சூழல் நெருக்கடியின் ஒரு பகுதியாக இருக்கும் நெகிழிப் பிரச்சினையை அரசியல் சரித்தன்மைகொண்ட பேசுபொருளாக மாற்றுவதன்மூலமே நாம் சரியான திசையில் முன்னகர முடியும். அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், சமூக வலைதளக் கருத்தாளர்கள், சமூக – அரசியல் இயக்கங்கள், பள்ளி – கல்லூரிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் பொதுமக்கள், என ஒட்டுமொத்த சமூகமும் போலித்தீர்வுகளில் சிக்கிவிடாது நெகிழி மாசுக்கு எதிரான சரியான விழிப்புணர்வை உருவாக்கவும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கவும் இதன்மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.
உங்கள் பள்ளி கல்லூரிகளில், குடிமைச் சமூக அமைப்புகள், இயக்கங்களில் காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி உள்ளிட்டப் பல்வேறு சூழல் சிக்கல்கள் குறித்துத் திரையிடல்கள், உரையாடல்களை நிகழ்த்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறோம்.
நெகிழிக்கு எதிரான முன்னெடுப்பு சூழல் நீதிக்கான, வளமான எதிர்காலத்துக்கான, காலநிலை மாற்றத்துக்கு எதிரான, ஆரோக்கியமான சமூகத்துக்கான முன்னெடுப்பும்கூட. இந்த சூழல் – சமூக – அரசியல் செயல்பாட்டில் உங்கள் ஒவ்வொருவரையும் பூவுலகின் நண்பர்களாய் களம்காண அழைக்கிறோம்!
– பூவுலகின் நண்பர்கள்
We are supporting friends