கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது
ஒன்றிய அரசின் முடிவுக்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம்
திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்தியா – ரஷ்யா நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். இப்பயணத்தின்போது மாஸ்கோவில் நடந்த இந்திய மக்களுடனான கூட்டத்தில் டிசம்பர் 26 அன்றூ உரையாடிய அவர் “ இன்று, என் முன்னிலையிலும், துணைப் பிரதமர் மன்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகார்ப்பூர்வமாக வெளியிடவில்லை. ரஷ்யாவில் இந்திய மக்கள் சமூகங்களிடம் பேசும்போதுதான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இச்செய்தியைப் பகிர்ந்துள்ளார். ரஷ்ய அரசு இணையதளத்திலும்கூட இது தொடர்பான ஒப்பந்தம் பொதுவெளியில் இல்லை. இது கூடுதல் சந்தேகத்தை எழுப்புகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம் என்று மட்டும் கூறுவதன் மூலம் என்னவெல்லாம் நாசகாரத் திட்டங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்கிற தகவல் தெரியவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் புதிய அணுவுலைகளோ அல்லது வர்த்தக ரீதியிலான ஈனுலைகளோ (commercial scale fast breeder nuclear reactor) தொடங்கப்படுமாயின் இது மிகவும் ஆபத்தானதாகும்.
கூடங்குளத்தில் ரஷ்யாவின் தொழில் நுட்ப உதவியுடன் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுவுலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2018ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் பா.ஜ.க. முதலமைச்சர் விஜய் ரூபானி பவாநகர் மாவட்டத்தின் மிதிவிர்தியில் அமையவிருந்த அணுவுலைக்கு எதிர்ப்பு கிளம்பியபோது இப்போது மட்டுமில்லை எப்போது இத்திட்டம் செயல்படுத்தப்படாது என சட்டப்பேரவையில் அறிவித்தார். கோலார் தங்க சுரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவுகளைப் பாதுகாக்க முடிவெடுத்தபோது கர்நாடக பா.ஜ.க. அதைக் கடுமையாக எதிர்த்தது. இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அத்திட்டங்களைக் கைவிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டில் மட்டும் அணுவுலைகளையும் அணுக்கழிவு மையத்தையும் மேலும் மேலும் அமைத்து தமிழர்களை ஏமாளியாக்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் ஜனநாயக விரோதமானது மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 18.2.2022 அன்று எழுதிய கடிதத்தில் தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்களைக் கருத்தில்கொண்டு, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும், இந்நடவடிக்கை அலகுகள் 1 மற்றும் 2-க்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த நான்கு அலகுகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இது சாத்தியப்படாவிடில், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில், நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும், தமிழ்நாட்டிலுள்ள எட்டு கோடி மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தான் விடுப்பதாகவும் கோரியிருந்தார்.
ஆனால், 27.07.2022 அன்று மக்களவையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், கூடங்குளம் அணுவுலையில் இருந்து வெளியேறும் கழிவை ரஷ்ய நாட்டுக்கே அனுப்புவது குறித்து அரசு எந்த பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார். இப்படியாக கூடங்குளம், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் ஆகிய விவகாரங்களில் பொதுமக்கள் நலனுக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கும் எதிராகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.
இந்த வரிசையில் இப்போது தமிழ் நாடு மாநில முதலமைச்சரின் ஒப்புதலின்றி எவ்வித கலந்தாலோசனையுமின்றி திடீரென ரஷ்யாவுடன் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டிருப்பது தமிழ் நாட்டின் மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் நலனுக்காக தமிழ் நாடும், தமிழ் நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உலகமெங்கிலும் அணுசக்தி ஒரு அழிவு சக்தியாக பார்க்கப்பட்டு வருகிறது. நாடுகள் பலவும் அணுமின் நிலையங்களை மூடிவிட்டு புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்திக்கு மாறி வருகின்றனர். அணுக்கழிவுகளை கையாள்வதற்கான எந்த் திட்டமும் இல்லாத ஒன்றிய பா.ஜ.க. அரசு கூடங்குளத்தில் உள்ள 6 உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்கவும் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் தூத்துக்குடியில் பெய்த மழை எந்த நகரமும், எவ்வளவு மேம்பட்ட கட்டமைப்பும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தாங்கும் நிலையில் இல்லை என்பதை வெளிக்காட்டியுள்ளது. சென்னையில் பெய்த பெருமழையின்போது கழிமுகத்தில் எண்ணெய் கலக்கப்பட்ட விவகாரம் சி.பி.சி.எல். போன்ற பொதுத்துறை நிறுவனத்தின் மக்கள் விரோத அலட்சியப்போக்கையே காட்டுகிறது. 25 நாட்களாகியும் எண்ணூர் கழிமுகத்தில் நடந்த இயற்கைப் பேரிடரின் தாக்கம் அகலவில்லை. இந்த நிலையில் தமிழ் நாட்டின் தென்முனையை மேலும் அபாயக் குழிக்குள் தள்ளுவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராகப் போராடி பல்வேறு வழக்குகளைச் சந்தித்த உள்ளூர் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் புதிய உலைகளை அப்பகுதியில் அமைக்கும் செய்தி பேரிடியாக விழுந்துள்ளது.
கூடங்குளத்தில் புதிய அணுவுலைகளையும் அணுக்கழிவு மையங்களையும் அமைக்கும் முடிவை தமிழ் நாட்டு மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். ஒன்றிய அரசின் இந்த தமிழர் விரோத, தமிழ் நாடு விரோத முடிவை தமிழ் நாட்டின் முதலமைச்சர் கடுமையாக எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் எழுப்ப தமிழ் நாட்டில் எதிர்கட்சிகள், அரசியல் – சமூக அமைப்புகளைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோருகிறோம்.