தகிக்கும் தமிழ்நாடு; மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு கோரிக்கை

தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2°C – 4°C அதிகமாக பதிவாகியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட அளவில் தீவிர வெப்பத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடிதம் பின்வருமாறு:

பொருள்: வெப்ப அலை பாதிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

 மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வணக்கம்.

 கடந்த 28.03.2023 அன்று ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும்  நாட்டில் ஏற்படவுள்ள வெப்ப அலை தாக்கம் குறித்தான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தச் சுற்றறிக்கையானது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 28.03.2023 தேதியிட்ட மார்ச் – மே மாதம் வரையிலான வானிலை கணிப்புகள் தொடர்பானதாகும். அச்சுற்றறிக்கையில் இக்கோடை காலமானது வழக்கத்தைவிட வெப்பமிகுந்ததாக இருக்கும். குறிப்பாக வடகிழக்கு, மத்திய, கிழக்கு இந்தியப் பகுதிகள் முழுமையாகவும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனக் கூறியிருந்தது. மேலும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தேசிய அளவிலான திட்டத்தின்படி (National Action Plan on Heat related illness) நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் 1ஆம் தேதி முதல் வெப்ப சார்ந்த நோய்கள் குறித்தான தகவல்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், கடந்த 18.04.2023 அன்று கடும் வெப்பத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஆர்த்தி அஹூஜா கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை சுட்டிக்காட்டி, தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக  மேற்கொள்ளப்பட வேண்டிய ஏராளமான நடவடிக்கைகளை அக்கடிதம் பட்டியலிட்டுள்ளது. தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது, பணியிடங்களில் தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவது, அவசரகால முதலுதவி வசதிகள் அளிப்பது, சுகாதாரத் துறையுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு  மருத்துவப் பரிசோதனையை உறுதி செய்வது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது போன்றவை இதில் அடங்கும். ஆலைகள் மற்றும் சுரங்கங்கள் தவிர்த்து கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நவிமும்பையில் உள்ள கார்கரில் நடந்த அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்க வந்தவர்கள் மேற்கூரை இல்லாமல் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டதில் வெயிலின் பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர். வெப்ப அலை காலங்களில் திறந்தவெளியில் கூட்டம் கூட்டுவதை தவிர்த்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெப்ப அலை பாதிப்பை எதிர்கொள்வதற்கான திட்டத்தை வெளியிட்டிருந்தது. நடப்பாண்டில் எல் நினோ ஆண்டாக இருக்கும் என பன்னாட்டு வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. எனவே, இயல்பைவிட அதிகமான வெப்பம் நிலவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் பொருட்டு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2°C முதல் 4°C வரை அதிகமாகப் பதிவாகி வருகிறது.

 இதனைக் கருத்தில்கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. எனவே தங்களது  சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டங்களில் மருத்துவம், பேரிடர் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, தீவிர வெப்பத்தை எதிர்கொள்ளத் தயாராவதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  1. வெப்பத்தின் அளவைக் கருத்தில்கொண்டு வேலை நேரங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என தனியார், அரசு நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும்.
  2. அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதோடு Integrated Health Information Platform -ல் அவற்றைப் பதிவு செய்ய அனைத்து மருத்துவமனைகளுக்கும் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
  3. கோடை காலத்தை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து நிர்வாகங்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
  4. மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களிகளில் வெப்ப அலை தாக்கத்துக்கான உடனடி சிகிச்சை வசதி ( நீர்த்துவ குறைபாடினை சீர் செய்தல் உள்ளிட்ட) ஏற்படுத்துதல்.
  5. பேரிடர் ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்படுவதுபோல வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த ஒத்திகைப் பயிற்சிகளை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வழங்கப்பட வேண்டும்.
  6. அதிகரிக்கும் வெப்பம் கடுமையான வறட்சியை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரங்களின் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும்.
  7. பணியிடங்கள் மட்டுமல்லாது, பொது இடங்களிலும், குறிப்பாய் சாலை ஓரங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வசதி அளிப்பதை உறுதி செய்தல்.
  8. வெப்ப அலை அபாய எச்சரிக்கை காலங்களில் மக்களுக்குத் தேவையான அளவு நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய ஏதுவாக பேருந்து பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டறிய வேண்டும்.
  9. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் போன்ற இடங்களில் மின்சார வசதி தடையின்றி வழங்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தல் வேண்டும்.
  10. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் போன்ற இடங்களில் குளிர்சாதன வசதிகள் அல்லது உறைப் பனிக்கட்டி, உப்பு-சர்க்கரை கரைசல் ஆகியவை இருப்பு வைத்தல் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றில் தேவையான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  11. வெப்ப அலைத் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  12. வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளம்பரப் பலகைகள் வைத்தல்.
  13. பேருந்துப் பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைத்தல்.
  14. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களை நீண்ட நேரம் திறந்து வைத்திருத்தல்.
  15. பணியாளர் சட்டங்களின் படி பணிச்சூழலில் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் குளியலறை வசதி போன்றவற்றை பணியாளர்களுக்கு அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  16. அவசர நிலையை எதிர்கொள்ளும் விதமாக எந்நேரமும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தயாராக இருத்தல் வேண்டும்.
  17. திறந்த வெளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  18. போக்குவரத்துக் காவலர்களுக்கு தேவையான அளவு நிழல் தரக்கூடிய தங்குமிடங்களை அமைத்துத் தர வேண்டும்.
  19. அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
  20. கோடைக்காலங்களில் பேரிடர் தணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நடைபெறும் பகுதிகள் குறித்த தகவல்களை சேகரித்தல்.
  21. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட விதிகளில் தெரிவித்துள்ளபடி இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும் மேலும் அவர்களுக்குத் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மேலும், இப்பணியாளர்களின் குழந்தைகளுக்கும் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

வெப்ப அலைகளால் அதிகம் பாதிப்படைபவர்கள்:

 

  • குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள்
  • கட்டுமான பணி / வெளிப்புற பணி / விவசாயப் பணி / மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள்.
  • காவலர்கள் / தனியார் பாதுகாவலர்கள்
  • அதிக வெப்பநிலை கொண்ட சூழலில் பணிபுரியும் தொழிற்சாலைப் பணியாளர்கள்
  • சாலையோர வியாபாரிகள் / விற்பனைப் பணியாளர்கள்
  • ரிக்சா ஓட்டுநர்கள் / ஆட்டோ ஓட்டுநர்கள் / பேருந்து ஓட்டுநர்கள் / சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்.

இணைப்பு

  1. https://internal.imd.gov.in/press_release/20230228_pr_2202.pdf
  2. https://ncdc.gov.in/WriteReadData/linkimages/NationActionplanonHeatRelatedIllnesses.pdf
  3. https://tnsdma.tn.gov.in/app/webroot/img/document/heatWaveAction2019.pdf
  4. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1917589

நன்றி!

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments