மரபணு மாற்றுக் கடுகு: உணவுத் தட்டுக்கு வரும் விஷம்

மரபணு மாற்றப்பட்ட கடுகை  திறந்தவெளியில் பயிரிடுவதற்கும் மற்றும் பரிசோதனை செய்வதற்குமான அனுமதியை வழங்குமாறு ஒன்றிய அரசின்  சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அத்துறையின் கீழ் இயங்கி வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee) 18.10.2022 அன்று பரிந்துரைத்துள்ளது. மனித நலனையும் சூழல் நலனையும் கருத்தில் கொள்ளாத ஒன்றிய அரசின் இம்முடிவை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்க்கிறது.

DMH-11(Dhara Mustard Hybrid-11) என்கிற மரபணு மாற்றம் செய்யப்பட்ட இக்கடுகை டெல்லி பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்று பயிர்களுக்கான மையம்(Centre for Genetic Manipulation of Crop Plants (CGMCP) உருவாக்கியுள்ளது.

மரபணு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் Bar, Barnese மற்றும் மற்றும் Barstar என்னும் மரபணுக்கள் கடுகின் மரபணுக்களோடு சேர்க்கப்பட்டு இந்த புதிய கடுகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரபணுக்கள் Bacillus amyloliquefaciens, Streptomyces hygroscopicus, ஆகிய பாக்டீரியாக்களில் இருந்து எடுக்கப்பட்டவை. Bacillus amyloliquefaciens என்கிற பாக்டீரியாவில் இருந்து எடுக்கப்படுகிற Barnese மற்றும் Barstar ஆகிய மரபணுக்கள் கடுகின் ஆண் தன்மையை நீக்கவும் பெண் தன்மையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இப்படிச் செய்வதற்கான காரணம் என்னவெனில் இயல்பாகவே கடுகு தன்பால் மகரந்தச்சேர்க்கையும் அயல் மகரந்தச் சேர்க்கையும் செய்யக்கூடியது. மரபணு மாற்றத்தின் மூலம் தன்பால் மகரந்தச்சேர்க்கையை கட்டுப்படுத்தினால், அயல் மகரந்தச்சேர்க்கை அதிகரிக்கும். அதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும் என்பதே இவர்களின் வாதம். Streptomyces hygroscopicus எனும் பாக்டீரியாவில் எடுக்கப்பட்ட மரபணுவை கடுகில் சேர்ப்பதால் பூச்சித் தாக்குதலுக்கு எதிரான சத்துக்களை அதிகரிக்கும் எனவும் அரசு கூறுகிறது.

2016ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் CGMCP இப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகிற்கான அனுமதி கோரி GEAC யிடம் அனுமதி கோரியது. 11.05.2017ல் GEACயும் சில நிபந்தனைகளுடன் திறந்தவெளியில் பயிரிட்டு சோதனை செய்வதற்கான அனுமதியை வழங்கியது. அப்போது எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக ஒன்றிய அரசு இவ்வனுமதியை நிறுத்தி வைத்தது.

21.03.2018ல் GEAC இக்கடுகு குறித்த கூடுதல் ஆய்வுகளை குறிப்பாக தேனீக்கள் உள்ளிட்ட உயிரினங்களின் மீது இக்கடுகால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு CGMCPயிடம் கூறியது. 25.07.2018ல் இக்கடுகினால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அவசியமில்லை எனத் தெரிவித்தது.

20.09.2018ல் இக்கடுகை களபரிசோதனை செய்வதற்கான அனுமதியை GEAC வழங்கியது. இந்த நிலையில்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகிற்கான அனுமதியை 18.10.2022 அன்று வழங்கியது.

டெல்லி பல்கலைக்கழகம் தங்களது மரபணு மாற்று கடுகின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளாக Bio Safety Research Level(BRL)-I(2010-2011, 2011-2012) மற்றும் BRL- II(2014-2015) எனும் ஆய்வுகளைக் குறிப்பிடுகிறது. GEACயின் அறிவுறுத்தலுக்குப் பின்பாக புதிய ஆய்வுகளை மேற்கொண்டதற்கான எவ்வித ஆவணங்களையும் தரவுகளையும் டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பிக்கவில்லை.

மாறாக, கடுகு குடும்பத்தைச் சார்ந்த Canola என்கிற பயிரை Bar, Barnese, Barstar மூலமாக மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட பயிருக்கான அனுமதியை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்கியுள்ளன. DMH-11உம் இந்த Canolaவை ஒத்தது என்பதால் இதற்கும் அனுமதி வழங்கலாம் என்பதற்கான ஆவணங்களையும் தரவுகளையும் CGMCP சமர்ப்பித்துள்ளது.

BT எனப்படும் bacillus thuringiensis கொண்டு மரபணு மாற்றம் செய்யப்பட்டு பயிர்களால் தேனிக்களில் ஏற்படும் தாக்கம் குறித்தான ஆய்வறிக்கைகளையும் ஆவணங்களையும் CGMCP சமர்ப்பித்துள்ளது. வேறு பாக்டீரியாவைக் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட வேறு பயிர்களின் மீது நடத்தப்பட்ட வேறு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை DMH-11ற்காக ஆதாரங்களாக சமர்ப்பிப்பது மக்களை ஏமாற்றும் செயல். இந்த ஆதாரங்களை ஏற்று GEAC அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்திற்குரியது. அதேபோல இக்கடுகால் பிற பயிர்களில் ஏற்படும் தாக்கம் குறித்தான ஆய்வுகளும்  மேற்கொள்ளப்படவில்லை.

டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஆய்வுகளை மதிப்பீடு செய்வதற்கு 25.08.2022ல் ஒரு நிபுணர் குழுவை GEAC அமைத்தது. அக்குழுவானது உலகளவில் பெறப்பட்ட ஆய்வுகள், பல அமைச்சகங்களின் பரிந்துரையின் அடிப்படையிலும் மேற்கூறிய மூன்று மரபணுக்களும் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தேனீக்கள் மற்றும் பிற வண்டுகள் மீது பாதிப்புகளை ஏற்படுத்தாது என கருத்து தெரிவித்தது.

போதுமான ஆய்வுகளும், தரவுகளும் இல்லாமல் டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த அறிக்கைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாதிப்புகள் இல்லை என்ற முடிவுக்கு நிபுணர் குழு வந்திருக்கக் கூடாது. அதேவேளையில் இந்த நிபுணர் குழுவானது இந்திய தட்பவெப்ப சூழலில் இந்த DMH-11 கடுகு எந்த விதமான தாக்கத்தை உண்டாக்கும், தேனீக்கள் போன்ற உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்பதை கண்காணிக்க அறிவுறுத்தியிருந்தது.

இப்படி நிபுணர் குழுவே கூடுதல் ஆய்வுகள் தேவை என கருதியிருகும் நிலையில் அவசர அவசரமாக இக்கடுகிற்கான அனுமதியை GEAC வழங்கியிருப்பது இந்திய மக்கள் மீதும் நம் நாட்டின் சூழல் மீதும் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லாததை வெளிக்காட்டுகிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட DMH-11 கடுகால் பிற பயிர் வகைகளுக்கு எத்தைய பாதிப்புகள் உண்டாகும்,  பூர்விக கடுகு பயிர்கள் மீதான தாக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை திறந்த வெளியில் பயிர் செய்யும்போது பூர்விக செடிகளின் மரபணுக்கள் மாற்றம் அடைவதற்கான சான்றுகள் உலகெங்கும் உள்ளன.

Gene Transfer போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் ஒருவேளை பிற தன்பால் மகரந்தச்சேர்க்கை செய்யும் பயிர்களை இக்கடுகு பாதிக்குமா என்பது குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது நம் நாட்டின் மரபின வளத்தை பெரிதும் பாதிக்கும். அதேபோல இந்த DMH-11 கடுகானது தற்போது புழக்கத்தில் உள்ள கடுகை விட அதிகளவு விளைச்சலைக் கூட்டியதற்கான ஆய்வுகளும் இல்லை.

இந்தக் கடுகிற்கான மருத்துவப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் கடுகு மனித ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் என்பது தொடர்பான ஆய்வுகளும் தரவுகளும் இல்லாமல் இதற்கு வழங்கப்படும் அனுமதி என்பது இந்திய மக்களை சோதனை எலிகளாக்கும் முயற்சியாகும்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அதை உருவாக்கிய நிறுவனங்கள் காப்புரிமை கோர முடியும். மரபணு மாற்றப்பட்ட DMH-11 கடுகிற்கு காப்புரிமை பெற்ற நிறுவனத்தின் அனுமதியோடுதான் அதனை விற்பனையோ அல்லது மறு உற்பத்தியோ செய்ய முடியும். இது விவசாயிகளின் விதை உரிமையை பறிக்கும் செயலாகும். மக்களின் உணவு இறையாண்மையின் மீதான தாக்குதலும் கூட.

இந்தக் கடுகிற்கு அனுமதி வழங்கப்பட்டால் நம் உணவுச் சங்கிலியில் விரைவில் இது இடம்பெறலாம். FSSAI அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த மரபணு மாற்றப்பட்ட( ஆண் தன்மை நீக்கப்பட்ட) கடுகு நம் உணவுத் தட்டிலும் இடம் பெறும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் நாட்டில் கடுகு எண்ணெய் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது கிடையாது. வட மாநிலங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. எனவே இது தமிழ் நாட்டிற்கு முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும்.

மறைந்த முன்னாள் தமிழ் நாடு முதலமைச்சர்களான கலைஞர் கருணாநிதி அவர்களும், செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களும் மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக எதிர்த்துள்ளனர். அதே நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசின் ஆபத்தான இம்முயற்சியை எதிர்க்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

 

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
S Janakarajan
S Janakarajan
1 year ago

The Tamil Nadu CM should raise his voice and stop immediately the efforts to introduce the GM mustard.

S Janakarajan
S Janakarajan
1 year ago

GM mustard is neither Swadeshi nor safe. It is neither good for health nor for environment. It is herbicide tolerant mustard and so there will be greater use of herbicides which have been proven to be carcinogenic.
Indian Express