‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ – நெய்வேலியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய மாசுபாடு ஆய்வறிக்கை

செய்திக் குறிப்பு:

என்.எல்.சி. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்களும், இரசாயனங்களும் நீரிலும் நிலத்திலும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. என்.எல்.சியின் ஒன்றாவது சுரங்கத்திற்கு அருகில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் மட்டும் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி மற்றும் ஐ.டி.பி.சி.எல் அனல்மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மண் மற்றும் குடிநீர், இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் குடிநீருக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகள் மற்றும் பிற தொடர்புடைய தரங்களை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது. மிகவும் ஆபத்தான இம்மாசுபாட்டை உடனடியாக நிறுத்த இந்த  ஆய்வு பரிந்துரைக்கிறது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது மந்தன் அத்யாயன் கேந்திரா எனும் அமைப்புடன் இணைந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. (M/s Neyveli Lignite Corporation India Ltd) நிர்வாகம் மற்றும் ஐ.டி.பி.சி.ல்  (M/s IL&FS Tamil Nadu Power Company Ltd)  நிறுவனங்களின் அனல்மின்  நிலையங்கள் மற்றும் சுரங்கங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடு குறித்த ஆய்வை மேற்கொண்டது.

“ஆங்கிலத்தில் POWERing Pollution என்றும் தமிழில் ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கைக்கான கள ஆய்வுகள் 2022ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஏப்ரல் வரை நடைபெற்றது. இந்த ஆய்வறிக்கை நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டமாக இப்பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கெனவே வெளியான அதிகாரப்பூர்வ அமைப்புகளின் ஆய்வறிக்கைகள், ஊடக மற்றும் பத்திரிகை செய்திகள் ஆராயப்பட்டன. ஆதண்டார்கொல்லை, அகிலாண்டகங்காபுரம், கல்லுக்குழி, தென்குத்து, வானதிராயபுரம், வடக்குவெள்ளூர், தொப்பலிகுப்பம், கரிக்குப்பம், புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் 121 வீடுகளில் நேரடியாக சென்று நேர்காணல் அடிப்படையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கேள்விகள் எழுப்பி அதற்கான பதில்கள் பெற்றும் விவசாய அமைப்புகள் போன்ற குழுக்களிடம் மையப்படுத்தப்பட்ட குழு விவாதங்கள் நடத்தியும் தகவல்கள் பெறப்பட்டது.

அடுத்தது இரண்டு கட்டங்களாக 37 இடங்களில் நீர் மற்றும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட Chennai Mettex Lab Pvt Ltd மற்றும் Tamilnadu Test House Pvt Ltd  எனும் இரண்டு பரிசோதனை நிறுவனங்களில் அவை சோதனை செய்யப்பட்டன.

நீர், மண் மாதிரிகளின் ஆய்வு முடிவுகளைப் பொருத்தவரையில் என்.எல்.சி.யைச் சுற்றி ஆய்வு செய்யப்பட்ட 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்திருந்தது. 11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மாசடைந்திருந்தது. குறிப்பாக என்.எல்.சி.யின் ஒன்றாவது சுரங்கத்திற்கு அருகிலுள்ள வடக்குவெள்ளூர் கிராமத்தின் தொல்காப்பியர் நகரில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகம் பாதரசம் கலந்திருந்தது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுப்படி ”பாதரசம் மனித குலத்திற்குத் தெரிந்த மிகவும் நச்சான  பொருள் மற்றும் அதை உட்கொள்வது ஆபத்தானது மற்றும் தோல் வழியாக உறிஞ்சப்பட்டால் தீங்கு விளைவிக்கக்கூடியது. இது நரம்பு மண்டலம், செரிமான மற்றும் சுவாச அமைப்புகள் மற்றும் சிறுநீரகங்களில் தீங்கு உண்டாகும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்”.

என்.எல்.சியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களுக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் வசிக்கும் 101 வீடுகளில் நடத்தப்பட்ட நேர்காணல் முறையிலான ஆய்வில் 89 வீடுகளில் வீட்டில் யாரோ ஒருவருக்கு சிறுநீரகம், தோல் அல்லது மூச்சுத் திணறல் சார்ந்த நோய் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 66 வீடுகளில் இருப்போர் குடிநீரின் தரம் சீர்கெட்டுள்ளதாகவும், 59 வீடுகளில் வேளாண் பாசனத்திற்கு வரும் தண்ணீரின் தரம் மோசடைந்திருப்பதாகவும் இதில் 53 பேர் இதற்குக் காரணம் என்.எல்.சியின் கழிவுகள்தான் என்றும் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான மக்கள் இந்த நோய்களுக்குக் காரணமாக என்.எல்.சி.யின் கழிவுகள் குடிநீர் ஆதாரங்களில் கலப்பது, எரிக்கப்பட்ட பழுப்பு நிலக்கரி சாம்பல் நீர்நிலைகளில் கலப்பது, அனல்மின் நிலையங்களின் புகைபோக்கிகளிலிருந்து வெளியாகும் நச்சுப்புகை, சுரங்கங்களில் இருந்து வெளியாகும் கரித் துகள்கள் உள்ளிட்டவற்றைக் கூறுகின்றனர். என்.எல்.சி.யின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத்திலிருந்து நேரடியாக கழிவுகள் வெளியிடப்படும் 5 இடங்களில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் கடுமையாக மாசடைந்திருந்தன. இந்த மாசின் அளவானது சுற்றுசூழல் பாதுகாப்புச் சட்ட வரம்புகளை மீறுவதாக உள்ளது. இதில் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பாதரசம், செலினியம் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. இந்த ரசாயனங்களும், கன உலோகங்களும் தொடர்ச்சியாக மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளில் கலப்பதாலும், காற்றில் கலப்பதாலும் மக்களின் ஆரோக்கியமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதை ஆய்வுக் குழுவினர் நேரடியாகவும் மாதிரிகள் சோதனையிட்டதன் மூலமும் கண்டறிந்தனர்.

என்.எல்.சி.யின் கழிவுகள் வெளியேற்றத்தால் பாதிப்படைந்த விளைநிலங்களின் மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் நிக்கல், ஜிங்க், காப்பர் உள்ளிட்ட கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் ஐ.டி.பி.சி.எல் நடத்தி வரும் அனல்மின் நிலையத்திற்கு அருகில்  இரண்டு கிராமங்களில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நீர், மண் மாதிரிகளில் 3 இடங்கள் தீவிரமான மாசடைந்திருந்தன. ஒரு இடம் குறிப்பிடத் தகுந்த அளவில் மாசடைந்திருந்தது. 2 இடங்கள் ஓரளவு மாசடைந்திருந்தன. மண் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 30 மடங்கு அதிகமாக போரான் இருந்தது. இந்த போரான் அருகிலுள்ள அனல்மின் நிலையத்திலிருந்து வந்திருக்கவே வாய்ப்புகள் அதிகமுள்ளன. இது அம்மண்ணை விவசாயத்திற்குப் பயன்படாததாக மாற்றியுள்ளது.

மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் பலரும் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறியது தெரிய வந்தது. நீர் மாதிரியில் புளூரைடு, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சிலிகான், கடினத்தன்மை, காரத்தன்மை, TDS, குளோரைடு போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான ஸ்ரீபத் தர்மாதிகாரி தெரிவிக்கையில் “எங்கள் ஆய்வின்போது, அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் இருண்ட நிறம் மற்றும் எண்ணெய் மற்றும் கிரீஸ், சாம்பல் குவிப்புகளாக பொது நிலங்களில் காணப்படும் கட்டுப்பாடற்ற மாசுபாட்டின் பல நிகழ்வுகளைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ஆய்வக சோதனைகள் இப்பகுதியின் நீர், மண் ஆகியவை கன உலோகங்கள் மற்றும் பிற மாசுபடுத்திகளால் கடுமையாக மாசடைந்ததைக் காட்டுகிறது. மிகவும் கவலைக்குரியது என்னவென்றால், இப்பகுதியில் உள்ள மக்களால் கூறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தீவிரமான சுகாதார பிரச்சினைகள் அனைத்தும், கண்ணுக்குத் தெரியும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மாசுபாட்டின் பரவலுடன் ஒத்துப்போகிறது.

 இந்த விதிமீறல்களை ஏற்கனவே ஒரு வழக்கில் பரிசீலித்த செய்த தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது, நெய்வேலி திட்ட இடத்தைச் சுற்றியுள்ள மக்களின் உடல்நலம் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று 2022 மே மாதம் உத்தரவிட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவரை மாநில அரசால் எந்த சுகாதார ஆய்வும் நடத்தப்படவில்லை, மேலும் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு கூறுகையில் “

நெய்வேலியில் 1320 மெகாவாட் திறன் கொண்ட(2*660) இரண்டு புதிய மின் உற்பத்தி நிலையங்களையும், ஆண்டுக்கு 11.5 மில்லியன் டன் உற்பத்தித்திறன் கொண்ட புதிய பழுப்பு நிலக்கரி சுரங்கத்தையும் அமைக்க என்.எல்.சி திட்டமிட்டுள்ளது. 4841.99 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படும் இந்த புதிய சுரங்கத்தால் 30 க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 54,000 மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

நெய்வேலியில் தற்போதுள்ள 3640 மெகாவாட் அனல் மின் நிலையங்கள் மற்றும் மூன்று பெரிய பழுப்பு நிலக்கரி சுரங்கங்களால் இப்பகுதி மக்களின் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி.யை மேலும் விரிவுபடுத்தினால் நெய்வேலி பகுதி மக்கள் வசிக்க முடியாததாக மாறும்” என்றார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் கூறுகையில் “ புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காலநிலை மாற்றத்தின் முதன்மை உந்துசக்தியாக இருக்கிறது என்பதை அறிவியல் சான்றுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன, இது உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை கடுமையாக சீர்குலைக்கிறது. தற்போது, நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களால் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடலூர் மாவட்டம் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு என்ற இரட்டை அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலுக்குத் தீர்வு காண, நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு அருகாமையில் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு மறுசீரமைப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நெய்வேலியில் சுரங்க விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிட்டார்.

கீழ்காணும் பரிந்துரைகளை நாங்கள் அரசுக்கு முன்வைக்கிறோம்.

நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விரிவான சுகாதார ஆய்வுகளை அரசு நடத்த வேண்டும். உடனடியாக கடுமையாக பாதிப்படைந்த பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அனல்மின் நிலையங்கள், சுரங்கங்கள், விரிவாக்கங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துதலை நிறுத்த வேண்டும். ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களை படிப்படியாக நிறுத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

 

முழு அறிக்கைக்கு

POWERing POLLUTION

தொடர்புக்கு

 

பிரபாகரன் வீர அரசு,

பூவுலகின் நண்பர்கள்

+91 73958 91230.

ஸ்ரீபத் தர்மாதிகாரி,

மந்தன் அத்யாயன் கேந்திரா

9552526472.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments