காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக

Grass Hills
Image Credit: S. Thangaraj Panner Selvam

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இந்தியாவில் 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய  ஆவணமொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள முடிவுகள் மீதான கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் [email protected] என்கிற அஞ்சல் முகவரிக்கு 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடு என்கிற வரையறைக்குள் வருகின்ற பகுதிகள் அனைத்திலும் காடு சாராத திட்டங்கள் அதாவது நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தேவைக்கு அதிகமாகவோ அல்லது தேவையில்லாமல் காடழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் வனப் பாதுகாப்புச் சட்டம். இச்சட்டத்தில் ஒன்றிய அரசு சில திருத்தங்களை மேற்கொள்ள முயன்று வருகிறது.  சட்டத் திருத்தங்கள் அடங்கிய ஒரு மசோதாவை தயாரிப்பதற்கு முன்னர் ஒன்றிய அரசு இச்சட்டத்தில் மேற்கொள்ள நினைக்கும் 14 திருத்தங்கள்/சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு அதன்மீது கருத்துகளை கோரியுள்ளது.

Public-Consultation-Paper-2.10.21

காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த திருத்த ஆவணத்தில் இடம் பெற்றிருந்தாலும் கூட அனைத்து தரப்பு மக்களும் சட்டமியற்றுதலில் பங்கெடுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமை கூட இந்த கருத்துக் கேட்பு அறிவிப்பில் இல்லை என்பதே இதை எதிர்ப்பதற்கான முதற்காரணமாக அமைந்துள்ளது.

வனப் பாதுகாப்புச் சட்டம் 1980ல் திருத்தம் கொண்டு வருவது குறிப்பாக காட்டிற்குள் மற்றும் காட்டுப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவு மக்களை பெரிதும் பாதிக்கக்கூடியதும் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும். .

அப்படியானதொரு முக்கியமான சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகையில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திருத்தங்களை அனைத்து மொழி பேசும் மக்களும் அவர்களது மொழியிலேயே அறிந்து கொள்வதற்கு உரிமை கொண்டவர்களாவார்கள்.. ஆனால், இந்த சட்டத்திருத்தம் குறித்த ஆவணத்தை ஆங்கில மொழியில் மட்டுமே ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. இதனை அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் 12 மொழிகளில் வெளியிடப்பட்டது. அதிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது. வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே வெளியிட்ட போது பல மாநில உயர் நீதிமன்றங்களில் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது 22 மொழிகளிலும் DRAFTEIA2020 வெளியிடப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதே நடைமுறை வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த ஆவணத்திற்கும் தொடர வேண்டும்.

இந்த அறிவிப்பில் அடுத்து இருக்கும் முக்கியமான சிக்கல் என்பது சட்டத் திருத்தம் மீதான கருத்து தெரிவிக்க 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம்  தொடக்கத்தில் வழங்கப்பட்டிருந்தது. அதற்கும் எதிர்ப்பு கிளம்புஅதால் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதிலும் இந்த அறிவிப்பானது பொது விடுமுறை நாளான அக்டோபர் 2 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். இந்தியா முழுவதுமுள்ள காடு மற்றும் காடு சார்ந்து வாழும் மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டத் திருத்தம் குறித்த ஆவணத்தின் மீது கருத்து தெரிவிக்க 2 மாதங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும். எனவே இந்த ஆவணத்தை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழி பெயர்த்து கருத்து தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்.

இப்போது இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்றிய அரசு வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நினைக்கும் பல்வேறு விஷயங்களில் நம்மை மிகவும் கவலைக்குள் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் தேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு (Strategic and security projects of national importance) வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிப்பது குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருப்பது தான். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அறியப்படும் அண்டை நாடுகளின் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும்  மாநிலங்களில் உள்ள காடுகளில் மட்டும் எதிரிகள் ஊடுருவலைத் தடுக்கவும் கண்காணிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகளை உண்டாக்கினால் அத்தகைய திட்டங்களுக்கு இப்படியான விலக்களிப்பது குறித்து விவாதிக்கலாம். ஆனால், ஒன்றிய அரசானது வணிக லாபத்திற்காக சாகர்மாலா திட்டத்தின்கீழ் பல்வேறு துறைமுகங்கள் அமைப்பது பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் நெடுஞ்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களைக் கூட Strategic and security projects of national importance என்கிற வரையறைக்குள் கொண்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்துத்தான் மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும்கூட ஒன்றிய அரசால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இப்படியான திட்டங்களை தேச முக்கியத்துவம் என்கிற பெயரில் செயல்படுத்துவது காடுகள் பெரியளவில் அழிக்கப்படுவதற்கு காரணமாகிவிடும்.

இந்தியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளைத் தவிர தனியாருக்குச் சொந்தமான காடுகளும் உள்ளன. தமிழ் நாட்டில் இதுபோன்ற காடுகள் TamilNadu Preservation of Private Forest Act 1949 என்பதன் கீழ் மேலாண்மை செய்யப்படுகிறது. இத்தகைய பகுதிகளில் காடுகள் பாதுகாப்பு சாராத திட்டங்களை செயல்படுத்த முடியாது. இந்த வனப்பகுதிகளில் பயிர் செய்வதற்கும் வேறு பல கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக இந்த ஆவணம் வாயிலாக தெரிய வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள காப்புக் காடுகள் மற்றும் புலிகள், யானைகள் போன்ற சரணாலயங்களில் பல ஹெக்டேர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான காடுகள் உள்ளன. இவற்றை வனப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கினால் வணிக நோக்கில் அந்த இடங்களில் பணப்பயிர்கள் விதைக்கப்பட்டு மரங்கள் வெட்டப்படும். ஒரு காப்புக்காட்டிற்கு நடுவிலோ அதை ஒட்டியோ உள்ள தனியார் காட்டில் இப்படி மரங்கள் வெட்டப்பட்டால் அங்கு பெரியளவில் மண் அரிப்பு ஏற்படும். மழைக்காலங்களில் இந்த மண் அரிப்பினால் காப்புக் காடுகளின் சூழல்தன்மை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 அமலுக்கு வருவதற்கு முன்பாக நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே போன்ற அரசுத் துறைகளால் கையகப்படுத்தப்பட்ட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இச்சட்டத்தின் விதிகளிலிருந்து விலக்களிக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் புதிய சாலைகளும், ரயில்வே பாதைகளும் காப்புக் காடுகளில் அமைக்கப்பட்டால் பெரிய அளவிலான காடுகள் சிறு சிறு துண்டுகளாக மாறிவிடும். காட்டுயிர்கள் வாழ்விடங்கள் இதனால் சுருக்கப்படும் மேலும் மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் சில வனப்பகுதி நிலங்கள் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை ஆகிய இரண்டு துறைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே 12.12.1996 க்குப் இப்படியான நிலங்களை வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையிலேயே கணக்கில் எடுத்துக் கொண்டு அங்கு வேளாண் காடுகள் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது. இதன் மூலமும் எந்த வரையறையுமில்லாமல் வணிக நோக்கில் அந்த நிலங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டு வெட்டப்படும். இதுவும் தனியாருக்கு பலனளிக்கும் வகையிலேயே கொண்டு வரப்பட்ட திருத்தமாகத் தெரிகிறது.

அடுத்ததாக Extended Reach Drilling எனும் தொழில்நுட்பத்திற்கான அனுமதி குறித்து இந்த ஆவணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை காடு என்பதற்கான சட்ட வரையறைக்குள் வராத ஒரு இடத்திலிருந்து துளையிட்டுச் சென்று அவ்வளங்களை எடுப்பதுதான் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை. இந்த தொழில்நுட்பத்தால் காட்டின் இயற்கையான இயங்கியல் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்படும். மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டிவிட்டு மேற்பரப்பில் மரங்களை நட்டு வைப்பதை நாம் பார்க்கிறோம். அதை நம்மால் காடு என ஒப்புக்கொள்ள முடியுமா? அதைப்போலத்தான் Extended Reach Drilling என்கிற தொழில்நுட்பத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும். காடு என்பது சில மரங்களும், அது ஊன்றியிருக்கும் மண்பரப்பும், அதற்கடியிலிருக்கும் வேரும் மட்டும் கிடையாது. பல ஆண்டு காலமாக நிலத்திற்கடியில் பல அடி ஆழத்தில் சேர்ந்த வளங்களை வெளியிலிருந்து உறிஞ்சு எடுத்து விட்டால் மேற்பரப்பு காட்டில் எதுவும் மிஞ்சாது.

தனியார் காடுகளாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 250 சதுர மீட்டர் அளவில் கட்டிடங்களை எழுப்பிக்கொள்ள நில உரிமையாளர்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் அனுமதி வழங்குவது குறித்து இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்பது வணிக நோக்கில் தோட்டப்பயிர் உற்பத்தியை ஊக்குவிப்பதைத் தாண்டி வேறெதுவுமில்லை. இது கூடுதலாக காட்டின் நிலைத்தன்மை சீர்குலைய காரணமாகிவிடும்.

அடுத்ததாக வன உயிரியல் பூங்காக்கள், வன உலாக்கள் போன்றவற்றை காடு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களாகக் கருத ஒன்றிய அரசு முடிவு செய்கிறது. இதுவும் தனியார் நிறுவனங்களின் வணிக வெறிக்காக காடுகளை இரையாக்கும் நடவடிக்கைதான். இந்தியாவின் முதன்மை பணக்காரரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 முதல் சில தனியார் வன உயிரியல் பூங்காக்களை அமைக்கத் தொடங்கியுள்ளதும், 2020ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது நாட்டிலுள்ள 160 வன உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தனியாருடன் சேர்ந்து ஒப்பந்தமிட முடிவு செய்ததையும் நாம் இங்கு தொடர்புபடுத்த வேண்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது 2021 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளை கால நிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய அத்தனை மாற்றங்களையும் செய்வதற்கான பத்தாண்டாக அறிவித்துள்ளது. மனிதப் பேராசை நடவடிக்கைகளால் காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட்டு வருகிறது. என்ன விலை கொடுத்தாவது அதைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை விட்டு காடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது.

இந்த ஆவணத்தின் மீது உங்கள் குரலையும் பதிவு செய்ய கீழ்க்கண்ட இணைப்பில் சென்று மின்னஞ்சல் வாயிலாக கருத்துகளை பதிவு செய்யலாம்.

https://act.jhatkaa.org/campaigns/forest-conservation-act-email?utm_source=whatsapp_JSC&utm_medium=social&utm_campaign=FCAEmail

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Keerthivasan
Keerthivasan
2 years ago

ஆர்வமூட்டும் பதிவு. பல தகவல்கள் புதிதாய் தெரிந்துகொண்டேன்.