கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவை ரஷ்யாவிற்கு அனுப்புவது குறித்து எந்த பரிசீலனையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 3 மற்றும் 4ம் உலைகளின் கட்டுமானத்தில் பல்வேறு கட்டிடங்களில் ஒரு கட்டிடமாக அணுக்கழிவு சேமிப்பு மையத்தையும்(AWAY FROM REACTOR) சேர்த்து உரிய அனுமதியின்றி தேசிய அணுமின் சக்திக் கழகம் கட்டி வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 18-2-2022 அன்று எழுதிய கடிதத்தில் தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்களைக் கருத்தில்கொண்டு, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும், இந்நடவடிக்கை அலகுகள் 1 மற்றும் 2-க்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த நான்கு அலகுகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இது சாத்தியப்படாவிடில், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் முக்கியத்துவம் அல்லாத பகுதியில், நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும், தமிழ்நாட்டிலுள்ள எட்டு கோடி மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தான் விடுப்பதாகவும் கோரியிருந்தார். ஆனால், இவ்விவகாரத்தில் தொடர்ச்சியாக தமிழர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வரும் ஒன்றிய அரசு அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே நிரந்தரமாக வைக்க திட்டமிட்டு வருகிறது.
மேலும் இதே விவகராம் தொடர்பாக 07.10.2021 அன்று திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார், அக்கடிதத்தில் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவை ரஷ்ய நாட்டுக்கே அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூடங்குளம் 1,2 மற்றும் 3,4 உலைகளில் வெளியாகும் கழிவுகளை கூடங்குளத்திலேயே Away from Reactor அமைப்பு ஏற்படுத்தி சேமித்து வைக்க AERB வழங்கிய உத்தரவை திரும்பப் பெறுமாறும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 27.07.2022 அன்று மக்களவையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், கூடங்குளம் அணுவுலையில் இருந்து வெளியேறும் கழிவை ரஷ்ய நாட்டுக்கே அனுப்புவது குறித்து அரசு எந்த பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது தெரிய வருகிறது. கூடங்குளம், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் ஆகிய விவகாரங்களில் பொதுமக்கள் நலனுக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கும் எதிராகவே ஒன்றிய அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது. கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் வரை முதல் இரண்டு உலைகளில் மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்குமாறும், 3 மற்றும் 4ம் உலைகளின் கட்டுமானத்திற்கான மாசு கட்டுப்பாடு வாரிய இசைவாணையை புதுப்பித்துத் தரக் கூடாது என பூவுலகின் நண்பர்கள் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
AU1637
பல்லாயிரம் உயிருக்கு உலை வைக்கும் அணுக்கழிவுகளை எப்படி இரசியா எடுத்துக்கொள்ளும்? ஒன்றை நிறுவுவதற்காக அரசியல்வாதிகள் எவ்வளவு பொய் வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பது நிறுபணமாகியிருக்கிறது.