வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை

இந்திய வானிலை ஆய்வு மையம், மார்ச் 1ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி,  நடப்பாண்டின் மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது, பணியிடங்களில் தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவது, அவசரகால முதலுதவி வசதிகள் அளிப்பது, சுகாதாரத் துறையுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு  மருத்துவப் பரிசோதனையை உறுதி செய்வது, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். ஆலைகள் மற்றும் சுரங்கங்கள் தவிர்த்து கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

இது தேர்தல் காலம் என்பதால் அரசியல் கட்சிகள் அதிகளவில் பொதுக்கூட்டங்களை நடத்தக்கூடும். வெப்ப அலை வீசும் நாட்களில் பகல் நேரம் பொதுக்கூட்டங்கள் நத்துவது பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தாக அமையக்கூடும். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் 16ஆம் தேதி நவிமும்பையின் கார்கரில் நடந்த அரசு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்க வந்தவர்கள் மேற்கூரை இல்லாமல் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டதில் வெயிலின் பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர். வெப்ப அலை காலங்களில் திறந்தவெளியில் கூட்டம் கூட்டுவதை தவிர்த்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். 2023 ஜூன் மாதம் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 96 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் பாலியா எனும் ஒரு மாவட்டத்தில் மட்டும் 54பேர் உயிரிழந்தனர்.

2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெப்ப அலை பாதிப்பை எதிர்கொள்வதற்கான திட்டத்தை வெளியிட்டிருந்தது. நடப்பாண்டு எல்-நினோ ஆண்டாகவும் இருப்பதால், கணிக்கப்பட்டதைவிட அதிகமான வெப்பம் நிலவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் பொருட்டு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக பல மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலை இயல்பைவிட 2°C முதல் 4°C வரை அதிகமாகப் பதிவாகி வருகிறது.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் எனவும் மண்டல வானிலை ஆய்வுமையம் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது. கோடை வெப்பத்தின் தீவிரத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அண்மையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை, மேற்கொள்வது அவசியமாகிறது. எனவே அரசுக்கும், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகளுக்கும் கீழ்காணும் கோரிக்கைகளை பூவுலகின் நண்பர்கள் சார்பில் விடுக்கிறோம்.

 1. தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது, அரசுத் துறைகள் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கியுள்ளது. இந்த அறிக்கையை உடனடியாக பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, கருத்துகளைப் பெற்று, பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
 2. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டமும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகமும் கடைகள் மற்றும் வேலை செய்யும் இடங்கள் எப்படி பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளன. அதன்படி தொழில் செய்யுமிடங்கள் வெப்பத்தின் தாக்கத்திற்கு பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 3. தற்காலிகத் தொழில் செய்வோர் (Gig workers) வீடற்றோர் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆகியோரையும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
 4. மாவட்ட அளவில் வெப்பத் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறுப்பு அதிகாரிகளை (Heat Mitigation Officer) நியமிக்க வேண்டும்.
 5. வெப்பத்தின் அளவைக் கருத்தில்கொண்டு வேலை நேரங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என தனியார், அரசு நிறுவனங்களை அரசு வலியுறுத்த வேண்டும்.
 6. அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதோடு Integrated Health Information Platform -ல் அவற்றைப் பதிவு செய்ய அனைத்து மருத்துவமனைகளுக்கும் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 7. கோடை காலத்தை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து நிர்வாகங்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
 8. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெப்பம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
 9. பேரிடர் ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்படுவதுபோல வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த ஒத்திகைப் பயிற்சிகளை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வழங்கப்பட வேண்டும்.
 10. அதிகரிக்கும் வெப்பம் கடுமையான வற்ட்சியை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரங்களின் நீர் இருப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
 11. பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 12. வெப்ப அலை அபாய எச்சரிக்கை காலங்களில் மக்களுக்குத் தேவையான அளவு நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய ஏதுவாக பேருந்து பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டறிய வேண்டும்.
 13. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் போன்ற இடங்களில் மின்சார வசதி தடையின்றி வழங்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தல் வேண்டும்.
 14. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் போன்ற இடங்களில் குளிர்சாதன வசதிகள் அல்லது உறைப் பனிக்கட்டி, உப்பு-சர்க்கரை கரைசல் ஆகியவை இருப்பு வைத்தல் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றில் தேவையான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 15. வெப்ப அலைத் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
 16. வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும்.
 17. பேருந்துப் பணிமனை / நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், பயணியர் தங்குமிடங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைத்தல்.
 18. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களை நீண்ட நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும்.
 19. பணியாளர் சட்டங்களின் படி பணிச்சூழலில் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் குளியலறை வசதி போன்றவற்றை பணியாளர்களுக்கு அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 20. அவசர நிலையை எதிர்கொள்ளும் விதமாக எந்நேரமும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தயாராக இருத்தல் வேண்டும்.
 21. திறந்த வெளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 22. போக்குவரத்துக் காவலர்களுக்கு தேவையான அளவு நிழல் தரக்கூடிய தங்குமிடங்களை அமைத்துத் தர வேண்டும்.
 23. அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் சூரிய ஒளியில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
 24. கோடைக்காலங்களில் பேரிடர் தணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நடைபெறும் பகுதிகள் குறித்த தகவல்களை சேகரித்தல்.
 25. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட விதிகளில் தெரிவித்துள்ளபடி இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும் மேலும் அவர்களுக்குத் தேவையான அளவு தங்குமிடம் பாதுகாப்பான குடிநீர் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மேலும், இப்பணியாளர்களின் குழந்தைகளுக்கும் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
 26. காடுகளில் தீ கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
 27. காடுகளில் உணவு மற்றும் நீருக்கான பற்றாக்குறை ஏற்படும் என்பதால் யானை உள்ளிட்ட காட்டுயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வரக்கூடும். இதனால் மனிதர்-காட்டுயிர் மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும். இதைத் தடுப்பதற்கு காடுகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்தல், காட்டுயிர் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு தொடர் எச்சரிக்கைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ல வேண்டும்.
 28. இந்திய வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை உயர்வை Wet-Bulb Temperature அடிப்படையில் கணக்கிட்டு மாவட்ட அளவிலான முன்னெச்சரிக்கைகளை வழங்க வேண்டும்.
 29. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகள் காலை 11 முதல் மதியம் 4 மணி வரைக்கும் திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்தக் கூடாது.
 30. உள்ளரங்கக் கூட்டம் நடத்தும் கட்சிகள் திறந்தவெளி வாகனங்களில் பொதுமக்களை அழைத்துச் செல்லக்கூடாது.
 31. தேர்தல் ஆணையங்கள் இதுகுறித்து உரிய உத்தரவுகளை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments