அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதா? பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

இந்தியப் பிரதமர் மோடி அண்மையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்களில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை மாளிகை ஒரு Fact Sheetஐ வெளியிட்டுள்ளது. அதில் ‘அடுத்த தலைமுறை பாதுகாப்பு கூட்டாண்மை’ எனும் தலைப்பின் கீழ் கீழ்கண்டவாறு கூறப்பட்டிருந்தது:

”அமெரிக்க கடற்படை காட்டுப்பள்ளியில் (சென்னை) உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ(L&T) கப்பல் கட்டும் தளத்துடன் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தை (Master Ship Repair Agreement (MSRA)) முடித்துள்ளது மற்றும் மசாகான் டாக் லிமிடெட் (மும்பை) மற்றும் கோவா கப்பல் கட்டும் தளம் (கோவா) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறது.  இந்த ஒப்பந்தங்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களில் சேவை மற்றும் பழுதுபார்ப்புக்கு இடைப்பட்ட அமெரிக்க கடற்படை கப்பல்களை அனுமதிக்கும், இது பல அரங்குகளிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு குறைந்த மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நிலையான செயல்பாடுகளை எளிதாக்குகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

L&T நிறுவனத்துடன் அமெரிக்க கடற்படை மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம், 2022ஆம் ஆண்டே அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சார்லஸ் ட்ரூ எனும் கப்பல் காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் தளத்திற்கு பழுது மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக வந்து சென்றது.

காட்டுப்பள்ளியைப் பொறுத்தமட்டில் அங்குள்ள துறைமுகத்தை லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட், எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் வாயிலாக அதானியின் துறைமுக நிறுவனம் 2018ஆம் ஆண்டே விலைக்கு வாங்கியது. இத்துறைமுகத்தை 53 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக ஆண்டிற்கு 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவிற்கு 6110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

காட்டுப்பள்ளி துறைகம் மற்றும் L&Tயின் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றால் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சூழல் மாசு மற்றும் கடலரிப்பால் அப்பகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் அதானியின் துறைமுக விரிவாக்கத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் L&T நிறுவனத்துடன் அமெரிக்கா கப்பல்படை மேற்கூறிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த செயலை, அமெரிக்க, இந்தியா, ஆஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் நாடுகளிடையான QUAD என்னும் ராணுவக் கூட்டமைப்பின் ஒருபகுதியாகவே பார்க்க வேண்டும். குறிப்பாக இலங்கையில் சீனா கப்பல்தளம் அமைத்துள்ள நிலையில், சென்னையில் அமெரிக்க கப்பல்தளம் என்பது தெற்கு ஆசியப் பகுதியில் பதற்றத்தை அதிகப்படுத்தக் கூடும். கூடுதலாக மாறிவரும் சூழலில் புவிசார் அரசியலில் தமிழ்நாடு ஒரு மையப்புள்ளியாக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கக் கூடும்.

இந்தியப் பெருங்கடலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பை அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தம் வழங்ககூடும். ஏற்கெனவே ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான அமெரிக்க அரசின் நிலைப்பாடுகள் எதிராக உள்ள நிலையில் ஒருவேளை பிற்காலத்தில் போர்ச்சூழல் உருவானால் அமெரிக்க ராணுவம் காட்டுப்பள்ளியை தனக்கான தளமாக பயன்படுத்தக்கூடும் என்கிற அச்சம் எழுகிறது.

மேலும், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்கள் கொண்டுள்ள நாடுகளாகவும் உள்ளன. எனவே தெற்கு ஆசியப் பகுதியில் அமைதி நிலவ இந்த நாடுகளுக்கிடையான நல்லுறவு என்பது முக்கியமானது. அந்த வகையில் SAARC கூட்டமைப்பை வலுப்படுத்துவம், அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்துவமே உலக அமைதியிக்கு வழி வகுக்கும்.

வரலாற்று அடிப்படையில் இந்திய அரசு அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி வந்த நிலை கடந்த காலங்களில் மாறி வருகிறது. குறிப்பாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பின் இந்த நிலை உருவாகி வருகிறது. வெளியுறவுக் கொள்கையில் பல மாற்றங்களை செய்து வருகிறது பா.ஜ.க.வின் தற்போதயை ஆட்சி. அமைதிக்கான செயல்பாடுகளை புறக்கணித்து விட்டு, முரண்களை அதிகரிக்கும் போக்குடனே செயல்படுகிறது தற்போதைய ஒன்றிய அரசு.

தமிழ் நாட்டு நிலப்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்துடன் அமெரிக்க ராணுவம் ஒரு ஒப்பந்தை மேற்கொள்வதையும், அந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என வெள்ளை மாளிகையேக் கூறுவதையும் நிச்சயமாக புவி அரசியல் பார்வையில் நாம் அணுக வேண்டி பிரச்சினை. L&T  நிறுவனத்துடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் மற்றும் அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டம் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஒசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ஒன்றிய அரசு அமைக்க திட்டமிட்டுள்ள ராணுவத் தளவாட உற்பத்திக் கேந்திரங்களும் தமிழ்நாட்டை ராணுவமயமாக்கும் ஆபத்தை விளைவிக்கும்.  மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில்கொண்டு தமிழ் நாடு அரசும், தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்புகள்

  1. https://www.whitehouse.gov/briefing-room/statements-releases/2023/06/22/fact-sheet-republic-of-india-official- tate-visit-to-the-united-states/
  2. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849430

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments