தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில்(Tamil Nadu Governing Council on Climate Change)” பூவுலகின் நண்பர்கள்.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும் காலநிலை மாற்றத்திற்கான தகவல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல் திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொறுத்து தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவினை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலுடன் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது இக்குழுவில் பல்வேறு முக்கியத்துறைகளின் அனுபவிக்க மூத்த அரசு செயலாளர்கள் தவிர காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிர்வாக குழுவானது தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயல்படும். இக்குழுவில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் அவர்களும் இடம் பெற்றுள்ளார்.

G O (D) No 242 Dt 21.10.2022

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைத் தொடங்கிய அமரர் நெடுஞ்செழியன் துவங்கிவைத்த மிகமுக்கிய பணி ‘அறிவுத்தேடலும், அறிவுப்பகிரலும்’ இந்த நோக்கத்தில் அவர் ஒருங்கிணைத்த குழு வெளிக்கொணர்ந்த சூழல் சார்ந்த வெளியீடுகள் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் அறிவியக்க வரலாற்றில் மிகமுக்கியத் தடம் பதித்தவை. அதுவும் சூழல்பாதுகாப்பில் ஆழமான புரிதலற்ற மேட்டிமைச் சிந்தனைகள் மேலோங்கியிருந்த காலத்தில் சூழலியல் அரசியலை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அவர்கள் முன்னெடுத்தப் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் அன்றைய பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல்களின் தாக்கம் இல்லாத சூழலியலாளர்களே தமிழ்நாட்டில் இல்லை என்று கூறலாம்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் இரண்டாம் ஓட்டத்திலும் இந்த “அறிவுத் தேடல் – அறிவுப் பரவல்“” முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். காலத்தின் கட்டாயம் எங்கள் செயல்பாடுகளை இன்னும் பல தளங்களில் விரிவுபடுத்தி வேகம் பெறச்செய்திருக்கிறது. இயற்கையை அறிவதே அறிவியல். ஆனால், இதைப் பிற்போக்குவாதமாகப் பார்க்கும் பலர் இயற்கையை வெற்றி கொள்வதே அறிவியல் என்று நம்பி முன்னெடுக்கும் செயல்கள் எந்த அறிவியல் தொழில்நுட்பங்களாலும்கூட மீட்க முடியாத நாசங்களை இங்கு நிகழ்த்தியுள்ளன

இன்று, காலம் மாறும் வேகத்தைவிட அதிகமாகவே தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் பல்வேறு விதத்தில் நமக்குப் பெரும் நன்மைகளைத் தந்திருந்தாலும் அவற்றைக் கையில் வைத்திருப்போரின் நோக்கம் வெறும் இலாப வேட்கையாய் இருப்பதால் இப்புவி மீள்புதுப்பிக்க முடியாத அளவுக்குப் பல்வேறு இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. அதன் உச்சகட்டமாகக் காலநிலைப் பேரழிவுகளை நாம் சந்திக்கத்தொடங்கியிருக்கிறோம். இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.  உலகமயமாக்கல் யுகத்தில் பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள் (குறிப்பாக மேலை நாடுகள் கைவிட்டத் தொழில்நுட்பங்கள்) இந்தியாவில் நடைமுறைக்கு வரும்போது, அந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் குறித்து உலக நாடுகளின் அனுபவங்களை நாம் புறக்கணிக்க முடியாது.

எத்தனைப் புதியபுதிய நவீனத் தொழில் நுட்பங்கள் வந்தாலும்கூட நாம் உயிர்வாழ இந்த மண்ணையும் காற்றையும் நீரையுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் நம் ஒரே வாழ்வாதாரமான இப்புவியின் வளங்களைக் காக்க, இயற்கையைப் புரிந்து கொள்ளவும், இயற்கையின் புதுப்பிக்கத்தக்க வரம்புக்குள் நம் வாழ்வை அமைத்துக்கொள்ளும்படியாய் நம் செயல்பாடுகளை வடிவமைப்பதும், அதனை சிதைக்கும் தொழில்நுட்பங்களை விமர்சனம் செய்வதும் காலத்தின் கட்டாயமாகிறது. அந்த வகையில், இவை குறித்த ஆழ்ந்தப் புரிதலை ஏற்படுத்த சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்கள், மாத இதழ், குழந்தைகளுக்கான சூழலியல் இதழ் போன்ற பதிப்பகப் பணி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், அமைப்புகள், இயக்கங்களிடையே கருத்தரங்குகள் நடத்துவது, தேவைப்படின் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நேரடியாகச் சட்டரீதியாக அணுகி  வழக்குத் தொடுப்பது அல்லது போராடும் எளிய மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவது, சூழலியலுக்கு எதிரான திட்டங்கள் குறித்த பரப்புரையில் ஈடுபடுவது, அப்படியான திட்டங்களை ஆதரிப்பவர்களையும், எதிர்ப்பவர்களையும்  ஒரே மேடையில் வைத்து ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பது, அரசின் புதிய சட்டங்கள், சட்டத் திருத்தங்கள், கொள்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பது, பல்வேறு சூழலியல் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு  இயன்ற வகையில் கருத்துகளை வழங்குவது, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் நடத்துவது, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் வெளியாகும் ஆய்வறிக்கைகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்ப்படுத்தி வழங்குவது, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வழியே சூழல் குறித்தச் செய்திகளை பொதுவெளியில் முன்வைப்பது என பல்வேறு வடிவங்களில் சூழலியல் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர்ச்சியில் மரு. சிவராமன் அவர்களும் மாநில திட்டக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய பணிகளில் ஒன்றாகவும் அதன் நீட்சியாகவும்தான் தற்போது தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் குழுவில்’ (Tamil Nadu Governing Council on Climate Change) பூவுலகின் நண்பர்கள் சார்பில் பொறியாளர் கோ.சுந்தர்ராஜன் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்த வாய்ப்பின் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழ்நாடு எதிர்கொள்ளவுள்ள பல்வேறு நெருக்கடிகளை சமாளிப்பதற்கு நேரடியாக இன்னும் அதிகமாக எங்களால் பங்களிக்க முடியும் என்று நம்புகிறோம்.

இந்த நம்பிக்கை எங்களுக்கு பெருமகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஏனெனில் சுற்றுச்சூழலைக் காக்கும் செயல்பாடுகளில் கீழிருந்து மேலான மாற்றங்களைவிட மேலிருந்து கீழான மாற்றங்களே மிகமுக்கியமான நல்விளைவுகளை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். உலகமுழுதும் சமரசமற்ற சூழல் இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களுக்காகவே போராடி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு கொடுத்திருக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் மக்கள் மீதான நம்பிக்கையும் இன்னும் தீவிரமாகவும் வேகமாகவும் சூழல் பிரச்சினைகளில் எந்த சமரசமுமின்றி சூழல் பாதுகாப்பில் சரியான திசை நோக்கி எங்களை வழிநடத்தும் என்று உறுதிகூறுகிறோம். இந்த தருணத்தில் மற்றொரு விஷயத்தையும் தெரிவிக்கிறோம், மக்களுடன் இணைந்து சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களுக்கு எதிராக பூவுலகின் குரல் ஒலிப்பதில் எந்த சமரசமும் இருக்காது, வழக்கம்போல பூவுலகின் நண்பர்களின் செயல்பாடுகள் மக்களின் குரலாகவே ஒலிக்கும்.

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள இக்குழுவானது வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர மேம்பாடு, நீர்வளம், பொதுப்பணி, ஆற்றல், போக்குவரத்து, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், குடும்பநலன், தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இணைந்து தமிழ்நாட்டிற்கான காலநிலை செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்த முடிவுகளை எடுக்கும் குழுவாக செயல்படவுள்ளது.

இப்படி ஒரு குழுவை அமைத்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துதல், தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நீண்டகால கோரிக்கையாகும். அந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு இன்று நிறைவேற்றியிருப்பதற்கும் அதில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் ஒரு பங்காற்ற வாய்ப்பளித்தற்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sankar Narayanan
Sankar Narayanan
1 year ago

Congratulations Er.Sundararajan.