மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
பூவுலகின் நண்பர்களின் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில் “பரந்துபட்ட மின் உற்பத்தி கொள்கையை நோக்கித் தமிழ்நாடு நகரவேண்டும்” என்கிற கோரிக்கை இடம் பெற்றிருந்தது. இக்கொள்கையை நடமுறைப்படுத்துவதற்கான முதல் நகர்வை செய்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
TANGEDCOகமுதியில் அதானி நிறுவனம் அமைத்துள்ளதை போல் குவிக்கப்பட்ட சூரியசக்தி் மின் உற்பத்தி முறைக்கு போகாமல், பரந்துபட்ட மின் உற்பத்தியை TANGEDCO நிறுவனமே மேற்கொள்ளும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். இதில் 20,000 மெகாவாட் சூரிய சக்தி மூலமும், 10,000 மெகாவாட் சூரியசக்தி மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் மூலமும் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த அறிவிப்பில் 5 மெகாவாட் முதல் 20 மெகாவாட் வரை அமைப்பதற்காக 20 ஏக்கர் முதல் 200 ஏக்கர் வரை மாவட்டம் தோறும் நிலத்தை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு TANGEDCO கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
1000, 2000 மெகாவாட் என்று குவிக்கப்பட்ட மின் உற்பத்தி முறையிலிருந்து 5 மெகாவாட் முதல் 20 மெகாவாட் என்று அறிவித்திருப்பது நிச்சயம் தமிழக அரசின் மின் உற்பத்தி கொள்கையில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றம், முன்னேற்றமாகும். மேலும், 1 மெகாவாட் அளவிற்கு கிராமங்களில், அங்கேயே உற்பத்தி செய்து அங்கேயே நுகர்வோரை சென்று சேரும் வகையில் திட்டங்களை விரிவுபடுத்தவேண்டும் எனக் கோருகிறோம். இது இரண்டு வகையில் நன்மை தரும்;
1. மின்சாரத்தை உற்பத்தி செய்து நுகர்வோரை போய் சென்றடையும் போது ஏற்படும் இழப்பை தவிர்க்க முடியும்.
2. ஒரு இடத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப்போகும் இடங்களும்(மின்வெட்டு) குறைவானதாக இருக்கும்.
மேலும் ஒரு கோரிக்கையை தமிழ்நாடு அரசிடம் முன்வைக்கிறோம்:- ஒன்றிய அரசு விவசாயத்திற்கென “KUSUM” என்கிற திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அந்த திட்டம் பெரியளவில் முன்னெடுக்கப்படவில்லை. அந்த திட்டத்தின் படி விவசாயிகள் அனைவருக்கும் சூரிய சக்தி பம்ப் செட் கொடுத்து மின்சாரத்தை அவர்களே உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். அந்த திட்டத்தின் படி, பயனாளர் சிறிய பங்களிப்பை செய்யவேண்டும், அந்த பயனாளர் பங்களிப்பை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால், தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு இலவசமாக, பகல் நேரத்தில் விவசாயத்திற்கான மின்சாரம் கிடைத்துவிடும். தமிழ் நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி!
பூவுலகின் நண்பர்கள்.
Very good future view… congratulations..