நீலகிரி புலிகள் மரணம்; பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

நீலகிரி மாவட்டத்தில், 40 நாட்களில், சிறியூர், கார்குடி, முதுமலை, நடுவட்டம், அவலாஞ்சி, சின்ன குன்னுார் பகுதிகளில், ஆறு குட்டிப்புலிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் ஊடகங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் வெளியான புலிகள் கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டில்  306 புலிகள் உள்ளன. அதில் முதுமலை புலிகள் காப்பகத்தை மட்டும் 167 புலிகள் பயன்படுத்தி வருவதாகத் தெரியவந்தது. இந்த நிலையில் 40 நாட்களில் 10 புலிகள் நீலகிரியில் மட்டும் இறந்துள்ளது என்கிற செய்தி உடனடியாக அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தவல்லதுதான். ஆனால், புலிகள் போன்ற காட்டுயிர்களின் இறப்பை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். இந்த 10 புலிகளின் மரணத்தையும் மொத்தமாக அணுகாமல் தனித் தனியே அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

முதல் சம்பவம் 16.08.2023 அன்று நடந்தது. வனத்துறைப் பணியாளர்கள் ரோந்தின்போது சிறியூர் காட்டுப் பகுதியில் 2 புலிக்குட்டிகளை இறந்த நிலையில் கண்டெடுத்தனர்.  உடற்கூராய்வில் அவை பட்டினி/தொப்புள்சார் தொற்றால் இறந்ததாகத் தெரியவந்துள்ளது.

17.08.2023 அன்று நடுவட்டம் பகுதியில் தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் இறந்த நிலையில் பெண் புலி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இப்புலியின் உடலைச் சோதனை செய்ததில் மற்றொரு புலியுடன் சண்டையிட்டதன் காரணமாக உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. 7 வயதான இப்புலியின் இறப்புக்கு மற்றொரு புலியுடன் நடந்த சண்டையே காரணமாக இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

31.08.2023 அன்று கார்குடி பகுதியில் இறந்த நிலையில் ஆண் புலி ஒன்று வனத்துறைப் பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது. 11 வயதான ஆண் புலியின் உடம்பில் காயங்கள் இருந்ததால் மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவும் அதன் வயதின் காரணமாகவும் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

09.09.2023 அன்று உதகை தெற்கில் அவலாஞ்சி அணைக்கருகே இறந்த நிலையில் இரண்டு ஆண் புலிகள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு நடந்த சோதனையில் இறந்த புலிகள் கிடந்த இடத்திற்கு அருகாமையிலே இறந்த மாட்டின் சடலமொன்று கிடந்துள்ளது. இது தொடர்பாக எமரால்டு பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரித்ததில் இறந்த மாட்டின் உடலில் தான் விஷம் வைத்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அம்மாட்டின் உடலை சாப்பிட்ட காரணத்தால் புலிகள் உயிரிழந்ததாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

17.09.2023 மற்றும் 19.09.2023ல் நான்கு புலிக்குட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் மூன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட புலிகுட்டியும் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளது. இந்த சம்பவத்தில் தாய்ப்புலியைத் தேடும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. 4 புலிகளும் போதிய உணவு இல்லாத காரணத்தாலே இறந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பல காட்டுயிர் ஆர்வலர்களும் குறிப்பாக புலிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்களும் 10 புலிகளின் மரணம் என்பதை அதிர்ச்சியாகவோ உணர்வுப் பூர்வமாகவோ அணுக வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளனர். 10 புலிகளின் மரணத்திலும் வேட்டைக்கான நோக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 6 குட்டிப்புலிகள் தாய்ப்புலி இல்லாத காரணத்தால் உணவின்றி இறந்துள்ளன. இந்த விஷயத்தில் தாய்ப்புலிகளுக்கு என்ன ஆனது என்பது தெரியும் வரை இந்த ஒட்டுமொத்த பிரச்சினையிலும் நிலவும் சர்ச்சை ஓயாது. தாய்ப்புலிகளின் நிலையை அறிய வனத்துறை காடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தித் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

இரண்டு புலிகள் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் இறந்துள்ளன. இரண்டு புலிகள் விஷம் வைக்கப்பட்டதால் இறந்துள்ளன. விஷம் வைக்கப்பட்ட நிகழ்வும்கூட வேட்டைக்காக அல்ல. கால்நடைகளைக் காப்பாற்றுவதற்காக ஒருவரால் வைக்கப்பட்டதுதான் எனத் தெரியவந்துள்ளது.

இந்தப் பிரச்சினை தமிழ் நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நிலவும் ஒன்றுதான். எங்கெல்லாம் காட்டுயிர்களும் மனிதர்களும் ஒரே வாழிடத்தைப் பகிர்ந்துகொண்டு அல்லது  அருகாமையில் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் இந்தப் பிரச்சினை நடக்கிறது.

காட்டுயிர்களால் பயிரையோ, கால்நடைகளையோ இழப்பவர்கள் உரிய இழப்பீட்டைப் பெறலாம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் கடமையாகும். இப்படியான சம்பவங்களில் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்/பெறும் நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட வேண்டும். அதையும் தாண்டி ஒருவர் தன் கால் நடைகளை/பயிரைக் காக்க காட்டுயிர்களைக் கொல்லும் அல்லது விரட்டும் ஆபத்தான வெடி, விஷம் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் ஆராயப்பட வேண்டும்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க புலிகள் பாதுகாப்பு மேலாண்மைக்கான நடைமுறைகளும் யுத்திகளும் அறிவியல் பூர்வமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு புலி இறப்பின்போதும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வரையறுத்துள்ளது. அதனைப் பின்பற்றியே தமிழ் நாடு வனத்துறை இந்த 10 புலிகள் மரணத்தையும் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குட்டிகளைப் பிரிந்த இரண்டு தாய்ப்புலிகளின் நிலையை அறிய வாய்ப்பிருக்கும் எல்லா முயற்சிகளையும் தமிழ் நாடு வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களையும் வனத்துறை அதிகாரிகளையும் கோருகிறோம். இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையையும் தமிழ் நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நச்சாய்வியல் (Toxicology) அறிக்கையையும் பொதுவில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம். காட்டுயிர் பாதுகாப்பு என்பது புலிகள், யானைகள் போன்ற காட்டுயிர்கள் இறப்பின்போது மட்டும் உணர்ச்சிவசப்பட்டு கருத்துகள் தெரிவிப்பது கிடையாது. காட்டுயிர்களைப் பாதுகாத்தல் என்பது அவற்றின் வாழிடங்களைப் பாதுகாத்தலோடு தொடர்புடையது என்கிற புரிதலோடு நாம் அனைவரும் செயல்பட பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோருகிறது.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments