செய்திக் குறிப்பு
நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மந்தன் அத்யாயன் எனும் அமைப்புடன் இணைந்து விரிவான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்து 08.08.2023 அன்று சென்னையில் வெளியிட்டது.
’மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் அந்த ஆய்வறிக்கையானது, மேற்குறிப்பிட்ட இடங்களில் நீர்நிலைகளும், நிலத்தடி நீரும், வேளாண் நிலமும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் இரசாயனங்கள். கன உலோகங்களால் பாதிப்படைந்திருந்ததை வெளிக்கொணர்ந்தது. இவ்வறிக்கை தொடர்பாக தமிழ் நாட்டின் பல்வேறு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின,
இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து (suo moto) 10.08.2023 அன்று வழக்காக விசாரித்தது.
விசாரணையில், இம்மாசுபாடு தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகம், மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள், ஒன்றிய மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இன்றைய நாள் (28.08.2023) வழக்கு விசாரனைக்கு வந்தபோது, தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நீர் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்த தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் இக்குழு ஏற்கெனவே சில இடங்களில் நீர் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தது. ஆய்வின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதால் முடிவுகள் கிடைத்தவுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
ORDERஇந்த வழக்கின் பிற மனுதாரர்களான என்.எல்.சி., ஒன்றிய மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால், இவ்வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முன்னெடுத்துள்ள இவ்விசாரணை என்.எல்.சி. செயல்பாடுகளால் விளையும் மாசுபாட்டைக் குறைக்கும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட நீதியை வழங்கும் எனவும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் எதிர்பார்க்கிறோம்.