விவசாயச் சட்டங்கள் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?

 

 

 

 

ESSENTIAL COMMODITIES ACT (AMENDMENT) BILL 2020

 

கார்ப்பரேட்டுகளுக்கான உணவு பதுக்கல் சுதந்திரம்

 

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

 

அரசாங்கத்தால் சொல்லப்பட்ட காரணம்:

விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதும், அறுவடைக்குப் பிந்தைய விவசாய உள்கட்டமைப்பில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதுமே வெளிப்படையாகச் சொல்லப்பட்ட காரணங்கள்.

 

சட்டம் என்ன செய்கிறது?

புதுச்சட்டம் “அசாதாரணச் சூழ்நிலைகளை”த் தவிர்த்து, அனைத்து உணவுப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழங்கும் வாய்ப்பை நீக்கியுள்ளது. இத்தகைய ‘அசாதாரணச் சூழ்நிலைகளுக்கு’ நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்புகள் மிக அதிகமாக இருப்பதால் அவை ஒருபோதும் எட்டப்படும் வாய்ப்பும் கிடையாது. அதானி போன்ற பெருநிறுவனங்களுக்கு அத்தகைய விலை வரம்புகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

 

 

விவசாயிகளின் நிலை என்ன?

 

  • “விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது” நோக்கம் என முன்னுரை கூறுகிறது. ஆனால் முதலில் இருந்த சட்டம் விவசாயிகள் பற்றியும் கவலைப்படவில்லை, அவர்களின் வருமானங்களையும் பொருட்படுத்தவில்லை. விவசாயிகள் அல்லது விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) விளைபொருட்களைச் சேமித்துவைக்கவும் விற்கவும் எந்தத் தடையையும் அது கொண்டிருக்கவில்லை.
  • வேளாண் வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் மீது கட்டுப்பாடு இருந்தது. இப்போது, ​​புதிய சட்டத்தில் அந்தக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம், சேமிக்கலாம். பதுக்கும் வேலை சுலபமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதை “உணவுப் பதுக்கல் (நிறுவனங்களுக்கான சுதந்திரம்) சட்டத்திருத்தம்” என்று அழைக்க வேண்டும்.
  • அதானி-வில்மர், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இப்போது எந்த உணவுப்பொருளையும் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமித்துவைக்கும் சுதந்திரம் உண்டு (இந்தச் சுதந்திரம் விவசாயிகள் மற்றும் FPO-க்களிடம் மட்டுமே இருந்தது). அவர்கள் சேமிப்புக் கிடங்கு மற்றும் பதப்படுத்தும் வசதிகளை உருவாக்குவார்கள். முழுமையான சந்தை ஆதிக்கத்தைக் கட்டமைப்பார்கள். இதற்கு அர்த்தம், விவசாயிகளுக்கான விதிமுறைகளையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதுதான். விளைவு, விவசாயிகளுக்குக் குறைந்த விலையே கிடைக்கும். பெரிய அளவில் வருமானம் இருக்காது.
  • சில்லறைச் சந்தையில் விலை உயர்வு இருக்கும்போது, ​​அதன் நன்மை விவசாயிகளுக்குக் கிட்டாது. ஆனால் விலை வீழ்ச்சி அடையும்போது, ​​இழப்பு விவசாயிகளின் தலையில் கட்டப்படும்.
  • ஒரு உதாரணம்: அதானி-வில்மர் நிறுவனம் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து அதிக அளவு எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்கிறது. 35 கோடி டாலர்களை பங்களாதேஷில் முதலீடு செய்து உணவு பதப்படுத்தும் தொழிற்துறையை உருவாக்கியுள்ளது. பதுக்கிவைப்பதில் வரைமுறை இருக்காது என்பதால், வெளிநாடுகளிலிருந்து அதானி நிறுவனம் இறக்குமதி செய்வதற்குத் தடை இருக்காது. இந்தியச் சந்தையில் அத்தகைய நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும்.

 

அரசு குடிமக்களைப் பாதுகாக்கும் அதன் தார்மிகப் பொறுப்பை வேண்டுமென்றே குறைத்துக்கொள்கிறது.

 

வாய்ப்பு விவசாயிகளுக்கு அல்ல, பெரிய வேளாண் / உணவு நிறுவனங்களுக்கே:

 

பெரிய வேளாண் நிறுவனங்களுக்காக:

– சேமிப்பு வரம்புகள் நீக்கம், கட்டுப்பாடுகள் நீக்கம்.

– பெரிய

– இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தி வசதிகளுடன் வெளிநாடுகளிலும் இடம் வைத்திருக்கும் அதானி போன்ற நிறுவனங்களுக்கே பெரிய வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன.

 

விவசாயிகளுக்கு:

– இந்தச் சட்டத்தின் காரணமாகக் கூடுதல் சுதந்திரம் இல்லை

– அவர்கள் இருப்பு வைத்துக்கொள்ளும் அளவில் எந்த மாற்றமும் இல்லை (சேமிப்பு மற்றும் நிதி)

– FPO-க்கள் மற்றும் வேளாண் வணிகத்துக்கு இடையே பேரம் நடக்கக்கூடிய வாய்ப்பு குறைகிறது

– வேளாண் நிறுவனங்களின் ஆதிக்கம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலையைக் குறைக்கலாம்.

– சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் வசதிகளை விவசாயிகளுக்கு  உருவாக்கித் தர முடியாது என அரசு கூறுகிறது. இச்சட்டம் எல்லா வாய்ப்புகளையும் பெருநிறுவனங்களுக்கே அளிக்கிறது.

 

 

  • முந்தைய சட்டத்தில் பல ஒழுங்குமுறைகள் இருந்தன. உரிமம், விலைக் கட்டுப்பாடு, கட்டாய உரிமம், இருப்பு, தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வு செய்ததற்கான ஆவணங்கள், நுழைவு / தேடல் / வளாகங்களில் பரிசோதனை மற்றும் பறிமுதல் போன்றவை விதிமுறைகளாக இருந்தன. இவை யாவும் தற்போது தூக்கி எறியப்பட்டுள்ளன.

 

 

  • ‘அசாதாரண சூழ்நிலைகளில்’ – அதாவது போர், பஞ்சம், விலை உயர்வு, இயற்கைப் பேரழிவு போன்ற சூழல்களில் – விளைபொருட்களின் விலை 100% அல்லது அழிந்துபோகாத உணவுப் பொருட்களின் விலை 50% உயரும்போது மட்டுமே உணவுப் பொருட்களின் விநியோக ஒழுங்குமுறை செயல்பாட்டுக்கு வரும். சூட்சுமம் என்னவென்றால், எதனுடைய விலை எங்கே ஏறும் என்பதோ ​​அத்தகைய தரவுகள் எங்கே எப்படிப் பராமரிக்கப்படும் என்பதோ குறிப்பிடப்படவில்லை.

 

 

  • இப்போது உணவுப் பொருட்களுக்கென இருக்கும் குறைந்தபட்ச ஒழுங்குமுறைகளில்கூட விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒழுங்குமுறைகள் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் பதப்படுத்தும் இடங்களைக் கொண்டிருப்போருக்கும் பொருந்தாதாம். ஏற்றுமதிக்கான விண்ணப்பங்கள் எவ்வாறு ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்படும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

 

விளைபொருட்களை மறைக்கும் போக்கு நாடு முழுவதும் நடக்கும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும், இப்போது பதிவுசெய்யப்பட்ட கிடங்குகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வெவ்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகள் உள்ளன. உணவு சேமிப்புகள் மற்றும் அவை இருக்கும் இடம், இருக்கும் அளவு பற்றிய தகவல்கள் அரசாங்கத்திடம் இல்லாதபோது வர்த்தகம் மற்றும் உணவு ஆதரவுக் கொள்கைகளுக்கான தேவைகளும் இருக்கின்றன.

 

அரசு செய்திருக்க வேண்டியது என்ன?

 

  • இந்தியாவின் அறுவடைக்குப் பிந்தைய உணவு விநியோகச் சங்கிலியின் உள்கட்டமைப்பில் முதலீடுகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கம் எனத் தெளிவாகச் சொல்லுங்கள். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதெல்லாம் நோக்கமல்ல என வெளிப்படையாகக் கூறுங்கள்.
  • ’அசாதாரண சூழ்நிலைகளில்’ பட்டியலிடப்பட்ட நான்கு விஷயங்கள் மட்டுமல்லாமல் போட்டியின்றி வாங்கும் வாய்ப்பு பெறும் நிறுவனங்களின் நடத்தையும் கூடுதல் அசாதாரணச் சூழ்நிலையாகக் கருதப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். “நியாயமற்ற மற்றும் அசாதாரணமான பதுக்கல்” என்பதும் அசாதாரண சூழல்களில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும்! இந்த விஷயங்களில் ஒழுங்குமுறைக்கான தேவையை எவ்வாறு அரசு புறக்கணிக்க முடியும்?
  • கட்டுப்பாட்டு வரம்புகளின் எல்லா அம்சங்களும் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். விளைபொருட்களுக்கான வரம்புகள் (விலைக் கட்டுப்பாடு, கட்டாய விற்பனை, போக்குவரத்துக் கட்டுப்பாடு, வணிக மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துதல் போன்றவை) மட்டும் பெயரளவுக்கு விதிக்கப்படக் கூடாது. விளிம்புநிலை மக்களின் நலன்களைப் பாதுகாக்க இதுவே வழியாகும்.
  • விலை ஏற்றத்துக்கான ஒழுங்குமுறைகள் குறிப்பிட்ட ஒரு வட்டாரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கும் உள்கட்டமைப்பின் அடிப்படையில் ஒழுங்குமுறைகள் மாறும் தன்மையைப் பெறுதல் வேண்டும். அதாவது மாவட்ட அளவிலான அணுகுமுறை போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • கொள்ளளவின் உண்மை நிலை உள்ளிட்ட தேவையான தரவுகள் முறையாகப் பெறப்பட்டு அவற்றின் அடிப்படையில் ஒழுங்குமுறை ஆணையம் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

 

விவசாயிகளின் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020

 

அல்லது

 

“APMC BYPASS BILL 2020” [1]

 

சூழல்

 

சந்தையுடன் விவசாயிகளின் புழங்கும் களங்கள் ஒரு சமமற்ற விளையாட்டு மைதானத்தைப் போல் இருக்கின்றன – ஏபிஎம்சி சட்டங்கள் கொண்டுவரப்பட்டதன் அடிப்படையான காரணமே அவற்றை மாற்றுவதுதான். ஆனால் அக்களங்கள் தொடர்ந்து எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கின்றன. நாட்டின் சிறு விவசாய உற்பத்தியாளர்களுக்கு ஏதுவாக ஒன்றும் இல்லை. உண்மையில் இப்புதிய சட்டங்கள் உள்ளூர் வர்த்தகர்களைவிடப் பெரிய நிறுவனங்களுக்கே வாய்ப்பை உருவாக்குகின்றன. பல நாடுகளில் ஏகபோகமாக இருக்கும் நிறுவனங்கள் தற்போது நுழையும் வாய்ப்பை இந்தச் சட்டங்கள் உருவாக்குகின்றன. சந்தைகளுடன் விவசாயிகள் தொடர்பு கொள்ளும் தளங்கள் இப்போது முன்பைவிடச் சமமற்றதாக ஆக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகளைப் பாதுகாக்கும் தன்மையிலிருந்து (குறைந்தபட்சம் பெயரளவில்) விலகி முற்றிலும் தாராளமயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. ஒழுங்குமுறைகளும் குறைக்கப்பட்டுச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவையாக இருக்கின்றன.

 

ஏபிஎம்சி சட்டத்தில் விவசாயிகளின் சுதந்திரம் சட்டப்பூர்வமாகக் குறைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் 35% விளைபொருட்கள் மட்டுமே வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், ஏபிஎம்சிகள் விவசாயிகளுக்கு விலை மற்றும் இதர பிரச்சினைகள் (தரம், எடை, ஈரப்பதம், அளவு போன்றவை) குறித்து பேரம் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.

 

பிற வர்த்தகங்களைத் தண்டனைக்குள் கொண்டுவரவில்லை என்பதால், அவை ஒழுங்குமுறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்பதாகப் புரிந்துகொள்ள முடியாது. இது விவசாயிகளின் நலன்களை முழுமையாகவும் கடுமையாகவும் புறக்கணிப்பதற்குச் சமம். சந்தைகளால் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், வருமானப் பிரச்சினையைப் பொறுத்தவரை மாநில அரசுகளைக்கூட விவசாயிகளால் அணுக முடியாது.

 

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, விலைகள் பற்றிய தரவுகள் சேமிப்பு மண்டிகளிலிருந்து வருகின்றன. சந்தைகளில் அரசாங்கத்தின் தலையீடும் இதைச் சார்ந்தே இருக்கிறது. மண்டி உரிமையாளர்களுக்கான தரவு, களப் பரிவர்த்தனையில் கிடைக்கிறது.

 

மத்தியச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான வெளிப்படையான காரணம் என்னவென்றால், மாநில அரசுகள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மாதிரிச் சட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்பதுதான். ஆனாலும் 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு GOI மாதிரிச் சட்டத்தைப் பயன்படுத்திப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கிடையில், ஒழுங்குமுறை நீக்கத்துக்கு ஒப்புக்கொண்டவர்கள் (பிகாரைப் போல்) தங்கள் விவசாயிகளின் விதியை எவ்வகையிலும் மாற்றிவிடவில்லை.

 

மேலும், ஏபிஎம்சி பைபாஸ் சட்டத்துடன் இணைத்து அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தத்தையும் படிக்கும்போது  விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் எதிராக அவை செயல்படுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

 

சட்டத்தில் உள்ள குறைபாடுகள்:

 

  • வர்த்தககர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் முன்பு கட்டுப்படுத்தப்படவில்லை – அவை விவசாயிகளின் உற்பத்தி அல்ல – இப்போது, ​​அவற்றுக்கான கட்டுப்பாடுகள் எந்த அடிப்படையும் இல்லாமல் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • விவசாயிகளின் உற்பத்தி (பிரிவு 2 (அ)) மற்றும் பட்டியலிடப்பட்ட விவசாயிகளின் உற்பத்தி (2 (ஜே)) என இரண்டு தனித்தனி வரையறைகள் மற்றும் உட்பிரிவுகள் ஏன் சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெரிவிக்கப்படவில்லை. ஒழுங்குமுறையை அகற்றுவதே நோக்கம் என்ற நிலையில் ஒரு வகை மட்டும் மாநிலத்தின் வரம்புக்குக் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் காரணமும் விளக்கப்படவில்லை.
  • பிரிவு 2 (ஈ), “விவசாயி” என்பது விவசாய விளைபொருட்களைச் சுயமாகவோ, கூலித் தொழிலாளர்கள் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஒரு நபர் எனக் குறிப்பிடுகிறது. FPO-க்களும் இந்த வரையறைக்குள் வரும். பெரும்பாலான FPO-க்கள் உற்பத்தியில் ஈடுபடவில்லை, அவற்றை விவசாயி என்கிற வரையறைக்குள் கொண்டுவர முடியாது.
  • விவசாயிகளின் விளைபொருட்களுக்காகப் போட்டியிட FPO-க்கள் இப்போது இருக்கும் வர்த்தகர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளன. FPO-க்களின் இயக்கமே நாட்டில் தொடக்கக் கட்டத்தில்தான் இருக்கிறது என்கிறபோது அவை ஏன் அதிக அளவில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அரசாங்கம் தனித்தனி முதலீடுகளை அவற்றுக்காக அறிவிக்க வேண்டும். உறுப்பினர்களால் எடுக்கப்படும் முடிவுகளுடன் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்புக்குள் முடிவுகளை ஒழுங்குபடுத்த அரசாங்கம் ஏன் முன்மொழிகிறது என்பதும் தெளிவாக இல்லை.
  • அனைத்து விவசாயிகளின் விளைபொருட்களையும் அனைத்து வர்த்தகர்களையும் பதிவுசெய்யும் முறையைப் பரிந்துரைக்காமல் மத்திய அரசு தன்னுடைய பொறுப்பை ஏற்காமல் புறக்கணிக்கிறது.

 

  • மொத்தக் குறைதீர்க்கும் முறையும் பணப் பரிவர்த்தனைகளைச் சுற்றி மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ‘விநியோக ரசீது’ முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எத்தனை விவசாயிகள் அந்த வசதியைத் தாங்கள் ”வியாபாரம் செய்யும் பகுதிகளில்” பெறுவார்கள்?
  • மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தில், அதே நாளில் பணம் செலுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம்? அதுவும் வாங்குபவர் இல்லாமலும் வழங்கப்பட்ட பொருட்களின் மாதிரிகளைப் பார்க்காமலும் எப்படி நடக்க முடியும்?
  • விவசாயிகளின் சுரண்டல் என்பது கள விலை நிர்ணயத்தில் மட்டுமே இருப்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் விவசாயிகளைப் பொறுத்தவரை சுரண்டலுக்குக் காரணமாக விலை அல்லாத பல விஷயங்களும் உள்ளன.
  • மத்திய அரசு விலை பற்றிய தகவல்களும் மற்றும் சந்தை பற்றிய தரவுகளும் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கலாம் எனச் சட்டம் சொல்லியிருக்கிறது. அத்தகைய அமைப்பு ஒன்று இல்லாமல் அரசாங்கம் தலையிட முடியுமா? முதலில் அரசாங்கம் தலையிடுமா?
  • e-Nam போன்ற மின்னணு வர்த்தகம் நாட்டின் மண்டிக் கட்டமைப்புக்கு மாற்றாகச் செயல்படுகிறது; ஒரு இணையான அமைப்பாகக்கூட அல்ல. அதிக வர்த்தகம் இல்லாமல் மண்டிகள் அழிக்கப்பட்டால், விவசாயிகளின் பங்களிப்புடன் e-Nam தொடர்ந்து நடக்குமா?
  • துண்டு துண்டான சந்தைகள் அடிப்படை விலைகளை எப்படி நிர்ணயிக்கும்? துண்டு துண்டான சந்தைகள் ஏகபோகச் சந்தைகளையும் குறிக்கின்றன.
  • துண்டு துண்டான ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள் விவசாயிகளுக்கு இன்னும் சீரற்ற களத்தையே உருவாக்கப்போகின்றன.

 

இறுதியில், இது மண்டிகளுக்கு வெளியே பழைய கட்டமைப்புகளை மீட்டுருவாக்கவே வழிவகுக்கும். உண்மையில், ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டிக்கு வெளியே செயல்படவும், வர்த்தகப் பகுதியில் கட்டணம் செலுத்தாமல் செயல்படவும் தற்போது வாய்ப்பு பெற்றிருப்பவர்கள் உள்ளூர் வர்த்தகர்களும் கமிஷன் முகவர்களும் மட்டும்தான்! முற்றிலும் மாறுபட்ட இரண்டு விதிகளுடன் இரண்டு சந்தை இடங்களை உருவாக்குவது பேரழிவுக்கான வழிமுறையாகும்.

 

சட்டவிரோதமான வர்த்தகப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்தும் சந்தைகளை ஒழுங்கமைக்க அரசு என்ன செய்திருக்க வேண்டும்:

 

தீவிர தாராளமயமாக்கலுக்கும் தீவிரப் பாதுகாப்பிற்கும் இடையில் அரசாங்கம் ஊசலாட முடியாது. விவசாயிகள் சந்தைகளுடன் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் சமமற்ற வாய்ப்புகளே இருக்கும் நிலையில் பாதுகாப்பு மட்டுமே தேவை. அத்தகைய பாதுகாப்புக்கான கூறுகள் எவை என்றால்:

 

  • ஊதிய விலையே விவசாயிகளுக்குப் பாதுகாப்பு
  • குறைந்தபட்ச விலை அனைத்து விவசாயிகளுக்கும் உள்ள உரிமையாக அரசாங்கத்தால் உறுதி செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் அத்தகைய உரிமை மற்றும் அதை நோக்கிய அரசாங்கத்தின் கடமை ஆகியவற்றைப் பல நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகள் மூலம் நிறைவேற்றலாம்.
  • அனைத்து வர்த்தகத்திலும் கண்காணிப்பு முக்கியம் – இது ஏபிஎம்சி குழுக்கள் மட்டுமின்றிப் பல செயல்பாட்டாளர்கள் மூலமாகவும் நடக்கலாம். குறிப்பிட்ட பொருட்களுக்கென நியமிக்கப்பட்ட துறை அதிகாரிகளாக இருக்கலாம். பஞ்சாயத்து அமைப்புகளாக இருக்கலாம். தேதி, அளவு, விற்பனையாளர், வாங்குபவர், விலை மற்றும் தரம் தொடர்பான எந்தத் தரவும் குறைந்தபட்சம் பதிவு செய்யப்பட வேண்டும். வாங்குபவர்கள், வர்த்தகர்கள் ஆகிய அனைவரையும் பதிவுசெய்ய வேண்டும். பான் கார்டு அவசியம் என்று சொன்னால் மட்டும் போதாது. “ஆன்லைன் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.” அனைத்து நிறுவனங்களையும் பதிவுசெய்து அனைத்துப் பரிமாற்றங்களையும் முடிந்தவரை பதிவுசெய்ய வேண்டும். பல மேற்பார்வை முகவர்களையும் செயல்பாட்டாளர்களையும் பொருட்களுக்குத் தகுந்தாற்போல் அறிவிக்க வேண்டும். அனைத்து முதன்மைப் பரிவர்த்தனைகளுக்கும் மேற்பார்வை இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டாலும், முடிந்தவரை எல்லாவற்றையும் பதிவுசெய்ய முயல வேண்டும்.
  • ஏபிஎம்சி சந்தை முற்றமும்வர்த்தகப் பகுதிகளும் துணை வரி / கட்டண வசூல் மற்றும் மேற்பார்வை வழிமுறைகளின் அடிப்படையில் சமப்படுத்த வேண்டும். இல்லையெனில், அனைத்து வர்த்தகமும் கண்காணிப்புக்கு வெளியே சென்றுவிடும். உரிமம் பெற்ற வர்த்தகர்கள் முதலில் வெளியேறுவார்கள்!
  • ஒரு மத்தியச் சட்டமானது மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்திற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் வசூலிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கினால், அந்தச் சட்டத்தை ஒப்புக்கொள்ளலாம். மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்திற்கான அதிகாரம் மத்தியில் இருக்க முடியும். குறிப்பிட்ட உச்சவரம்புக்கு மேலே உள்ள எந்த வர்த்தகமும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே மாநிலங்களுக்கிடையே நடக்கும் எந்த வர்த்தகமும் மத்திய அரசின் வரம்புக்குள் வரலாம் (இதற்கு இணையாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 இருக்கலாம். இது குறிப்பிட்ட வரம்புக்கு அதிகமான வர்த்தகம் கொண்ட அனைத்து நிறுவனங்களையும் பதிவு செய்கிறது). எல்லாவற்றுக்கும் மேலாக, நியாயமற்ற முறையில் செயல்படும் பெருநிறுவனங்களே உள்ளூர் வர்த்தகர்களைவிட அதிக சேதத்தை ஏற்படுத்த முடியும். அவைதான் கடுமையான ஒழுங்குமுறையால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
  • அரசாங்கத்தின் தலையீட்டிற்கு விலை பற்றிய அறிவு முக்கியமானது. உண்மையில், தரவுக் கட்டமைப்பு (நிறுவனங்கள், பரிவர்த்தனைகள், விலைகள்) முழுமையாகச் செயல்பட வேண்டும். ஒழுங்குமுறை அமைப்பில் இணைக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை மற்றும் மேற்பார்வையுடன் கொள்கை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
  • குறைதீர்க்கும் அமைப்பும் அபராதமும் விலைப் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வகையான சுரண்டலுக்கும் இருக்க வேண்டும். தாலுகா மற்றும் மாவட்ட அளவில் இருக்க வேண்டும்.
  • FPO-க்கள் இந்தச் சட்டத்தின் எல்லைக்கு வெளியே வைக்கப்பட வேண்டும் – இது விவசாயிகளுக்கு இடையேயான ஒரு உள் ஏற்பாடாகும். இருப்பினும், அத்தகைய விதிகளால் நிறுவனங்களின் கைகளில் FPO-க்கள் சிக்கிவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், விவசாயி என்ற வரையறையிலிருந்து FPO-வை விலக்க வேண்டும்.
  • வர்த்தகர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் இந்த ஒழுங்குமுறைக்கு வெளியே வைக்கப்பட வேண்டும்
  • e-Nam உள்ளிட்ட தளங்களை இணைக்க அரசாங்கம் ஒரு தேசியப் பரிமாற்ற மையத்தை (ஒரு ஹப் மாதிரி) உருவாக்க வேண்டும். அத்தகைய பரிமாற்றம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஒழுங்குமுறை மேற்பார்வையும் வேண்டும்.
  • உள்ளூர் உணவுத் திட்டங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள பல்வேறு பொருட்களின் அதிகபட்சக் கொள்முதல் மற்றும் மாநிலத்தின் சந்தை, சிறு மற்றும் குறு உரிமையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் விவசாயக் கடன் சீர்திருத்தங்கள் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை இதே சட்டத்திற்குள் அரசாங்கம் உருவாக்க வேண்டும். குறிப்பாக, புறக்கணிக்கப்பட்ட பகுதிகள், பயிர்க் காப்பீடு, பேரழிவு இழப்பீடு மற்றும் சந்தையில் இயங்குமளவுக்கு FPO-க்களை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

 

 

 

விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உடன்பாடு மற்றும் பண்ணைச் சேவைகள் மசோதா, 2020

 

ஒப்பந்த விவசாயச் சட்டம் 2020

 

இந்தியாவில் ஒப்பந்த வேளாண்மை ஏற்பாடுகள் . விதை களிலும் கரும்பு உற்பத்தியிலும் நடப்பவற்றை வேண்டுமானால் ‘ஒப்பந்த வேளாண்மை’ என்று அழைக்கலாம். இதுபோன்ற ஏற்பாடுகள் முக்கிய, உருளைக்கிழங்கு போன்ற உயர் மதிப்புள்ள தயாரிப்புகளுக்கு உள்ளன.

 

இந்தியாவில் விவசாயிகளுக்கு இருக்கும் பிற சந்தை வாய்ப்புகளைப் போலவே, ஒப்பந்த வேளாண்மை ஏற்பாடுகளிலும் தங்களுக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறும் திறனைப் பெறாதவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஏற்பாடுகள் கொடுக்கும் குறுகியகாலப் பொருளாதாரக் கவர்ச்சியில், உள்ளூர்ச் சூழலுக்கு ஏற்ற சரியான வகை பயிர்களை வளர்ப்பதற்கான விவசாயியின் திறனைச் சமரசம் செய்யலாம். மேலும், வேதியியல் மற்றும் நீர்ப் பயன்பாட்டைக் கொண்ட மிகவும் தீவிரமான விவசாய முறையையும் பின்பற்றலாம். மறுபுறம், நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளைக் கையாள்வதில் “ஸ்பான்சர்கள்” வெறுப்புடன் இருப்பதையும், பெரும்பாலும் ஒப்பந்த விவசாய ஏற்பாடுகள் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுடன் மட்டுமே செய்யப்படுவதையும் பார்க்க முடிகிறது. ஒப்பந்தக் கடமைகளைக் கடைப்பிடிக்காத சம்பவங்கள் பல இருக்கின்றன. அவற்றைச் சுட்டிக்காட்டும் பல ஆய்வுகளும் உள்ளன.

 

இந்தப் பின்னணியில், “விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உடன்பாடு மற்றும் பண்ணைச் சேவைகள் மசோதா 2020” என்ற தலைப்பில் மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் சட்டம் உண்மையில் ஒரு தவறான பெயரைக் கொண்டிருக்கிறது. இந்தச் சட்டம், ஸ்பான்சர்கள் எழுத்துப்பூர்வமாக விவசாய ஒப்பந்தத்தில் நுழைய வேண்டும் என்று கட்டளையிடக் கொண்டுவரப்படவில்லை. முழுச் சட்டமும் எழுதப்பட்ட ஒப்பந்தங்களுக்கானது. ஆனால் எழுதப்பட்ட ஒப்பந்தங்களை அது கட்டாயப்படுத்தவில்லை.

 

இது விவசாயி என்கிற வரையறைக்குள் FPO-க்களையும் தவறாகச் சேர்க்கிறது. மேலும் விவசாயத்திற்கான வழங்கப்படும் விஷயங்களைப் “பண்ணைச் சேவைகள்” என்று விளக்குகிறது. இது பெருநிறுவன விவசாயத்துக்கு இட்டுச்செல்லும் ஓர் “உற்பத்தி ஒப்பந்தத்தை”க் கொண்டுவருகிறது. மூன்றாம் த் தகுதிவாய்ந்த மதிப்பீட்டாளர்களையும் அமலாக்கத்தையும் துணைக்கு அழைக்கிறது!

 

அரசு என்ன செய்திருக்கக் கூடாது?

  • ஒப்பந்தங்கள் கட்டாயமாக இல்லாமல் தன்னார்வமாக இருப்பதால், சிவில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு (பிரிவு 19) கொண்டுவரப்பட்டிருக்கக்கூடாது. இது விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கும். எந்த ஒப்பந்தத்திலும் பலவீனமான இடத்திலேயே விவசாயி இருப்பார்.
  • வழங்கும் பொருட்களைச் சேவைகள் எனக் குறிப்பிட்டிருக்கக் கூடாது (பிரிவு 2 (இ))
  • விவசாய ஒப்பந்தத்துக்கும் வணிக மற்றும் வர்த்தக ஒப்பந்தத்துக்கும் (பிரிவு 2 (ம) மற்றும் 2 (ம) (i) இடையில் வேறுபாடு காட்டியிருக்கக் கூடாது.
  • கார்ப்பரேட் விவசாயத்திற்கான பாதையாக இருக்கும் “உற்பத்தி ஒப்பந்தம்” இருந்திருக்கக் கூடாது (பிரிவு 2 (எச்) (ii))
  • விவசாயி என்கிற வரையறைக்குள் (பிரிவு 2 (எஃப்)) FPO-க்களையும் சேர்த்திருக்கக் கூடாது
  • ECA 1955 மற்றும் பிற சட்டங்களின் வரம்புக்கு வெளியே இந்த ஏற்பாட்டை வைத்திருக்கக் கூடாது.

 

உண்மையில் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்து, ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலை குறைந்தபட்ச இருக்கும்படி செய்திருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு:  ராஜசங்கீதன்

 Content : Alliance for Sustainable N Holistic Agriculture (ASHA), www.kisanswaraj.in

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments