காற்று மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்கள்

NLC

தமிழ்நாட்டில் உள்ள 48% அனல் மின் நிலையங்களால் குறிப்பிட்ட கால அவாகசத்திற்குள் காற்று மாசினை குறைக்கும் FGD கருவியினை  நடைமுறைப் படுத்த முடியாது எனத் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 40 அனல் மின் நிலைய அலகுகளில் 38 அலகுகளுக்கு இன்னும் FGD கருவி பொருத்தப்படவில்லை..

இந்தியாவில் காற்றில் இருக்கும் 50% மேலான சல்பர் டை ஆக்சைடு மாசுக்கும், 30% நைட்ரஜன் டை ஆக்சைடு மாசுக்கும், 20% நுண்துகள் பெருக்கத்திற்கும்  அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்திக்காக நிலக்கரி எரிப்பதே காரணமாக இருகின்றது.

அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் காற்று மாசினை கட்டுப்படுத்தும் பொருட்டு 2015ம் ஆண்டு அனல்மின் நிலையங்களுக்கான புதிய மாசு கட்டுப்பாடு விதிகளை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.  புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முதலில் 2017ம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்து வந்த அறிவிப்புகளின் மூலம் அந்த காலக்கெடு தற்பொழுது 2024/25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த அறிவிப்புகளில் அனல் மின் நிலைய நிறுவனங்களுக்கு சாதகமாக நிறைய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது,

2018 ஜூன் மாதம் வந்த அறிவிப்பின் மூலம் புதிய அனல் மின் நிலையங்களின் நீர் பயன்பாட்டு அளவினை 2.5 m3 / MWh இருந்து  3 m3 / MWh என உயர்த்தி தளர்வுகள் கொண்டுவரப்பட்டது,  2019 மே மாதம் கொண்டுவரப்பட்ட அறிவிப்பின் மூலம் வெளியேற்றப்படும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவுகளை   300 mg / Nm3 to 450 mg / Nm3 ஆக மாற்றியும்

2020 பிப்ரவரி மாதம் வந்த அறிவிப்பில் 40 µg / Nm3 அளவுகளுக்கு குறைவாக சல்பர் டை ஆக்சைடு வெளியிடும் அனல் மின் நிலையங்களுக்கு சல்பர் மாசை குறைக்கும் FGD கருவி பொருத்தப்பட தேவையில்லை எனவும் கூறி தளர்வுகளை கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் கடைசியாக 01  ஏப்ரல் 2021  அன்று வந்த அறிவிப்பில் அனல் மின் நிலையங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்றால் போல காலநீட்டிப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இதன் படி தலைநகர் டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் அல்லது 10லட்சம் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களில் இருக்கும் அனல் மின் நிலையங்களை  A பிரிவிலும்.

 

ஏற்கனவே அதீத காற்று மாசினால் அவதிப்படும் மாசடைந்த நகரங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் B பிரிவிலும்,

நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்கள் C பிரிவிலும் வரையறை செய்யப்பட்டிருந்தது.

இதில் A பிரிவிற்கு 2022 வரையிலும்,  B பிரிவிற்கு 2023 வரையிலும்,   C பிரிவிற்கு 2024 வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதில் எந்த அனல் மின் நிலையம் எந்த பிரிவின் கீழ் வரும் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்பொழுது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனல் மின் நிலையங்களின் பிரிவுகள் தொடர்பான விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன் படி இந்தியாவில் உள்ள 596 நிலக்கரி அனல் மின் நிலைய அலகுகளில்  A பிரிவில் 11%,  B பிரிவில்  11% & C பிரிவில் 78% அனல் மின் நிலையங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 8 அனல் மின் நிலைய அலகுகள் A பிரிவிலும், 16 அனல் மின் நிலைய அலகுகள் B பிரிவிலும், 16 அனல் மின் நிலைய அலகுகள் C பிரிவிலும் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதில் A பிரிவில் உள்ள 8 அனல் மின் நிலைய அலகுகளும் வட சென்னையில் தான் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 40 அனல் மின் நிலைய அலகுகளில் 38 அலகுகளுக்கு இன்னும் FGD கருவி பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனல் மின் நிலையத்திற்கு FGD கருவி பொறுத்த குறைந்தது 2 வருடங்கள் எடுக்கும், இதன்படி தமிழ்நாட்டில் A மற்றும் B பிரிவுகளில் உள்ள  48% அனல் மின் நிலையங்களால் குறிப்பிட்ட கால அவாகசத்திற்குள் காற்று மாசினை குறைக்கும் FGD கருவியினை பொருத்தி செயல்படுத்த முடியாது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இனியும் கால தாமதம் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் காற்று மாசை கட்டுப்படுத்தும் கருவிகள் உடனடியாக பொருத்தப்படுவதை அரசுகள் உறுதி செய்து மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments