நீரோட்டத்தின் வீழ்ச்சி

1992-ம் ஆண்டு சரக்குக்கப்பல் ஒன்று அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா நோக்கிக் பயணித்தது. அந்தச் சரக்குக்கப்பலில் உள்ள ஒரு பெட்டியில் (Container) 28,000 சிறிய வாத்து பொம்மைகள் இருந்தன. அக்கப்பல் மத்திய அட்லாண்டிக் கடல்பகுதியில் நிலவிய பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி மூழ்கியது. கடலில் கொட்டிய வாத்து பொம்மைகள் அனைத்தும் உலகின் பல்வேறு கடற்கரைகளுக்குச் சென்றன.

கடலில் மிதக்கும் ஒரு பொருள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல உதவுவது கடல் நீரோட்டமாகும்.  காற்று, கடல் நீரின் அடர்த்தி, பூமியின் சுழற்சி போன்றவற்றால் கடல்நீரோட்டம் உருவாகும். கடல்நீரோட்டத்தில் இருவகையான நீரோட்டம் உள்ளது. கடல் மேற்பரப்பு நீரோட்டம் (Surface ocean current) மற்றும் ஆழமான நீரோட்டம் (Deep ocean current).

கடல்மட்டத்தின் நிலவியல் அமைப்பு, கடற்கரை அமைப்பு ஆகியவை நீரோட்டம் வேகமாவோ, மெதுவாகவோ அல்லது வேறு திசையில் பயணிக்கக் காரணமாக அமைகிறது. மேற்பரப்பு கடல்நீரோட்டம் 10% நீர் நகர்வதற்கு காரணமாய் உள்ளது. மீதமுள்ள 90% கடல் நீர்  நகர்வதற்கு ஆழமான கடல்நீரோட்டம் காரணமாக உள்ளது. மேற்பரப்பு கடல்நீரோட்டமும், ஆழமான கடல்நீரோட்டமும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது. கடற்கரைப் பகுதியில் நிலத்தை நோக்கி நீர் வருவதற்கும், கடலில் செல்வதற்கும் காரணமாய் இருப்பது காற்று. காற்றின் திசைக்கேற்ப மேற்பரப்பு கடல்நீரோட்டம் செல்லச்செல்ல, ஆழமான கடல்நீரோட்டமும் அத்திசையிலே பயணிக்கும். காற்றின் தாக்கம் கடல்பரப்பில் 400மீ ஆழம் வரை இருக்கும்.

பூமியின் மத்திய ரேகைப்பகுதியிலிருந்து காற்று இரு துருவங்களுக்கும் பயணிக்கும். மத்திய ரேகைப்பகுதிகள் வெப்பமிகுந்த பகுதியாக இருப்பதால் வெப்பமிகுந்த கடல்நீரோட்டங்களாக இருக்கும். இதுவே துருவப்பகுதிகளில் குளிர்ந்த கடல்நீரோட்டமாக இருக்கும். கடல்நீரோட்டம் உலகமுழுக்க பயணிக்கும். ஒரு ‘கன்வேயர் பெல்ட்’ (Conveyor belt) போல் செயல்ப்படும்.

வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா நிலப்பரப்புகளுக்கிடையில் உள்ள கடல்பகுதி அட்லாண்டிக் கடல் ஆகும். ‘பாஞ்சியா’ (Pangea) எனும் பூமியின் முதல் நிலப்பரப்பு 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தபோது அட்லாண்டிக் பெருங்கடல் உருவானது. இது  உலகின் இரண்டாவது பெரிய கடலாகும். சுமார் 29% கடல்நீர் பரப்பளவைக் கொண்டது அட்லாண்டிக் பெருங்கடல். அட்லாண்டிக் பெருங்கடலின் கடல்நீரோட்டம் உயிர்ச்சூழலுக்கு மிகவும் முக்கிய நீரோட்டமாக இருந்து வருகிறது. இந்த அட்லாண்டிக் நீரோட்டத்தினை AMOC (Atlantic Meridional Out turning Circulation) என அழைப்பர்.

அட்லாண்டிக் பெருங்கடல் வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நிலப்பகுதியினால் சூழப்பட்டுள்ளதால் பல மாறுபட்ட தட்பவெப்பநிலைகள் நிலவும். அதனால், கடல்நீரிலும் தட்பவெப்பநிலை வேறுபடும். நீரின் உப்புத்தன்மையில் மாற்றம் ஏற்படும். அட்லாண்டிக் கடலில், கடல் நீரோட்டம் தென்பகுதியில் இருக்கக்கூடிய வெப்ப நீரோட்டத்தை, வடக்குப் பகுதிக்கு கொண்டு செல்லும். வடக்குப் பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால், அங்கு அவை பனிக்கட்டிகளாக மாறும்போது, கடல்நீரிலுள்ள உப்பு தனியாகிவிடுகிறது. அதிகளவான உப்பு ஒன்றாய் சேரும்போது, அவை அடர்த்தி பெற்று ஆழமான கடல்நீரோட்டமாக மாற்றம் பெற்று தெற்குப் பகுதிக்கு வந்தடையும். தெற்கு நோக்கி வரும்போது, வெப்பம் அதிகரிக்க அடர்த்தி குறைந்து அவை மேற்பரப்பு கடல்நீரோட்டமாக மாறும். உலகின் பிற பெருங்கடலுடன், அட்லாண்டிக் கடல் கலந்துள்ளதால் தெற்கு அட்லாண்டிக்கிற்கு வந்துசேரும் கடல் நீரோட்டம் அனைத்து கடல்பகுதிக்கும் பரவும். இந்த அட்லாண்டிக் கடல்நீரோட்டத்தால்தான், ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு பருவ மழை கிடைக்கிறது. மேலும், பூமத்தியரேகைப் பகுதியிலிருந்து கொண்டு செல்லப்படும் வெப்பமிகுந்த கடல் நீரோட்டத்தினால் வடஅமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா பகுதிகளுக்கு மழைப்பொழிவைத் தருகிறது.

இந்த அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் நீராட்டம் 20-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து வலுவிழந்து வருகிறது. கார்பன் உமிழ்வு அதிகரிப்பால் புவிவெப்பமயமாகி வருவதை  நாம் அறிவோம். அதனால், பூமியிலுள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகத் தொடங்கியுள்ளது. கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி அட்லாண்டிக் கடலில் நன்னீர் கலக்கிறது. அதிகளவில் நன்னீர் கலப்பதனால், பனிக்கட்டியாகும் நீரின் உப்புத்தன்மை கடலில் குறைந்து, அட்லாண்டிக் கடல்நீரோட்டத்தின் சுழற்சி வலுவிழக்கிறது.

இந்த கடல்நீரோட்டம் வலுவிழந்தால், உலகத்தின் பல்வேறு இடங்களின் பருவ காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் தென்அமெரிக்கா பகுதிகளில் உணவு உற்பத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அட்லாண்டிக் கடல்நீரோட்டம் வலுவிழக்கும்போது, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா பகுதிகளின் மழையளவு குறையும், குளிரான பகுதியாக மாறும். ஏனெனில், ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கப் பகுதிக்கு மெக்ஸிகோ வளைகுடா மற்றும் ப்ளோரிடா பகுதியிலிருந்து வரும் வெப்பம் கொண்ட கடல் நீரோட்டத்தால் அப்பகுதிகள் மழைப்பெருகின்றன.

Reference

  1. https://www.nature.com/articles/s41558-021-01097-4
  2. https://www.fisheries.noaa.gov/feature-story/reconstruction-major-north-atlantic-circulation-system-shows-weakening
  3. https://www.nationalgeographic.com/environment/article/atlantic-ocean
  4. https://www.frontiersin.org/articles/10.3389/fmars.2019.00260/full

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments