Anthropocene- மனிதர்களின் ஆதிக்க காலகட்டமா?

21-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் பூமியின் சுற்றுச்சூழல் மாற்றத்தை விவரிக்க ஒரு உவமையை உலக அறிவியலாளர்கள் பயன்படுத்தினர். அந்த உவமை மனிதனால், பூமியில் ஏற்பட்ட மாறுதல்களை விவரிக்க பயன்பட்ட சொல்லாடல். பூமியின் 450 கோடி வரலாற்றை விவரிக்க பல யுகங்களாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த யுகங்களுக்குள் பல காலப்பகுதிகள் அடங்கும். மனித இனம் தோன்றியது ‘சீனோசோயிக்’ (Cenozoic) யுகத்தில். இதற்குமுன் இருந்த யுகம் ‘மீசோசோயிக்’ யுகம் (Mesozoic). இந்த யுகத்தில்தான், டைனோசர்கள் தோன்றி,  வாழ்ந்து, அழிந்தன. இந்த யுகங்களை கால அளவீட்டில் பகுத்தது கிடையாது. ஒவ்வொரு யுகமும் தனக்கென தனி உயிர்ச்சூழலையோ, காலநிலை அமைவையோ கொண்டது. நாம் இருக்கும் சீனோசோயிக் யுகத்தில்தான் பாலுட்டிகள் தோன்ற ஆரம்பித்தன. அதனடிப்படையிலும் கடந்த யுகத்தில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்த காரணத்தினாலும் புது யுகத்தை வகுக்க காரணமாய் அமைந்தது. இந்த சீனோசோயிக் யுகம் பல காலப்பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

தற்கால மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான மூதாதையரிலுருந்து மனிதன் உருவானது ‘மியோசீன்’ எனும் காலத்தில்தான். 50 இலட்ச ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த காலப்பகுதியில் இருந்து தற்போது வரை மனிதன் பூமியில் வாழ்ந்து வருகிறான். இரண்டு காலகட்டங்களைக் கடந்து, இப்போது மூன்றாவது காலகட்டத்தில் உள்ளோம். இந்த மூன்று காலகட்டத்தில் வாழ்ந்த மனிதனின் வாழ்கை முறையும், சுற்றுபுறச்சூழலும், காலநிலையும் வெவ்வேறானவை. நாம் வாழும் இந்த காலகட்டம் 12,000 ஆண்டுகளுக்கு முன் உருவானது. கடந்த காலகட்டத்திற்கும், நாம் வாழும் இந்த காலகட்டத்திற்க்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், முதல் வித்தியாசம், கடந்த காலகட்டதைவிட இந்த காலகட்டம் சற்று வெப்பமானதாக இருந்தது. இந்த வெப்பத்தினால்தான், நமக்குப் பருவமழை என்பது உருவானது. இரண்டாவது, மனிதன் ஓரிடத்தில் நிலைப்பெற்று தனக்கான தேவைகளை உற்பத்தி செய்யத் தொடங்கினான். இந்த இரண்டு பெரும் காரணிகள்தான் ‘ஹோலோசீன்’ (Holocene) எனும் தற்போது நாம் வாழும் காலகட்டம் உருவாக காரணமாக இருந்தது.

2000 ஆண்டின் தொடக்கத்தில் உலக அறிஞர்களுக்கிடையே ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாடு மனித செயற்பாடுகளால் பூமியில் ஏற்பட்ட மாற்றங்களை மையமாகக் கொண்டு நடந்த மாநாடாகும். அதில் ‘வில் ஸ்டீபன்’ எனும் அறிவியலாளர் தன் ஆய்வை விவரிக்கும் போது, ‘ஹோலோசீன்’ காலம் என குறிப்பிட்டார், அப்போது இடையில் குறிக்கிட்ட பால் ஜெ. க்ரூட்சன் எனும் ஆய்வாளர், ‘ஹோலோசீன்’ எனும் வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நாம் அந்த காலகட்டத்தை கடந்துவிட்டோம். நாம் இப்போது இருப்பது …. … .. ‘அந்த்ரோபோசீன்’(Anthropocene) காலகட்டம் என கூறினார். இவர்தான், ஒசான் படலம் அழிந்து வருவதை கண்டுபிடித்து, 1995-ல் நோபல்பரிசு வென்றவர் ஆவார். உலக அறிவியல் ஆய்வுகளில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டது இவரின் ஆய்வுகளே. ஆய்வாளர்கள் மத்தியில் அதிகம் மதிப்பு பெற்ற ஒருவர் இந்த கூற்றைக் கூறியது, இந்தப் பிரச்சனையின் ஆழத்தை ஆய்வாளர்களுக்கு உணர்த்தியது.

Paul J Crutzen

பூமியில் மனிதனால் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்க பயன்படுத்தபட்ட ‘அந்த்ரோபோசீன்’ எனும் சொல்லாடல் பூமியில் ஒரு காலகட்டத்தையே உருவாக்கும் என க்ருட்சன் சொல்லும் வரை மற்ற ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை.

‘ஹோலோசீன்’ காலம் உருவாகுவதற்கு காரணமாய் இருந்தது பூமியின் தட்பவெப்பநிலையில் ஏற்பட்ட சிறு மாற்றம்தான். அந்த சிறு மாற்றத்தினால்தான், பூமியில் வெப்பம் அதிகரித்தது. அந்த வெப்ப அதிகரிப்பே பருவமழை பெய்வதை உண்டாக்கியது என்று நாம் பார்த்தோம். அங்கிருந்து விவசாயம் கண்டெடுத்த மனித சமூகம், நாகரிக சமூகமாக மாறி இப்போது நவீன யுகம் வரை வளர்ந்தான். மனித சமூகம் இந்த வளர்ச்சி பெற பூமியின் சூழல் அமைப்பு இத்தனை ஆண்டு காலம் சீரான நிலையான தட்பவெப்பநிலையை வழங்கி முக்கியப் பங்கை அளித்துள்ளது. அப்படி இருக்க இப்போது ஏன் ‘அந்த்ரோபோசீன்’ காலகட்டம் என கூற வேண்டும்? என கேள்வி எழலாம். ஹோலோசீன் காலகட்டத்தில் இருந்து நிலவி வந்த அந்த சீரான தட்பவெப்பநிலையில், நாம் நிலக்கரிகளை எடுத்து எரிக்க ஆரம்பித்தபோது, சிக்கல்கள் வர ஆரம்பித்துவிட்டது. வெப்பம் அதிகரிப்பால்தான் ‘ஹோலோசீன்’ காலகட்டம் உருவானது. அந்த வெப்பம் அதிகளவு தற்போது இருப்பதனாலயே ‘ஹோலோசீன்’ காலகட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாக உலக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமியின் அமைப்பில் இயற்கையாக நடந்த மாற்றத்தைத் தாண்டி முதன்முதலாக மனித நடவடிக்கையால் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துவிட்டது. ‘ஹோலாசீன்’ காலகட்டத்தில் 14°C அளவு இருந்த உலக சராசரி தட்பவெப்பநிலை இப்போது 15°C யை தொட்டுவிட்டது. குறுகிய காலத்தில் அதிகரித்த தட்பவெப்பநிலைக்கு மனித செயல்பாடுகள்தான் காரணம் என அண்மையில் வெளிவந்த IPCC ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல் வளிமண்டலத்தில் கார்பனின் அளவு 420 ppm – யை தொட்டுவிட்டது. கடந்த 30 இலட்ச ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கார்பன் அளவு வளிமண்டலத்தில் பதிவானது இப்போது தான். இந்த கார்பன் அளவு பூமியின் சூழல் அமைவுகளைச் சிதைக்கத் தொடங்கியுள்ளது. அந்த சூழல் அமைவுகளால்தான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் (மனிதன் உட்பட) வாழ பழக்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு ‘அந்த்ரோபோசீன் செயற்குழு’ (Anthropocene Working Group) ஒன்று தொடங்கப்பட்டது. இக்குழு ஆய்வு மேற்கொள்ள பூமியில் உள்ள பல்வேறு இடங்களைத் தேர்வு செய்தது. பசுபிக் பகுதகளில் உள்ள பவளப்பாறைகள், அண்டார்டிகா பனிப்பாறைகள், கனடாவில் உள்ள ‘கிராவ்போர்ட் ஏரி’ (Crawford lake) ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் ‘கிராவ்போர்ட் ஏரி’ தேர்வு செய்யப்பட்டது. அதற்குக் காரணம், இந்த ஏரி 2.4 ஹெக்டர் பரப்பளவில், 24மீ ஆழம் கொண்டதனால், ஏரியின் மேற்பரப்பில் உள்ள நீரும், ஏரியின் ஆழத்தில் உள்ள நீரும் கலக்காமல் இருக்கிறது. மேலும், இந்த ஏரியின் ஆழமான பகுதி, பூமியில் ஏற்பட்ட மாற்றங்களை சந்தித்திராத பகுதியாக இருப்பதால் இந்த ஏரியை இச்செயற்குழு தேர்வு செய்தது. இந்த ஏரியில் உள்ள அடுக்குகளை ஆராயும்போது மனித நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றங்களை துல்லியமாக கண்டுப்பிடித்திட முடியும். அப்படி ஆய்வு மேற்கொள்ளும் போது, ‘ப்ளுடோனியும் ஐசோடோப்’-களை (Plutonium Isotopes) ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 1950-களில் இருந்து வெடித்த ஹைட்ரஜன் குண்டுகளில் இருந்து வெளியேறியவை இந்த ‘ப்ளுடோனியம் ஐசோடோப்கள்’. அதுமட்டுமல்லாமல் அந்த ஏரியின் வண்டல் படிவங்களில் கார்பன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் கார்பன், அனல்மின் நிலையங்களில் இருந்து எரிக்கப்டும் நிலக்கரிகள் ஆதாரமாகக் கொண்டது என இந்த குழு கூறியுள்ளது.

மேலும் இந்த குழு ‘அந்த்ரோபோசீன்’ காலகட்டத்தில் காலநிலை மாற்றம்தான் பெரிய சவாலாக இருக்கும் என்றும், இதைத் தவிர்த்து காட்டுயிர்கள் அழிவு, அயல் தாவரங்களின் பெருக்கம், நெகிழி மாசு, நைட்ரஜன் மாசு போன்றவையும் சவாலாக அமையும் என இந்த குழு எச்சரித்து உள்ளது. இந்த செயற்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தால் பூமியின் வரலாற்றில் புது காலகட்டம் ஆரம்பித்துவிடும். புது காலகட்டம் ஆரம்பிப்பது இங்கு பிரச்சனை இல்லை. அது எதற்க்காக தொடங்கப்படுவது என்பதே பிரச்சனை. ஒரு புது காலகட்டம் தொடங்கப்படும் அளவான மாற்றங்கள் இங்கு நிகழ்ந்துள்ளது மாற்றங்களை எதிர்கொள்ளும் அளவு நம்மிடம் போதுமான வசதிகள் இருக்கிறதா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பெருமரத்தின் உச்சிக்கிளையில் வேகமாக ஏறிக்கொண்டு இருக்கிறோம். கிளை வளைந்து கீழே வருகிறமோ அல்லது கிளை உடைந்து கீழே வருகிறமோ என்பதே இப்போதைய நமது நிலை.

Reference:

  1. Facing the Anthropocene fossil capitalism and the crisis of the earth system – Ian Angus- Book
  2. https://www.theguardian.com/environment/2023/jul/11/nuclear-bomb-fallout-site-chosen-to-define-start-of-anthropocene
  3. https://www.anthropocenemagazine.org/anthropocenejourney/
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments