இமாச்சல துயரமும் விலை உயர காத்திருக்கும் ஆப்பிள் பழமும்:-

தக்காளியைத் தொடர்ந்து ஆப்பிள் விலை இந்தியா முழுவதும் உயரவுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ள, நிலச்சரிவு பாதிப்பே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

“தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுகுவது குறையும்” என்று ஒரு ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுண்டு. ஆப்பிளின் பிறப்பிடம் மத்திய ஆசியாவாக இருந்தாலும் இன்று நம் எல்லோருடைய உணவிலும் அது கலந்துவிட்டது. உடம்பு சரி இல்லாமல் உள்ள ஒருவரை சந்திக்கப்போனால் அவர் எடுத்துப்போகும் பொருட்களில் ஆப்பிள் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் விளைச்சலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆப்பிளை எட்டாக் கனியாக்கிவிடும்.

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தீவிர காலநிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு ஆப்பிள் விளைச்சல் 50% வரை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துளார்கள். முதலில் இந்த ஆண்டு குளிர்காலத்தில் பனிப்பொழிவு இல்லை. பூப்பூக்கும் பருவத்தில் கடுமையான மழைப் பொழிவு, அதன் பிறகு “வால்நட்” அளவிற்கு பழம் இருந்த சமயத்தில் தீவிரமான ஆலங்கட்டி மழை, அதன் பிறகு பழம் தயாராக இருந்த சமயத்தில் கடுமையான மழை வெள்ளம். இவை எல்லாம் சேர்ந்து ஆப்பிள் விளைச்சலைக் கடுமையாகப் பாதித்துவிட்டது.

கடந்த ஆண்டு சுமார் 3.6 கோடி ஆப்பிள் டப்பாக்கள் வணிகமாகியது, ஆனால், இந்த ஆண்டு 1.5-2 கோடி டப்பாக்களாக குறையும் என்கிறார்கள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள். சுமார் 1,13,000 ஹெக்டர் பரப்பளவில் இமாச்சலில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. சிம்லாவும் குலுவும்தான் ஆப்பிள் தோட்டங்கள் அதிகமாக கொண்ட பகுதிகள், ஜூலை-10 வரை பெய்த மழையால் இந்தப் பகுதியில் ஆப்பிள் விளைச்சல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர கன மழையும் சாலைகளை சேதப்படுத்தியுள்ளதால் விளைந்த ஆப்பிளை எடுத்துச் செல்ல முடியாமல் சிம்லா பகுதியில் ஆப்பிள் விவசாயிகள் பழங்களை நதிகளில் தூக்கி எறிந்த காட்சிகள் காணொளிகளாக வலம் வருகின்றன.

இமாச்சலப் பகுதியில் சுமார் 5 லட்சம் மக்கள் ஆப்பிள் தோட்டங்களில் பணிபுரிகிறார்கள். ’சுந்தா பழ நிறுவனத்தின்’ சஞ்சீவ் சுந்தா தெரிவிக்கையில், “நான் யாரிடமெல்லாம் இருந்து ஆப்பிளை வாங்குவேனோ அவர்கள் எல்லோரும் இந்த ஆண்டு விளைச்சல் பாதியாகக் குறைந்துள்ளது என்கிறார்கள்” எனக் கூறினார்.  சம்யுக்த கிசான் மஞ்ச் அமைப்பின் சஞ்சய் சவுகான் தெரிவிக்கையில், ” தோட்டக்கலையில் இந்த ஆண்டு சுமார் 2,500 – 3,000 கோடி வரை இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துளளார். சில இடங்களில் ஆப்பிள் விளைச்சல் 60-80% வரை குறைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஆலங்கட்டி மழையைத் தாங்கக்கூடிய வகையில் வலை (Hail Net) அமைப்பைச் செய்யாதவர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதுவரை ஆலங்கட்டி மழையைச் சந்திக்காத பகுதிகளும் இந்த ஆண்டு ஆலங்கட்டி மழையைச் சந்தித்தால் அவர்களால் தயராக முடியவில்லை. பாதிப்புகளைச் சரியாக கண்டறிந்து விரைவாக நஷ்ட ஈட்டை வழங்குவது மட்டுமே பல்வேறு சிக்கல்களைக் குறைக்கும். ஹேல்வலை அமைப்பதற்கு போதிய மானியத்தை வழங்கி விரைவாகத் துரிதப்படுத்தவேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆப்பிள் விளைச்சலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக நவுனி பல்கலையில் தோட்டகக்கலையில் இருந்து ஓய்வு பெற்ற பரத்வாஜ் தெரிவிக்கிறார். இந்த அளவிற்கு மோசமான வானிலையைச் சந்தித்தது இல்லை என்கிறார்.

ஏப்ரல்-மே மாதங்களில் கடுமையான மழைப்பொழிவு இருந்ததால் தேனீக்கள் மகரந்தசேர்க்கை கூட செய்யமுடியவில்லை, இது ஆப்பிள் விளைச்சலில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹிமாச்சல் பல்கலைக்கழகத்தின் நிஷா ராணி தெரிவிக்கையில், ஆப்பிள் விளைச்சலில் “altitude shift” நடப்பதாகத் தெரிவிக்கிறார், அதாவது இன்னும் உயரமான இடங்களில் ஆப்பிள் விளையக்கூடிய தன்மை மாறிவருதாக தெரிவிக்கிறார்.

ஆலங்கட்டி மழை அதிகரிப்பதற்கும் காலநிலை மாற்றமே காரணம். வெப்பம் அதிகரிக்கப்பதால், வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கிறது, அதனால்தான் ஆலங்கட்டி மழைப்பொழிவு அதிகமாகவும் புதிய பகுதிகளிலும் நடைபெறுகிறது. ஆலங்கட்டிகளின் அளவும் அதிகரிக்கிறது.

இமாச்சல் மாநிலமே பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது, நிலச்சரிவு, வீடுகள், விடுதிகள் அடித்துச்செல்வது, நூற்றுக்கணக்கான உயிரிழப்பு என பெரும்துயரத்தில் உள்ளது இதனால் இமாச்சல் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள ஆப்பிள் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பது அந்த மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலநிலை மாற்றம் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ?

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments