இருபது வருடங்கள் கழித்தும் ஒரு ஆவணப்படம் நம்மைப் பேசவைக்கிறது. தேம்பவைக்கிறது, அமைதியாக்குகிறது, தோளைத் தட்டிக்கொடுக்கிறது. இதைத் திட்டமிட்டே செய்திருக்கிறார் ரான் ஃப்ரிக். இவர் Baraka ஆவணப்படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்.
இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு உள்வயமான அனுபவம். எந்தத் தொந்தரவுமின்றி இருளின் நடுவில் படத்தைப் பார்க்கும் எவரும் தன்னை அதனிடம் ஒப்புவித்துவிடுவார்கள். இந்தப் பேரண்டத்தில் தான் ஒரு அற்பமான சிறு துளி என்பதை உணர்வார்கள். இதைச் சாத்தியப்படுத்த ரான் ஃப்ரிக்கும் அவரது குழுவினரும் எடுத்துக்கொண்ட சிரமங்கள் பல.
இருபது வருடங்களுக்கு முன்பு இந்த ஆவணப்படத்தின் வழியே பகிரப்பட்ட கெஞ்சுதல்களும் கோபங்களும் அறிவுறுத்தல்களும் எச்சரிக்கைகளும் இன்று இன்னும் கூடியிருக்கிறதே தவிரக் குறையவில்லை.
எந்தப் பின்னணிக் குரல்களும் பேட்டிகளும் இல்லாமல் எதை உணர்த்த வேண்டுமோ அதைக் காட்டியிருக்கிறார்கள். மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்கள் பூமியில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளன. நமது மூதாதையர் இயற்கையைக் கண்டு அஞ்சினர், பிறகு வழிபட்டனர், தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இயற்கையை அவர்கள் மாற்ற முற்பட்டதில்லை. மாறாக, இயற்கையின் அங்கமாக மாறினார்கள். காலங்கள் மாறின. மனிதனுக்கு இயற்கை ஒரு சவாலாக மட்டுமே தெரியத் தொடங்கியது. சவால்களை விரும்பியும் மனிதன் அதை எதிர்கொள்ளத் தயாராகிறான். இயற்கை அவனிடம் தோற்றும் ஜெயித்தும் இன்று வரை போராடுகிறது.
இதைத்தான் இந்த ஆவணப்படம் காட்டுகிறது. இது ஒரு புள்ளி மட்டுமே. இன்னும் இன்னும் இதைப் பார்க்கையில் ஒவ்வொரு முறையும் புதுப்புதுப் புரிதல்களை நமக்குத் தந்தபடி இருக்கிறது இந்தப் படம்.
இந்தப் படம் 1992இல் வெளிவந்தது. இதற்காக இந்தக் குழு ஆறு கண்டங்களில் உள்ள 24 நாடுகளுக்கும் பயணப்பட்டிருக்கிறது. இதற்காகப் பதினான்கு மாதங்கள் செலவிட்டிருக்கிறார்கள். மிகுந்த உழைப்பும் பொறுமையும் உறுதியும் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியப்பட்டிருக்கும்.
இந்தப் படத்தின் கேமரா கோணங்கள், படத்தொகுப்பு எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் அணுகமுடியும். தொழில்நுட்பத்தில் மைலகல்லைத் தொட்ட படம். இவை யாவும் இயற்கை குறித்த அற்புதமான உணர்வுகளைக் கடத்தப் பயன்பட்டுள்ளன என்பதுதான் முக்கியம்.
உயர்ந்து நிற்கும் மலைகளும் பனிப்பாறைகளும் நம் முன் விரிய, படம் தொடங்குகிறது. மான்களும் நம்மை வசீகரிக்கும் நமது மூதாதையரை நினைவுபடுத்தும் ஒரு மந்தியும் காட்ட்ப்படுகின்றன. இயற்கை எத்தனை அற்புதமானது, பிரம்மாண்டமானது, பேரழகானது என்று நாம் நினைக்கையில் ரம்பம் ஒன்று ஒரு மரத்தை ஓசையுடன் அறுக்கிறது. மரங்கள் மனிதனுக்கானவை மட்டுமல்ல, எறும்புகளுக்குமானவை. தாம் வாழும் கூட்டைப் பெருஞ்சத்தத்தோடு ஒரு கருவி அறுக்கையில் பதறி ஓடுகின்றன எறும்புகள். அந்த மரம் தன் இடத்திலிருந்து பெயர்ந்து மெதுவாய் மற்ற மரங்களை உரசிக்கொண்டு வீழ்கையில் நம் மனம் துடிக்கிறது. அவை அடங்குவதற்குள் வரும் அடுத்த காட்சி நமக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு பழங்குடியின் வெறித்த பார்வை நம்மைக் கேள்வி கேட்கிறது. அது இறைஞ்சுவதில்லை, கேள்வி கேட்கிறது. நம் மனதோ அதைக் கடக்க நினைக்கிறது. ஒரு பழங்குடிச் சிறுவனின் செடிக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் கண்கள் நம்மைப் பதறவைக்கின்றன. அது அவன் நம்மை புரிந்துகொண்டான் என்கிறபோது வரும் பதற்றம். நாம் நம் கைகளால் மரங்களை ரம்பம் கொண்டு அறுக்கவில்லை, நிலக்கரிச் சுரங்கத்திற்காகக் காடுகளைச் சூறையாடவில்லை, வெடிப்பொருட்கள் கொண்டு காட்டைச் சேதப்படுத்தவில்லை. ஆனால் இதற்கெல்லாம் சாட்சியாக இருந்திருக்கிறோம் என்கிற குற்ற உணர்வு நம்மைத் திடுக்கிடவைக்கிறது.
மனிதன் இயற்கையை வழிபடும் வரை அதன் அங்கமாக இருந்திருக்கிறான். எப்போது அதற்கு ஒரு உருவமும் இடமும் அமைத்தானோ அன்றிலிருந்து இயற்கையை அவன் தூர விலக்கினான்.
சாலையின் நடுவே ஒரு சிறு கோயில் குறுக்காக உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதனால் வாகன ஓட்டுனர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படுகிறது. இதற்காக அரசு அந்தக் கோயிலை அப்புறப்படுத்த நினைக்கிறது என்றால், நம் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்? கோயிலின் ஒரு செங்கலைக்கூடத் தொட அனுமதிக்க மாட்டோம் நாம்.
ஆனால் வளர்ச்சியின் பெயரால் ஒரு காடே துண்டாடாப்படும்போது நிலக்கரிச் சுரங்கம் அமைக்க ஒரு இலட்சம் மரங்கள் வெட்டப்படும்போது, பழங்குடியினர் இடம் மாறும்போது நாம் அதைச் சுலபமாகக் கடக்கிறோம். அதை ஒரு செய்தியாகப் பாவித்து ஒரு நொடி அனுதாபத்தைச் செலவழிக்கிறோம்.
இதையும் வெவ்வேறு விதமாக Baraka பேசுகிறது. நீர்நிலைகள் இந்தியா போன்ற நாடுகளில் வளமாகப் பார்க்கப்படுவதில்லை, புனிதமாகப் பார்க்கப்படுகின்றன. எவையெல்லாம் புனிதமாகக் கருதப்படுகின்றனவோ அவற்றின் மேல்தான் நம் மக்கள் சேற்றை வீசுவார்கள். புனிதத்தைக் கொண்டே மதிப்பீடுகளை உருவாக்குவார்கள், அவற்றை மீறவும் செய்வார்கள். கங்கை நதியைப் புனிதமாக நினைக்கும் நாம்தான் எந்த உறுத்தலுமின்றி அதில் சடலங்களை மிதக்க விடுகிறோம், அதன் கரையில் சடலங்களை எரிக்கிறோம். பல வகையான மீன்களை நமது சடங்குகளால் கொல்கிறோம்.
காசியின் படித்துறைகளில் எரியூட்டப்படும் சடலங்கள் காட்டப்படுகின்றன. பற்றி எரியும் விறகுகளுக்கிடையே கங்கை நதி நோக்கி நீண்டிருக்கும் சடலத்தின் கால்கள் தெரிகின்றன. வெந்து தணிந்துவிடக்கூடிய அந்த உடல் அதே கங்கையில் கலக்க விடப்படுகிறது. அதே கங்கையில் ஆராதனை, பூசைகளும் நடக்கின்றன. ஆண்டாண்டு காலமாக எரியூட்டப்படும் சடலங்களை உள்வாங்கி கங்கை கரிய நிறத்தில் தானே ஒரு சடலமாய்க் கிடப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு சடலத்துக்கு நாம் தருகிற மதிப்பையும், புனிதத்தையும் அதன் பெயரால் சீரழிக்கப்படும் இயற்கையையும் படம் வழி உணர முடிகிறது.
மலைகளின் மடியிலிருந்து பேரருவியாய்ப் பொங்கும் நீருக்கு முன் நாம் எத்தனை சிறியவர்கள். அதனுடன் ஒப்பிட்டால் தூசு நாம். அதை ஒப்புக்கொள்வதில் மனிதனுக்கு இருக்கும் அகந்தைதான் கோயில்களாகவும், மசூதிகளாகவும், தேவலாயங்களாகவும், புத்த சிலைகளாகவும், பிரமிடுகளாகவும் உருவெடுத்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று தனித்தனியான பேருருவங்களை எழுப்பிக்கொள்ள முடியாத காரணத்தால்தான் வழிபாட்டுத் தலங்களின் பிரம்மாண்டத்தில் தன் பங்கைச் செலுத்தியிருக்கிறான். Baraka இதை நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் இதைப் பார்க்குந்தோறும் இது போன்ற தெளிவுகளும் ஏற்படவே செய்கின்றன. எதைத் தொலைத்துவிட்டு நாம் வழிபாட்டுக் என இந்தப் படம் தனது ஆதங்கத்தை முன்வைக்கிறது.
சமீபத்தில் Sherni என்ற படம் வெளிவந்தது. மத்தியப்பிரதேசக் காட்டிலிருந்து வரும் பெண் புலி ஒன்று அருகில் உள்ள கிராமத்துக்குள் புகுந்து மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடிக் கொல்கிறது. அதை எப்படியாவது உயிரோடு பிடிக்க வேண்டும் என்று வனக் குழுவினரும் அந்தப் புலியை சுட்டுக் கொன்று புகழ் பெற வேண்டும் என்று வேட்டை சமூகமும் காட்டைச் சுற்றி வருகின்றன. அந்தப் புலி அரசியல் பிரச்சாரத்தின் மையமாகவும் ஆகிறது. இதில் ஒரு காட்சி உள்ளது. ஏன் புலி காட்டை விட்டு நாட்டுக்குள் வருகிறது என்ற அடிப்படைக் கேள்விக்கான பதிலைச் சொல்லியிருப்பார்கள். நிலக்கரிச் சுரங்கம் என்ற பெயரில் காட்டின் நடுவே மாபெரும் அழித்தொழிப்பு வேலைகளைச் செய்து காட்டின் பாதையை மாற்றினால் புலி எப்படித் தனக்கான உணவைப் பெறும்? அது தன் எல்லையைப் பல்லாயிரம் மைல் தூரத்துக்கு வனத்துக்குள் விரித்துக்கொள்ளும் தன்மையுடையது. அதன் பாதையில் நிலக்கரிச் சுரங்கத்தைத் தோண்டினால் அது உணவுக்கு எங்கே போகும்? இந்தக் கேள்விகளுக்கு அரசிடமும் அதிகாரிகளிடமும் பதில் இருக்காது.
அணையைக் கட்டுவதற்காக என்று விரட்டியடிக்கப்பட்ட பழங்குடியினத்தவரின் கேள்விகளை அவர்கள் சார்பில் முன்வைக்கிறது Baraka.
இந்தப் படத்திற்கு முன்பு இதன் இயக்குநர் காட்ஃப்ரே ரெகியோ என்பவர் இயக்கிய Koyaanisqatsi என்கிற ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். அந்தப் படமும்கூட மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவையே பேசுகிறது. அதில் பெற்ற அனுபவத்திலும் மனநிலையிலும்தான் அவர் Barakaவை இயக்கியிருக்கிறார்.
‘பராக்கா’ என்பதற்கு அரபியில் இப்படியொரு அர்த்தம் உண்டு. இறைவனிடமிருந்து உருவாகும் ஒரு ஆசிர்வாதம் மீண்டும் இறைவனிடம் சென்று சேரும் ஒரு வட்டம்தான் பராக்கா. எங்கிருந்து தொடங்குகிறதோ அங்கே முடிவது என்பதே இதன் பொருள்.
இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது. நாம் எல்லோருமே பிரபஞ்சத்தின் ஆற்றலால் உருவானவர்கள். இறுதியில் அதனுடன் ஒன்று கலக்கிறோம். இடையில் நாம் பிரபஞ்சத்தின் ஆசிர்வாதத்தைக் கைவிடுகிறோம். நம் கண் முன்னால் தனது ஆற்றலை இந்தப் பிரபஞ்சம் இயற்கையின் மூலமாகக் காட்டியபடி இருக்கிறது. ஒரு புலியின் பார்வையிலும், கடலின் ஓசையிலும், காடுகளின் குளிர்ச்சியிலும், பறவைகளின் குரல்களிலும் நாம் பிரபஞ்சத்தைத் தரிசிக்க அனுமதிப்பதே அது நமக்குக் கொடுத்த ஆசிர்வாதம். அதை உரிமை கொண்டாடுவதன் மூலம் அந்தப் பேராற்றலை நிராகரிக்கிறோம், உடைமை கொள்கிறோம், அழிக்கிறோம்..
இதனால் என்ன ஆகும்? இயற்கை ஒரு கட்டத்தில் தன்னைச் சமன் செய்துகொள்ளும். அந்த ஆற்றல் அதற்கு உண்டு. ஆனால் மனிதன்? அவன் மீது அனுதாபம் கொண்டே இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தப் படம் மிக உக்கிரமாகத் தனது பணியைச் செய்துகொண்டிருக்கும்… இயற்கையும்தான்.
- ஜா. தீபா