பேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும்

பேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும்

“வேதியல் பொருள்கள் தொடர்பாகவும் இயற்கை வளங்கள் தொடர்பாகவும் லாப நோக்கிலான பல முடிவுகளை நாம் எடுக்கிறோம். ஆனால் இம்முடிவுகளால் மக்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டாக வேண்டும். தோலிலிருந்து ஞெகிழிக்கும் சோப்பிலிருந்து சலவைத்தூளுக்கும் மாற்றமடைந்து கொண்டே செல்லும் இவ்வகையிலான ஆயிரக்கணக்கான முடிவுகளுக்குப் பின்னாலிருப்பது லாபமாகும். இம்முடிவுகள் அனைத்தும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாவண்ணம் இயற்கை வளங்களை அறிவார்ந்த வகையில் பாதுகாக்கும் என்றோ, பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் என்றோ, நீங்கள் கருதினீர்கள் என்றால் அது கானல்நீர்தான்.

நிச்சயம் அதற்கான சாத்தியமே இல்லை. போகட்டும், இதற்கான தீர்வானது நிலவுகிற பொருளாதார அமைப்பை மறுகட்டமைப்பு செய்வதில்தான் உள்ளது. நான் இங்கு முன்வைக்கும் விளக்கங்கள் எல்லாமே கார்ல் மார்க்சு என்ற மேதையால் ஆழமாக விமர்சிக்கப்பட்ட முதலாளித்துவ அமைப்பின் செயல்பாடு குறித்துத்தான். அதாவது மூலதனத்தால் சிதறடிக்கப்படுகிற உழைப்பானது பல தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கிறது. அதாவது அடிப்படையிலேயே தவறு உள்ளது என்று நான் கருதுகிறேன்.

முதலாளித்துவ அமைப்பின் நடப்பு பொருளாதாரத்திற்கு மாற்றாக சமூகத்தின் அடிப்படைத் தேவைக்கு ஏற்ற பொருளாதார மாற்று கட்டமைப்பு குறித்து நாம் சிந்திக்கத்துவங்கவதில்தான் சூழலியல் சிக்கல்களுக்கான தீர்வு உள்ளது. அது “சோசலிசம்” என்ற மாற்றுதான்….. நன்றி” – எண்ணெய், ஆற்றல் மற்றும் முதலாளித்துவம் என்ற தலைப்பில் 22.2.1976 இல் பேரி காமனர் நிகழ்த்திய உரையிலிருந்து….

தமிழகத்தின் அண்மைக்கால அரசியல் பொருளா­தார இயக்கப்போக்கானது சமூக நலனுக்கும் இயற்கைப் பாதுகாப்பிற்கும் பெரும் பாதகத்தை விளைவித்து இயங்கிவருவதை பெரும்பான்மையான சமூகப் பொருளாதார அறிஞர் பெருமக்களும் பொது­மக்களும் அறிவர். இப்போக்கை திறந்துவிட்ட உலகச் சந்தையின் கீழ் புழங்குகிற உலக மூலதனத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியது நமக்கு அவசர அவசியமாகிறது. கூடங்குளம் அணுஉலைத் திட்டம் தொட்டு நியூட்ரினோ, கவுத்தி-வேடியப்பன் மலை அபகரிப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் சூழலியல் சிக்கல்கள், காவிரிப் படுகையின் எரிவளித் திட்டம் என இப்பட்டியலானது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நீண்டுகொண்டே செல்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் கடந்த கால் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியென்ற சொல்லாடல்களின் ஊடாக தமிழகத்தின் மேற்­கொள்ளப்பட்ட-அரசின் திட்டமாகட்டும், தனியார் நிறுவனங்களின் திட்டமாகட்டும் அல்லது அரசு­ தனியார் கூட்டுத்திட்டமாகட்டும், தனது முதலாளித்துவ நலன் சார் செயற்பாட்டைக்காக்க அடிப்படை மக்கள் நலனையும்-சூழல் கரிசனத்தையும் – அனைத்து வடிவங்களிலும் அரசு இயந்திரம் புறக்கணிப்பதை நாம் கவனிக்கின்றோம். கடலூர், பெருந்துறை சிப்காட், வடசென்னை, திருப்பூர் போன்ற நகரங்களின் நாசகார அவலநிலையே இதன் எதார்த்த- உண்மை நிலையை எடுத்துரைக்கின்றன.

நிலவுகிற நவீன தாராளமயமாக்கல் சூழலில், முத லாளித்துவதின் லாப நோக்க உற்பத்தி முறைக்கும் சூழல் சிதைவுக்குமான உறவைக் குறித்த விஞ்ஞானப் பூர்வ பகுப்பாய்வு முயற்சியானது தமிழகச்சூழலில் பெரும் இடைவெளியாகவே உள்ளது. இதன் அவசியத் தேவையின் பொருட்டே மேற்கிலிருந்து அதற்கான படிப் பினைகளைப் பெற விழைகிறோம். பொருளாதாரத்திற்கும் சமூகச் சூழலியல் சிக்கல்களுக்குமான இருவழி உறவைப் புரிந்துகொள்ளும் நமது முயற்சியின் தொடக்கமாக நவீன சூழல்வாதிகளின் முன்னோடியும் அமெரிக்காவின் புகழ்பெற்ற சோசலிச சூழல்வாதியுமான பேரி காமனரின் சிந்தனைக் குறித்த சுருக்கத்தை முன்வைப்பதே இக் கட்டுரையின் உருப்பொருளாகும். அமெரிக்காவின் மற்றுமொரு புகழ்பெற்ற நவீன சூழல்வாதியான ராச்சல் கார்சனின் சமகாலத்தவரான காமனர் ஒருவிதத்தில் கார்சனிடமிருந்து வேறுப்பட்ட பார்வையுடையவர். அது அவரின் சோசலிசச் சிந்தனையாகும். பெரும்பாலானோர் சூழலியல் சிக்கல்களுக்குத் தனி நபர் அக்கறையற்ற போக்கையும் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் காரணம் காட்டிவந்த வேளையில், அக்கூற்றை மறுத்து முதலாளிய சமூகத்தின் லாப நோக்கிலான உற்பத்தி நடவடிக்கைகளே பெருகிவரும் சூழலியல் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கின்றன என்ற உண்மைநிலையை நவீன உலகுக்கு உரக்க அறிவித்தவர் காமனர். சூழலியல் சிக்கல்களைச் சமூகப் பொருளாதார நீதியோடு தொடர்புபடுத்திப் பார்த்த விதத்தில் காமனர் இன்றைய சூழல்வாதிகளுக்கு முன் னத்தி ஏராகவே இருந்தார் என்றால் அது மிகையல்ல.

பேரி காமனர் (Barry Commoner) நவீனச் சுற்றுச்சூழல் வாதிகளின் முன்னோடி, உயிரியல் துறை பேராசிரியர், சோசலிசவாதி, மனிதநேய ஆர்வலர், போருக்கு எதிரான செயற்பாட்டாளர், முதலாளித்துவத்தை கடுமையாக விமர்சிக்கும் விமர்சகர் என எண்ணற்ற பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். குறிப்பாக சூழலியல் சிக்கல்களை இடதுசாரிப் பார்வையிலிருந்து அணுகி ஆய்ந்து மக்களிடம் அதைச் சேர்த்த விதத்தில் காமனர் தவிர்க்கமுடியாத சூழலியல் அறிவியலாளர் ஆவார். பெருகிவரும் பசி, பஞ்சம், சூழலியல் சிக்கல் களுக்கு மிகைமக்கள் தொகைக் காரணமல்ல, மாறாக முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி முறையே காரணம் என்று வாதிட்டவர். 1950, 60களில் அமெரிக்காவின் அணு ஆயுதப் பரிசோதனைக்கு எதிரான போராட்டத் தின் வாயிலாக அனைவரின் கவனத்தைப்பெற்ற காமனர், சூழலியல் அழிவிற்கான காரணங்களை சோசலிசக் கண்ணோட்டத்தில் ஆய்ந்து எழுதிய தனது நூல்களால் 1970,80 களில் அமெரிக்காவைத் தாண்டி புகழ்பெற்றார். 1971ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது “மூடிவரும் வட்டம்” (The Closing Circle) எனும் நூல், சூழலியல் அழிவிற்கான சமூகப் பொருளாதார காரணி களை விளக்கும் சிறந்த படைப்பாகும். அந்நூலில் அவர் முன்வைத்த “சூழ லியலின் நான்கு விதிகள்” என்ற கருத்தாக்கம், இன்றளவிலும் பல சூழல் ஆர்வலர்­கள் மற்றும் எழுத்தாளர்களால் மேற்கோள் காட்டப்படுகிறது.

1917ஆம் ஆண்டு மே 28இல் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் பிறந்த காமனர் ரஷ்ய யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1937ஆம் ஆண் டில் கொலம்பியப் பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பின் 1941ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தாவரவியில் துறையில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1966 ஆம் ஆண்டில், அமெ ரிக்காவின் மிசௌரி மாகா ணத்திலுள்ள, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் “இயற்கை அமைவின் உயிரியல்” எனும் மையத்தை நிறுவினார். அதன் நோக்கம்: “இயற்கை உயிரிய லின் சூழலைப் புரிந்து கொள் ளும் வகையில் அறிவியல் ஆராய்ச்சியை நிகழ்த்த வேண் டும், அப்போதுதான் மனித னால் அழிக்கப்படும் உயிர் வாழ்வைப் பாதுகாக்க முடியும்” என்பதாகும்.

1970ஆம் ஆண்டின் பூமி வாரத்தில் நடைபெற்ற பெருந் திரளான ஊர்வலங்களாலும் கூட்டங்களாலும் கவரப்பட்ட காமனர், அக்காட்சிகளால் வருந்தவும் செய்தார். ஏனெனில் சூழலியல் சிக்கல்களுக்கு தனி நபர்கள்தான் காரணம் என்றும் அதற்கு தொழில் நுட்பம் சார்ந்த சில மேற்பூச்சு வேலைகளே தீர்வழித்துவிட முடியும் என்பது பெரும்பாலா னோரின் கருத்தாக நிலவியது. அதை மறுதலிக்கும் விதமான அவரின் முயற்சியே “மூடிவரும் வட்டம்: இயற்கை, மனிதன், தொழில் நுட்பம்” என்ற நூலின் வடிவத்தில் வெளி வந்தது. இந்நூல் குறித்து அவர் கூறுவது: “மனிதனின் எந்த செயல்கள் வாழ்க்கையின் வட்டத்தை உடைக்கிறது, ஏன் உடைக்கிறது என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்நூல்” என்கிறார். மேலும் அந்நூலில் முதலாளித்துவத்தின் லாபநோக்க உற்பத்தி முறையே சூழலியல் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கான தோற்றுவாயாக உள்ளது என வாதிட்டு, சூழலியல் சிதைவில் முதலாளித்துவத்தின் பங்களிப்பை காமனர் தோலுரித்துக்காட்டினார். 1971ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் வெளிவந்த “மூடிவரும் வட்டம்” நூலானது, (அமெரிக்காவில் அதுவரை வெளிவந்த சுற்றுச்சூழல் நூல்களில்) அமெரிக்காவின் சுற்றுச்சூழல் சிக்கல்களை விரிவாகவும் ஆழமாகவும் விளக்கும், ஆர்வமூட்டுகிற படைப்பாகும். அதில் அவர் சொல்வது:

“தற்போதைய உற்பத்தி முறையானது தன்னைத்­தானே அழித்துக்கொள்ளும் வகையில் உள்ளது, தற்போதைய மனித நாகரிகமானது தற்கொலையை ஒத்துள்ளது”

 “சூழலியலின் நான்கு விதிகள்”

“மூடிவரும் வட்டம்” நூலானது சூழலியல், உயிர்க் கோளம் மற்றும் அமெரிக்காவின் சூழலியல் சிக்கல்களை குறித்த சில உதாரணங்களுடன் தொடங்கி போகப்போக முக்கிய விடயமொன்றில் மையம்கொள்கிறது. அதாவது பொருளாதாரம், அரசு, நுகர்வு இவை மூன்றும் “சூழலி யலின் நான்கு விதிகளுக்கு” அணுக்கமாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நமது உயிர்க் கோளத்தைக் காக்க முடியும் என்பது அவரது முக்கிய வாதமாகும்.

1. அனைத்தும் அனைத்தோடும் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பூவுலகில் வாழ்ந்து வரும் அனைத்து உயிரினங்களும் பல்வேறு வகைகளில் ஒன்றை ஒன்று சார்ந் திருப்பதாலேயே அவற்றின் உயிர்பிழைப்பு உறுதி செய்யப் படுகிறது. ஒரு செல் உயிரிகள் முதல் பிரம்மாண்ட பாலூட்டிகள் வரை இந்நியதி பொருந்தும். ஒன்றை ஒன்று ஊடுருவியும் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட இவ்வுயிர்ச் சங்கிலியில் ஏதேனும் ஒரு கண்ணி அறு பட்டாலே அதன் விளைவானது பிறிதொரு இடத்தில மிக வேகமாகவோ, பொறுமையாகவோ எங்கோ நிச்சயம் நிகழும் என்பது இயற்கையின் நியதி.

2. அனைத்தும் எங்கோ செல்கின்றன.

சூழலியலின் இரண்டாம் விதி வெப்ப இயக்கவியல் (Thermodynamics) விதியை ஒத்திருக்கிறது. இயற்கையில் உபயோகமற்றது என்று எதுவும் இல்லை. எல்லா ஆற்றலும் பாதுகாக்கப்பட்டு மறுசுழற்சிக்கு உட்பட்டதாகவே உள்ளது. உதராணமாக உதிர்ந்த இலைகள், வீழ்ந்த மரங்கள் மண்ணில் மக்கி, வேறுவிதமான பயன்களை மண்ணிற்கும் பிற உயிரினங்களுக்கும் வழங்குகிறது. நமது உயிர்க்கோளத்தின் இயக்கத்திற்கு இவ்வாற்றல் பரிமாற்றமே முக்கிய பங்களிப்புச் செய்கிறது. ஆனால் உற்பத்தி நிகழ்முறையில் வெளியேற்றப்படும் கழிவுகள் எந்தவித மறுசுழற்சிக்கும் உரித்தானது அல்ல. மேலும் அது இயல்பாக நிகழும் இயற்கையின் இயக் கத்தையும்/கட்டமைப்பைப் பெருமளவில் பாதிக்கச் செய்கிறது. உதாரணமாக அணுக்கழிவுகள், கரிமக் முயற்சியே இந்நூல்” என் கழிவுகள், வேதியல் கழிவுகள் போன்றவை புவிக்கிறார். மேலும் அந்நூலில் கோளத்தைவிட்டு எங்கும் “வெளியில்” செல்வதில்லை.

3. சிறந்ததை இயற்கை அறியும்

மனிதன் தனது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் இயற்கையை மாற்ற முற்பட்டான், ஆனால் அதன் வாயிலாகவே இயற்கையின் கட்டமைப்பைச் சிதைக் கின்றான். லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியின் விளைவாகத் தழைத்தோங்கி யிருக்கும் பொருண்மையே இவ்வுயிர்க்கோளம். வேதியல் தொழிற்சாலைகளில் கணக்பொழுதும் வெளியேற்றப் படும் வேதியல் கழிவுகளால் கடும் அழிவைச் சந்திக்கிறது. இவ்வேதியல் பொருட்கள் மண், நீர், காற்று என அனைத்திலும் கலந்து இயற்கை கட்டமைப்பை அழிப்பதோடு மனித இனத்தின் நோய்க்கும் அழிவிற்கும் வித்திடுகிறது. தற்போது வணிகப் பயன்பாட்டில் இருக்கிற ஆயிரக்கணக்கான வேதியல் பொருட்களின் கூட்டமைவு மற்றும் அவற்றின் தீங்கு குறித்த விவரங்கள் நமக்குத் தெரியாது. அவை “வியாபார ரகசியம்” என்ற பிரிவில் அதன் கூட்டமைவுகள் சட்டபூர்வமாக்கப் படுகின்றன.

4. இலவசம் என்று எதுவும் இல்லை

இயற்கையின் வளங்கள் மனிதனின் அடிப்படைத் தேவைக்காக அல்லாமல் லாப நோக்கங்களுக்காக பல்வேறு வகைகளில் சுரண்டப்படுகிறது. இயற்கையைப் பொறுத்தவரை, சமன்பாட்டின் இரு பக்கத்திலும் சமநிலையைப் பேணவேண்டும், தவறும்பட்சத்தில் அதற்கான விலையை நிச்சயம் கொடுக்க நேரிடும்.

இன்று அனைவராலும் தீவிரமாக விவாதிக்கப்படும் வளங்குன்றா ஆற்றல் குறித்த கருத்தமைவானது காமன ரின் காலத்தில் சிக்கலாகப் புரிந்துகொள்ளப்பட்ட செய்தியாகவே விளங்கியது. அந்நேரத்தில் “மூடிவரும் வட்டம்” நூலின் வாயிலாக வளங்குன்றா ஆற்றலின் முக்கியத்துவத்தை அழுத்தமாக வலியுறுத்திய விதத்தில் காமனரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றா கும். காமனரின் நான்கு விதிகள் சுட்டுவது இதுதான்நம்முன் இருப்பது ஒரு உலகம் மட்டுமே. இதில் ஒன்றின் அழிவு ஒன்றைப் பாதிக்கும். இயற்கையில் உபயோகமற்றது என்று எதுவுமில்லை. நாம் “வெளியே” தேவையற்றது என வீசும் ஞெகிழிக் குப்பைகள் ஆகட் டும் இதர தொழிற்சாலைக் கழிவுகளாகட்டும், எதுவுமே உலகத்தை விட்டு “வெளியே” செல்வதில்லை. எனவே நமது உற்பத்திமுறையின் வாயிலாக இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை சிக்கல் மிகுந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அதேபோல் நமது ஆற்றல் தேவையை நீர், காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வாயிலாகப் பூர்த்தி செய்யும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதாரமும் சூழலியலும்:“சுற்றுச்சூழல் மாசு படுத்தப்பட்டு, பொருளாதாரமும் நலிவடைந்திருந்தால் ,இவ்விரண்டிற்கும் காரணமான நோய்க்கிருமியை உற்பத்தி அமைப்பினில் கண்டுபிடிக்கலாம்” -காமனர்

முதலாளித்துவ சமூகத்தின்-லாப நோக்க மிகை உற்பத்திமுறையால் ஏற்படுகிற பொருளாதாரச் சிக்கல் மற்றும்-சூழலியல் சிக்கல் குறித்த மேற்சொன்ன காமனரின் விமர்சனத்தில் மார்க்சின் தாக்கம் சற்று அதிகம்தான். மனிதர்களின் வாழ்வாதாரத் தேவைக் கான பொருளுற்பத்தி முறையானது, லாபத்திற்கான, மூலதனத் திரட்டலுக்கான உற்பத்தியாக (கடந்த இரு நூற்றாண்டுகளாக ) நவீன முதலாளித்துவ சமூகத்தால் நிகழ்த்தப்படுகிறது. மனிதர்களின் உலகினில் பொருட் கள் என்ற நிலை மாறி பொருட்களின் உலகினில் மனிதன் வாழும் நிலைக்கு அது தள்ளியது (“சரக்குகளின் மாய்மாலம்” குறித்த “சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டு, பொருளாதாரமும் நலிவடைந்திருந்தால், இவ்விரண்டிற்கும் காரணமான நோய்க்கிருமியை உற்பத்தி அமைப்பினில் கண்டு பிடிக்கலாம்”

மார்க்சின் விமர்சனம் இங்கு ஒப்புநோக்கத்தக்கது). தேவைக்கு மீறிய உற்பத்தி முறை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயல்பான போக்காகும். ஆகவே, அதன் விளைவால் ஏற்படும் பொரு ளாதர நெருக்கடியும் அதன் இயல்பான அம்சமாகவே புரிந்துகொள்ள வேண்டும்.

முதலாளித்துவ சமூகத்தின் லாபநோக்க உற்பத்தி முறையானது சமூகக் கரிசனத்தை மட்டும் பின்னுக்குத் தள்ள வில்லை மாறாக அது சூழ லியல் கரிசனத்தையும் சேர்த்தே புறந்தள்ளுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் “உபயோகமற்ற வளர்ச் சியே” நிலவுகிற சூழலிய சிக் கல்களின் வேராக இருக் கிறது என விமர்சித்த காமனர் விஞ் ஞான அமெரிக்கன் இதழில் இவ்வாறாகக் கூறுகிறார்: “தொழிற்சாலை, வேளாண்மை, ஆற்றல் மற்றும் போக்கு வரத்துத் துறைகளில் மேற் கொள்ளப்படும் உற்பத்தி நட வடிக்கைகளே நமது அனைத்து சூழலியல் சிக்கல்களுக்கும் காரணமாக அமைகிறது. இதுவே நமது மக்களை நோய்க்கும் சாவுக்கும் இரையாக்குகிறது.”

ஒரு பக்கம் சமூகத் தேவையை மிஞ்சிய லாப நோக்கிலான மிகை உற்பத்தி. மறுபக்கம் அப்பொருட்களின் உற்பத்தி நிகழ்முறைக்காகச் சுரண்டப்பட்ட வளங்களின் இழப்புகள், இரசாயன உரங்கள் மற்றும் (வளி மண்ட லம். மண், நீரினில் கலக்கிற) உற்பத்திக்கழிவுக் குவியல்கள். முன்சொன்னது பொருளா தாரத் தேக்க நிலைக்கு இட்டுச் சென்றது என்றால் பின் சொன்னது கடல் அமிலத் தன்மை அதிகரிப்பு, மண் வள இழப்பு, தூசிப்படல அதிக ரிப்பு, நன்னீர்ப் பயன்பாடு மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இட்டுச்செல் கிறது. ஆகவே முதலாளித்துவ முறையால் ஏற்படுகிற நெருக்கடியானது ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த இரட்டைக்கேட்டை (பொருளா தாரம், சூழல்) விளைவிக்கிறது.

உலக மக்கள் தொகையில் 1 விழுக்காடு அளவாக இருக்கிற முதலாளித்துவ சமூகத்தின் லாப நோக்க உற்பத்தி முறையால் ஏற்படுகிற சூழலிய பொருளாதார நெருக்கடிகளுக்கான விலையை மீதமிருக்கிற 99 விழுக்காட்டு உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினரே கொடுக்கின்றனர். ஆலைத் தொழிலாளிகள், நடுத்தர உழைக்கும் வர்கத்தினர், சேவைத்துறையினர் என உல கெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரே இச் சிக்கல்களால் வேலையிழந்து, வருமானமிழந்து குடும் பத்தைக் காக்க முடியாமல் சாலைக்கு வருகின்றனர். பொருளாதாரத் தேக்கத்தால் ஏற்படுகிற சமூகப் பாதுகாப்பற்ற சூழலே வால் ஸ்ட்ரீட் முற்றுகை,அரபு நாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்ப நாடுகளில் மக்கள் எழுச்சியாக வெடிப்பதை நாம் பார்க்கிறோம். அதேபோல் சூழலியல் சிக்கல்களை மையமாகக்கொண்டு எழுச்சி பெற்ற கூடங்குளம் போராட்டம், கீஸ்டோன் எண்ணெய்க் குழாய்ப் பதிப்பிற்கு எதிராக அமெரிக்கா வில் எழுச்சிபெற்ற மாணவர் போராட்டமென சூழலியல் சிக்கல்களை மைய நீரோட்டமாகக் கொண்ட எழுச்சிகளே வரும் காலத்தின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் ஆற்றலாக விளங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதன் முன்னோட்டமாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராக மூன்றாண்டுகளாக மக்களை ஒருங்கிணைத்து போராடிய தோழர் சுப.உதயகுமார் தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் என்றால் எண்பதுகளில் காமனர் அமெரிக்காவின் சூழலியல் சிக்கல்களை முன்வைத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.

ஆம், இன்று உலகெங்கிலும் உள்ள பசுமை இயக் கக்கங்களுக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த காமனர், 1980ஆம் ஆண்டில் குடிமகன் கட்சியை நிறுவி, சூழலியல் சிக்கல்களை முன்வைத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அணுசக்திக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் கொச்சை சூழல்வாதிகளுக்கும் எதிரான வாதம் போன்றவற்றால் சூழலியல் பாதுகாப்பில் பெரும் பங்களிப்புச் செய்த காமனர் கடந்து ஆண்டு தனது 95வது வயதில் காலமானார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சோசலிச சூழலிய அறிவியலாளராகத் திகழ்ந்த காமனரின் எழுத்துக்கள், பெருகிவரும் இன்றைய சூழ லியல் சிக்கல்களுக்கானத் தீர்வுகளை நோக்கி நாகரிகச் சமூகத்தை இட்டுச்செல்வதாகும். அவரது எழுத்துக்களும் செயற்பாடுகளும் கோருவது ஒன்றுதான், அது ஒட்டு மொத்த மனித சமூகத்திற்குமான சோசலிச மாற்றாகும்.

குறிப்புகள்:

  1. <http://climateandcapitalism.com/2012/10/01/barry-commoner-1917- 2012/>
  2. <http://pachurchesadvocacy.org/weblog/?p=13345>
  3. <http://climateandcapitalism.com/2012/04/02/four-laws/>
  4.  http://climateandcapitalism.com/2013/07/30/exclusive-an-unpublished-talk-bybarry-commoner/
    • அருண் நெடுஞ்செழியன்

     

    பூவுலகு மே 2014 இதழில் வெளியான கட்டுரை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments