அரபிக் கடலில் உருவாகியுள்ள பிப்பர்ஜாய் எனும் புயல் இதுவரை உருவானதிலேயே மிகவும் வலிமையான புயல் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (11.06.2023) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் “பிப்பர்ஜாய்” வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (12.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்மேற்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவில், தேவ் பூமி துவாரகா (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) தெற்கே சுமார் 410 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் 14.06.2023 காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15.06.2023 அன்று நண்பகல், மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)- மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1982க்கு பிறகு, பருவமழைக்கு முன்னராக அரபிக் கடலில் 8 மூன்றாம் நிலை புயல்கள் உருவாகியுள்ளன அவற்றில் 7 புயல்கள் 2000ஆம் ஆண்டிற்கு பிறகு உருவானவை. இந்த பிப்பர்ஜாய் புயல் இதுவரை அரபி கடலில் உருவான புயல்களில், துக்கடேவிற்கு பிறகு தீவிரமான புயலாகவும் இருக்கும் என இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வினீத் தெரிவித்துள்ளார். மேலும் 2021ஆம் ஆண்டு குஜராத்தில் மிக தீவிர புயலாக கரையைக் கடந்த துக்டே புயலுக்குப் பிறகு அரபிக் கடலில் உருவாகிய வலிமையான புயல் பிப்பர்ஜாய் புயல்தான் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்பர்ஜாய் புயல் வலுப்பெறும் வேகம் குறித்து டவுன் டு எர்த் தளத்துக்கு நேர்காணல் அளித்த காலநிலை ஆய்வாளர் ராக்சி கால் “ அரபிக்கடலில் புயல்கள் உருவாகும் எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் மிகத் தீவிர புயல்களின் எண்ணிக்கை 150 விழுக்காடு அதிகரித்துள்ளது.. இந்த அதிகரிப்பு கடல் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் புவி வெப்பமயமாதலின் கீழ் ஈரப்பதம் அதிகரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
– செய்திப் பிரிவு