எல்லை தாண்டுவது யார்? யானையா, மனிதனா?

வேழம், களிறு, களபம், மாதங்கம், இருள், எறும்பி, பெருமா, வாரணம், பிடி, கயந்தலை,போதகம், பிடியடி ஆகிய இச்சொற்கள் அனைத்தும் யானையை குறிக்கும் சொற்கள். தமிழ் இலக்கியத்தில் யானையை குறிப்பிடாத படைப்புகள் மிகவும் குறைவே. யானையை குறிக்கும் சொற்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேலானவை பட்டியலிடப் பட்டுள்ளதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இன்றைய தமிழ்நாட்டில் யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதை செய்தியில் காண முடிகிறது. யானைகள் உயிரிழப்பது தவிர்க்க முடியாத அம்சம்தானா, பல்லுயிர்ச்சூழலில் யானையின் பங்களிப்பு என்ன என்பது போன்ற கேள்விகளை யானைகள் குறித்த ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர் ராம கிருஷ்ணனிடம் கேட்டோம். யானை என்பது நமது பல்லுயிர்ச்சூழலின் மூலக்கல் (Keystone Species) என்கிறார் யானை ஆய்வாளர் ராமகிருஷ்ணன். யானையின் நடை, உணவு உட்கொள்ளுதல், கழிவு வெளியற்றல், தண்ணீர் அருந்துதல் ஆகிய அனைத்து நடவடிக் கைகளிலும் பல்வேறு உயிரினங்கள் பயன்பெறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் வறட்சி காலத்தில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கவும், வனப்பகுதிகளில் இருக்கும் தாது உப்புகளை அடையாளம் காணவும் யானைகளுக்கு திறன் உண்டு என்கிறார் இவர். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் இருக்கும் காடுகளில் புதர்ச் செடிகளே மிகுந்திருக்கும். இந்த புதர்ச் செடிகளின் ஊடே யானைகள் உணவு, தண்ணீர் தேடி குழுவாக திரியும்போது, அவை நடக்கும் பகுதிகளில் பாதைகள் அமையும். புதர்ச் செடி களுக்கு இடையே யானை அமைக்கும் பாதைகள் மற்ற விலங்குகளுக்கும், சில நேரங்களில் மனிதர் களுக்கும் பயன்படுகிறது. சில இடங்களில் யானைகளும், புலிகளும் ஒரே காட்டுப் பகுதியில் வாழும் நிலையும் உள்ளது. புலிகளுக்கு உணவாகும் சிறு விலங்குகள் இந்த புதர்ச் செடி களுக்கு இடையே மறைந்து வாழும் இயல்பு கொண்டவை. வேட்டையாடும் புலிகளிடமிருந்து தப்பியோடுவதற்கு யானை அமைக்கும் பாதைகள் சிறு விலங்குகளுக்கு பயன்படுகிறது. அதேபோல முழுவதுமாக புதர்களில் மறைந்து சிறு விலங்குகள் வாழ்ந்தால் புலிகளுக்கு உணவு கிடைக்காமல் போய்விடக்கூடும். எனவே யானைப் பாதைகளில் சிறுவிலங்குகள் செல்லும்போது பதுங்கி பாய்ந்து புலி அவற்றை வேட்டையாடுவதும் உண்டு. இவ்வாறு காடுகளில் பல்லுயிர் சம நிலையை பேணுவதில் யானைகளின் நடைப்பழக்கம் பயன்படுகிறது.

யானையின் உணவுத் தேவையும் மேலும் சில விலங்குகளுக்கு உணவளிக்க பயன்படுகிறது. யானைகள் உயரமான மரக் கிளைகளை உடைத்து அவற்றில் உள்ள இலைகளையும், காய்-கனிகளையும் உட்கொள்ளும் திறன் வாய்ந்தவை. இத்திறன் இல்லாத அளவில் சிறிய மான் போன்ற விலங்குகளுக்கு யானையின் இந்த செயல்பாடுதான் உணவளிக்கிறது. இவ்வாறு உயரமான மரக்கிளைகள் உடைக்கப்படுவதால் அந்த மரத்திலேயே புதிய இளம் கிளைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மேலும் பெரிய மரக்கிளைகள் உடைக்கப் படுவதால் சூரிய ஒளி தரையில் பட ஏதுவாகிறது. இதன் மூலம் குறுகிய உயரத்திற்கு வளரக்கூடிய புல் இனங்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக் கின்றன. இதன் மூலம் முயல் போன்ற உயிரினங்களும், புழு-பூச்சிகளும் நீடித் திருக்க முடிகிறது. யானையின் மலக்கழிவுகூட பல உயிரினங்களை வாழவைக்கிறது. ஒரு யானை நாள் ஒன்றுக்கு சுமாராக 16 முறை மலம் கழிப்பதாக தெரிகிறது. யானையின் இந்த மலம் வண்ணத்துப் பூச்சிகளை ஈர்க்கிறது என்பது சுவாரசியமான தகவலாகும். குளிர் நிறைந்த பிரதேசங்களில் அதிகாலை நேரங்களில் யானைகள் வெளியிடும் மலத்தில் இருக்கும் மிதமான வெப்பத்தை அனுபவிக்க வண்ணத்துப்பூச்சிகள் விரும்புவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் யானையின் மலத்தில் இருக்கும் சில தாதுப்பொருட்கள் வண்ணத்துப்பூச்சியின் இனப்பெருக்கத்திற்கு பயன்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

யானையின் மலம் ஈரப்பதத்தில் இருக்கும் போது அவற்றில் இருக்கும் சிறு புழுக்களை உணவாக கொள்வதற்காக மைனா உள்ளிட்ட பறவைகளும், ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்களும், புழுக் களும் யானை மலத்தை வட்டமிடுகின்றன. யானை மலத்தில் உணவு தேடும் இத்தகைய உயிரினங்களை வேட்டையாட வரும் சற்றே பெரிய உயிரினங்களும் யானை மலத்தை எதிர் நோக்கி இருக்கின்றன. யானை மலத்தில் முளைக்கும் காளான் சில வன உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் சுவையான – மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாக விளங்குகிறது. இவை அனைத்தையும் விட யானை உட்கொள்ளும் காய்-கனிகளில் இருக்கும் விதைகள் இயற்கையாகவே செறிவூட்டப்பட்டு யானை மலத்தோடு கலந்து கானகமெங்கும் தெளிக்கப்படுகிறது. இந்த பலவகை தாவரங்களின் விதைகள் காடெங்கும் முளைத்து காட்டின் தாவரச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. காடெங்கும் சுற்றித்திரியும் யானைகள் குளிப்பதற்காகவும், தண்ணீர் குடிப்பதற் காகவும் நீர்நிலைகளுக்கு செல்கின்றன. அப்போது தும்பிக்கையில் தண்ணீரை உறிஞ்சி தன் மேலும், பிற யானைகள் மேலும் தெளிப்பது வாடிக்கையான ஒன்று. அப்போது யானையின் சுவாச மண்டலத்திலும் மற்ற பகுதிகளிலும் இருக்கும் பல்வேறு சின்னஞ்சிறிய தாவர வகைகளும், புழுக்களும் நீர்நிலையில் இருக்கும் நீரோடு கலக்கின்றன. இந்த சின்னஞ் சிறிய உயிரினங்கள் அந்த நீர்நிலையில் இருக்கும் மீன்களுக்கும் மற்ற நீர் வாழ் உயிரினங்களுக்கும் உணவாக பயன்படுகின்றன. வறட்சிக் காலங்களில் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஆற்றல் யானைகளுக்கு இயல்பாகவே இருக்கிறது. எட்டக்கூடிய தூரத்தில் இருக்கும் நீர்வளத்தை கண்டுபிடிக்கும் யானைகள் அந்தப்பகுதியில் குட்டை போன்ற அமைப்பை ஏற்படுத்தி குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இத்திறன் பெறாத மற்ற காட்டு விலங்குகளுக்கும் இதுவே குடிநீர் ஆதாரமாகி விடுகிறது. தாவர உணவை மட்டுமே உண்ணும் யானையின் நல்வாழ்வுக்கு மேலும் சில தாதுப் பொருட்களும் தேவைப்படுகின்றன. இவற்றை கண்டறியும் திறனும் யானைக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. இந்த தாது உப்புக்கள் இருக்கும் பகுதியை கண்டறியும் யானைகள் அந்த தாது உப்புகளை நக்கி தமக்கு தேவையான அளவில் உட்கொள்கின்றன. இந்த தாது உப்புக்களை மற்ற காட்டு உயிரினங்களும் தத்தம் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கின்றன. இவ்வாறாக காட்டிற்குள் பல்லுயிர்ச் சூழலை பாதுகாப்பதில் யானை மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. தனிப்பட்ட முறையிலும் யானை ஒரு சுவாரசியமான விலங்காக இருக்கிறது. ஒரு யானை சராசரியாக 80 ஆண்டு காலம் வாழக்கூடியது. ஆண் யானை சுமார் 10.5 அடி உயரமும், பெண் யானை சுமார் 8.5 அடி உயரமும் இருக்கும். இந்திய யானைகளில் ஆண் யானைகள் சுமார் 4,500 கிலோ முதல் 5750 கிலோ எடைவரை இருக்கும். பெண் யானைகள் சுமார் 3,000 கிலோ முதல் 3,500 கிலோ எடை வரை இருக்கும். இந்த யானைகளுக்கான உணவுத் தேவை மிகவும் அதிகம். அதிகம் பசி கொண்ட மனிதர்களை யானைப் பசி கொண்டவன் என்று அழைப்பது வழக்கம் அல்லவா ?அது உண்மைதான் போலிருக் கிறது! யானையின் எடையில் சுமார் 5% எடை கொண்ட உணவு யானைகளுக்கு அன்றாடத் தேவையாகும். அதாவது ஆண் யானைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 250 கிலோவும், பெண் யானைகளுக்கு சுமார் 175 கிலோ உணவும் தேவை. அதேபோல நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு யானைக்கும் சுமார் 150 – 200 லிட்டர் தண்ணீர் தேவை. இந்த உணவையும், தண்ணீரையும் தேடி யானை கள் அலைந்து திரியும் தன்மை கொண்டவை. ஒரு யானை ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதாக கணக்கிடப் பட்டுள்ளது. அதேபோல யானையின் நுண்ணறிவுத் திறனும் வியப்புக்குரியது. மனிதனுக்கும், குரங்குக்கும் உள்ள மேம்பட்ட நுண்ணறிவுத்திறன் யானைக்கும் உள்ளது. இதன் காரணமாக யானைக்கான உணவும், தண்ணீரும் கிடைக்கும் இடங்கள் பெரிய யானைகளிடமிருந்து, குட்டி யானைகளுக்கு மரபணு ரீதியாகவே கடத்தப்படுகிறது. மேலும் செரிமானத்திற்கு எளிதான இளகிய தன்மை கொண்ட தாவர உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் திறனும் குட்டி யானைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் யானையின் கற்றல் திறனும் அபாரமானது.

யானையின் மேற்கண்ட இயல்புகளை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மிகவும் ஆர்வத்துடனும், அக்கறை யுடனும் விவரிக்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. இத்தகைய யானைகள் இன்று சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது மனிதன்தான் என்பதுதான் வருந்தத்தக்க அம்சமாகும். யானைகளை பாதுகாப்பதில் வனத் துறையினர் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சூழல் ஆர்வலரான மா. யோகநாதன் வலியுறுத்துகிறார். யானையின் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாழிடம் (Habitat), வலசை செல்லும் பகுதிகள் (Traditional Migrative Path), அவற்றை இணைக்கும் இணைப்புப் பாதைகள் (Corridor) ஆகியவை மிகவும் முக்கியமானவை என்கிறார் யோகநாதன். இந்த அனைத்துப் பகுதி களையும் மனிதன் ஆக்கிர மித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். குறிப்பாக யானையின் வலசைப் பகுதிகளை இணைக்கும் காரிடார்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டுளதாகவும், இதுவே பிரச்சினைகளுக்கு வித்திடுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். மேலும் யானைகளை கையாள்வதில் வனத்துறைக்கு மேலும் பயிற்சியும், பக்குவமும் தேவை என்றும் அவர் வலியுறுத்துகிறார். காட்டிற்கு உள்ளும், புறமுமாக மேற்கொள்ளப் படும் “வளர்ச்சித் திட்டங்களே” யானைகளுக்கு பிரச்சினைகளை உருவாக்குவதாக கோவையின் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் கூறுகிறார்.

“மாவுத்தம்பட்டியில் இருக்கும் இம் பீரியல் மதுபான தொழிற் சாலையில் ஆரம்பித்து, கல்வி நிலையங்கள், நகரியங்கள், யோகா மையங்கள், பல்கலைக் கழகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை காட்டுப்பகுதியின் மிக அருகிலேயே அமைந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். காட்டுப் பகுதியில் ஏசிசி சிமென்ட் தொழிற்சாலைக்கான சுண்ணாம்புக்கல் சுரங்கம், ரயில் பாதைகள், தேசிய நெடுஞ் சாலை, ஆயுதப் படை முகாம், சூழல் சுற்றுலாத் தளங்கள், மின்சக்தி திட்டங்கள் ஆகியவற்றுடன் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள தாகவும் இவை அனைத்தும் சேர்ந்தே யானை வழித்தடங்களை இடையூறு செய்வதாகவும் கூறுகிறார். மேலும் யானைகளை கை யாள்வதில் வனத் துறையினரிடம் அறிவியல்ரீதியான அணுகுமுறை இருக் கிறதா என்பதும் ஐயம் என்கிறார் திரு. மோகன்ராஜ். யானைகளை பிடிக்கும்போது கையாளப்படும் நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ள சூழல் ஆர்வலர் களுக்கு தொடக்கம் முதலே அனுமதி மறுக்கப்படுகிறது. மதுக்கரையில் மகாராஜா என்ற யானை இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. மனிதர் களுக்கு ஆபத்தாக கருதப்படும் வனவிலங்குகளை அகற்றுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 2003ம் ஆண்டில் ஒரு வழிகாட்டும் நெறிமுறையை வெளி யிட்டுள்ளது. அதன்படி பிடிக்கப்படும் விலங்களுக்கு, குறிப்பாக யானைகளுக்கு மனிதர்களைப்போலவே ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் யானைகளின் உடல் வெப் பத்தை குறைக்கும் வகையில் அவற்றின் மீது தண்ணீர் அடித்து, ஆசுவாசம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். மேலும் பிடிக்கப்பட்ட அன்றே அந்த யானையை இடமாற்றம் செய்ய முயற்சித்தது தவறான நடவடிக்கையாகும் என்கிறார் இவர்.

யானையை பிடிப்பதற்கான ஆணையை பிறப்பிக்கும் முன்புசுற்றுச் சூழல் ஆர்வலர்களை கலந்தாலோசிக் காமல், ஆணை பிறப்பித்த பின்னரே சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் சடங்கிற் காக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப் படுகிறது. மகாராஜா யானை இறந்தபின் சடலக் கூறாய்வு நடைபெறும் முன்பே, யானையின் தலையில் அடிபட்டதால் யானை இறந்துவிட்டதாக வனத் துறை யினரே செய்தியை பரப்பினர் என்று கூறும் திரு. மோகன்ராஜ், யானைகளை பாதுகாக்க பரந்துபட்ட முயற்சிகள் தேவை என்கிறார். யானைகளை பாதுகாப்பதில் முன் எச்சரிக்கை தேவை என்று கூறும் இவர், காட்டுப் பகுதிகளுக்குள் நடைபெறும் அனைத்து “வளர்ச்சி”த் திட்டங்களுக்கும் வனத்துறையே அனுமதி வழங்குகிறது என்பதை நினைவு படுத்துகிறார். உதாரணமாக, ஏசிசி சிமெண்ட் ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கோ, ஆயுதப் படையினரின் முகாம் அமைப்பதற்கோ, கோவை குற்றாலம் உல்லாச விடுதி அமைப்பதற்கோ வனத்துறை அனுமதி அளிக்கும் முன்னர் இது யானைகளின் வலசைப் பகுதி என்பது வனத்துறையினருக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்புகிறார். “காடுகளை ஒட்டிய பகுதிகளில் அமையும் “வளர்ச்சி”த் திட்டங்களுக்கு ஹாகா அமைப்பு அனுமதி வழங்கும்போதும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, சுரங்கத் துறை ஆகியவற்றுடன் வனத்துறையும் தடையில்லா சான்றிதழ் வழங்கவேண்டும். யானைகளின் வசிப்பிடத்திலோ, யானைகள் காரிடார் என்று சொல்லப்படும் பகுதியிலோ இத்தகைய திட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று வனத்துறை மறுத்திருக்கலாமே?” என்றும் கேள்வி எழுப்புகிறார், திரு மோகன் ராஜ். மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி இதுவரை நடந்த தவறுகளை திருத்த வேண்டும் என்றும், இனி தவறு நடக்காமல் கவனமாக காட்டுப்பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் மோகன்ராஜ் வலியுறுத்துகிறார். காடுகள் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பில் அரசின் திட்டமிடுதலும், அதை நடைமுறைப் படுத்துவதிலும் உள்ள சிக்கல்களை களைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்றும் இவர் குறிப்பிடுகிறார். யானைகளின் வாழ்வாதாரத்தை சிதைப்பதே யானை-மனித மோதல்களுக்கு காரணமாக இருப்பதை உறுதிசெய்கிறார் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ். எனினும் இதில் வனத் துறையை மட்டும் குற்றம் சொல்வதற் கில்லை என்றும் அவர் கூறுகிறார். பொதுவாக காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள்ளும், மனித குடியிருப்புக்குள்ளும் நுழைந்ததாக தகவல் கிடைத்தவுடன் அங்கே வனத்துறையினர் வந்துவிடுவதாக அவர் கூறுகிறார். யானைகளை காட்டுக்குள் செலுத்தும் பணி மிகவும் கடினமானது: ஏனெனில் மக்கள் அனைத்துப் பகுதிகளிலும் கூடி விடுகின்றனர். கூடியுள்ள மக்களுக்கும், யானைகளுக்கும் பாதிப்பு இல்லாமல் யானைகளை வனப்பகுதிகளுக்குள் செலுத்துவதே சவாலான பணி. இரவு, பகலாக இந்தப் பணிகள் நடக்கும். தற்போதைய நிலையில் இது அன்றாட பணியாகிவிட்டது. யானைகள் வனப்பகுதியை தாண்டாமலிப் பதற்காக அகழிகள் வெட்டப்பட்டன. சூரிய மின்வேலிகள் அமைக்கப்பட்டன. யானையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. யானைகளுக்கு தேவையான புல் வளர ஏதுவாக களைச்செடிகள் நீக்கப்படுகின்றன. இவ்வாறு பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும் யானைகள், மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது குறைவதாக இல்லை. மனிதர்கள் விவசாயம் செய்யும் நெல்லும் கரும்பும், தென்னையும் பிற பயிர்களும் தங்களுக்கானதாக நினைக்கும் யானைகள் மனிதர்களுக்கு இழப்பு களை ஏற்படுத்துகின்றன. இதனால் யானைகளை இப்பகுதியில் வசிக்கும் மனிதர்கள் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது.

யானைகளை பிடிப்பதில் வனத் துறையினர் சாதாரணமாக ஆர்வம் காட்டுவதில்லை. பாதிக்கப்படும் மக்களின் தொடர் வற் புறுத்தல் காரணமாகவே யானைகளை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்கின்றனர். பல முனை ஆலோசனைகளுக்கு பிறகே இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. யானைகளை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக மயக்க மருந் துகள் செலுத்தும் முடிவு உடனடியாக எடுக்கப் படுவதில்லை. பல முறை யோசித்த பிறகே இந்த முடிவு மக்களின் நலன்களை முன்னிறுத்தி எடுக்கப்படுகிறது. மயக்க மருந்து செலுத்தப்படும் அத்தனை நிகழ்வுகளும் மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஆபத்தான நிகழ்வுகளே! பெரும்பாலான நிகழ்வுகளில் யானைகள் காப்பாற்றப்படுகின்றன. அரிதான நிகழ்வுகளில் மட்டுமே யானைகள் உயிரிழக்கின்றன. வனத்துறையிலும் அரசின் மற்றத் துறைகளைப் போலவே சுமார் 40% பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. இதுவும்கூட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. காட்டுப் பகுதிகளின் வெளியே உள்ள யானை காரிடார் பகுதிகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வனத் துறைக்கு அதிகாரம் இல்லை. அது மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. ஆனால் இந்த மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத் திற்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. காட்டுப் பகுதியின் வெளிப்புறமாக பல நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளும் யானைகளின் வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்கின்றன. ஆனால் காட்டுப்பகுதிக்கும், அருகே உள்ள நீர்நிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர். இதை அரசின் எந்தத் துறையும் கட்டுப்படுத்துவதில்லை. இவ்வாறு ஆக்கிரமிப்பவர்கள், அந்த நீர்நிலைகளை யானைகள் பயன்படுத்த முடியாதவாறு விடுகின்றனர். இதனால் யானைகள் நீரைத்தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே யானைகளின் பாதுகாப்பு என்பது வனத்துறையை மட்டுமே சார்ந்த எளிமையான அம்சம் அல்ல. அது பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய தலையாய பிரசினை என்கிறார், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் காளிதாஸ். யானைகளை பாதுகாக்க வேண்டும் என்பதையே அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். அதற்கான தொலை நோக்குப் பார்வை கொண்ட கொள்கைத் திட்டங்களை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்காக நிபுணர்கள் வலியுறுத்தும் திட்டங்களை பட்டியலிடலாம்.

1. மேற்குத் தொடர்ச்சி மலையை பாது காக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதியில் அனைத்து விதமான காடழிப்பு வேலைகளையும் தடுக்க வேண்டும்.

2. கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் போல, காடுகளுக்கு அருகாமை நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக (Buffer Zone) அறிவித்து அங்கு காட்டுயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத நடவடிக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

3. யானைகள் பாதுகாப்பு குறித்து நாடு முழுவதுமான ஒருங்கிணைந்த ஆய்வுகள் மேற்கொள்ளாமல், பகுதி-பகுதியாக பிரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் குறிப்பிட்ட பகுதியில் யானை களுக்கான பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வுகாண முடியும்.

4.யானைகளை பாதுகாக்கும் கொள்கை வடிப்பதிலும், திட்டம் தீட்டுவதிலும் குடிமைச் சமூகத் திற்கு, குறிப்பாக சுற்றுச்சூழல் ஆர் வலர்களுக்கு உரிய இடம் அளிக்க வேண்டும்.

5. யானைகள் பாதுகாப்பு குறித்த விரிவான விவாதத்தை முன் னெடுத்து, யானைகளின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேறும் போதுதான் யானைகள் பாதுகாக்கப்படும். யானைகள் பாதுகாக்கப்பட்டால்தான் யானைகள் வாழும் காடுகள் உயிர்ப்புடன் இருப்பதாக பொருள் கொள்ள முடியும். காடுகள் உயிர்ப்புடன் இருந்தால்தான் காட்டை பலவிதங்களிலும் நம்பி இருக்கும் நகரவாசிகளும் நிறைவான வாழ்வை வாழமுடியும்.

சுந்தரராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments