மலிவுவிலை வீடுகள் (Low cost housing) என்றாலே ஏதோ அடித்தட்டு மக்களுக்கான வீடுகள் என்ற மலினமான இழிவானப் பார்வை பொதுவாகவே கட்டிடப் பொறியாளர்களுக்கு உண்டு. பெரும்பாலும் கட்டுநர்களும் வடிவமைப்பாளர்களும் பெரிதாய் இதில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஏனெனில் உயர்நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்கள் மட்டுமே தம் கட்டுமானங்களுக்காகப் பொறியாளர்களை நாடுவார்கள். எவ்வளவு பட்ஜெட் அதிகமான கட்டிடமோ அவ்வளவு அதிகமாகக் கட்டுநரின் இலாபமும் இருக்கும். பொதுவாகவே விளிம்புநிலை மனிதர்களின் கனவு நவீன காங்கிரீட் கட்டுமானமாகவே இருந்தாலும் அவர்களுடையப் பொருளாதார வசதிகளுக்கு மரபுக் கட்டுமானங்களோ இல்லை முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் கைவிடப்பட்டக் காங்கிரீட் கட்டுமானங்களோதான் சாத்தியப்படும்.
லாரி பேக்கர் என்ற கட்டிட வடிவமைப்பாளரும் மாமனிதருமான ‘வந்தேறி’ இங்கேதான் வைரமாய் ஜொலித்தார். கட்டுமானத் துறையால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் தேவைகள் குறித்து நாளும் பொழுதும் சிந்தித்தார் லாரி பேக்கர். தன் வாழ்நாள் முழுமையும் இந்தியாவின் மரபுக் கட்டுமானங்கள் மேல் கொண்ட காதலுக்கு ஒப்படைத்து, அதைத் தான் கற்ற நவீன அறிவியலுடன் இணைத்துச் சிகரம் தொட்ட மனிதர் அவர். லாரி பேக்கரைப் பற்றிச் சொல்லும்போது “அவர் மலிவான வீடுகளைக் கட்டவில்லை; மாறாக மிகச்சிறந்த வீடுகளை மலிவான விலையில் வடிவமைத்தார்” என்கிறது அவரது கனவுப் படைப்பான சென்னை தக்க்ஷிணசித்திராவின் கையேடு. (மரபுக் கட்டுமானங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்)
ஆம்! மலிவான வீடுகள் தரமற்றவையாய் இருக்க வேண்டியதில்லை. மலிவான வீடுகள் கவர்ச்சியற்றதாய் இருக்க வேண்டியதில்லை. மலிவான வீடுகள் வசதிகள் குறைந்ததாய் இருக்க வேண்டியதில்லை. மலிவான வீடுகள் தனித்தன்மையற்றதாய் இருக்க வேண்டியதில்லை.
இந்தியாவின் வேறுபட்டத் தட்பவெப்பநிலைக்கோ, வேறுபட்டக் கலாச்சாரங்களுக்கோ, வேறுபட்ட பண்பாட்டு சமய நம்பிக்கைகளுக்கோ, பழக்க வழக்கங்களுக்கோ, ஒரு குடும்பத்தின் தனிப்பட்டத் தேவைகளுக்கோ, வேறுபட்டப் புவியியலுக்கோ, தனித்தன்மை வாய்ந்த ஒவ்வொரு பகுதிக்குமான கட்டுமானப் பொருட்களுக்கோ மதிப்பளிக்காது எல்லோருடைய வேறுபட்டப் பிணிகளையும் போக்கும் ‘ஒற்றை’ மருந்தாக ‘நவீனக் கட்டுமானங்கள்’ திணிக்கப்படுவதைக் கடுமையாகச் சாடினார் லாரி பேக்கர்.
“இங்கு ஒவ்வொரு மாவட்டமும் தனித்தன்மை வாய்ந்த தனக்கே உரித்தான ஒரு மரபுக் கட்டுமானக் கலையைத் தனக்குச் சொந்தமாகக் கொண்டிருக்கிறது. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக ‘தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன்’ மூலமாக (By trial and error) கட்டிடக்கலையின் பல்வேறு அம்சங்களை எப்படிச் சிறப்பாகக் கையாள்வது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்” என்று இந்தியத் துணைக்கண்டத்தின் மரபுக்கட்டுமானங்கள் குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். மேலும் அவர் “இந்திய மரபுக் கட்டுமானங்களில் எங்கும் ஒற்றைத் தன்மை காணப்படவில்லை” எனக் குறிப்பிடுகிறார் (“Especially in India there is no such thing as ONE traditional INDIAN Architecture” – A Manual of cost cuts for strong acceptable hosing by Laurie Baker).
மேற்கண்ட பத்திக்கான உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை ஒப்பிடும்போது குமரி மாவட்டம் குளிர்ச்சியானது. இரண்டு மாவட்டங்களிலுமே ஓடுகள் வேயப்பட்டக் கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் வெப்பமிகுந்த கடலூர் மாவட்டத்தின் ஓடுகள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு கட்டப்படுபவை. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டு அடுக்குகள் இருப்பதால் அது சிறந்த வெப்பத் தடுப்பாகச் செயல்பட்டு கட்டிடத்தினுள் வெப்பம் இறங்குவதைப் பெருமளவில் குறைக்கின்றது (false ceiling எனப்படும் ‘தாழ்கூரை’யின் அடிப்படையும் இதுதான்). இதுவே கொஞ்சம் குளிர்ச்சியான கன்னியாகுமரி உள்ளிட்டக் கேரளப்பகுதியில் கூரைகளுக்கு ஒற்றை அடுக்கு ஓட்டுக் கூரையே போதுமானதால் பரந்தத் தட்டையான ஒற்றை ஓடே பயன்படுத்தப்படுகிறது.
இதைப்போலவே கூரையின் அமைப்பு, திண்ணைகளின் அமைப்பு, ஜன்னல்களின் அளவு மற்றும் அவை திறக்கப்படும் விதம், சுவரின் தடிமன், கட்டுமானப் பொருட்கள், கட்டிடத்தின் உள் வடிவமைப்பு (space planning) போன்றவை ஒவ்வொரு பகுதிக்கும் தனித்துவமானவை. பல பொதுப் பண்புகள் இருப்பினும் இன்னொரு பகுதியிலிருந்து பல விதங்களில் மாறுபட்டவை. ஒரே பகுதியில் – ஒரே விலைமதிப்பில் அமைந்த வீடாகவே இருந்தாலும்கூட ஒரு குயவர் அல்லது வேளாண் தொழில் செய்பவரின் தேவையும் அவருடைய வீடும் ஒரு நெசவாளியின் வீடும் அவரதுத் தேவையும் வேறுபட்டவை. எவருக்கும் பொருந்தும் இணையத்தில் தரவிறக்கிக்கொள்ளத்தக்க 2BHK / 3BHK வடிவமைப்பு என்று எதுவும் இல்லை. ஒரு பத்து மாடி அடுக்ககத்தில் திசைக்கொன்றாய் வசிக்கும் 40 குடும்பங்களின் தேவை எப்படி ஒரே மாதிரியானதாக இருக்க முடியும்? தனக்குப் பிடித்த வண்ணங்களையும் டைல்களையும் கழிவறை பிட்டிங்க்ஸ்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தாண்டி ஒரு குடும்பத்துக்கு என தனித்தன்மை எதுவும் இல்லையா? எப்படி 9” சுவர்த் தடிமன் உலகமுழுதுக்கும் பொருத்தமானதாய் இருக்க முடியும்?
மரபாயினும் சரி நவீனமாயினும் சரி பிரம்மாண்டங்களையும் ஒற்றைத் தன்மைவாய்ந்தக் கட்டிடங்களையும் வெறுத்தார் லாரி பேக்கர். “சிறியது என்பது அழகானது மட்டுமல்ல அத்தியாவசியமானதும்கூட; அது பெரியது என்பதைவிட இன்னும் அத்தியாவசியமானதும்கூட” என்று அவரது சிந்தனைப் போக்கு குறித்துக் குறிப்பிடுகிறார் எலிசபத் பேக்கர். (பறவைக்கும் கூடுண்டு; அனைவருக்கும் வீடுண்டு – அடையாளம் பதிப்பகம்)
மரபுக் கட்டுமானங்களின் அடிப்படை அம்சங்களை ஆழமாக உணர்ந்த லாரி பேக்கர் அவற்றில் இருந்த சில போதாமைகளை தன் நவீன அறிவியல் அறிவால் இட்டுநிரப்பிச் செழுமைப்படுத்தினார். மரபும் நவீனமும் இணைந்த அவருடையப் புதுப்பாணிக் கட்டிடங்கள் கண்ணுக்கு விருந்தாகவும், நெஞ்சுக்கும் நெருக்கமாகவும், பொருளாதாரச் சுமையைக் குறைப்பதாகவும், சூழலுக்கு இசைந்ததாகவும் இருந்தன.
ஆம்! மலிவான வீடுகள் இப்போது மலிவானவையாய் இல்லை.
(தொடரும்)
- ம.ஜீயோ டாமின்