தெரிந்தே தவறு செய்யும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்!
கொடைக்கானலில் உள்ள பாதரசக் கழிவுகள் கொட்டிக் கிடக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திற்குச் சொந்தமான தெர்மாமீட்ட்டர் தொழிற்சாலையை சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனை அடிப்படையில் மூன்று மாதம் நடத்துவதற்கு யுனிலீவர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. உள்ளூர் நிபுணர் குழுவைக் கூட கலந்தாலோசிக்காமல் சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் 1984ஆம் ஆண்டு தொடங்கப் பட்டு ஹிந்துஸ்தான் யுனி லீவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலை நிறுவனம். தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் நச்சுமிகுந்த பாதரசத்தை பாதுகாப்பு வழிமுறைகளின்படி கையாளாத காரணத்தால் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதரசத்தால் பாதிப்படையத் தொடங்கியது. இதையடுத்து இந்தக் கம்பெனியானது கடந்த 2001ல் தமிழ்நாடு
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையால் மூடப்பட்டபோதிலும், இங்கு கொட்டப்பட்ட தெர்மா மீட்டர் பாதரசக் கழிவுகளில் 290 டன் கழிவுகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை யூனிலீவர் நிறுவனத்தின் தலைமையகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அவ்விதம் அகற்றப்படவில்லை. ஆலையின் பின்னால் இருந்த சோலைக் காட்டில் இந்தப் பாதரசக் கழிவுகள் கொட்டப் பட்டன. இந்தக் கழிவுகளால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, குழந்தைப் பேறு இல்லாமை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன. நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் இறந்து விட்டனர். பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு சட்ட மற்றும் சனநாயகப் போராட்டங்களுக்குப் பிறகு யுனி லீவர் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாதரசக் கழிவுகளைத் அகற்றவும் ஒப்புக் கொண்டது. ஆனால் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை தூய்மைப்படுத்துவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தது பின்னர்தான் தெரியவந்தது. யுனிலீவர் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, அதன் தலைமையகம் அமைந்துள்ள இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்த தாகும். யுனிலீவரின் இந்த ஏமாற்று வேலையை பல சுற்றுச்சூழல் அமைப்புகளும், அரசியல் கட்சி களும் கண்டித்திருந்தன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சோதனை அடிப்படையில் தொழிற்சாலையில் உள்ள பாதரசக் கழிவுகளை அகற்றுவதற்கான அனுமதியை யுனிலீவர் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது. இந்த அனுமதி வழங்கிய செய்தியைக் கூட கொடைக்கானல் போராட்டக் குழுவினருக்கோ, சுற்றுச்சூழல் ஆர்வலர் களுக்கோ தெரியப்படுத்தாமல் வழங்கியுள்ளது. ஜனவரி 3ஆம் தெதி யுனிலீவர் நிறுவனம் வெளி யிட்ட செய்திக் குறிப்பின் மூலமாகத்தான் சுத்தம் செய்வதற்கான அனுமதியை தாங்கல் அவர்கள் பெற்றிருக்கும் செய்தியை நம்மால் அறிய முடிந்தது. இந்த மறைமுக நட்வடிக்கை பல்வேறு சந்தேகங்களை கிளைப்பியுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனிடம் பேசியபோது “தெர்மாமீட்டர் தொழிற்சாலை சர்வதேசத் தரத்தில் சுத்தப்படுத்த வேண்டும் என்பதும், தொழிற்சாலையிலிருந்து நீரோடைகள் வழியாக பரவிய பாதரசம் எந்தெந்த இடத்திலெல்லாம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவற்றையும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இதற்கான அனுமதியை தற்போது வழங்கியிருப்பது முறைகேடானது.
இந்த முடிவை எடுக்க வேண்டியது உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட உள்ளூர் நிபுணர் குழுதானே தவிர மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்ல. இந்தக் குழுவின் கூட்டம்கூட கடந்த ஒரு ஆண்டாக நடத்தப்படாத நிலையில் மறைமுகமாகத்தான் சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது. அவர்கள் சுத்தம் செய்யும் தரம் குறைந்த நடைமுறையால் கொடைக்கானலில் பரவியுள்ள முழு பாதரசக் கழிவுகளையும் அகற்றிச் சுத்தம் செய்ய முடியாது. இவர்கள் சுத்தம் செய்து முடித்த பின்னரும்கூட அந்தத் தொழிற்சாலை வளாகத்தில் 200கிலோகிராம் வரை பாதரசக் கழிவானது மண்ணோடு மண்ணாக கலந்துதான் இருக்கும். எனவே இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படுவது போன்ற சர்வதேச நடைமுறையில் சுத்தம் செய்தால்தான் கொடைக்கானலும் சுற்றியுள்ள பகுதிகளும் பாதரசக்கழிவு அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்” என்றார். பாம்பார் சோழா சூழல் அமைப்பின் ஓர் அங்கமாகவும் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமான கொடைக்கானல் சர்வதேசத் தரத்தில் தூய்மைப் படுத்தப்பட வேண்டும் என்பதும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த தவறான முடிவை திரும்பப்பெற வேண்டும் என்பதுமே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
புகைப்படம் : அமிர்தராஜ் ஸ்டீபன்