வடசென்னையில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்று மாசை வெளியிட்டிருப்பது பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு எண்ணூர், மணலி உள்ளிட்ட வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி குறித்து தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பாயம் பிறபித்த உத்தரவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் காற்று மாசைத் தடுப்பதற்கான செயல் திட்டம் மற்றும் வடசென்னையில் சுற்றுச்சூழல் மேற்கொண்டு புதிய தொழிற்சாலைகளை தாங்கும் அளவிற்கு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய சுற்றுச்சூழல் துறை, மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
தற்போது இந்த நிபுணர் குழு தனது இடைக்கால அறிக்கையை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்தில் மட்டும் வடசென்னையில் உள்ள ஒரு அனல்மின் நிலையம் உட்பட 9 தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மாசை வெளியேற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 3வது சுத்திகரிப்பு ஆலை மட்டும் குறிப்பிட்ட ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்தில் 418 நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாசை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் Resid upgradation ஆலை 352 நாட்களும், சுத்திரிகப்பு ஆலை ஒன்று மற்றும் இரண்டு 334 நாட்களும், ப்ரொப்பிலின் ஆலை 161 நாட்களும், DHDS ஆலை 121 நாட்களும், அளவுக்கு அதிகமாக மாசை வெளியிட்டுள்ளன. இதற்காக மட்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 5ன் கீழ் 6 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அபராதமாக ஏன் விதிக்கக் கூடாது எனக் கேட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் குறிப்பாணை அனுப்பியுள்ளது.
இதேபோல வடசென்னை அனல்மின் நிலைய ஸ்டேஜ் 1 மட்டும் 273 நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாசை வெளியிட்டுள்ளது. இதற்காக 1 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை ஏன் அபராதமாக விதிக்கக் கூடாது என மாசு கட்டுப்பாடு வாரியம் குறிப்பாணை அனுப்பியுள்ளது. இக்குறிப்பாணைகளுக்கு பதிலளித்துள்ள நிறுவனங்கள் அபராதத் தொகையை மறு ஆய்வு செய்யக் கோரியுள்ளனர்.
compensation
மேலும் நிபுணர் குழுவானது மணலி தொழிற்சாலை பகுதியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த விரிவான பரிந்துரைகளையும் அளித்துள்ளது. அதில் மிக முக்கியமாக மணலி தொழிற்சாலை பகுதியில் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயுக்களை வெளியேற்றாத ஆலைகளை மட்டுமே மேற்கொண்டு புதிதாக அமைக்க அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நுண்துகள் மாசு வெளியேறுவதால் FGD போன்ற காற்று மாசுபாடு தடுப்புக் கருவிகளை விரைவாக பொருத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இப்படி ஒரு சூழ்நிலையில்தான் எண்ணூரில் அமைக்கப்பட்டு வரும் 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற வரும் ஜனவரி 6ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வடசென்னை பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலை மற்றும் அனல்மின் நிலையங்களின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகளால் அவதிப்பட்டு வரும் மக்கள் இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சதீஷ் லெட்சுமணன்