பெண்ணியமும் அரசியல் சூழலியலும்

One is not born, but rather becomes, a woman. No biological, psychological, or economic fate determines the figure that the human female presents in society; it is civilization as a whole that produces this creature, intermediate between male and eunuch, which is described as feminine. Only the intervention of someone else can establish an individual as an Other.”

  • Simone De Beauvoir, “The Second Sex”

“Climate change is a man-made problem and must have a feminist solution”

  • Mary Robinson,

Former President, Ireland

“ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை, பெண்ணாக மாறுகிறாள்” என்று சிமோன் தெ பூவ கூறுகிறார். அதாவது ஒரு பெண் தன் சுயத்துடன் இயல்பாக இருக்க ஆணாதிக்க சமூகம் விடுவதில்லை என்றும், சமூகம்தான் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது என்று கூறுகிறார். இதனை, தன்னிலை மறுக்கப்பட்ட “மற்றதன்மை” என்று அவர் கூறுகிறார். இப்படியான சுயத்திற்கும் மற்றதன்மைக்கும் இடையிலான அந்நியமாதல் தன்மையை உடைக்கின்ற அம்சத்தில் இருந்து துவங்கிறது பெண்ணிய அரசியல்.

பெண், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒடுக்கப்படுகிறாள், அந்நியப்படுத்தபடுகிறாள். இந்தியாவில், சாதிய சமூகம் பெண்ணுடல், பெண்ணுணர்வு மீதான ஒடுக்குமுறைக்கு முக்கியக் காரணமாக உள்ளது. பெண் என்பவள் தீட்டானாவள் என்று மனு கூறுகிறது. பெண்ணுடல் மீது தீட்டு, அசுத்தம் போன்ற கற்பிதங்கள் மதம் சார்ந்த வகையில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

அதுபோல, சாதிய பண்பாட்டு கலாச்சாரம் பெண் உரிமை, பெண் உணர்வு ஆகியவற்றை மறுக்கும் அம்சங்களாக உள்ளன. பெண்ணை சொத்தாகவும், உடைமையாகவும், உற்பத்திப் பண்டமாகவும், கருதும் மனநிலை நம் சமூகத்தில் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. பெண்ணின் இயல்பு தன்மை, இயல் உணர்வுகள் மறுக்கப்பட்ட சமூகமாக இந்திய சமூகம் உள்ளது.

 

 

இந்த பின்னணியல்தான் பெண் விடுதலை – சமூத்துவதற்கான பெண்ணிய கோட்பாடுகள் உருவகம் பெறுகின்றன. உலகளவில் பெண்ணியம் சாரந்த பல கோட்பாடுகள் உள்ளன.

அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்று மைல் அணுஉலை விபத்திற்கு பின்பு, 1970களில் “சூழலியல் பெண்ணியம்” என்னும் கருத்தாக்கம் உருவானது. இயற்கையை செழுமை மற்றும் தழைத்து ஓங்குதலின் (Fertility) பிரதிபலிப்பாக பார்க்கும் பார்வையிலிருந்து இக்கோட்பாடு உருவானது.

பெண்ணை இயற்கையின் உருவகமாக பார்க்கும் ஆண் மைய சிந்தனையும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக, பூமியை பெண்ணாக உருவகப்படுத்தும் தன்மை பரவலாக உள்ளது. இயற்கை வள கொள்ளையையும் பெண் உடல் மீதான தாக்குதலைம் ஒன்றாக உருவகப்படுத்துகிற தன்மையும் உள்ளது.

இதன் உளவியல் மற்றும் அரசியல் பற்றி லெபனான் நாட்டைச் சார்ந்த பெண்ணிய ஆய்வாளர் அஸிஸா அல்-ஹிப்ரி கூறுவது: “பெண் ஏதேனுமொரு விதத்தில் இயற்கையுடனும், பிரபஞ்சத்தின் லயங்களுடனும் (Rhythms) ஒன்றென இணைந்திருப்பதை ஆண் அடிக்கடி பார்த்தறிந்தான். பெண்ணுடலின் லயம் அதற்கு ஒத்திசைந்து இருந்தது. மேலும் இயற்கை பெண்ணைப்போலவே மறுஉற்பத்தி செய்து அதன் ‘குழந்தைகளை’ ஊட்டி வளர்க்கிறது. இவ்வாறாக இயற்கை ‘இயற்கைத்தாயாக’ மாறியது. பெண்ணுக்கும், இயற்கைக்கும் இடையிலான உறவு மிகைப்படுத்தப்பட்டதாக, மாயமந்திரமாக மனிதக்கண்ணுக்குத் தெரிந்தது. இயற்கையோடு பெண் கொண்டிருந்த அடிப்படை ஒருமைப்பாடு பற்றிய நம்பிக்கையை ஆண்கள் பெண்கள் ஆகிய இரு தரப்பினரும் பெற்றுக் கொண்டனர்.

 

 

 தொழில்நுட்பத்தின் தொடக்க கட்டத்தின் போது, ‘மாயமந்திர உலகப்பார்வையோடு மக்கள் வாழ்ந்திருந்தபோது அந்த மாயமந்திர உலகப் பார்வையின் பலனாக விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலும் அது பெண்களின் கண்டுபிடிப்பாகும். மண், விதை ஆகியவற்றின் இனப்பெருக்க வளத்தில் பெண்கள் தங்கள் சொந்தப் பாலியல் படிமத்தை உணர்ந்தார்கள். இந்த தொடக்ககால  கவித்துவக் கண்ணோட்டத்திலிருந்து பயிரிடுதலின் நுட்பங்கள் வகைவகையான பாலியல், ஆன்மவியல் குறியீடுகளாக அரும்பின. புதிய விவசாயப் பண்பாடுகள் நிலத்தைத் தாயின் கருப்பையாகவும், விதையையும் மழையையும் விந்தாகவும், விளைச்சலை வாரிசாகவும் பார்த்தன.’

ஒருவேளை இயற்கையைப் பெண்ணாகப் பார்த்த இந்தப் பார்வைதான் இறுதியாக ஆண் தன் ஆதிக்கத்தை இயற்கையின் மீதும் நீட்டிக்கிற முயற்சிக்கு  இட்டுச் சென்றிருக்கலாம். பெண்ணை மற்றவராகக் கருதிய அதே வகைப்பாடு விரிவாகி இயற்கையையும் சுற்றி வளைத்திருக்கலாம்.

 

 

இறப்பற்ற வாழ்வு, மறு உற்பத்தி, தாய்மை ஆகிய வளமானப் பண்புகளை இயற்கை பெற்றிருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆண் இயற்கையையும் சார்ந்து இருந்தான். இயற்கையோடு ஒப்பிடும்போது அவனிடம் இருந்த அதிருப்தி உணர்வு மேலும் இறுக்கமானது. இவ்வாறாக தொடக்கத்தில் பெண்ணைப்போலவே இயற்கையும் அச்சந்தருவதாக, மதிப்பிற்குரிய ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. பின்னர் பெண்ணைப் போலவே இயற்கையும் ஆண்தொழில்நுட்பத்தின் மூலமாக அவனின் ஆதிக்கத்திற்கும், பகைமைக்கும் இலக்கானது.

தொடக்கத்தில் ஆக்கபூர்வமான நன்மைக்காக உருவாக்கப்பட்ட கருவிகள் பின்னர் பெண்ணின் மீதும், இயற்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கும், அதனை அழிப்பதற்குமான முகவர்களாக மாற்றப் பெற்றன. ஆதிக்கத்தின் மூலமும், உற்பத்தியின் மூலமும் ஆண் அதிகாரத்தையும், இறப்பற்ற வாழ்வையும் ருசிகண்டுகொண்டான். அவன் பெண்ணையும், இயற்கையையும் வழிபாட்டிற்குரியதாக மாற்றிக் கொண்டான். உற்பத்தியின் வழியாக ஆதிக்கத்தைச் செலுத்தியதன் மூலம் (பெண்ணின் மீது) தான் கொண்டிருந்த பழியைத் தீர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது.”

 

 

இயற்கையை பாலின அடிப்படையில் உருவகப்படுத்தி அதனை சூழலியல் பெண்ணியமாக உருவாக்குவது என்பது மாயாவாதத்திற்கே கொண்டு செல்லும். எந்த உயிராக இருந்தாலும் அதன் பரிணாம சுழற்ச்சியை அடைய வேண்டும் என்பதே இயற்கை விதி. உயிரற்ற பொருட்களுக்கும் அதே விதி தான். இயற்கையில் அனைத்தும் இயற்பியல் தன்மையில் தான் இயங்குகின்றன. இதில் எந்த ஒரு பாலினத்திற்கோ, உயிரினத்திற்கோ உயர்வான அம்சங்கள் என்று எதுவுமில்லை. உயரினத்திற்கே உரிய சிறப்பு குணங்கள் உள்ளன. ஆற்றல் உள்ளன. நுண்ணறியு உள்ளன. இது இயற்கையின் பரிணாமத்தில் உருவானது. சுற்றுச்சூழலோடு தகமவைத்துக் கொள்ளுதல் என்பது எல்லா உயிரினங்களும், உயரிற்ற அங்களுக்கும் பொதுவானவை. இதில் சார்பியல் தன்மை உள்ளது. தனித்து எவையும் இயங்குவதில்லை. எனவே இயற்கையை ஒரு தனித்துவ பாலின அடையாளத்தோடு பார்க்க முடியாது.

அதேரேத்தில் நம் பூவுலகின் இயற்கை என்பது செழுமை, தழைத்து ஓங்குதல், என்னும் தன்மையைக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த இயற்கை குணம் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை.

இயற்கை குணங்களை இழந்த சமூகமாக ஆணாதிக்க – தனியுடைமை சமூகம் உள்ளது. இயற்கையிடம் இருந்து அந்நியமாக்கப்பட்ட உணர்வுகள் கொண்டவர்களாக மனிதர்களை மாற்றி வருகிறது. ஆயுத குவிப்பு, போர்வெறி, இயற்கை சுரண்டல் போன்றவற்றுக்கு பின்னால் ஆணாதிக்க சிந்தனையும் கலந்தே உள்ளது. புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றுக்கும் பின்னாலும் ஆணாதிக்க உற்பத்தி முறை காரணமாக உள்ளது. எனவே, சூழலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெண்ணிய பார்வையிலான தீர்வு மிகவும் அவவசியமானது. பாலின சமத்துவம் என்பது இயற்கையின் சமபாட்டை உறுதி செய்வதாகும். பாலின சமத்துவத்தோடு கூடிய சூழலியல் நீதியை அடைய பெண்ணிய பார்வையிலான அரசியல் சூழலியல் தேவைப்படுகிறது. அந்த வகையில் சமூக அறிவியலையும், இயற்கை அறிவியலையும் உள்வாங்கிக் கொண்ட சூழலியல் பெண்ணியத்தின் தேவையாக உள்ளது.

இதில் பெண்ணுடல் சார்ந்த மூடநம்பிக்கைகள், புனிதத் தன்மைகள் உடைக்கப்பட வேண்டியது முதல் படி.   பெண்ணுடலுக்கு என்று தனித்த புனிதத்துவம் என்று எதுவும் இல்லை. எல்லா உயிர்களைப் போல பெண்ணுடலும் metabolism, mutation என்னும் தன்மையில் தான் இயங்குகிறது. அதேரேத்தில் உயிரினங்களுக்கான நுண்ணறிவு என்பதில் பெண்ணின் நுண்ணறிவு என்பது கூடுதல் ஆற்றலோடு உள்ளது. இது பரிணாம வளர்ச்சியின் காரணமாக நிகழ்ந்தது.

முதலாளித்துவமும் மார்க்சியமும் இயற்கையை ஒரே பார்வையில் அணுகுகிறது என்னும் கருத்தை மரியா மைஸ்யும், வந்தனா சிவாவும் தங்களுடை “Ecofeminism” புத்தகத்தில் கூறுகின்றனர். இயற்கையுடனான இணைப்பை இந்த கோட்பாடுகள் உணர தவறிவிட்டன என்றும் கூறுகின்றனர்.  இயற்கையை வெறும் உற்பத்திக்கான மூலப் பொருளாகப் பார்க்கும் பார்வை மட்டுமே உள்ளதாகக் கூறுகின்றனர். முதலாளித்துவத்தின் மீதான இந்த பார்வையை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மார்க்சியமும் இதே பார்வை கொண்டுள்ளது என்னும் கருத்தை நிச்சயமாக நாம் ஏற்க முடியாது.

தனியுடைமை ஒழிப்பை இறுதி லட்சியமாக கொண்டுள்ளது மார்க்சியம். இயற்கைவளங்கள் பொதுவுடைமையாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. தனியுடைமை மனிதனை இயற்கையிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது என்று மார்க்ஸ் கூறுகிறார். இயற்கையோடு இயைந்த வாழ்வியலையே மார்க்சியம் முன்வைக்கிறது. எனவே மார்க்சியத்தை மறுத்துவிட்டு சூழலியல் பாதுகாப்பு என்பது கானல் நீராக மறையும்.

மேலும் இயற்கைக்கும் உயிரினங்களுக்குமான தொடர்பை ஆன்மிகத் தன்மையில் பார்க்கிறார்கள் மரியாவும், வந்தனா சிவாவும். இயற்கையில் உள்ள அனைத்திற்குமான தொடர்பு என்பது ஆன்மிகத் தன்மையிலானது என்றும் கூறுகின்றனர். இயற்கையை இப்படியான மாயாவாத அடிப்படையில் புரிந்து கொள்ள முடியாது. அதன் இயங்கியல் தன்மையிலேயே புரிந்துக் கொள்ள முடியும். எனவே அவர்களின் சூழலியல் பெண்ணியம் என்பது ஆன்மிக பெண்ணியமாகக் கொள்ளலாம். இவை இயற்கையை புனைவுவாத அடிப்படையில் புரிந்துக் கொள்வதாகும்.

இயக்கவியல் தன்மையிலான சூழலியல் பெண்ணியமே தீர்வுகளை நோக்கி நகர்வதாக இருக்க முடியும். இயற்கை குறித்த இயற்பியல் பார்வை, மானுட அறிவாண்மை, சமூக நீதி, சூழலியல் நீதி, என்னும் தளத்தில் பாலின சமத்துவ பார்வை கொண்ட சூழலியல் பெண்ணியமே சமூக அறிவியல் பார்வையில் சரியானதாக இருக்க முடியும்.  இயற்கைவளத்தின் மீதான பாலின உரிமை, உற்பத்தியில் பாலின உரிமை, இயற்கைவள பாதுகாப்பில் பாலின சமத்துவம் போன்ற அம்சங்களை சூழலியல் பெண்ணியம் மையமாக கொண்டு இயங்க வேண்டும்.

இயற்கையாக இயல்புத் தன்மையை உறுதிசெய்யும் உரிமை போராட்டத்தில் பெண்ணியமும் அரசியல் சூழலியலும் இணைகிறது. பெண் தன் உடல் மீதான உரிமை பெற போராடும் அரசியலே – பெண்ணியம், அதுபோல இயற்கையின் இயல்பு அங்கங்களை காப்பாற்றும் அரசியலே – அரசியல் சூழலியல். சமூக நிலையில் பாலின சமத்துவத்தைக் கோருவது பெண்ணியம். அதுபோல பல்லுயிர் ஒம்புதலை அடிப்படையாகக் கொண்டதுதான் அரசியல் சூழலியல்.

ஆதார நூல்கள்:

1 Ecofeminism, Maria Mies & Vandana Shiva, Rawat Publication, 2010.

  1. மார்க்சியம் – பெண்ணியம் உறவும் முரணும், லிதியா சர்ஜ்செண்ட், விடியல், 1998.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments