காந்தியெனும் பிற்போக்குவாதி!

சென்ற இதழின் தொடர்ச்சி…

எந்தவொரு பிரச்சினையையும் இருவிதங்களில் அணுக முடியும். ஒன்று குறிப்பிட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பைப் பின்தொடர்ந்து சென்று அதன் மூலத்தை அணுகுவது. இன்னொன்று ஒருவர் தனது கல்வியறிவின்மூலம் ஒரு குறிப்பிட பிரச்சினையியைக் கணித்து அதன் தாக்கத்துக்கான சாத்தியமுள்ள இடங்களில் தடயங்களை நோக்கி நகர்ந்து சேதங்களை அடைவது. முதலாவது வாலிலிருந்து தலைக்கு நகர்வது என்றால் பிந்தையது தலையிலிருந்து வாலுக்கு நகர்வது.

நம் பொருளாதார அமைப்பையும் இத்தகைய இரண்டு வழிமுறைகளில் நாம் அணுக முடியும். இங்கே இரண்டாம் வகையைச் சார்ந்தவர் காந்தி. அவர் எந்தப் பல்கலையிலும் பொருளாதாரம் பயின்றவரோ / பயிற்றுவித்தவரோ அல்லது பொருளாதாரத்தில் ஆய்வுகள் செய்தவரோ அல்லது ரிசர்வ் வங்கியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவரோ  அல்லர். மாறாக தான் அன்றாடம் சந்தித்த ஏழை, எளிய மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணங்களைத் தேடிப் பிந்தொடர்ந்து செல்லும்போது அவர்கள்மீது தாக்கம் செலுத்தும் பொருளாதார அமைப்பை அவதானித்ததோடு அந்த இன்னல்களைக் களைய தான் கண்ட தீர்வுகளையும் முன்வைக்கிறார்.

இதையே, ‘சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின்’ (MIDS) நிறுவனரான மால்கம் சேஷையா “பொருளாதாரத்தை இரு வழிமுறைகளில் அணுக முடியும். அதில் ஒன்று அறநெறி வழி, இன்னொன்று கட்டமைப்பு உருவாக்கும் வழி.” என்கிறார். மேலும் அவர், “காந்தி உட்பட மார்க்ஸ், விவேகானந்தர், கௌடில்யர், வள்ளுவர் போன்றோர் முதல் வழியைப் பின்பற்றியதாகக் குறிப்பிடுகிறார். மேலும், தொழிற்துறை அர்த்தத்தில் தன்னை ஒரு பொருளாதார நிபுணரல்ல என்று காந்தியே குறிப்பிடுவதாக எழுதுகிறார். காந்தியின் பொருளாதாரச் சிந்தனை கீழ்கண்ட மூன்று ஆதார மூலங்களின் அடிப்படையில் அமைந்தது என்கிறார் மால்கம். அவை முறையே, 1. காந்தியின் அறநெறி / ஆன்மீக சிந்தனைகள் 2. மக்களின், குறிப்பாக கிராமப்புறம் மக்களின் பொருளாதார நிலைமைகளில் அவருக்கிருந்த தொடர்பு 3. ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto this Last) டால்ஸ்டாயின் ‘கடவுளின் இராஜ்ஜியம் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறது’ (The Kingdom of God is within you) என்ற புத்தகங்கள் அவரது சிந்தனையில் உருவாக்கிய தாக்கம்.

நிலவுடமைச் சமூகம் வலுக்குறைந்து நுகர்வுப் பொருளாதாரமும், நகரமயமாக்கமும், தொழில்மயமாக்கமும் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் வாழ்ந்தவர் காந்தி. தொழிற்புரட்சிக்குப் பின்பு நவீன தொழில்மயமான இந்தியாவையும் நகரங்களையும் கட்டமைக்க நேருபோன்ற துடிப்புமிக்க இந்தியத் தலைவர்கள் முயன்றுகொண்டிருந்தபோது, அவற்றின் எதிர்மறை விளைவுகளை உணர்ந்து அதை செரித்துக்கொள்ள முடியாமல் தவித்தவர் காந்தி.

தனது கட்டுரையில் காந்தியப் பொருளாதார அணுகுமுறையை, காந்தியின் வார்த்தைகளிலேயே பின்வருமாறு குறிப்பிடுகிறார் மால்கம். “நான் பொருளாதாரத்துக்கும் அறநெறிக்கும் இடையே எந்தவித வித்தியாசமும் இருப்பதாகக் கருதவில்லை. ஒரு மனிதனின் அல்லது ஒரு நாட்டின் நன்னெறி வாழ்க்கைக்கு தீங்கு செய்யும் அறக்கோட்பாடுகள் தீய ஒழுக்கத்தைச் சேர்ந்தவை; எனவே அவை பாவமானவை. இவ்வாறு பார்க்கும்போது ஒரு நாடு மற்றொரு நாட்டை உறிஞ்சி வாழ அனுமதிக்கும் அறநெறிக் கோட்பாடு, தீய ஒழுக்கத்தைச் சேர்ந்ததாகும்”

உண்மைக்குப் புறம்பான தகவல்கள்மூலம் நுகர்வோரை ஏமாற்றி விற்பனையை அதிகரித்தல், தொழிலாளரைச் சுரண்டி இலாபத்தை அதிகரித்தல், சூழலையும் இயற்கை வளங்களையும் கண்மூடித்தனமாக அழித்தல்போன்றவற்றைத் தனது அடிப்படைகளாகக் கொண்டிருக்கும் அநீதியான ஒரு பொருளாதார அமைப்பை தனது அறநெறிக் கண்ணாடியால் ஊடுருவுகிறார் காந்தி. முதலாளியப் பொருளாதாரத்தின்கீழ் தொழிற்சாலைகளும் உற்பத்திக் கருவிகள் தனியார் வசமிருக்கும்போது நிகழும் தீமைகளை உணர்ந்திருந்த அம்பேத்கரும் நேருவும் அவற்றை சமூகச் சொத்துக்காளாக்கிவிடுவதன்மூலம் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்துவிட முடியுமென்று கருதுகின்றனர். ஆனால், காந்திக்கு அதனைத் தாண்டியும் இந்தப் பொருளாதார அமைப்பின்மீதான தீவிர ஒவ்வாமையும் நெருடலும் இருப்பது தெரியவருகிறது. அது உற்பத்தி சக்திகளைத் தாண்டி உற்பத்திக் கருவிகளின்மீதுமே படர்ந்திருக்கிறது.

காந்தியின் பொருளாதார சிந்தனைகள் கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டவை. அவை, எளிமை, பரவலாக்கப்பட்ட உற்பத்தியமைப்பு (Decentralization), தற்சார்பு, கூட்டுறவு உற்பத்தி, சமத்துவம், அகிம்சை, தற்சார்பு கிராமங்கள், அடிப்படையான தொழிற்துறைகள் அரசுடைமையாதல், சுதேசி மற்றும் அறங்காவலர் முறைபோன்ற சிந்தனைகளின்மீது விரிந்து அடித்தளமிட்டதாய் இருக்கின்றன. காந்தியப் பொருளாதாரம் என்ற வார்த்தைப் பிரயோகத்தையே மறுக்கும் மால்கம் சேசைய்யா “காந்தியப் பொருளாதாரம் என்று கூறுவது தவறான கருத்தைத் தருவதாகும். ஏனென்றால் பொருளாதாரத்தில் காந்தியம் இல்லை; பொருளாதாரத்தை நமது காலத்துக்கும் நிலைமைகளுக்கும் காந்தியின் கருத்துப்படி பொருத்திச் செயல்படுத்துவதில்தான் காந்தியம் இருக்கிறது” என்கிறார்.

காந்தியின்மீது வைக்கப்படும் மிக முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று அவர் ஒரு பிற்போக்குவாதி; அதாவது அவர் அறிவியலுக்கும், தொழில்நுட்பங்களுக்கும், நவீன எந்திரங்களுக்கும் எதிரானவர் என்பது. இதில் பாதி உண்மை இல்லாமல் இல்லை. நவீன அறிவியல் தொழில்நுட்பம் என்றால் கண்ணை மூடி ஆதரிக்கும் ஒரு கூட்டம் இங்கு உண்டு. அந்தக் கூட்டத்துக்கு அறிவியல் என்பது கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்ட மதம் போன்றது.

தொழில்நுட்பம் இருபுறமும் கூரான கத்திபோன்றதென்றும் அதைக்கொண்டு ஆக்கவும் அழிக்கவும் முடியுமென்றும், தொழில்நுட்பத்தாலன்றி அதைக் கையில் வைத்திருப்பவர்களாலேயே நல்லதும் கெட்டதும் தீர்மானிக்கப்படுகிறது என்று நாம் பொதுவாகச் சொல்லுவதுண்டு. இது ஒருவிதத்தில் உண்மைதானென்றாலும் அதைத்தாண்டி எனக்கொரு நெருடல் இக்கருத்தில் உண்டு. இந்த கருத்தை முற்றுப்புள்ளி வைக்கும் விஷயமாகவன்றி ஒரு விவாதத்துக்கான – உரையாடலுக்கான தொடக்கப் புள்ளியாகவே நான் பார்க்கிறேன். என்னுடைய கேள்வி எளிமையானது. எதுவரை நாம் நம் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்திக்கொண்டே செல்லப்போகிறோம்? இதற்கு ஏதேனும் எல்லைகள் இருக்கிறதா? இல்லையென்றால் அந்த விரிவாக்கம் நம்மை எங்கு கொண்டு சேர்க்கப்போகிறது? எல்லை இருக்கிறது எனில் அது எங்கே இருக்கிறது?

தனது ‘சேப்பியன்ஸ்’ புத்தகத்தின்மூலம் பெரும் கவனம் பெற்றவர் ‘யுவால் நோவா ஹராரி’. அவர் தனது “ஹோமோ டியஸ்” (அதியுயர் தொழில்நுட்ப மனிதர்கள்) என்ற புத்தகத்தில் எதிர்கால நவீனத் தொழில்நுட்பங்கள் அடுத்த ஐம்பது, நூறு ஆண்டுகளில் எப்படி இந்த புவியையும் மனிதரையும் ஆட்சி செயப்போகின்றன என்று விவரித்திருப்பார். அதைப் படிப்பதற்கு ஒரு ஹாலிவுட் அதிரடித் திரைப்படத்தைப் பார்ப்பதுபோன்ற சிலிர்ப்பு ஏற்படும். எப்படி மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மனிதர்களையும் உலகையும் கட்டுப்படுத்தப்போகின்றன அல்லது நம் வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகின்றன என்பதுதான் அந்த புத்தகத்தின் சாராம்சம்.

ஒருபுறம் காலநிலை மாற்றம் குறித்த சில்லிடவைக்கும் எச்சரிக்கைகளையும், நெருங்கிவரும் நிச்சயமின்மையையும், அழிவையும் வாசித்துக்கொண்டே இன்னொருபுறம் ஹோமோ டியுசின் மெய்நிகர் உலகம் குறித்த விவரணைகளை வாசிக்கும்போது எனக்கு ஒரு குழந்தைத்தனமான உளறலைப் படிப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. வேறெந்த தடைகளுமின்றி இன்றைய வேகத்தில் அறிவியல் தொழில்நுட்பங்கள் விரிவடையும்போது, ஹராரி கணிக்கும் எதிர்காலத்தைவிடவும் பிரம்மாண்டமான அதிநவீன உலகம் இங்கு பிறக்க சாத்தியங்கள் இருக்கின்றன என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், காலநிலை மாற்றத்தால் அடுத்த 10-20 ஆண்டுகளுக்குள் கருகப்போகும் எதிர்காலத்தின் அறிவியல்பூர்வமான கணிப்புகளுக்கு முன்னின்றுகொண்டு 50-100 ஆண்டுகளுக்குப் பின்னான கனவு உலகத்தைக் கற்பனை செய்யும் மனநிலையை என்னெவென்று சொல்லுவது? மீண்டும் நாம் விட்ட கேள்விக்கே வருவோம்.

நம் அதிவுயர் தொழில்நுட்பங்களும் எந்திரங்களும் நமக்கு எதைத் தரப்போகின்றன?

இந்த கேள்விதான் காந்திக்கும் எழுகிறது. அவர் காலநிலை மாற்றம் பற்றிய கதையாடல்களை அறிந்தவரல்ல என்றாலும் அத்தியாவசியம் – ஆடம்பரம் என்ற  இரண்டு துருவங்களுக்கிடையே பெரும் எந்திரங்கள், தொழில்நுட்பங்களின் அவசியத்தை சீர்தூக்கிப் பார்க்கிறார். அவருக்கு உவப்பாயில்லாததை நிராகரிக்கிறார். நவீன தொழில்நுட்பங்கள் நமக்கு அசாத்தியமான அனுகூலங்களைக் கொடுத்திருந்தாலும் மனித சமூகம் தொழில்நுட்பங்களைக் கையாள்வதற்குப் பதிலாக அவற்றின் கைப்பாவையாகவே மாறிவிடுவதைக் கவலையோடு பார்க்கிறார்.

ஒரு அடுக்ககத்தின் (Apartment) மின்தூக்கியை (Lift) எடுத்துக்கொள்வோம். வயதானவர்களுக்கு நோயாளிகளுக்கும் இது எத்தனை அற்புதமான விதத்தில் பயன்படுகிறது! ஆனால், நடைபயிற்சிக்கு செல்வதற்குக்கூட முதல் தளத்திலிருந்து தரைத்தளத்துக்கு மின்தூக்கியில் இறங்கிவரும் நல்ல திடகாத்திரமான மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். இயக்கமோ அசைவோயின்றி உடல் பெருத்து மின்விசிறியை இயக்கக்கூட எழுந்து நிற்பது அநாவசியமென்று ரிமோட் கண்ட்ரோலைத் தேடும் தொழில்நுட்பங்களுக்கு அடிமையானவர்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கைப்பேசியின் கைப்பாவையாக மாறிப்போன உடைந்த உயிரற்றக் குடும்பங்களைப் பார்க்கிறோம். நவீன எந்திரமயமான உலகின்மீதான காந்தியின் விமர்சனம் இங்கேதான் இருக்கிறது.

அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றின் ஏற்பு மறுப்புகள் குறித்து சிந்திக்கும்போது எனக்குள் ஒரு விவாதம் எழுவதுண்டு. எது நவீன தொழில்நுட்பம்? கற்காலத்து மனிதனுக்கு கற்கோடாரி நவீன தொழில்நுட்பம்; சிந்துசமவெளியில் வாழ்ந்தவனுக்கு சுட்ட செங்கல் நவீன தொழில்நுட்பம்; கீழடியில் வாழ்ந்தவனுக்கு மட்பாண்டம் நவீன தொழில்நுட்பம்; பதினெட்டாம் நூற்றாண்டி நீராவி எந்திரமும் 19 ஆம் நூற்றாண்டில் கணிப்பொறியும் 20 ஆம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவும் நவீன தொழில்நுட்பமாக இருக்கிறது. உண்மையில் இங்கு அறிவியலற்ற தொழில்நுட்பமென்று எதுவுமில்லையே? மரபுக் கட்டுமானத்தை நாம் முன்மொழியும்போது கட்டுமானத் தொழில்நுட்பத்தின் நவீன வடிவத்தைத்தான் மறுக்கிறோமேயொழிய அறிவியலையோ தொழில்நுட்பத்தையோ இல்லைதானே?

பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு செய்யப்பட்ட விவசாயமும்கூட அறிவியல் தொழில்நுட்பம்தான். அப்படியிருக்க விவசாயத்தில் பூச்சிக்கொல்லியையோ செயற்கை உரத்தையோ மறுப்பது எப்படி அறிவியலற்றதாக இருக்க முடியும்? சென்னையின் 86 விழுக்காடு சாலைகளை வெறும் 14 விழுக்காடு மேட்டுக்குடிகளின் கார்கள் ஆக்கிரமித்திருக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிபரம். தனிநபர் வாகனப்போக்குவரத்தே காற்று மாசுக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆண்டுக்குப் பல இலட்சம் மக்களைக் கொல்வதில் காற்று மாசுக்கு மிகப்பெரும் பங்குண்டு. இப்படியிருக்க சொகுசு மகிழுந்துக்குப் பதிலாக மிதிவண்டியை பயன்படுத்துங்கள் என்பது பிற்போக்காகிவிடுமா? சொகுசு மகிழுந்தை அதுகொடுக்கும் சூழல் தாக்கத்தையும் சமூக தாக்கத்தையும்   கருத்தில்கொண்டு மறுக்கச்சொல்லுவதும்கூட நவீன அறிவியல் புரிதலிலிருந்துதானே எழுகிறது?

இங்குதான் ஆர்வமூட்டும்விதத்தில் எனக்குள் கேள்வியும் பதிலுமாக இருந்த மேற்கண்ட கருத்துக்கு காந்தி அவரது பாணியில் பதிலளிக்கிறார். “கதரின் அறிவியலுக்கு மிக உயர்ந்த தொழில்நுட்ப எந்திரவியல் திறன்கள் தேவைப்படுகின்றன. ஜெகதிஷ் சந்திர போஸ் தனது சோதனைக் கூடத்தில் தமது சகஉயிரினங்களான செடிகளின் சின்னஞ்சிறு இலைகளிடமிருந்து இயற்கையின் மறைபொருட்களைக் கவர்ந்தெடுக்கக் கொடுக்குமளவு கவனத்தை அதுவும் கோருகிறது” என்கிறார் காந்தி (காலச்சுவடு: காந்தியின் அறிவியல் – த. கண்ணன்). தான் தூக்கிப்பிடிக்கும் கதர் ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை எத்தனை வாஞ்சையாய் இங்கு வருடுகிறார் பாருங்கள்.

தனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதானிகளும்’ என்ற நூலில் அ. மார்க்ஸ் அவர்கள், “எந்திரங்களை ஒரு சொகுசாக பயன்படுத்துவதைத்தான் காந்தி எதிர்த்தாரே ஒழிய அவற்றை ஒரு பயன்பாடாக உபயோகிப்பதை அவர் மறுக்கவில்லை. எந்திரங்கள், மானிடத்தின் உழைப்புச் சுமையைக் குறைப்பதாக இருக்க வேண்டும். அவர்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்கக் கூடாது. ‘சிங்கர் தையல் மிஷின்’ தான் மனித வரலாற்றின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என ஒரு முறை காந்தி சொன்னார். ஆனால், அந்த சிங்கர் தையல் மெஷினை செய்வதற்கு பெரிய எந்திரங்களும் தொழிற்சாலையும் தேவைப்படுகிறதே என அவரிடம் கேட்கப்பட்டபோது, “இந்த விஷயத்தில் நான் ஒரு சோசியலிஸ்ட்; இத்தகைய பெரிய தொழிற்சாலைகள் அரசுடைமையாக இருக்க வேண்டும்” என்கிறார். எந்திரங்களை அவர் வறட்டுத்தனமாக வெறுத்திருந்தால் வாழ்நாளெல்லாம் தனது பயணங்களுக்கு ரயிலைப் பயன்படுத்தி இருப்பாரா?” என்று கேள்வியெழுப்புகிறார்.

நவீன தொழில்நுட்பங்களை, அவை மனிதர்களின் அன்றாடை வேலைகளின் சிரமங்களைக் குறைப்பதாக இருக்கும்பட்சத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, அவற்றைக் காந்தி போற்றவும் செய்கிறார் என்பதையும் மேலும் அத்தகைய தொழில்நுட்பங்கள் அரசுடைமையாக இருக்க வேண்டுமென்று அவர் அழுத்தமாய் கோருவதையும் இங்கு பார்க்கிறோம். அத்தியாவசியமற்ற தொழில்நுட்பங்களை – அவை எத்தனைக் கவர்ச்சிகரமானதாகவே இருந்தாலும்கூட நிராகரிக்கும் காந்தியின் இத்தகைய பண்பு இன்றைய சுற்றுச்சூழல் சிக்கல்களின் பின்னணியில் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

காந்தி வாழ்நாளெல்லாம் போற்றிய கைத்தறியையும் கதராடைகளையுமே எடுத்துக்கொள்வோம். இந்தத் துறைகளில் புகுந்த நவீன எந்திரங்கள் என்ன செய்தன? கிரமாப் பொருளாதாரத்தைச் சிதைத்து மாண்புடன் சுயதொழில் செய்துவந்த நெசவாளர்களை பெருந்தொழிற்சாலைக் கூலிகளாக்கின. அவர்களைத் தங்கள் வேலைகளிலிருந்தும் சூழலிலிருந்து அந்நியப்படுத்தின. கிராமங்களிருந்து பிழைப்புதேடி நகரங்களுக்குத் தள்ளின. எந்திரங்கள், ஆடையுற்பத்தியை எளிதாக்கியதாகவும் மனிதரின் உடலுழைப்பைக் குறைத்ததாகவும் நீங்கள் நினைக்கலாம். எந்தத் தொழிற்சாலையிலேனும் புதியதொரு நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதால் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைந்ததாய் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அடுத்து ஆடைகள் விலை மலிவானதாய் நீங்கள் எண்ணலாம். ஆனால், ஆடைகளை விலை மலிவானதாக்கிய தொழிற்சாலை எந்திரங்களுக்கான முதலீட்டுச் சுமையை யார் சுமக்கிறார்கள்?  எல்லாவற்றுக்கு மேலாக எந்திரங்களின் கண்மூடித்தனமான பொருள் உற்பத்தியானது சூழல் சீர்குலைவையும் உருவாக்கியிருப்பதை நாம் பார்க்கிறோம். இந்தப் பின்னணியிலேயே காந்தியின் உயர் தொழில்நுட்பங்களின்மீதான ஒவ்வாமையை நான் புரிந்துகொள்கிறேன்.

ஒரு தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்க, அது அணுவுலைகள் போன்றோ அல்லது இரசாயன குண்டுகள்போன்றோ வெறும் அழிவு சக்தியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது வெறுமனே ஒரு ஸ்மார்ட் வாட்சாகவோ, சொகுசு வாகனமாகவோ அல்லது சதாரண ஒரு வாசனைத் திரவியமாகவோகூட இருக்கலாம். இவற்றின் உற்பத்தியால் விளையும் சாதக பாதகங்களைப் பட்டியலிடுங்கள். இந்த எல்லையற்ற நவீன அறிவியல் விரிவாக்கமும், தொழில்நுட்பமும் சூழலுக்கு உகந்ததாகவோ பெருவாரியான ஏழை மக்களுக்கானதாகவோ இருக்க முடியுமா?

புதியதாக சென்னையில் அமையவிருக்கும் மெட்ரோ வழித்தடங்களுக்காக ஓட்டுநரில்லாத தானியங்கி இரயில் பெட்டிகள் கொள்முதல் செய்யப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில்  வாசித்தேன். ஒரு புறம் வேலைவாய்ப்புகள் நசிந்துகொண்டிருக்க இன்னொருபுறம் சிறுசிறு வேலைவாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கும் இத்தகைய தொழில்நுட்பங்களின் அவசியம் என்ன? சென்னையில் ஓடப்போகும் 5-10 இரயில்களைத் தானியங்கியாக்கி 10 ஓட்டுநர்களுக்கான ஊதியத்தை மிச்சப்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தால் நாம் சாதிக்கப்போவது என்ன?

இந்த கேள்விகளை எழுப்புபவர்கள் ‘அறிவியல் பக்தர்களால்’ பிற்போக்குவாதிகள் என்றும் நம்மை கற்காலத்துக்கு அழைத்துச் செல்பவர்களென்றும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். “அப்படிண்ணா நீங்க இலை தளையத்தான் உடுத்திக்கணும்… குகைகளில்தான் வாழணும்…சிக்கி முக்கிக் கல்லதான் உரசணும்… விறகடுப்பதான் பயன்படுத்தணும்” என்று அவசியமற்ற தொழில்நுட்பங்களையும் அறிவியலையும் கேள்விக்குட்படுத்தும்போது சூழலியலாளர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். அக்காலத்திலேயே இதுபோன்ற வசைக்கு உள்ளாகிறார் காந்தி.

“காந்தியுடைய இயற்கைக்கு செல்லுவோம் என்ற கோஷம் பெரும்பாலான மக்களுக்கு ஆடைகள் இல்லாத பழைய நிலைக்குத் திரும்புவோம்; அழுக்கடைந்த, இல்லாமைக்கும் கல்லாமைக்கும் திரும்புவோம் என்பதையே குறிக்கும்.” என்கிறார் அம்பேத்கர். “காந்தியர்கள் நாம் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்கின்றனர்; வேறு சொற்களில் சொன்னால் அறிவியலை முற்றும் துறந்துவிட்டு வானரங்களைப்போல வாழ வேண்டும் என்கின்றனர்… இவர்கள் தைமூரும் செங்கிஸ்கானும் இழைத்தப் படுகொலைகள்கூட அற்பமானவையாகத் தோன்றவைக்கும் அழித்தொழிப்பைப் பரிந்துரைக்கின்றார்கள்” என்று புகழ்பெற்ற நாவலாசிரியரான அல்டௌசு ஹக்சிலி காந்தியைப் பற்றி எழுதுகிறார். (காந்தியின் அறிவியல் – த. கண்ணன், காலச்சுவடு).

காந்தி நிறுவனமயமாக்கப்பட்ட, அரசியல்படுத்தப்பட்ட நவீன அறிவியல்முன் மண்டியிட்டு வணங்க மறுத்தாரென்றும் அறிவியலை வெறும் மெய்ப்பிக்கப்பட்ட விதிகளாகவும் சூத்திரங்களாகவும் சுருக்கிவிடுவதை ஏற்க மறுத்தாரென்றும் குறிப்பிடும் கண்ணன் அவரது “மரபுக்குத் திரும்புவோம்; இயற்கைக்குத் திரும்புவோம்; கிராமத்துக்குத் திரும்புவோம்” போன்ற கருத்துக்களுக்குப் பின்னே இருந்தது தொலைநோக்குப் பார்வையில் பெருவாரியான மக்களுக்கான நலனே என்று குறிப்பிடுகிறார்.

ஒருவேளை சாக்கடையில் அடைப்பெடுக்கும் ஒரு ரோபோவோ ஏழைகளின் பசிபோக்கும் ஒரு நவீன எந்திரமோ கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதை முதலில் கொண்டாடுபவர் காந்தியாகத்தான் இருந்திருப்பார் என்பதை முன்முடிவுகளின்றி அவரது வாழ்வை உற்றுப்பார்ப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும். கண்மூடித்தனமான நவீன தொழில்நுட்பங்களை வழிபடுவதுதான் முற்போக்கு என்றால் நிச்சயமாகவே காந்தி ஒரு பிற்போக்குவாதிதான். ஆனால், அந்த பிற்போக்குவாதி நமக்கு இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாய் தேவைப்படுகிறார்.

(தொடரும்)

  • ஜீயோ டாமின். ம
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments