12ஆம் வகுப்பு இறுதித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறாள் திவ்யா. மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து அவளுக்கு வேறொரு நெருக்கடியும் ஆரம்பமாகியிருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில் வசிக்கும் அவள் இப்போது தேர்வுக்கான விடுமுறையில் இருக்கிறாள். மின்விசிறியிலிருந்து வரும் அனல்காற்று அவளை அடுப்பில் வேக வைப்பதுபோல உணர்கிறாள். அவளால் முன்புபோல பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. வியர்த்து வழியும் உடல் கடும்எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்குகிறது. ஒரு கட்டத்தில் வீறிட்டு அழுதபடி புத்தகத்தைத் தூக்கியெறிகிறாள்.
உச்சி வெயிலுக்குக்கீழ் தன் சிறிய நிழல் குடையை சரி செய்தபடி காய்கறிகளைத் தரையில் பரப்பி வைத்து வாடிக்கையாளருக்காய் காத்திருக்கிறாள் அந்த 65 வயது மூதாட்டி. கடுமையான வெப்பமும் வெளிச்சமும் அவள் கண்களைக் கருக்கிவிடுவதுபோல உணர்கிறாள். இத்தனை ஆண்டுகளாய் வெயிலைத் தாக்குபிடித்த உடல் இப்போது ஒத்துழைக்க மறுக்கிறது. அன்று காலை 11 மணியிலிருந்தே உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த அவள் ஒரு கட்டத்தில் எழுந்து தன் சுயமரியாதைவிட்டு தன்னைப் புறக்கணித்தத் தன்மகனின் வீட்டு வாசலில் நின்று, “என்னால முடியலடா!” என்று ஓலமிட்டு அழுதபடி அவன் காலில் வீழ்கிறாள்.
30 ஆண்டுகளாய் கட்டிடங்களில் கம்பி கட்டும் வேலை பார்த்துவருகிறான் குமார். கடும் உழைப்பாளி; அன்று இரவு காங்கிரீட் போட்டே ஆகவேண்டுமென்ற நெருக்கடியில் முந்தைய இரவே தொடங்கியிருந்த வேலையை இன்றும் ஓய்வின்றி தொடர்ந்துகொண்டிருந்தான். அனலில் கொதிக்கும் கம்பிகளை வளைத்துக் கட்டி வேலை செய்துகொண்டிருந்தவன் காலை 11:30 மணிக்கு அந்தக் கம்பிகளின்மீதே சரிந்து விழுந்தான். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமுன்பு உயிர் பிரிந்திருந்தது.
தகரக்கொட்டகை வீட்டில் கதறி அழுதுகொண்டிருந்தாள் கருப்பாயி; முந்தைய நாள் இரவு கடும் வெப்பத்தில் இரவு முழுதும் தூக்கமில்லாமல் கிடந்ததில் வேலைக்குப் போன இடத்தில் சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்தாள். “இனி கடைக்கு வேலைக்கு வரவேண்டாம்” என்று சொல்லியிருந்தான் முதலாளி. வேலைக்குபோய் வந்த கணவனிடம் அரற்றுகிறாள்; அவனோ, “சனியனே! நானே ஆயிரத்தெட்டு பிரச்சினையில இருக்குறேன்; எங்கயாவது போய் செத்துத் தொல” என்கிறான். வழக்கமாய் அப்படிப் பேசக்கூடியவன் அல்ல அவன்; ஆனால், மூன்று வாரங்களாய் கடும் வெப்பத்தால் ஏற்பட்ட தூக்கமின்மையும் அதுகொடுத்த எரிச்சலும் மன உளைச்சலும் அவனை அப்படிப் பேசவைத்தது. என்றாலும், அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டோமே என்று அவன் எண்ணிய சில நிமிடங்களுக்குள் பக்கத்து அறையில் கருப்பாயி தூக்கில் தொங்கியிருந்தாள்.
சாலையோரத்தில் வாழ்க்கை நடத்திய வீடும் பெயருமற்ற அநாதை முதியவர் சாயங்காலத்தில் தெருமுனையில் விழுந்து கிடப்பதை ஒருசிலர் கவனித்தார்கள். கைகள் விறைத்திருந்ததைப் பார்த்தபோதுதான் அவர் மதியத்திற்கு முன்பே செத்துப்போயிருந்தார் என்பது தெரிந்தது.
வெப்ப அலைகள் இதைத்தான் இனி ஒவ்வொரு நாளும் செய்யப்போகின்றன. கெடுவாய்ப்பாக, இவற்றில் எந்தவொரு துயரும் வெப்ப அலையினாலோ காலநிலை மாற்றத்தினாலோ ஏற்பட்ட ஒன்றாய் எவரும் உணரப்போவதில்லை. இயல்பு நிலையைவிட 4 டிகிரி அதிகமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை பதிவாகிவருகிறது. இன்னும் மே மாதத்தையே எட்டாத நிலையில் பெரும்பாலானோரின் வாழ்வு நரகமாய் மாறியிருக்கிறது. வரும் ஆண்டுகளில் கோடைகால வெப்பம் நம் இயல்பு வாழ்வைப் புரட்டிப்போடப்போகின்றது. கொள்ளைநோய்போல அது நம்மை ஆட்டுவித்துக் குடும்பங்களை சிதைத்து அழித்து புரட்டிப்போடுவதை நாம் உணர்வதற்குள் பெரும் இழப்பைச் சந்தித்திருப்போம் என்பது உறுதி.
இது இப்போதுவரை விளிம்பு நிலை மக்களின் பிரச்சினையாக மட்டுமே இருக்கிறது. கெடுவாய்ப்பாக, தங்கள் கூலிகள் கொத்துக்கொத்தாய் செத்து இல்லாது போவதுவரை இதை மேட்டுக்குடிகள் உணர மாட்டார்கள்.
- ஜீயோ டாமின்
How to educate this problem for our innocent people?