இந்தியா 2022 இழப்பும் சேதமும்

இந்தியா உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் அடர்த்தி கொண்ட நாடு. இங்கே வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் விளிம்பு நிலை மக்கள் பெருமளவில் உள்ளனர். உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 107ஆவது இடத்தில் அதாவது நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான்,வங்காளதேசம்,இலங்கை ஆகியவற்றை விட மோசமாக உள்ளது. இங்கு பொதுவாக மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சனைகளும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளும் இதை மேலும் இந்த நிலையை மேலும் கடினமாக்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அக்டோபர் 10 வரை உலக அளவில் நடந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா அதிகம் பாதிப்படைந்த நாடாக உள்ளது. இந்தியாவில் இந்த காலகட்டத்தில் சுமார் 22 லட்சம் மக்கள் தீவிர வானிலை   நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் அண்மையில் நிகழ்ந்த பெருவெள்ளத்தை நம்மால் மறக்க முடியாது இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் பாகிஸ்தான் சந்தித்தது. ஆனால், அதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவில் தீவிர வானிலை நிகழ்வின் காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகளவில் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அதாவது ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 88% நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகளை சந்தித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் தீவிர வெப்பமான மார்ச் மாதத்தை இந்த ஆண்டு கண்டுள்ளது.  நடப்பாண்டில் தீவிர வானிலை நிகழ்வுகளால் 2755 பேர் இறந்துள்ளனர். மேலும் 18 லட்சம் ஹெக்டேர் நிலம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. 4,16,667 வீடுகள் சேதமாகியுள்ளது கிட்டத்தட்ட 70,000 கால்நடைகள் இறந்துள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் அதிக நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகளை சந்தித்துள்ளது. அதிக உயிரிழப்புகள் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கு 359 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம் மற்றும் அஸ்ஸாமில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான 273 நாட்களில் 241 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.

இந்தியாவின் மத்திய பகுதியே அதிக நாட்கள் அதாவது 198 நாட்களும் அதற்கு அடுத்தபடியாக வடகிழக்குப் பகுதி 195 நாட்களும் தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பைப் பொருத்தவரை இந்தியாவின் மத்திய பகுதியில் அதிகபட்சமாக 887 பேரும் அதற்கு அடுத்ததாக கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 783 பேரும் உயிரிழந்துள்ளனர். 1901ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாவது ஈரப்பதமான மாதம், மார்ச் மாதம் மிக வெப்பமான மார்ச் மாதத்தில் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதம் மூன்றாவது வெப்பமான ஏப்ரல் மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் கடந்த 121 ஆண்டுகள் இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் காலநிலை மாற்றத்தின் கண்கூடான பாதிப்புகள். இதுவரை நூறாண்டுகளுக்கு ஒரு முறை வரும் பாதிப்புகள் இப்போது ஐந்து அல்லது அதற்கு குறைவான ஆண்டுகளில் நடக்கும் என ஐபிசிசி அமைப்பு தெரிவித்ததை நிருபிக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன.

 

குளிர்காலம்:

2022 ஜனவரி மாத பகல் நேர வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாகவும் பிப்ரவரியில் கிட்டத்தட்ட வழக்கமான வெப்பநிலையை விட பாதி குறைவாகவும் இருந்தது. அதன் விளைவாக 30 நாட்கள் குளிர் நாட்களாகவும் 15 நாட்கள் ஆலங்கட்டி மழைகளுடனும் பதிவாகியுள்ளது. ஜனவரி மாதம் வழக்கத்தைவிட ஈரமாகவும் பிப்ரவரி மாதம் வழக்கத்தை விட வறண்டும் காணப்பட்டது. இந்த இரண்டு மாதங்களில் உள்ள 59 நாட்களில் 39 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 25 நாட்களும் அதற்கு அடுத்து மத்திய பிரதேசத்தில் 24 நாட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

 

பருவமழைக்கு முந்தைய காலம் அல்லது கோடை காலம்:

பொதுவாக மார்ச் மற்றும் ஏப்ரலில் வெப்ப அலைகள் காணப்பட்டன. மே மாதத்தில் பெய்த தீவிர மழை அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இந்த மாதங்களில் உள்ள 92 நாட்களில் 81 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 31 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெப்பஅலைகள் 51 நாட்களும் இடி மற்றும் மின்னல் 43 நாட்களும் பெருமழை,வெள்ளம் மற்றும் நிலச்சரிவு 29 நாட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம் அதிகபட்சமாக 36 நாட்களும் மத்திய பிரதேசம் அதற்கு அடுத்தபடியாக 32 நாட்களும் தீவிர வானிலை நிகழ்வுகளை இந்த காலத்தில் சந்தித்துள்ளது.

 

 

பருவ மழை காலம்:

ஜூன் மாதம் தொடங்கிய போதே வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. பருவமழை முக்கியமாக அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஜூலை மாதத்தில் குஜராத்,ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  இந்த பருவமழை காலத்தில் 2400 பேரும் 18 லட்சம் ஹெக்டர் விளை நிலமும் 4 லட்சம் வீடுகளும் பாதிக்கப்பட்டன.

 

 

இவ்வாறான தொடர் பேரழிவுகள் காலநிலை மாற்றத்தால் நம்மை அழித்துக் கொண்டிருக்க,காலநிலை மாற்றத்திற்கு எதிராகவும் கார்பன் பயன்பாட்டை குறைக்கவும் உலக நாடுகளுக்கு அழுத்தம் தரவேண்டிய இந்திய அரசு தொடர்ந்து சூழலைக் கெடுக்கும் திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறது.

[email protected]

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments