வைகையின் பூர்வக்குடிக் கோபங்கள்!

முத்துராசா குமார்

அழுக்குத்துணிகளை அடித்துத் துவைக்கும் பட்டியக்கல்லைப் போல் இருக்கிறது சட்டை இல்லாமல் குனிந்து துணி துவைக்கும் முனியாண்டியின் முதுகு. கொஞ்சம்கூட நிழல் இல்லாத அகாந்திர வெயிலில் ஆற்றின் நடுவில் சப்பனங்கால் போட்டுக்கொண்டு காய்ந்த துணிகளை ஒவ்வொன்றாக கீழே விழாமல் அடுக்கி வைக்கிறார் முனியாண்டியின் மகன் பாலா. தென் மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும், தொழில் தேவைகளுக்கும் வைகையை நம்பிக்கிடக்கும் மக்களில் சாதிய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்படும் சலவைத் தொழிலாளர்களும் அடங்குவார்கள். மதுரை தத்தனேரி, செல்லூர், வைத்தியநாதபுரம், குருவிக்காரன் சாலை, ஆரப்பாளையம், வைகைக் கரையோரப் பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சலவைத் தொழில் செய்யும் குடும்பத்தார்கள் இருக்கின்றனர். இதில் 50 குடும்பங்கள் இஸ்திரி போடுவதை பிரதானத் தொழிலாக கொண்டுள்ளனர். மீதிக் குடும்பங்கள் சலவைத் தொழிலை மட்டுமே நம்பி தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். காலம் காலமாக வைகை நதியைத் தங்கள் வாழ் வாதார உயிர்நாடியாகக் கொண்டிருக்கும் இம்மக்கள் வைகை நதியை தங்களுடன் பிறந்த சக உயிரியாகப் பாவித்து அதனோடு பின்னிப் பிணைந்து மழை, வெள்ளம், புயல், வெயில், வறட்சி என்று எல்லாக் காலங்களிலும் தங்களது நல்லது கெட்டதுகளை வைகை நதியுடனேயே பகிர்ந்து கொள்கின்றனர். வைகையின் உடல்வாகு குணாதிசயங்களைக் கணிக்கும் பூர்வக்குடிகள் இவர்கள்தான். இப்படியிருக்க, வைகையில் தண்ணீர் இல்லாத தாலும், ஆக்கிரமிப்புகளால் வைகையின் பரப்பளவு குறைந்து நிலத்தடி நீர்மட்டம் வற்றிப்போனதாலும், குப்பைகள், நரகல்கள், கழிவுநீர், சாக்கடைகள் கலப் பதாலும் ஏராளமான குடும்பங்கள் கேரளாவுக்குச் சலவைத் தொழில் செய்யக் கிளம்பிவிட்டனர். என்னதான் சலவைக்கூடங்கள் இருந்தாலும் அதில் போதுமான வசதிகள் இல்லை. இந்த கஷ்ட காலத்திலும் ஒரு சில குடும்பங்கள் மட்டும் இன்னும் இந்த வைகையை விட்டு இடம்பெயர மனமின்றி, கிடைக்கிற குறைந்த வருமானத்தில் ஆற்றையே சுற்ற சுற்றி வருகின்றனர். அந்த ஒரு சில குடும்பங்களில் ஒன்றுதான் முனியாண்டி குடும்பத்தினர். “எனக்கு 55 வயசு ஆச்சு. இதுக்கு முன்னாடி வைகையில வறட்சி, பஞ்ச காலம்லாம் வந்துருக்கு. ஆனால், இப்படி ஊத்துக்கும், ஓடுகாலுக்கும்கூட வழியில்லமா போன வறட்சிலாம் வந்ததில்லப்பா. என்ன ஆகப்போதோ” என்று புலம்பிக் கொண்டே துணி காயப் போடப் கிளம்பினார் முனியாண்டி. “நான் அஞ்சாப்பு வரைக்கும்தான் பள்ளிக் கூடம் போனேன். அதுக்குப்பின்னாடி அப்பாகூட சலவைக்கு வந்துட்டேன். நானும் எங்க குடும்பமும் வீட்ல இருந்ததைவிட இந்த ஆத்துக்குள்ள இருந்ததுதாங்க அதிகம். எனக்கு வெவரம் தெரிஞ்ச வரைக்கும் நெறைய குடும்பம் ஆத்துக்குள்ள வந்துதான் குடிதண்ணியே எடுத்துட்டுப் போவாங்க. முட்டிக்கால முக்குற வரைக்கும் மணல் இருக்கும்.

முன்னாடிலாம் தண்ணீர் இல்லாத காலத்துல பத்து அடிக்கு ஊத்து தோண்டுனா அதுல நாலு அடிக்கு தண்ணீர் ஊறி நிக்கும். இப்போ பதினேழு அடிக்கு தோண்டுனாகூட வெறும் ரெண்டு அடிக்குத்தான் தண்ணீர் ஊறுது. அதுவும் கழிவுத் தண்ணீரா வருது. அதுல கை வச்சாலே பேரு தெரியாத நோயிலாம் வர ஆரம்பிச்சிரும். ஆரப்பாளையத்துல இருக்குற ஒரு ஆஸ்பிட்டல்ல துணிக்கு அஞ்சு ரூவா மாதிரி துணிகள் எடுக்கிறேன். ஒரு நாளைக்கு முந்நூறு ரூவா வர்றதே அதிகம். அதுல அப்பாவுக்கும் எனக்கும் நூறு ரூவா டீ செலவு, சாப்பாடு செலவுக்கு போயிரும். மீதி பணத்துலதா ஏதோ ஓட்டிக்கிட்டு இருக்கோம். வெள்ளாவி வச்சா கொஞ்சம் கூட காசு கெடைக்கும். இப்ப யாருங்க வெள்ளாவிலா விரும்புறா. எல்லாம் பவுடர், கெமிக்கல்னு போயிட்டாங்க. வெள்ளாவி பொங்கல், வெள்ளாவித் திருவிழாக்களும் குறைஞ்சு போச்சு. ஒரு சில பேர்தான் வெள்ளாவி வெச்சு வெளுத்துத் தாராங்க. வெளிப்படையாவே வந்து மணலை லாரிகள்ல வந்து அள்ளிட்டு போவாய்ங்க. அப்படி அள்ளியள்ளி ஆத்த தோண்டி எல்லா இடத்தையும் பள்ளமாக்கி இப்போ ஆத்தே கட்டாந்தரையா போயி, கருவேலங்கள் முளைக்க ஆரம்பிச்சுருச்சு. ஆனால், நிழலுக்கு நாங்க ஒரு சின்னச்செடி, தென்னந்தட்டி வச்சாக்கூட மாநகராட்சில இருந்து வந்து எங்கள திட்டுதிட்டுன்னு திட்டி அதைப் பிடுங்கி எறிஞ்சிட்டுப் போயிருவாய்ங்க. ஆத்துல ரெண்டு கரையோரம் இருக்குற கடைகள், வீடுகள் எல்லாம் நாளுக்கு நாள் ஆத்துக்குள்ள வந்துக்கிட்டே இருக்கு. அந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகமாயிட்டே போகுது. நல்லா இருந்த தரைப்பாலத்தை இடிச்சு அதுலயும் காசு பார்த்தாய்ங்க. அந்த வேலைகள் நடந்துகிட்டு இருந்தப்போ மீதி இருந்த ஆத்துமணலையும் அள்ளிட்டுப் போயிட்டாய்ங்க. அவிங்கவிங்க வீட்டு, கடைகள், சாக்கடைத் தண்ணீர் குழாய்கள் எல்லாம் நேரடியா ஆத்துக்குள்ளதாங்க வருது.

இதுபோக ஆடு, மாடுகளுக்கு கொட்டம் ஆத்துக்குள்ளதா இருக்கு. ஆஸ்பிட்டல், வீடுகள், பேக்டரிகளோட எல்லா கழிவுகளையும் கொட்டுற குப்பைத்தொட்டி வைகைதான். அழகர் இறங்குற இடத்துலதா அதிகமா சாக்கடையே ஓடுது. ஆத்துக்குள்ள இருக்குற மன்னர்கால கல் மண்டபம் முக்கால்வாசி அழிஞ்சு போச்சு. இது எல்லாமே மாநகராட்சிக்கு நல்லாவே தெரியும். ஆனால் கண்டும்காணாம போயிருவாங்க. ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 140 ரூவா சம்பளம் போட்டு மாநகராட்சில இருந்து ஆட்களைக் கூப்பிட்டு வந்து குப்பைகளைச் சுத்தம் செய்யச் சொல்லுவாங்க. அவுங்களும் பட்டும்படாமா வேலை செஞ்சிட்டுப் போயிருவாங்க. பத்திரிகைகள், நியூஸ்ல வைகை ஆத்தப் பத்தி செய்தி வந்தா போதும், உடனே பள்ளிக்கூடம் காலேஜ் பசங்கள மாநகராட்சி கூப்பிட்டு வந்து சுத்தம் செய்ற மாதிரி போட்டோ எடுத்துட்டுப் போயிருவாங்க. இதுதான் பல காலமா நடந்துக்கிட்டு இருக்கு. இப்படி இருந்தா தலைமுறை தலைமுறையா இந்த ஆத்த மட்டுமே நம்பி இருக்குற நாங்க எங்கங்க போவோம். ஆஸ்பிட்டல்ல துணிகள் எடுக்குறதுனால ஆத்திர அவசரம்னா குடும்பச் செலவுகளுக்கு அந்த டாக்டர்கள்கிட்ட போய் நிண்டா இருக்குறத கொடுத்து உதவுவாங்க. திடீர்னு சொந்த மண்ணை விட்டு வெளியூர் போய், ஆளுப் பேரு தெரியாத எடத்துல புது தொழில் செஞ்சு பிழைக்கிறதுலா ரொம்ப கஷ்டம்ங்க. அப்படியும் நெறைய குடும்பங்கள் வெளியூர்களுக்கு வேலைக்குப் போயிட்டாங்க. இன்னும் அதிக நாள்லாம் இல்லைங்க. கொஞ்ச நாள்தான். துடிக்க துடிக்க செத்துட்டு இருக்கற ஆறு மொத்தமா செத்துரும். யாருக்கு எப்படியோ, சின்ன வயசுல இருந்தே என்னோட வைகை ஆறுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க. இந்த ஆத்த வேறமாதிரி நல்ல முறையில கொண்டு வரணும்னு நெறைய ஆசை இருக்கு. கடைசி வரைக்கும் வைகையை விட்டு எங்கேயும் போக மாட்டேங்க” என்று தனது மனதில் வைத்திருந்த வைகை மீதான காதல் பற்றியும், வைகையைப் படுகொலை செய்து கொண்டிருப்பவர்களின் மீதான கோபத்தையும் பிசிறில்லாமல் வெளிப்படுத்திவிட்டு, ஆற்றின் நட்டநடுவில் நின்று ‘உனக்கு நான் இருக்கேன்’ என்பது போல வைகையை அப்படியே ஒரு சுற்று சுற்றிப் பார்த்தார் பாலா. வைகையில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும், குப்பையைச் சுத்தப்படுத்த குழுக்கள் அமைக்கப்படும் என்றும், குப்பை கொட்டுவதைத் தடுக்க தனியாக காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கடந்த மாதம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதுநாள் வரை கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் காவலர்களும் இல்லை, குழுக்களும் இல்லை. ‘எந்த ஊருக்கு வறட்சி வந்தாலும், எங்க ஊர்ல எப்பவும் தண்ணீர் செழுமையாதாப்பா இருக்கும், முப்போகம் கதிர் அறுக்குற மண்ணுயா எங்க மண்ணு’ என்று கைலியை ஏத்திக்கட்டி நெஞ்சுபுடைக்க நின்ற மதுரைப் புறநகரான சோழவந்தான் சுற்றுவட்டார ஊர்கள் எல்லாம், இன்று இரவு பகலாக பைக்குகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும் குடங்களோடு குடிதண்ணீர் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. வைகை நதி மாண்டு கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தும் பார்த்தும் பார்க்காதது போல, வைகையின் பூர்வக்குடிகளான பாலாக்களின் கோபச் சத்தங்களைக் காதில் கேட்டும் கேட்காதது போல, ‘சுத்தமான வைகை, சுகாதாரமான வைகை’ என்று கொஞ்சம் கூட சங்கடமில்லாமல் மதுரையின் பெருமைகளை நகரின் சுவரெங்கும் ஓவியமாக வரைந்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments