மனித இனத்தின் அடையாளமாகிறதா நெகிழி?

“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்”

  • திருக்குறள்(475)

(குறிப்பு: இக்குறளுக்கான விளக்கத்தை அறிந்து கட்டுரையை படிக்க தொடங்கவும்)

‘பிளாஸ்டிக்ஸ்’ நாம் பார்க்காத இடமே இல்லை. பலசரக்குக் கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களில் இருந்து அவற்றை வாங்கிச்செல்லும் பைகளில் வரை எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக், எதில் பார்த்தாலும் பிளாஸ்டிக்ஸ். மனித சாம்ராஜியத்தின் தவிர்க்க முடியாத, தவிர்க்க நினைத்தாலும் முடியாத பொருளாய் விளங்குகிறது. திரும்பும் திசையெங்கும் பிளாஸ்டிக் மயமாகிய நிலையில், பிளாஸ்டிக் இப்போது புதுப்புது பரிணாமங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. அது ஒருவகைதான்  நுண்நெகிழி (micro plastics). மிகமிகச் சிறிய அளவினைக் கொண்ட இந்த நுண்நெகிழிகள் குடிநீரில் கண்டறியப்படுள்ளன. அதுமட்டுமல்லாமல் மனித இரத்தத்திலும், தாய்ப்பாலிலும்கூட இந்த நுண்நெகிழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பிளாஸ்டிக்கின் அசுரத்தனமான ஆக்கிரமிப்பை நமக்கு உணர்த்துகிறது.

ஒரே இடத்தில் அதிகமாகக் கொட்டி சேர்க்கப்படும் குப்பைக் கிடங்கு போன்ற இடங்கள் மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளிலும், சுற்றலாத் தலங்களிலும்  உள்ள நிலத்தடிநீரில் நுண்நெகிழிகளாக பரிணமிக்கின்றன1.

சென்னையில் உள்ள பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் நிலத்தடி நீரில் நுண்நெகிழிகள் கண்டுப்பிடிக்கப்படுள்ளது2. மேலும் கடல்களில் கொட்டப்படும் அதிகளவிலான நெகிழிக் குப்பைகளால் மீன்களில்கூட அவை கண்டறியப்பட்டுள்ளது. சைவ உணவு உண்பவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டாம். பழங்களிலும், காய்கறிகளிலும், கீரைகளிலும் நுண்நெகிழிகள் கண்டறியப்பட்டுள்ளது3. இப்படி நம் உணவுகளில் ஒரு அங்கமாய் மாறிய நுண்நெகிழிகள் நம் உடலை அடைகின்றன. இப்படி தான் நம் இரத்தநாளங்கள் தொடங்கி தாய்ப்பால் வரையிலும் கலக்கத் தொடங்கியுள்ளது.  இந்த செய்தி பல பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம், உண்மை என்னவென்றால் இவையனைத்தும் குறைந்தபட்சம் ஓராண்டுக்கும் மேலான பழைய செய்தி. இனிமேல் தான் அதிர்ச்சி ஏற்படுத்தும் செய்தியைக் கூறப்போகிறேன்.

இப்புவியில் ஏற்கெனவே உருவான புதுப்புது  பாறை வகைகள், கனிம வகைகள்  அல்லது கற்களின் வகைகளைதான் மனிதன் கண்டுப்பிடித்து அவற்றின் தோற்றம், வயது போன்றவற்றை ஆராய்ந்து அதற்குப் பெயரும் சூட்டியுள்ளான். இப்படி அவன் கண்டுப்பிடித்த பாறைகளை ஆராய்ந்து, பூமியின் வரலாற்றில் எந்தெந்த உயிரினங்கள் வாழ்ந்தன, அவற்றின் காலம், போன்றவற்றையெல்லாம் கண்டுப்பிடித்தான். உதாரணமாக ‘ஜுராசிக்’ எனும் காலக்கட்டத்தில் டைனோசர்கள் வாழ்ந்தன. அவற்றின் படிமங்களை வைத்து காலகட்டத்தை வரையறுத்துள்ளது அறிவியல் சமூகம். அதுபோல மனிதன் வாழ்ந்த காலக்கட்டத்தில் ஒரு புதுவகையான பாறை ஒன்று உருவாக மனிதனின் செயல்பாடுகள் காரணமாக இருந்துள்ளது.

ஒரு பாறை எரிமலை குழம்பிலிருந்து உருவாகும். ஆனால், இப்போது சில பாறைகள், நெகிழிக் கழிவுகளுடன் சேர்ந்து புதுவகையான பாறைகளாக தோற்றம் அளிக்கின்றன. அவற்றிற்கு பிளாஸ்டிகிரஸ்ட் (Plasticrust), பொலிகோமெரட் (Polygomerate) என பெயரிடப்பட்டுள்ளது4. மனிதன் வாழ்ந்த காலக்கட்டத்தில் மட்டுமே கிடைக்கும் பிரத்யேகமான பாறைகளாக இவை திகழ்கின்றன. இப்பாறைகள் மனித ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் தாண்டி மனித ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் உருவாகியுள்ளன. இந்த பூமி பெருங்கடல்களால் சூழப்பட்டது என்பது பழைய கூற்றாக மாறிவிட்டது. இந்த பூமி பிளாஸ்டிக்கால் சூழப்பட்டது என்பதே சரியாகும். இப்போது இந்த கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள திருக்குறளை படித்துவிட்டு வாருங்கள்.

170 ஆயிரம் கோடி நெகிழித் துகள்கள் நம் கடல்களில் மிதக்கின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 250 மெட்ரிக் டன் அளவு பிளாஸ்டிக் இறுகும் என ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த 250 மெட்ரிக் டன்னில் பாதியளவு ஆசியப் பகுதிகளில் இருக்குமென அதிர்ச்சியளிக்கின்றனர். மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதியாகவும், வளர்ந்து வரும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதியாகவும் ஆசியா விளங்குவது மட்டுமின்றி மேற்குலக மற்றும் வளர்ந்த நாடுகளின் குப்பைக் கொட்டும் பகுதியாகவும் உள்ளது. இதுவே ஆசியப் பகுதிகளில் அதிகம் பிளாஸ்டிக் இருப்பதற்கு காரணமாக விளங்குகிறது4.

இவ்வளவு அபாயம் கொண்ட  நெகிழி அதன் ஆபத்து உணரப்பட்ட காலகட்டத்தில்தான் இரண்டு மடங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தன் இலாபத்திற்காக அதிகம் உற்பத்தி செய்துவிட்டு , அந்த குப்பைகளுக்கான பொறுப்பை நம்மை ஏற்கச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது? இந்த  நெகிழி உற்பத்தி தொடருமேயானால் கடல்களில் மீன்களைவிட நெகிழிக் குப்பைகள்தான் அதிகமாக இருக்கும். பெருநிறுவனங்கள்  நெகிழி உற்பத்தியை நிறுத்திக்கொண்டு ஏற்கனவே உற்பத்தி செய்த நெகிழிக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் ஒரு நிறுவனம் உற்பத்தி செய்த  நெகிழி புட்டிகளுக்கு அந்த நிறுவனமே பொறுப்பாக இருக்கின்றது. இந்த நடைமுறை வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது.  இதனை Extended Producer Responsibility என்பர். இந்த நடைமுறையை நம் நாட்டிலும் பின்பற்ற பெருநிறுவனங்களை வலியுறுத்த வேண்டும். இதுவே  நெகிழியின் அளவைக் குறைக்க நாம் எடுக்கும் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.

 

 

[email protected]

Reference

  1. https://www.researchgate.net/publication/366434254_Human_health_risk_perspective_study_on_characterization_quantification_and_spatial_distribution_of_microplastics_in_surface_water_groundwater_and_coastal_sediments_of_thickly_populated_Chennai_coast_o
  2. https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-microplastics-found-in-water-near-corporation-dumpyards/articleshow/83530650.cms

https://www.sciencedirect.com/science/article/pii/S0013935120305703

  • லோகேஷ் பார்த்திபன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments