விதிமுறைகளை மீறும் ஈஷா மையம் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

தமிழகத்தை பொருத்தவரை நீலகிரி மாவட் டத்தில் யானைகளின் வழித்தடங்களை பாதுகாக்க 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், இயற்கை பாதுகாப்பு மையத்தின் சார்பாக பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானைகளின் வழித்தடங்களை கண்டறிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு ஏற்ப யானைகளின் வழித்தடங்களில் உள்ள தனியார் கட்டிடங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவும், தேவைப்படும் தனியார் நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம், 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன் மூலம் ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டடங்களை இழக்க வேண்டிய சூழல் உருவானது. எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று அந்த உத்தரவுக்கு இடைக்கால தடையும் வாங்கி விட்டனர். இந்த மேல் முறையீட்டு மனு இன்னும் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மலைப்பகுதியில் அல்லது மலையடிவார பகுதியில் எந்த ஒரு கட்டுமான பணியும் செயல்படுத்த ஹாக்கா (Hill Area Conservation Authority (HACA)) என்றழைக்கப்படும் மலைத்தள பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் இக்குழுவிடம் அனுமதி பெறாமலோ, விதிமுறைகளுக்கு புறம்பாக அனுமதி பெற்றோ ஏராளமான கட்டடங்கள் இப்பகுதியில் கட்டப்படுகின்றன.

உதாரணமாக ஈஷா யோகா மையத்தின் கதையை பார்ப்போம்

2012ம் ஆண்டு, கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் எம்.எஸ். பார்த்திபன் மாவட்ட வன அலுவலருக்கு எழுதிய கடிதத்தில் தசாடிவயலுக்கும் தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில் ஈஷா மையம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈஷா மையத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதால், மின் அதிர்வுகளால் தாக்கப்படும் யானைகள் தாம் செல்லவேண்டிய பாதையில் குழப்பம் ஏற்பட்டு வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பயிர்கள் நாசமாகின்றன. உடமைகளுக்கும் மனித உயிர்களுக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ஈஷா மையம் சுமார் 4,27,700 சதுர மீட்டர் அளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த மையத்திற்கோ, இதனுள் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கோ மேற்கூறிய குழுவிடம் ஈஷா மையம் இன்று வரை அனுமதி வாங்கவில்லை.

இதன் காரணமாக கோவையின் உள்ளூர் திட்டக் குழுமம் ((Town and Country Planning) அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு 5.11.2012 அன்று ஈஷா மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டுமான பகுதிகளையும் இடிக்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காகவோ இன்று வரை இந்த ஆணைஅமல்படுத்தப்படாமல் உள்ளது. ஈஷா மையத்தில் சட்டபூர்வ அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தக்கோரி பூவுலகின் நண்பர்கள் சார்பில் 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் காரணமாகவே காட்டுப் பகுதியில் ஈஷா மையம் வருடம்தோறும் மிக ஆர்ப்பாட்டமாக நடத்தும் மகாசிவ ராத்திரி விழா நிறுத்தப்பட்டு, நகரத்தில் நடைபெற துவங்கியது.
அதோடு இல்லாமல் சுமார் 15 வருடங்களாக சட்ட விதிமீறல்களை கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கையும் பூவுலகின் நண்பர்கள் பதிவுசெய்துள்ளது. இந்த வழக்குகளில் தமிழக அரசு கொடுத்துள்ள பதிலுரையில், “ஈஷா மையம் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களும் உரிய அமைதி இன்றி கட்டப்பட்டவையே!” என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அனுமதி இன்றி கட்டப்பட்ட ஈஷா மையத்தின் கட்டடங்களை இடிக்கும் ஆணைக்கு எதிராக தமிழக அரசிடம் மேல்முறையீடு செய்துள்ளதால் தற்போது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டது. தமிழ்நாடு அரசிடம் இந்த மேல் முறையீட்டு மனு செய்ய ஈஷா மையத்திற்கு எவ்வித முகாந்திரமும் சட்டப்படி இல்லை. கட்டடம் கட்டப்படும் முன் அதற்கு அனுமதி கோரும் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யமுடியும். கட்டடம் கட்டும் முன் அதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்காமலே, இடிப்பு ஆணைக்கு எதிராக மேல் முறையீடு என்பது சட்டத்திற்கு எதிரானது. இந்த ஒரு காரணத்தின் அடிப்படையில் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இந்த மேல் முறையீட்டு மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது தமிழக அரசு. அதேபோல இடிப்பு ஆணையை அமல்படுத்த எவ்வித இடைக்கால தடையும் இல்லாத நிலையிலும் கோவை மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. இவற்றை கேள்விக்கு உள்ளாக்கும் உயர்நீதிமன்ற வழக்குகள் இன்னும் நிலுவையில்தான் உள்ளது. நீதிமன்றம் என்ன உத்தரவிடப் போகிறது என்று பார்ப்போம்.

மு.வெற்றிச்செல்வன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments